கட்சிகளின் தோற்றம்

அமெரிக்கா
கட்சிகளின் தோற்றம்
Published on

பிரிட்டனுடனான சண்டையில் வெற்றி பெற்று, அமெரிக்க குடியரசு உருவான (1787) ஆரம்ப காலகட்டத்தில் பல் வேறு குழுக்கள் அமெரிக்க அரசியலில் செயல்பட்டன.

வலிமையான மத்திய அரசு அமையவேண்டும் என செயல்பட்ட ஒன்றிய ஆதரவாளர்கள், மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தேவை என்று கூறிய ஒன்றிய எதிர்ப்பாளர்கள், அரசியல் சாசன ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என இருந்த இக்குழுக்கள் கட்சிகளாக அமைப்பு ரீதியாக உருவாக வில்லை. கட்சி சார்பாக வேட்பாளர்களை அவர்கள் நிறுத்தவில்லை. மக்கள் ஆதரவுபெற்ற போர் நாயகனாக உருவெடுத்திருந்த ஜார்ஜ் வாஷிங்டன், அமெரிக்க அதிபராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் செயல்பட்ட பலருக்கு அரசியல் கட்சிகளை உருவாக்குவதில் ஆர்வம் இல்லை. ஆனால் ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையிலான புதிய அரசு செயல்பட ஆரம்பித்த பின்னர் அரசியல் கட்சிக்குத் தேவை இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.

முதல் காங்கிரஸ் குழுவில் ஒன்றிய ஆதரவாளர்களின் குழு வலிமையானதாக இருந்தது. அவர்கள் அலெக்சாண்டர் ஹாமில்டன் என்பவர் தலைமையில் செயல்பட்டனர். இவர் குடியரசுத் தலைவர் ஜார்ஜ்வாஷிங்டனின் தலைமையின் கீழ் அரசுத் தரப்பு செயலாளராக இருந்தார். இவர்கள் அனைவரும் வலிமையான தேசிய அரசு அமைய வேண்டும். உற்பத்தியாளர்கள், வணிகர்களின் நலன்களைப் பாதுகாக்கவேண்டும் என்பதில்கவனம் செலுத்தினர்.

இவர்களுக்கு எதிரணியில் தாமஸ் ஜெபர்சன் என்பவர் ஜனநாயக- குடியரசுக் கட்சி என்ற கட்சியை உருவாக்கினார். 1800 - இல் ஜெபர்சன் அமெரிக்க அதிபர் ஆனார். அதையடுத்து கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் இந்த கட்சியைச் சேர்ந்தவர்களே அதிபராக வந்துகொண்டிருந்தனர்.

முன்பிருந்த  வலிமையான ஒன்றிய அரசு ஆதரவாளர்கள் இச்சமயத்தில் காணாமல் போய்விட, கிட்டத் தட்ட ஒற்றைக் கட்சி ஆட்சியே நடந்தது எனலாம்!

ஆனால் எவ்வளவு நாளைக்கு இப்படி நீடிக்க முடியும்? ஜனநாயக& குடியரசுக் கட்சியிலும் பிளவுகள் தோன்றின. இதில் ஜனநாயக கட்சி, விக் கட்சி  என்று இரு தனித்தனிக் கட்சிகள் மலர்ந்தன. ஜனநாயகக் கட்சி(1828) சாமானிய மக்களிடம் கட்சியை எடுத்துச் சென்றது. அதிபர் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் சாமானிய மக்களை ஈடுபடுத்துவதிலும் ஜனநாயகக் கட்சியே ஈடுபட்டது.

1854&இல் விக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியில் இருந்த ஒரு பிரிவினரும் சேர்ந்து குடியரசுக் கட்சியைத் தொடங்கினர். அக்கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு முதல் குடியரசுத் தலைவர் ஆனவர் அமெரிக்காவில் அடிமை முறையை ஒழித்தார். அவர் ஆபிரஹாம் லிங்கன். விரைவில் விக் குழுவினர் மறைந்தனர். ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் அமெரிக்க அரசியல் பரப்பில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இக்கட்சிகளை மீறி மூன்றாவதாக உருவாகும் சிறு கட்சிகளால் அமெரிக்க நாடு முழுக்க செல்வாக்கு செலுத்த இயலாததால் அந்நாட்டு சட்டங்களின் படி அதிபர் தேர்தல்களில் போட்டியிட முடியாது. எனவே அங்கு இரு கட்சிகளே ஆட்சி செய்கின்றன. சிறு கட்சிகள் அங்கே கொள்கை அடிப்படையில் அழுத்தங்கள் தரும் குழுக்களாகவே இருக்கின்றன.

