கடத்திட்டாங்க.. கடத்திட்டாங்க..

கடத்திட்டாங்க.. கடத்திட்டாங்க..
Published on

நீங்கள் கடத்தப்படலாம் – சந்தனக்காடு முதல் காந்தஹார் வரை – திகில் உலகின் இருள் பக்கங்களுக்கு உங்களை வரவேற்கிறோம்..

தெருவில் நடந்துபோய்க்கொண்டிருக்கிறீர்கள். புதிதாக அறிமுகமாகும் ஒருவர் உங்களுடன் நன்றாகப் பேசுகிறார். சரக்கு அடிக்கலாம் வாங்க என்று அழைத்துப்போய் வாங்கிக் கொடுக்கிறார். மூக்கு முட்டக் குடிக்கிறீர்கள். என்ன நடக்கிறதென்றே தெரியாத அளவுக்குக் குடித்துவிட்டு காலையில் கண்விழித்துப்பார்த்தால் ஒரு வீட்டில் அடைபட்டுக் கிடக்கிறீர்கள். உங்களை மாதிரியே வந்துசேர்ந்த பலரும் அங்கே இருக்கிறார்கள். தப்பிக்க வழியே இல்லை. தினமும் இப்படி ஆட்கள் வந்து

சேர்ந்து, போதுமான ஆட்கள் சேர்ந்தவுடன், வரிசையாய் வண்டியில் ஏற்றி நேராய்க் கொண்டுபோய் ஒரு கப்பலில் ஏற்றிக் கொண்டுபோகிறார்கள். தெருவில் சுற்றித் திரிந்த நீங்கள் இனி அந்த கப்பலில் வேலை செய்யவேண்டியதுதான். வீடு திரும்புவது என்பது கப்பல் இயற்கையை வென்று திரும்பினால்தான். லண்டனில் இருந்து இந்தியா செல்லும் வணிகக் கப்பல் அது. கிழக்கிந்தியக் கம்பெனிக்குச் சொந்தமானது.

18-ஆன் நூற்றாண்டில் லண்டனில் இருந்து  இந்தியாவுக்குச் செல்லும் கிழக்கிந்திய கம்பெனியின் கப்பலுக்கு மாலுமிகள் இப்படித்தான் கடத்தப்பட்டார்கள். இங்கிலாந்து கடற்படைக்கே மாலுமிகளை இப்படித்தான் கடத்திப்போயிருக்கிறார்கள்.

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலகப்பொருளாதாரம் மந்தநிலையை அடைந்தபோது எங்கும் வேலையே கிடைக்கவில்லை.ஆனாலும் ஒரே ஒரு வேலைக்கு எவ்வளவு கெஞ்சிக் கூப்பிட்டாலும் ஆள் வரவில்லை. அது ஆர்க்டிக் கடல்பிரதேசத்தில் கப்பலில் சென்று திமிங்கிலங்களை வேட்டையாடும் வேலை. காரணம் கொடூரமான குளிர் அத்துடன் மிகமோசமான சம்பளம். ஆனால் முதலாளிகள் சும்மா இருப்பார்களா? ஆட்களை கப்பல் வேலைக்காக கடத்த ஆரம்பித்தார்கள்.

இப்படி ஆளைத் தூக்கிக்கொண்டுபோய் கப்பலில் வேலைபார்க்கவைப்பதற்கு ஷாங்காய் கடத்தல் என்று பெயர்.  ஏன் இந்த பெயர் வந்தது என்றால் அமெரிக்காவில் இருந்து சீனா பக்கம் போய் திமிங்கிலவேட்டை ஆடும் கப்பல்களில்தான் இந்த மாதிரி ஆட்களைக் கடத்திக் கொண்டு வேலை பார்க்கவைப்பார்கள். பின்னர் சீனா பக்கம் போன கப்பல்கள் ஆர்க்டிக் பக்கம் போக ஆரம்பித்தன. இடம்தான் மாறியதே தவிர சம்பளம் போன்ற வசதிகளின் தரம் படுபாதாளத்திலேயே இருந்தது. மாதக்கணக்கில் மைனஸ் 40 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் வேலைப்பார்த்து வேட்டையாடிய திமிங்கிலங்களுடன் கப்பல் திரும்புகையில்தான் திரும்பமுடியும்.

