அப்பா இருந்தவரைக்கும் கடன் வாங்கத் தேவையே இருந்ததில்லை. அவர் போன பிறகாவது அவரைப்போல் வாழ்ந்திருந்தால் இதை எழுதத் தேவையும் இருந்திருக்காது. அத்துணை எளிய வாழ்வு அவருடையது.
இந்தக் ‘கடன் சூழ் காதை' எப்போது துவங்கியது என்று யோசித்தால்... அநேகமாக அது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் இருக்கும். விவசாயப் பல்கலைக் கழகத்தின் கணக்கு அதிகாரியாக இருந்தாலும் அப்பா இறுதி வரைக்கும் தனது 24 இன்ச் சைக்கிளிலேதான் சென்று கொண்டிருந்தார்.
ஆனால் வாரிசு வேலைக்குப் போன நானோ... ‘‘போனால் மொபெட்டில்தான் போவேன்'' என்று அலப்பரை செய்ததன் விளைவாக அம்மா ஒரு மொபெட் வாங்கித் தந்தார். மொபெட் என்பது இன்றைய சேம்ப்... டி.வி.எஸ் 50... போன்றவற்றின் முந்தைய வடிவம். அதுவும் கொஞ்சநாள் தான்.
ஊர் முழுக்க கீர் வைத்த வண்டி இருக்க இதில் எவன் போவது என்ற எண்ணம் தோன்றி பைக் வாங்க முடிவு எடுக்க... ‘‘நீயாச்சு உன் வண்டியாச்சு... நான் எதுவும் தரமாட்டேன்'' என்று கையை விரித்து விட்டது ‘‘தெய்வத்தாய்''. அப்போதுதான் என் முதல் கடன் முளை விடுகிறது.
அலுவலக உதவியாளர் ராமசாமியிடம் வட்டிக்குக் கடன் வாங்க கூட்டிச் சென்றான் ரவி. ‘‘இங்க பாரு எழிலு... சம்பளம் வந்த உடனே வட்டி வந்தறனும்... இல்லேன்னா பெரியவர் நேரா வந்துருவாரு... நீ அசல எப்ப வேணும்ன்னாலும் கட்டு.'' என்கிற எச்சரிக்கையோடு அஞ்சாயிரமோ என்னவோ கொடுத்தார். அப்போதே அதற்கு நூத்துக்கு அஞ்சு ரூபாய் வட்டி.
அப்படி வாங்கிய பணத்தில் ஒரு செகண்ட் ஹேண்ட் எக்ஸ்ப்ளோரர் பைக் வாங்கி வந்து நிறுத்திய மறுகணமே அதன் வண்ணம் பிடிக்காமல் போயிற்று எனக்கு.
நமக்குதான் கருப்புதான் புடிச்ச கலராச்சே எப்போதும். சரி கலரை மாத்தீருவோம்... என்று குண்டு சிவாவிடம் ஆலோசனை கேட்க அவன் ரத்னபுரி பாயிடம் கூட்டிப் போனான். ‘‘ஏன் எழிலு... கலரோட அப்படியே இந்த ஹேண்டில்பாரையும் கொஞ்சம் ஃபேஷனா மாத்தீட்டா என்ன ?'' என்றான் சிவா.
O.K Done... என்றேன்.
போதாக்குறைக்கு ஒர்க்ஷாப் பாயும் கையோட கையா இந்த சைலன்சர்ல வர்ற சத்தத்தையும் யமஹால வர்ற மாதிரி மாத்தீறலாமா? என்றார்.
அதற்கும் ஓகே டன்... என்றேன்.
எனது ஒவ்வொரு ஓகே டன்னுக்கும் அம்மாவின் மர பீரோ கீழடுக்கில் பதுக்கி வைத்திருந்த வெள்ளி டம்ளர்களில் ஒன்று நகைக் கடைக்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்தது. பாட்டி விட்டுச் சென்ற சொத்தில் பேரன் பங்குபோட்டுக் கொள்வதை திருட்டென்று எப்படிச் சொல்ல முடியும்?. ஆனால் அம்மாதான்... .****-யே**சீ என்று வண்டை வண்டையாகப் ‘‘பாராட்டும்''.
