சென்னை-யிலிருந்து கிளம்பி ராய்ப்பூர் சென்று சேரும்வரை சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ்பால் மேனன் குறித்த சிந்தனையே மேலோங்கியிருந்தது. ஏன் அவர் கடத்தப்பட்டார் என்ற கேள்வி திரும்ப திரும்ப எழுந்துகொண்டிருந்தது. ஆனால், ராய்ப்பூரிலிருந்து ஆள் நடமாட்டமே இல்லாத வனத்தினூடாக 450 கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு சுக்மா மாவட்டம் சென்று சேர்ந்தபிறகு எனது மனதோட்டம் முற்றிலும் மாறியிருந்தது.
அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்ட கெரலாப்பால் என்ற பகுதியின், மஜிப்பாரா என்ற கிராமத்திற்கு முதலில் சென்றேன். அங்கிருந்த மக்கள் பாலி வகை மொழியில் சம்பவத்தை விவரித்தார்கள். அடிப்படை வசதிகள், மண்ணின் மைந்தர்களான ஆதிவாசிகளைச் சென்று சேரவில்லை என்பதை கண்கூட பார்க்க முடிந்தது. ரேசன் பொருட்கள், சாலை உள்ளிட்ட வசதிகளை வெளியுலகத்தோடு தொடர்பில்லாத ஆதிவாசி மக்கள் வாழும் வனப்பகுதிக்கு எடுத்துச் செல்லும் முயற்சியை அலெக்ஸ் பால்மேனன் மேற்கொண்டார் என்று சொல்லப்பட்டது. அலெக்ஸின் இதுபோன்ற மேம்பாட்டு முயற்சிகள் தான் இந்த கடத்தலுக்கு முதல் காரணமாக இருந்திருக்கலாம் என்று அங்கிருந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சொன்னார். கடந்த 25 ஆண்டுகளாக அரசுக்கும், மவோயிஸ்ட்டுகளுக்கும் இடையில் நடந்துவரும் போரின் நீட்சியாகவே இந்த கடத்தல் பட்டது. கடத்தப்பட்ட அலெக்ஸ் பால்மேனனை விடுதலை செய்ய சத்திஸ்கர் மாநில ஆளும் பாரதிய ஜனதாவின் முதல்வர் ராமன்சிங் அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது. சிறையில் இருக்கும் முக்கியமான 8 மாவோ தலைவர்களை விடுவிக்க வேண்டும், ராணுவ முகாம்களை மூடுவதோடு, நக்ஸல்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை கைவிடவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
நிலைமை பேச்சுவார்த்தை மூலம் சரிக்கட்ட, நிர்மலா பூச் என்ற அரசு செயலாளர் தலைமையில் சத்தீஸ்கர் அரசு குழு அமைந்தது. மூத்த பேராசிரியர் ஹர்கோபால், ஆட்சிப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற பி.டி.சர்மா ஆகியோர் நக்சல் தரப்பு தூதுவர்களாக பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டனர். தூதுவர்கள் மீது மாவோக்களிடம் இருந்த மதிப்பை அரசு பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்தது. அதேநேரம், அங்கிருந்த சட்டப் போராளிகளைச் சந்தித்த போது, இந்த மோதலின் இன்னொறு முகமும் தெரிந்தது. அதாவது, பஸ்தர் பகுதியில் நக்ஸல்களுக்கு உதவிய குற்றச் சாட்டுகளில் ஆயிரக்கணக்கான ஆதிவாசி இளைஞர்கள் எந்த விசாரணையும் இன்றி தொடர்ந்து சிறை வைக்கப்பட்டிருப்பதாக சட்டப் போராளிகள் தெரிவித்தனர். ஒருபக்கம் அவர்களின் மீதான வழக்கு விசாரணை இல்லை, மறுபக்கம் குடும்பத்தார் சென்று பார்க்க முடியாத பல நூறு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள சிறைகளில் அவர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேம்பாட்டுகளை கொண்டு வருகிறோம்; மாவோயிஸ்டுகளை புறக்கணியுங்கள் என்பது அரசின் வாதம். மேம்பாடு என்ற போர்வையில் வனப்பகுதியில் வரும் அரசுக்கு, கனிமவளம் நிரம்பிய உங்களின் நிலங்கள் தேவைப்படுகிறது, அரசை நம்பி விடாதீர்கள் என்பது மாவோக்களின் வாதமாக இருந்தது.
அரசின் வாக்குறுதிகளையும் தாண்டி, தூதுவர்களை நம்பி, 13 நாட்களுக்குப் பிறகு அலெக்ஸை விடுவித்தனர். அலெக்ஸின் கை, கால் முழுவதும் புண்ணாக இருந்தது. அவரிடம் பேட்டி எடுத்த முதல் செய்தியாளர் என்று சொல்லி பெருமைப்படும்படி, அந்த 13 நாட்களில் அலெஸ் மாறியிருந்தார்.
ஆனால் அந்த 30 நாள் சுற்றுப்பயணத்திற்கு பிறகும், தொடர்ந்து அந்த மாநிலத்தில் பலரோடு இன்னும் தொடர்பில் இருக்கிறேன். இன்னும் ஆதிவாசிகளின் பிரச்னைகள் முழுமையாக நோக்கப்படாமல் இருக்கிறது.
(மகாலிங்கம் பொன்னுசாமி, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சிறப்புச் செய்தியாளர். அலெக்ஸ் பால்மேனன் கடத்தப்பட்டபோது, களத்தில் இருந்து செய்தியாக்கம் செய்தவர்.)
ஆகஸ்ட், 2014.