எக்ஸ்பிரஸ் கடத்தல் என்றொரு வகை உண்டு. இது சமீப காலங்களில் அமெரிக்கா, அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் அதிகமாக நடக்கிறது. நீங்கள் ஒரளவு வசதியானவர் என்று தெரிந்தால்போதும். உங்களைத் தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள். சில மணி நேரங்களில் ஓரளவு உங்களால் கொடுக்க முடிந்த குறிப்பிட்ட தொகையை உங்கள் உறவினர்கள் யாரேனும் வந்து கொடுத்துவிட்டு அழைத்துச் செல்லலாம். (கிட்டத்தட்ட சூதுகவ்வும் வகை கடத்தல்). சிலசமயம் உங்கள் ஏடிஎமில் பணமிருந்தால் எடுத்துக் கொடுத்துவிட்டு வந்தும்விடலாம். அர்ஜெண்டினாவில் மக்கள் ஒரு காலத்தில் இரவில் வீட்டுக்கதவைத் திறந்துபோட்டுவிட்டுத் தூங்குவார்களாம். ஆனால் அங்கே நிலைமை பொருளாதார வீழ்ச்சியால் மோசமாகி விட்டது.

லத்தீன் அமெரிக்காவில் உள்ள அழகான நாடு பனாமா. அங்கும் எக்ஸ்பிரஸ் கடத்தல் படுவேகமாக நடக்கிறது.  இந்த வகைக் கடத்தல்களைத் தடுக்க சில வழிகளை சொல்கிறார்கள்:

பணக்காரத்தனமாக உடை அணியாதீர்கள்.

ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது சுற்றுப்புறம் பற்றிய விழிப்புடன் இருங்கள். தனியான இடங்களில் பணம் எடுக்காதீர்கள்.

விலை உயர்ந்த அணிகளை அணியவேண்டாம். கிரெடிட் கார்ட், ரோலஸ் வாட்ச் எல்லாம் வீட்டில் இருக்கட்டும். வெளியே வேண்டாம்.

தனியாக எங்கும் சுற்றவேண்டாம். நாலைந்து பேராகச் சென்றால் கடத்தப்படுவது கடினம்.

எங்கும் சண்டைபோடாதீர்கள். சில டாலர் பணத்தை விட உங்கள் உயிர்  முக்கியம்.

கொஞ்சம் தற்காப்புக் கலை தெரிந்து வைத்திருங்கள். ஓடித் தப்பிக்கவாவது உதவும்.

எதுவும் நடக்கலையே.. எதுக்குப் பாதுகாப்பு என்று நினைக்கவேண்டாம். ஆபத்து எந்த ரூபத்திலும் வரலாம்.

இதெல்லாம் அங்குள்ள ஒரு பாதுகாப்பு நிறுவன அதிகாரி கூறுபவை. இதெல்லாம் பனாமா போகும் பணக்காரங்களுக்கு என்று நினைக்கவேண்டாம். இங்கேயும் உதவும்.

கடத்தல்களில் புலிக்கடத்தல் என்றொரு வகை உண்டு. கொட்டை எடுத்த புலியா என்று கேட்கவேண்டாம். இது வேற. பயங்கரமானது. உங்களைக் கடத்தி வைத்துவிடுவார்கள். பணமெல்லாம் கொடுக்கவேண்டாம். உங்கள் உறவினர் அல்லது நண்பர் ஒரு வேலை செய்துகொடுத்தால் போதும் உங்களை விட்டுவிடுவார்கள். ஹை ஜாலி என்று குதிக்கவேண்டாம். செய்ய வேண்டிய வேலை எங்காவது வெடி குண்டு வைக்கவேண்டியதாக இருக்கும். ஆமாம். தாங்கள் நேரடியாக செய்யவிரும்பாத குற்றத்தை இன்னொரு அப்பாவியை வைத்து செய்யவைப்பது இது. இதுபோன்ற குற்றங்கள் அயர்லாந்தில் அதிகம் நடப்பதாகச் சொல்கிறார்கள்.!!!

கடைசியாக: நைஜீரியாவில் 200 பள்ளிச் சிறுமிகளை போகோ ஹராம் என்ற போராளி அமைப்பு கடத்திக் கொண்டுபோய் வைத்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. அவர்கள் இந்த நிமிடம் வரை மீட்கப் படவில்லை. உலகம் அவர்களை மறந்துவிட்டது. கடத்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்களின் தவிப்பு பெருமூச்சாய் அந்நாட்டின் காற்றில் கலந்துகொண்டே இருக்கிறது. .

ஆகஸ்ட், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com