கடல் தாண்டிய இயக்கம்!

கடல் தாண்டிய இயக்கம்!

Published on

ஷ்யாம்ஜி கிருஷ்ணவர்மா:

குஜராத்தியான ஷ்யாம்ஜி கிருஷ்ணவர்மா, பெரும் சமஸ்கிருத அறிஞர். ஆர்ய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதியுடன் தொடர்பு உடையவர். ஆக்ஸ்போர்ட் பல்கலையில் படித்து திரும்பிய அவர் வட இந்தியாவில் பல அரசுகளில் திவானாக பணிபுரிந்து ஏராளமாக சம்பாதித்தவர். அவரது சீர்திருத்த, விடுதலைக் கருத்துக்களால் ஆங்கில  அரசு அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்பட்டது.

1897ல் இந்தியாவை விட்டு வெளியேறி லண்டன் சென்றார். இதற்கிடையில் அவருக்கும் பாலகங்காதர திலகருக்கும் இடையில் சிறந்த புரிதலும் நட்பும் ஏற்பட்டிருந்தது. திலகர் கொலைச்சதி வழக்கில் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, இனியும் இந்தியாவில் இருந்து ஆங்கில அரசுக்கு எதிராக இயங்கமுடியாது என்று முடிவ செய்து கிருஷ்ணவர்மா இங்கிலாந்து சென்றார். அங்கே கல்விப்பணிகளில் ஈடுபட்டவாறே இந்திய விடுதலையை முன்னெடுத்தார். இந்தியன் சோஷலாஜிஸ்ட் என்ற பத்திரிகையை சுதந்தரம் மற்றும் அரசியல், சமூகம், மதம் ஆகிவற்றில் சீர்திருத்தங்களுக்காக நடத்தினார். இந்தியாவின் சுயராஜ்யத்துக்காக அங்கே இந்திய சுயராஜ்ய சங்கமும் கட்டமைத்தார். அதன் தலைவர் பொறுப்பையும் ஏற்றார். ஆங்கில ஆட்சி இந்தியாவில் பகலில் வந்தது; ஒரு இரவில் அது முடிவுக்கு வரும் என்ற மெரிட்டித் டவுன்செண்ட் என்பவரின் கருத்தைப் பயன்படுத்தி ஆங்கில ஆட்சியியை இந்தியாவை விட்டு அகற்றுவது பற்றி அவர் 1905-ல் எழுதிய கட்டுரை முக்கியமாகக் குறிக்கப்படுகிறது. லண்டனில் இந்தியா ஹவுஸ் என்ற அமைப்பை ஒரு  மாளிகையில் தொடங்கி பல இந்திய புரட்சிகாரர்களுக்கு தஞ்சமளித்தார். இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்த மிதவாதிகளுடன் அவருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அவர் திலகர் தரப்புக்கு ஆதரவு அளித்தார். முழுமையான இந்திய விடுதலையை அவர் வலியுறுத்தினார். லண்டனில் இருக்கையில் இந்தியரான திங்க்ரா ஆங்கில அதிகாரி ஒருவரைக் கொன்றார். அதன் பின்னர் அங்கிருப்பது எளிதாக இல்லை. எனவே கிருஷ்ணவர்மா பாரிசில் இருந்து இயங்கினார். பின்னர் ஜெனிவாவுக்குச் சென்றார். முதலாம் உலகப்போரில் இங்கிலாந்து வென்றது. இந்திய புரட்சிக்காரர்களுக்கு புகலிடம் அளித்துவந்த ஜெர்மனி தோற்றது பின்னடைவாக அமைந்தது. 1920-ல் திலகர் மரணத்துக்குப் பின்னர் வர்மா நேரடி அரசியலில் இருந்து விலகினார். இருப்பினும் ஜெர்மனியில் இயங்கிய செண்பகராமன் போன்றோருடன் தொடர்பில் இருந்தார். 1930-ல் அவர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

மேடம் காமா:

இந்திய மூவர்ணக்கொடியை வடிவமைத்தவர் மேடம் பிக்காஜி ருஸ்தம்ஜி காமா என்று நாம் படித்திருக்கிறோம். மராட்டிய மாநிலத்தில் பிறந்து 30 வயதுக்குப் பின் ஐரோப்பாவுக்குச் சென்றவர். இந்திய புரட்சியாளர்களில் இவரும் முக்கியமானவர். இவர் பாரிசில் இருந்து வந்தே மாதரம், மதன் தல்வார் ஆகிய பத்திரிகைகளை நடத்தி விடுதலை உணர்வை ஊட்டினார். புதுவையிலும் தமிழ்நாட்டிலும் இயங்கிவந்த விடுதலை வீரர்களால் இப்பத்திரிகை ஆவலுடன் படிக்கப்பட்டது. எம்.பி.டி. ஆச்சார்யா, செண்பகராமன் பிள்ளை உள்ளிட்ட பலரும் இவருடன் இணைந்து செயல்பட்டனர். பாரிஸ் நகரிலும் பெர்லின் நகரில் நடந்த மாநாட்டிலும் மூவர்ணக்கொடியை அறிமுகப்படுத்தினார்.  விடுதலைப்போராட்டத்தில் 1935-ல் இந்தியா திரும்பிய அவர் சில மாதங்களிலேயே 74 வயதில் இறந்தார்.

ஆகஸ்ட், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com