வண்டி வாங்கியது... பட்டி டிங்கரிங் பார்த்தது... பெட்ரோல் போட்டது... பெட்ரோல் போட்டதால் குன்னூர் ஊட்டி என ஏறி இறங்கியது... என்றிருந்த வேளையில் அசலோடு வட்டியும் ஏறிக் கொண்டிருந்தது.
‘‘எழிலு... மூணு மாசமா வட்டி பாக்கி... இந்த மாசமும் குடுக்கலீன்னா பெரியவர் வந்துருவாரு...'' என்பார் ராமசாமி அண்ணன்.
அத்தகைய ஒரு சுபயோக சுப தினத்தில்தான் என்னைக் கரம் பற்றினாள் அவள். அப்போது அவளுக்குத் தெரியாது நான் கடன் வாங்காத ஒரே இடம் உலக வங்கி மட்டும்தான் என்கிற ரகசியம்.
இத்தகைய ஒரு இனிய பொழுதில்தான் என்னுள் இன்னொரு அற்புத சிந்தனை உதித்தது. ச்சே... இன்னும் எத்தனை நாளுக்குத்தான் செகண்ட் ஹாண்ட் வண்டியையே ஓட்டுவது... புது வண்டியா ஒன்றை வாங்கீட்டாதான் என்ன? என்று.
சரி காசுக்கு...? என்று எண்ணிக் கலங்கிய வேளையில்தான் ‘‘கவலைப்படாதே சகோதரா... !'' என்றொரு ஏ டி எம். மிஷினே என் முன் வந்து நின்றது. அந்த மிஷினுக்கு பெயர்தான் மனோ அக்கா. என்னுடைய அலுவலகத்திலேயே பணியாற்றுபவர். ''நான் பத்து ரூபா (10,000) குடுத்தர்றேன்... மீதிக்கு சம்பள சான்றிதழும் செக்கும் குடுத்து நீ ஃபைனான்ஸ்ல வாங்கிக்க...'' என்று ஐடியாவும் கொடுத்தது அக்கா. அட்றா சக்கை... அட்றா சக்கை... இப்படிப்பட்ட ஐடியா டிப்போவைத்தான் நான் இத்தனை நாளும் தேடிக்கிட்டு இருந்தேன் என்று துள்ளிக் குதித்தபடி பணத்தை வாங்கிக் கொண்டு... ஃபைனான்ஸில் சொன்ன பக்கமெல்லாம் ஸ்டைலாக கையெழுத்தைப் போட்டுக் கொடுத்துவிட்டு... ஷோரூமில் வண்டி வாங்கிய காலோடு போய் நின்றேன் வீட்டில். ‘‘கடங்காரா இதுக்கு மட்டும் உனக்கு ஏது பணம்?'' என்றது எனை ஈன்றது.
ச்சே இப்படி வண்டி கதையையே எத்தனை வால்யூம்களுக்குத்தான் நீட்டிப்பது...? கிரெடிட் கார்டு வாங்கிய கதைபக்கம் கொஞ்சம் கண்ணை வைப்போம்.
கார்டு வாங்குவதற்கு முன்பாகவே ‘‘வேண்டாங்க... இது ரொம்ப சிக்கலான சமாச்சாரம்'' என்று கெஞ்சினான்... கதறினான்... கலங்கினான் குமுறினான் பெங்களூர் ஐடி துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த எனது சிறுவர் அணித் தலைவனும் வளர்ப்பு மகனுமான அன்புவிரும்பி என்கிற பிரேம்தாஸ். கேட்டாத்தானே?
‘‘எதையும் வாங்கறதுக்கு முன்னாடி யோசிச்சு வாங்குங்க... எக்காரணம் கொண்டும் இதுல பணம் மட்டும் எடுக்காதீங்க... வட்டி போட்டுத் தீட்டீருவான்... '' என எண்ணற்ற அறிவுரைகள் வேறு என் வளர்ப்பு மகனிடம் இருந்து. (ச்சேச்சே... இவன் அந்த மாதிரி எல்லாம் இல்லீங்க... எளிமையைத் தவிர வேறெதுவும் தெரியாத வளர்ப்பு மகன்.)