பிரிட்டன்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இப்போது ஐக்கியராஜ்யத்தின் பிரதமராக இருக்கிறார் அல்லவா? இவர் சார்ந்திருக்கும் கட்சி கன்சர்வேட்டிவ் மற்றும் யூனியனிஸ்ட் கட்சி. தமிழில் ‘முழி' பெயர்த்தால் பழமைவாத கட்சி எனப் பொருள்படும். உலகின் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்று.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை மன்னர் ஆட்சிதான் பதினேழாம் நூற்றாண்டுவரை நடைபெற்றது. டோரி, விக் என இரு அரசியல் குழுக்கள் அக்கால அரசியலில் உண்டு. இரண்டாம் ஜேம்ஸ் என்ற மன்னரை பிரிட்டன் குடிமக்களே சேர்ந்து பதவி விலகச் செய்து மூன்றாம் வில்லியம் அவரது மனைவி மேரி ஆகிய அரச குடும்பத்தவர்களுக்கு முடி சூட்டினர். இது 1688 - இல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி ‘பெருமைமிகு புரட்சி'யாக கருதப்படுகிறது. ஏனெனில் இதிலிருந்துதான் அரச குடும்பம் தன் அதிகாரங்களைபெருமளவுக்கு நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்க முன்வந்தது. பெரும்பாலும் நாடாளு-மன்றத்தில் இடம்பெறும் டோரி, விக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் பாரம்பரிய குடும்ப வழி வந்தவர்கள், மன்னர் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களே இருப்பர். அவர்களே அமைச்சர்களாக நியமிக்கப்படுவர். கட்சி ரீதியான செயல்பாடுகள் அப்போது இல்லை.

அமெரிக்கப் புரட்சியையொட்டி பிரிட்டனில் பல கருத்து வேறுபாடுகள் ஆளும் வர்க்கத்திடம் தோன்றியபோதுதான் கட்சி ரீதியாக பிரிந்து இயங்கும் போக்கு தொடங்கிற்று. டோரி கட்சி, மேல்தட்டு மக்கள், வணிகர்கள், அதிகாரிகள் ஆகியோர் ஆதரவு பெற்றது. அதுமட்டுமல்ல அது மன்னருக்கு ஆதரவாக நின்ற கட்சி. விக் கட்சிக்கு மத எதிர்ப்பாளர்கள், தொழிலதிபர்கள், பல்வேறு சீர்திருத்தங்களை விரும்பியோர் ஆகியோரின் ஆதரவு இருந்தது. இந்த ஆதிகால அரசியல் சூழலில் இருந்துதான் பிரிட்டனின் ஜனநாயகம் என்பது வளர்ந்துவந்துள்ளது என்கிற பின்னணியைப் புரிந்துகொள்ளவேண்டும். பல்வேறு அரசியல் சூழல்களால் இந்த இரு அரசியல் குழுக்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் கட்சிமாறிய ஆதரவாளர்களைக் கொண்டு குழம்பிப் போயிருந்த காலத்தில் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கன்சர்வேட்டிவ் (பழமைவாதம்), லிபரல் (தாராளவாதம்) என இரு கொள்கைப்போக்குகள் தோன்றி இரு கட்சிகளாக பிறந்தன. டோரிகள், தொடர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சியினர் என இன்றும் அழைக்கப்பட்டு வருகின்றனர். விக் என்ற சொல்லாடல் வழக்கொழிந்து போய்விட்டது.

சர் ராபர்ட் பீல் என்பவர் தான் முதல் கன்சர்வேட்டிவ் கட்சி அரசாங்கத்தை அமைத்தவர்.

 பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் பிரிட்டனில் வாக்களிக்கும் உரிமை பரவலாக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டு ஏராளமான வயதுவந்த ஆண்களுக்கு அந்த உரிமை வழங்கப்பட்டது. நடுத்தர வர்க்கமும் வாக்களிக்கும் உரிமை பெற்றது எனலாம். தாராளவாத கட்சியின் ஒரு பிரிவினர் இந்த சமயத்தில் அக்கட்சியிலிருந்து உடைத்துக் கொண்டு லிபரல் யூனியனிஸ்ட் என்ற பிரிவை உருவாக்கி, கன்சர்வேட்டிவ் கட்சியுடன் சேர்ந்து அக்கட்சியை மேலும் பலப்படுத்தினர். இது 1912 - இல் நடைபெற்றது. இன்று கன்சர்வேட்டிவ் கட்சியின் அதிகாரபூர்வமான பெயர் கன்சர்வேட்டிவ் அண்ட் யூனியனிஸ்ட் கட்சிதான்!

