கட் அடித்த காலங்கள்!

கட் அடித்த காலங்கள்!
Published on

ராயப்பேட்டையில் நாங்கள் தங்கி இருந்த வீட்டு உரிமையாளரான வெத்தலைக்கார அம்மாவுக்கு அடிக்கடி சினிமா பார்க்கும் பழக்கம் இருந்தது. என் மீது பாசம் கொண்டவர். அவர் என்னைத்தான் ரிக்‌ஷாவில் சினிமாவுக்கு அழைத்துச் செல்வார். நான் சின்ன பையன் என்பதால் எனக்கு லேடீஸ் கவுண்டரில் அனுமதி உண்டு. அப்போது ரூ.1.10, ரூ.2.10, ரூ. 2.90 என்றுதான் டிக்கெட் விலைகள் இருந்தன.

தேவி பாரடைஸ் தியேட்டர் லதான் எம்ஜிஆரோட உலகம் சுற்றும் வாலிபன் ரிலீஸ் ஆனது. ‘டே... அதுக்கு டிக்கெட் எடுத்துட்டு வாடா‘ன்னு ஆயா 10 ரூவா கொடுத்தாங்க. நான் பஸ் ஏறிவந்து சாந்தி தியேட்டர்ல இறங்கிப் பாத்தா, பெரிய வரிசை சாலையில். தேவி தியேட்டர்ல இருந்து அண்ணாசிலை வரைக்கும் நிக்குது. அது எம்ஜிஆர் படத்துக்கு அட்வான்ஸ் புக்கிங்குக்காக நிற்கும் வரிசை.

இதில் டிக்கெட் வாங்க முடியாதுன்னு தெரிஞ்சிடுச்சி. எங்க வீட்டுக்கு எதிர்வீட்டுல அந்த படத்துக்கு பி.ஆர் பண்ணிய ‘திரைஉலகம் துரைராஜ்' இருந்தார். அவர் பையன் என் ப்ரண்ட் தாமு கிட்ட போய் கெஞ்சிக் கூத்தாடி டிக்கெட்டுக்கு ஏற்பாடு பண்ணி, அந்த படத்தைப் பாத்தோம். உலகம் சுற்றும் வாலிபனை தேவி தியேட்டர்ல பாத்து, அசந்துபோனது இன்னும் ஞாபகமிருக்கிறது.

பிறகு இந்திப்படங்கள் வர ஆரம்பிக்கின்றன. லிட்டில் ஆனந்துல ஆராதனா ஒரு வருஷம் ஓடுது. மிட்லாண்ட்ல பாபி படம் ஒரு வருஷம் ஓடுது. சத்யத்துல ஷோலே ரிலீஸாகி அதுவும் ஒரு வருஷம் ஓடுது. ஆனந்த் தியேட்டர்ல எண்டர் த ட்ராகன் ரிலீஸ் ஆகுது. இந்த படத்துக்கு இந்தியாவுக்கு வந்தது மொத்தம் மூணே மூணு பிரிண்ட்தான். பாம்பே, கல்கத்தா, சென்னை மூணே இடத்தில்தான் ஓடுது.

சென்னையில் மட்டும் 54 வாரம் அந்த படம்  ஹவுஸ்புல்லாக ஓடிருக்கு. ஹைதராபாத், பெங்களூர்ல இருந்தெல்லாம் அந்தப் படம் பாக்க ஆளுங்க வருவாங்களாம்.

லைஃப்ல நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்த படம் கௌரவம். காலையில் பத்துமணிக்கு போய் நின்னுட்டோம். இரண்டரை மணிக்குத்தான் படம். மக்கள் வந்து எங்க மேலே ஏறி குதிச்சு, ஒரேயடியா நசுக்கிட்டாங்க. அதிலேர்ந்து இதுமாதிரி விஷப்பரிட்சைக்குப் போறதில்லை.

இதன் பிறகு தியேட்டர்களில் நூன் ஷோ அறிமுகமானது. பள்ளிக்கூடத்தைக் கட் அடிச்சிட்டு, சைக்கிள்ல போய் எம்ஜிஆர் படங்களாக பார்க்க ஆரம்பித்தோம். ஒரு வாட்டி ஸ்கூல் கட் அடிச்சிட்டு, கெயிட்டி தியேட்டர்ல குடியிருந்த கோவில் படம் பாத்தோம். படம் முடியறதுக்குள்ள  சைக்கிளை எடுத்துகிட்டு கேட் திறந்ததும் வெளியே ஓடி வர்றோம். அப்ப உடன் வந்த நண்பன் சைக்கிளை ஒரு அம்பாசடர் கார்ல டம்னு மோதிட்டான். யாரோட கார் தெரியுமா? அவங்க அப்பாவோட கார்தான். அப்புறம் என்ன நடந்திருக்கும்னு நீங்களே ஊகிச்சுக்கோங்க.

மே, 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com