வாங்கிய கையோடு போய் உட்கார்ந்த முதல் இடம் எம்ப்பரர் Bar. முதல் முறையா கெத்தாக கார்டை தேய்த்து... பில்லில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு... ரெஸ்டாரண்ட் பணியாளருக்கு டிப்ஸ்ஸும் கொடுக்கும் போது ஏற்படும் ஆனந்தம் இருக்கே... .. அட அட.
ஆனாலும் அன்புவிரும்பியின் அசரீரியை அலட்சியம் செய்தபடி நான் செய்த அடுத்த காரியம் கிரெடிட் கார்டில் பணம் எடுத்ததுதான். ஆனால் அதிலும் நான் சிக்கனம்.
ஏகப்பட்ட பணம் எடுத்தால்தானே ஏகப்பட்ட வட்டி போடுவான்... ? நாம எவ்வளவு தேவையோ அவ்வளவு அளவாக எடுப்போம் என்கிற ''சிக்கன'' எண்ணம் என்னுள் உதிக்க... இன்று ஐநூறு... நாளை ஐநூறு... நாளை மறுநாள் ஐநூறு என்றுதான் எடுப்பேன்.
ஆனால் ஒவ்வொரு முறை எடுக்கும் ஒவ்வொரு ஐநூறுக்கும் 250 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் என்பது புத்திக்குப் பட்டால்தானே? மொத்தத்தில் ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு ''சர்வீஸ் சார்ஜ்'' என்கிற கருமம் மட்டும் 750 ரூபாய். இதற்கு பேசாமல் ஆயிரத்து ஐநூறு ரூபாயை மொத்தமாக எடுத்திருந்தால் கூட 250 ரூபாய் மட்டும்தான் வந்திருக்கும். இப்படி என் ‘‘அறிவாற்றலால்'' ஏறிய கடனால் ஆறேழு ஆண்டுகள் ஆனந்தமாய் இருந்த வேளையில்தான் அடியாட்களை அனுப்பி வைத்தார்கள் வங்கிக்காரர்கள். ஆனால் அடியாளாக வந்தவர்களோ என்னையே பெரிய அடியாளாக நினைத்துக் கொண்டார்கள். ஏன்னா... இந்த சூனாபானாவைப் பத்தி வெளீல பரவியிருந்த ‘‘புகழ்'' அப்படி.
உண்மையில் அவர்களைப் பார்த்து நான் பம்ம... என்னைப் பார்த்து அவர்கள் பம்ம... கடைசியில் அனைத்து அடியாள்களையும் அடித்து துவம்சம் பண்ண வந்து குதித்தார் தேன்மொழி அக்கா. அவர்தான் எனக்கு ஆபீசர்.
என்னிடம் வசூலிக்க வந்த அந்த தாதாவிடம்... ‘‘என்ன இங்க சும்மா சும்மா வந்து தம்பிய தொந்தரவு பண்ணிகிட்டு இருக்கீங்க... இங்க வாங்க...'' என அழைத்து சரமாரியாக திட்டிவிட்டு... ‘‘ஆமா மொத்தம் எவ்வளவு கட்டணும்?'' என்றார்.
‘‘மேடம் எண்பத்தி அஞ்சாயிரம் மேடம்...'' என்று அந்த தாதா சொல்ல... ‘‘அதெல்லாம் கட்ட முடியாது... வேண்ணா தம்பிய இருபதாயிரம் ஒன் டைம் செட்டில்மெண்டா கட்டச் சொல்றேன்... ஓகேன்னா சொல்லுங்க... நாளைக்கே கட்டீறலாம்... இல்லேன்னா அரசு அலுவலகத்துக்குள்ள வந்து இடைஞ்சல் பண்ணுனீங்கன்னு சொல்லி இப்பவே போன் பண்ணீருவேன்...'' என்று ஒரே போடாய் போட அடியாளுக்கு அடிவயிறு கலங்கி விட்டது.