லேபர் கட்சி

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த 1945 - இல் இங்கிலாந்தில் லேபர் கட்சி வெற்றி பெற்று கிளமெண்ட் அட்லி பிரதமர் ஆனார். அவரது அரசுக்காலத்தில் இந்தியாவுக்கு சுதந்தரம் வழங்கப்பட்டது என வரலாற்றுப் புத்தகத்தில் வாசித்திருப்போம்.

ஐக்கிய ராஜ்யத்தின் இரு முக்கிய கட்சிகளில் லேபர் கட்சியும் ஒன்று. இக்கட்சியின் தோற்றத்தை அறிந்துகொள்ள 1900க்குச் செல்லவேண்டும். அந்த ஆண்டில் பல தொழில்சங்கங்கள், சுதந்திர தொழிற்கட்சி, பேபியன் சங்கம், பிற சோஷலிச சங்கங்கள் இணைந்து தொழிலாளர் பிரதிநிதித்துவக் கமிட்டி என்ற அமைப்பை உருவாக்குகின்றன. முன்னதாக நகர்ப்புற தொழிலாளர்கள், இடதுசாரி அமைப்புகள் சார்பாக லிபரல் கட்சியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு வந்தனர். இச்சமயத்தில் உருவானதுதான் சுதந்தர தொழிற்கட்சி என்ற அமைப்பு. இந்த கட்சியாலும் தனித்து எதுவும் செய்யமுடியாத நிலையில் ஒத்த கருத்துடைய அமைப்புகளைச் சேர்த்துதான் மேற்சொன்ன கமிட்டி உருவாகிறது.

இந்த கமிட்டி சார்பாக இரண்டு எம்பிகள் அந்த ஆண்டு தேர்வாகின்றனர்.

அப்படியே விட்டிருந்தால் இந்த அமைப்பு வலுப்பெறுவது தாமதமாகி இருக்கலாம். அப்போது ஒரு தீர்ப்பு வருகிறது. டேஃப் வேல் வழக்கு என அழைக்கப்படும் இந்த வழக்கில் டேஃப் வேல் என்ற ரயில் கம்பெனிக்கு அதன் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட இழப்பான 23000 பவுண்டை அந்த தொழில்சங்கமே அளிக்கவேண்டும் என தீர்ப்பளிக்கப்படுகிறது. இத்தீர்ப்பு தொழிற் சங்கங்களை அதிர வைக்கிறது. இத்தீர்ப்பால் யாருமே வேலை நிறுத்தம் செய்யமுடியாத சூழல் ஏற்படுகிறது. அப்போது ஆட்சியில் இருந்த கன்சர் வேட்டிவ் கட்சி இதைக் கண்டுகொள்ளாமல் விட, தொழிலாளர் வர்க்கம் கொந்தளிக்கிறது.

இதைத் தொடர்ந்து 1906 - இல் வந்த தேர்தலில் இந்த கமிட்டி சார்பில் 30 எம்பிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு வாக்குகள் பிரியாமல் இருக்க லிபரல் கட்சியுடன் செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தமும் காரணம். நாடாளுமன்றத்தில் இந்த எம்பி குழுவினர் ஒன்றுகூடி தங்கள் கட்சிக்கு லேபர் கட்சி என்று பெயர் சூட்டிக்கொண்டனர். இதுதான் லேபர் கட்சி தோன்றிய சுருக்கமான வரலாறு.

1920களில் லிபரல் கட்சி பலமிழந்த நிலையில், இரண்டாவது முக்கிய கட்சி என்ற நிலையை லேபர் கட்சி பிடித்துவிடுகிறது. இதன் பின்னர் இடையில் ஒரு முறை சிறுபான்மை பலத்துடன் ஆட்சியில் இருந்தாலும் இரண்டாம் உலகப்போருக்குப் பின் முதல்முதலாக ஆட்சிக்கு வருகிறது. கிளமெண்ட் அட்லி, ஹெரால்ட் வில்சன், சமீப காலத்தில் டோனி ப்ளேர் ஆகியோர் பிரபலமான பிரதமர்கள்.

logo
Andhimazhai
www.andhimazhai.com