‘‘இருங்க மேடம் கேட்டுட்டு சொல்றேன்...'' என யாருக்கோ போன் போட்டு விட்டு ‘‘முப்பதுன்னா ஓகேங்கறாரு எங்க மேனேஜர்'' என்று பயபக்தியாய் சொல்ல... ‘‘அப்ப உங்க மேனேஜரையே வரச்சொல்லு... அதுவரைக்கும் நீ அந்த மூலைல உள்ள ஸ்டூல்ல உட்காரு'' என அதட்ட... மீண்டும் மேனேஜருக்கு போன்... ‘‘ஓகே சார்... ஓகே சார்... '' என்றபடி ‘‘மேடம்... நீங்க எவ்வளவு குடுக்கறீங்களோ குடுங்க'' என்று கிலியில் கதற... ‘‘என்ன எழிலு ஓகேவா?'' என்றார் தேன்மொழி அக்கா. நீங்க சொன்னா சரிதான்க்கா என்றேன்.
அப்பாடா இருபதாயிரத்தோடு தொலைந்தது என நிம்மதி பெருமூச்சு விடலாம் என்றால் அதற்கும் இடைமறித்தார் அக்கா.
‘‘ஒன் டைம் செட்டில்மெண்ட்தான். ஆனா அதையும் நாலு இன்ஸ்டால்மெண்ட்லதான் தர முடியும்... தம்பி நீங்க நாலு செக் லீஃப் எடுத்துட்டு வாங்க...'' என்றார் மிடுக்காக. அக்கா கொடுத்த தைரியத்தில் கம்பீரமாக செக்கில் கையெழுத்துப் போட்டு அடியாளிடம் நீட்டும் போது என்னிடம் குனிந்து அவர் கேட்ட இன்னொரு கேள்வி:
‘‘பாஸ் இங்க பாத்ரூம் எங்கிருக்கு?''
இப்படி நான் பலபக்கம் கடன் வாங்கித் திண்டாடுகிறேனே என்னை எப்படியாவது கரையேற்றி விடலாம் என்கிற நல்லெண்ணத்தில் மனோக்காதான் அந்த ஐடியாவைக் கொடுத்தார். ''இப்படி துண்டு துண்டா இருக்குற கடனை ஒரு சீட்டைப் போட்டு ஒரேடியா முடிச்சுட்டாத்தான் என்ன?'' என்று அவர் கேட்ட கேள்வியில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்தது. வட்டிக்குக் கொடுப்பதோடு ஏலச் சீட்டும் நடத்தி வந்தார் மனோக்கா. இங்கே நம் மானத்தைப் பலபேர் ஏலம் விட்டுக் கொண்டிருக்கையில் நாமே ஏலத்தில் குதிப்பதென்பது எம்மாம் பெரிய விஷயம்... அப்படித் துவங்கியதுதான் சீட்டு போடும் படலம். முதல் மூன்று மாதங்கள் கடன்காரர்களுக்கு சாரி கடன் கொடுத்தவர்களுக்கு ''சீட்டு எடுத்தவுடன் மொத்தமா செட்டில்மெண்ட்டுதான்... '' என்று அளித்த வாக்குறுதியில் வட்டி கேட்காமல் அவர்கள் அமைதி காத்தனர். ஆனால் சீட்டுதான் எனக்கு விழுந்தபாடில்லை. ஏலம் எடுக்கும் டெக்னிக்கும் அதன் தள்ளுபடியில் குறையும் நமக்கான சீட்டு தொகையும் இன்றுவரை எனக்கு விளங்காத விஷயம்.
‘‘உங்குளுக்கு சி & 60 கேசட்ல எவ்வளவு பாட்டு ரெகார்டு பண்ணனும்... சி - 90 கேசட்ல எவ்வளவு பண்ணனும்கிறதே புரியாது... இதுல சீட்டு வேறயா...? என்றான் எஞ்ஜினீயர் ரவி.
அப்புறம் என்ன...? இருக்குற கடனையெல்லாம் அடைக்கிறதுக்காக ஆரம்பித்த சீட்டு சமாச்சா ரமும் ஒழுங்காக கட்ட முடியாததால் பத்தோடு பதினொன்னு அத்தோட இதுவும் ஒன்னுன்னு சீட்டு போட்ட கடனும் சேர்ந்து கொண்டது.
இந்தக் கூத்துகளையெல்லாம் பார்த்து கசிந்துருகிய சிவகாசி நண்பனொருவன் ‘‘எழில் ஏன் இவ்வளவு கஷ்டப்படுறீங்க... இன்னும் மூணே மாசத்துல தீபாவளி வருது. நீங்க பணமெல்லாம் தர வேண்டாம்... நான் பட்டாசு ‘‘கிப்ட் பாக்ஸ்'' அனுப்பறேன்... வித்துட்டு காசு குடுத்தா போதும். ஒவ்வொன்னுலயும் சொளையா 50% லாபம்.
நீங்க விக்கறீங்க... காச அள்ளறீங்க... .. . கடன மூஞ்சில விட்டெறியறீங்க... அதுக்கப்புறம் நாம நண்பர்களோட ஆல் இந்தியா டூர் போறோம்... என்ன சொல்றீங்க?'' என்றான்.
உற்சாகம் பிச்சுக் கொள்ள சரியென்று தலையாட்டினேன்.
பட்டாசும் வந்தது. முதல் வாரமெல்லாம் செம சேல்ஸ். வீட்டுக்கே வந்து வாங்கிப் போனார்கள். பாதிக்குப் பாதி லாபம். எனக்கு எந்தப் பிரச்சனையென்றாலும் 24/7 கூடவே இருக்கும் பத்துப் பதினைந்து நண்பர்களுக்கு நாம எதையுமே செய்ததில்லை என்கிற குற்ற உணர்வு என்னுள் எழ...
சரி... ஆளுக்கு ரெண்டு டீ சர்ட்டாவது எடுப்போம் என்று வெங்கட்டானிடம் சொல்ல... ‘‘நீங்க காதர் பேட்டை வாங்க... செகண்ட்ஸ் டீ சர்ட் சீப்பா கெடைக்கும்'' என்றான் அவன். துணி பர்ச்சேசுக்காக திருப்பூருக்கு ரயிலேறினேன்.
தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்தது. முதல் வாரம் ஹாட் கேஷ் கொடுத்து வாங்கிச் சென்றவர்கள் தவிர மற்றவர்கள்
‘‘சம்பளம் வந்தவுடனே தர்றேன்...''
‘‘பாஸு... போனஸ் அடுத்த வாரம் அறிவிச்சுருவான்... வந்ததும் உங்குளுக்குத்தான்...'' என்று அள்ளிக்கொண்டு போக அடுத்த ஆர்டருக்காக நண்பனுக்குப் போனைப் போட்டேன். ‘‘என்ன எழிலு... நம்முளுக்குப் போட்டியா கடையே போட்ருவீங்க போலிருக்கு?'' என்றான் நண்பன்.
வீட்டின் முன்னறை முழுக்க பட்டாசு பெட்டிகள்தான். யார் யாரோ வந்தார்கள். அவரோட நண்பர்... இவனோட நண்பன்... என்று. ஆனால் எல்லாம் கிரெடிட்தான். சரி எங்க போயிறப் போறாங்க... எல்லாம் லோக்கல் ஆளுகதானே... சம்பளம் வந்ததும் வாங்கிக்கலாம் என்று அள்ளிவீச... சம்பள நாளும் வந்தது. ஆனால் குதட் அவர்களுக்கும்... பழம் எனக்கும் வந்து சேர்ந்தது.
பண்டிகை முடிந்த மறுநாளே மொத்த ஊரும் தலைமறைவாகி விட்டது போலிருந்தது. பெட்டி வாங்கிப் போன ஒருத்தனும் ஒருத்தியும் கண்ணுக்குக்கூட தட்டுப்படவில்லை. அப்ப இந்த பாழாய்ப்போன மொபைலும் வந்திருக்கவில்லை. அப்புறம் என்ன... இருக்கிற கடனோடு பட்டாசு கடனும் சேர்ந்து கொள்ள... ஐ... ஜாலி என்றாகி விட்டது.
ஆனால் இந்தப் பட்டாசு விளையாட்டிலும் அம்மாவுக்கு ஒரு சந்தோசமும் நிம்மதியும் இருந்தது. ''நல்லவேளை... ஆஷ் டிரேன்னு நினைச்சு பட்டாசுப் பெட்டியில் சிகரெட்டை நசுக்கி வீட்டுக்குத் தீ வைக்காமல்... வெளியில் போய் சிகரெட் குடிக்கிறானே மகன்...'' என்பதுதான் அந்த பெருத்த நிம்மதி.
பிற்பாடு பட்டாசு கடன் கொடுத்த நண்பனே அதைத் தீர்க்க ஓர் அரிய ஐடியாவையும் கொடுத்தான்.
''நண்பா... நீங்க பட்டாசுக்குக் காசு குடுக்க வேண்டாம் (என்னமோ நான் கையில் பணத்தோடு நிற்பது மாதிரி...) உங்களோட அந்த ‘‘வாலி வைரமுத்து ஆபாசம்'' புக்கை மறுபதிப்பு போட்டு அதை எடுத்துக்கலாம். என்ன சொல்றீங்க?'' என்றான். அட சூப்பர் ஐடியா... செஞ்சர்லாம்... அப்ப பட்டாசு கடனத் தீர்க்க புக்கப் போடறோம் என்று துள்ளிக் குதித்தேன்.
‘‘இல்லற வாழ்வின் சுகங்களையும் சுமைகளையும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்வோம்''ன்னு கல்யாணத்தின் போது ஒப்பந்தம் வாசித்தால் மட்டும் போதுமா? சுகம் ஓரளவுக்கு ஓகே... ஆனால் கடன்...? ‘‘நானிருக்கிறேன்'' என்று வந்து நின்றார் என் வாழ்க்கை ஒப்பந்ததாரர். எங்கோ அவருக்குத் தெரிந்த இடத்தில் வட்டிக்கு இருபதாயிரம் ரூபாய் வாங்கி வந்து நீட்ட மதுரையில் உள்ள அச்சக நண்பரிடம் நீட்டினோம் அதை.
‘‘உங்குளுக்கு புக்கு புதன்கிழமை கெடச்சா போதுமா...? இல்ல திங்கக் கிழமையே குடுத்தறவா?'' என்றார் அச்சக நண்பர். ‘‘ச்சேச்சே அவ்வளவு அவசரமெல்லாம் இல்ல... நீங்க வாரக் கடைசிக்குள்ள குடுங்க போதும்'' என்றோம் நண்பனும் நானும்.
அந்த வாரக் கடைசியும் வந்தது. கூடவே சாதிக் கலவரமும். ஓரிரு மாதங்கள் கழித்து போனைப் போட்டால் ‘‘பாமரன்... இங்க பிரச்னைன்னு திருவனந்தபுரத்துல அடிக்கச் சொல்லீட்டேன்... ஆமா உங்களுக்கு புக்கு புதன்கிழமை கெடச்சா போதுமா... ? இல்ல திங்கக் கிழமையே குடுத்தறவா?'' என்றார்.
வேணாம்... இதுக்கு மேல இதை நீட்டிச்சா அப்புறம் நீங்க அட்ரஸ் தேடி வந்து உதைப்பீங்க. ஆக பட்டாசு கடன் தீர்க்க புத்தகம் போடப் போய் புத்தகக் கடனும் கடன் பட்டியலில் சேர்ந்து அலங்கரித்தது.
இடையில் வந்த ஆண்டுகளில் நூதனமாய் என்னென்ன கடன் வாங்கினேன் அதை எப்படியெப்படி எல்லாம் ‘‘தீர்த்து'' வைத்தேன் என்பதெல்லாம் ஒரு கட்டுரையில் முடியக் கூடிய சமாசாரமா?
இதில் நான் வாங்கிய கடன் போக எனது பெயரில் என் அதிகாரிக்கு வாங்கிக் கொடுத்த கடன்களுக்கு தனலட்சுமி... உதயலட்சுமி... என எண்ணற்ற இடங்களில் இருந்து அனுப்பிய கோர்ட் நோட்டீசுகளும்... அதற்கு பதில் கேட்டு பல்கலைக் கழகப் பதிவாளர் அனுப்பிய மெமோக்களும் தனி ரகம். இதில் ஷ்யூருட்டிக்குக் கையெழுத்துப் போட்டுத் திண்டாடியவைகளும் உண்டு. வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போடக்கூட பயந்து கொண்டு போட்ட பொழுதுகளும் உண்டு.
ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் உடனிருந்த நண்பர்களால் ஒவ்வொன்றிலிருந்தும் தப்பித்து வந்தேன்.
‘‘பேண்ட பக்கம் பொச்சை மறந்து வெச்சுட்டு வர்றவன் நீயு'' என்று என்னை ‘‘பெருமிதமாகச்'' சொல்லும் எனது பாட்டி. அப்படி போன பக்கமெல்லாம் போனை மறந்து வைத்துவிட்டு வருவது எனது விளையாட்டுக்களில் ஒன்று. ‘‘நீங்கள் அழைக்கும் எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது என்று வந்தால் அதன் கதை முடிந்தது என்று அர்த்தம்.
‘‘அப்புறம் என்ன... கிருஷ்ணகுமார் மாமாவுக்குப் போனைப் போட வேண்டியதுதானே'' என்பான் மகன். கிருஷ்ணகுமார் என் கல்லூரித் தோழன். என் ஒவ்வொரு பருவத்திலும் ‘‘போன் களவு காதை'' நிகழும் போதெல்லாம் புதிதாக வாங்கித் தரும் பொறுப்பு அவனுடையது.
‘‘என்னப்பா வழக்கம்போல தொலைச்சுட்டியா... அப்ப நீ வழக்கம்போல பி.ஏ.எஸ் கடைக்குப் போயி இருக்குறதுல நல்லதா ஒன்னை வாங்கிக்கப்பா...'' என்பான். நல்லவேளை நான் உள்ளாடை அணியும் ஆடம்பர வழக்கம் இல்லாதவன். இல்லாவிட்டால் அதில் கூட ஸ்பான்சரோட பேரைப் பொறிக்க வேண்டி வந்திருக்கும்.
மகனார் வேறு மீசை அரும்பி கல்லூரிப் பருவத்தில் வந்து நின்றார். என்னை மாதிரி யாரிடமும் காலைத் தேய்த்துக் கொண்டு வேலைக்கு நிற்காமல் சுயமாக தொழில் செய்ய வசதியாக இருக்கும் என்று பி.ஈ சிவிலில் சேர்த்து விட்டோம். அதுவும் கல்விக் கடன் வாங்கித்தான். காலேஜ் பஸ்சுக்கும் பணம் இதுலயே வந்துரும் என்றார்கள். ஆனால் மகனார் ‘‘காலேஜ் பஸ் எல்லாம் வேலைக்காகாதுப்பா... டூ வீலர்லதான் போவேன்'' என்று உறுதிபடக் கூறி விட்டார். பின்னே... . சும்மாவா... யாரோட மகன்?
சரி கடனோட கடனா டூ வீலருக்கு ஸ்டேட் பாங்கில் லோனைப் போட... அதில் பறந்தார் நம்ம வருங்கால சிவில் எஞ்சினீயர். அவ்வேளைகளில் நானும் பிராவிடண்ட் பண்டில் புத்தகம் போடும் விளையாட்டை நிறுத்தியிருந்தேன். நாட்கள் சுழல மகனார் பட்டம் பெற்று வெளியில் வரும் நான்காம் ஆண்டும் வந்தது. ஈழத்தின் உச்ச கட்ட இனப்படுகொலை மனதைத் தாறுமாறகக் கிழித்துப் போட்டுக் கொண்டிருந்த வேளைகள் அவை. மனச் சலிப்பும் துயரமும் உந்தித் தள்ள... சரி போதும் இந்த வேலை என்று விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தேன். நான் ஒய்வு பெற இன்னும் பத்து ஆண்டுகள் மிச்சமிருந்தது. இந்த மிச்சசொச்ச கடன்களில் இருந்து விடுபடலாம் என்கிற எண்ணமும் கொஞ்சம் நிம்மதியைத் தந்தது. பத்திரிக்கைகளில் இருந்து மாதம் மூன்றாயிரமோ நான்காயிரமோ ஏதாவது வந்து கொண்டிருந்தது.
இனியென்ன மகனார் வேற வேலைக்குப் போகப் போகிறார் என்றிருந்த நாளொன்றின் இரவில் மகனார் கனவில் ஒருசேர அகிரா குரோசுவாவும்... ஸ்பீல் பெர்க்கும் கைகோர்த்து வந்து கதவைத் தட்ட... ‘‘நமக்கு சிவில் எல்லாம் ஒத்து வராதுப்பா... நான் சினிமா எடுக்கப் போறேன்'' என்றது எனக்குத் தப்பாமல் பிறந்த வாரிசு.
கல்விக் கடன் தவிர...
பர்சனல் லோன்...
பிராவிடண்ட் பண்ட் லோன்...
வண்டி லோன்...
பண்டிகை லோன்...
கோ ஆப்பரேடிவ் லோன்... என சகல லோன்களையும் அடைத்தது போக மீதிப் பணத்தை நான்கைந்து சாக்கு மூட்டைகளில் கட்டி அள்ளிக் கொண்டு வந்தோம் நானும் நண்பன் தங்க முருகனும்.
இவ்வேளையில் நண்பன் மயில் வண்ணன் வேறு சீட்டுக் கம்பெனி அதிபராகி இருந்தான். என் எல்லாப் பூளவாக்கும் தெரிந்தவனாகையால் ‘‘சீட்டுப் போடு'' என்று தப்பித் தவறிக்கூட சொன்னதில்லை அவன். ஆனால் அவனிடம் நண்பன் சுரேஷ்பாபு சீட்டுப் போட்டு வந்தது ஆச்சர்யமாக இருந்தது. என்னைத் தொலைவில் இருந்தே ரசிக்கும் கால் நூற்றாண்டுக்கும் மேலான நெருங்கிய நண்பன் அவன். வருடத்தில் முக்கால்வாசி வெளிநாடுகளிலேயே சுற்றிக் கொண்டிருக்கும் கணினி மேதை.
‘‘ஏண்டா மயிலு... சுரேஷுக்கு என்னடா தேவையிருக்கு... சீட்டுப் போடறான்?'' என்றேன் மயிலிடம். ''எல்லாம் காரணமாத்தான்'' என்றான்.
திடீரென ஒருநாள் ஒரு லட்சமோ ஒன்றரை லட்சமோ கொண்டு வந்து நீட்டினான் நண்பன் மயில் வண்ணன்.
எதுக்குடா? என்றேன்.
‘‘இல்ல இந்த மாசம் சுரேஷ்பாபு சீட்டு எடுத்தாரு... இத அப்படியே தலைவனோட கல்விக் கடனைக் கட்டறதுக்கு வெச்சுக்கங்கன்னு சொல்லீட்டு குடுத்துட்டுப் போயிட்டாரு... '' என்றான் அவன்.
ஓரிரு மாதங்கள் முன்பு என் அன்பிற்குரிய பாலுமகேந்திராவின் சினிமாப் பள்ளிக்குப் பொறுப்பாக இருந்த தோழி ரோசலின் அலைபேசினார். பல்வேறு விஷயங்களைக் கதைத்த பிறகு ‘‘பாமரன் கேக்கறேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க... எடம் என்னாவது வாங்கிப் போட்டிருக்கிங்களா?'' என்றார் அக்கறையோடும் கரிசனத்தோடும்.
''ஆமாங்க இங்குள்ள முத்தண்ணன் குளம் பக்கத்துல ஆறுக்கு ரெண்டடி இருக்கு.'' என்றேன்.
‘‘நாங்கெல்லாம் இங்க கிரவுண்டுன்னுதான் சொல்லுவோம்... அதென்ன கணக்கு ஆறுக்கு ரெண்டு?'' என்றார்.
அடக்கத்துக்குத்தான் என்றேன் அடக்கமாக.
இப்போதெல்லாம் புதிதாக செருப்பு கூட வாங்குவதில்லை. துணிக்கடைக்குப் போய் ஆண்டுகள் பலவாயிற்று. இப்போது கடனில்லாப் பெருவாழ்வு என்னுடையது. புத்தகங்களோ... செருப்போ... சட்டையோ... கண்ணாடியோ... எது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ள தோழமைகள் உண்டு ஊரெங்கும்.
பின்னே...
பறக்கின்ற உசுரைக் கூட விடாமல் பற்றிக் கொள்ளவும் பாதுகாக்கவும் நண்பர்களே சொத்தாக இருக்கும்போது நமக்கு மட்டும் எதற்கு தனியாக ஒரு சொத்து... ?
ஜுலை, 2021