கடந்த காலத்தில் புதுச்சேரியில் திருமுடி சேதுராம செட்டியார் என்பவர் ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள தன்னுடைய வீட்டையே இலக்கிய மன்றமாக மாற்றி அமைத்திருந்தார்.
இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் இவரது வீட்டிற்கு செல்லலாம். கதை சொல்லலாம், கவிதை புனையலாம், பாட்டு எழுதலாம். இவர்களுக்குச் சாப்பாடும், கைச்செலவுக்கு பணமும் நிச்சயம். வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் செட்டியார் இலக்கியவாதிகளுக்கு இப்படித்தான் உதவிகளைச் செய்துவந்தார்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் புதுவை இலக்கிய கழகம் என்ற பெயரில் இலக்கிய செயல்பாடுகளைத் தொடங்கி பின்னாளில் புதுவை தமிழ்ச்சங்கம் தொடங்குவதற்கு அடிகோலினார். இன்று வெங்கட்டாநகரில் உள்ள தமிழ்ச்சங்கத்தில் தினந்தோறும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்ச்சங்கம் சார்பில் மாதத்தின் மூன்றாம் ஞாயிறு அன்று இலக்கிய நிகழ்ச்சிகள் உண்டு. தமிழ்ச்சங்கத்தின் தற்போதைய தலைவர் வி.முத்து.மறைந்த தனித்தமிழ் அறிஞர்கள் திருமுருகனார், ம.இலெ. தங்கப்பா ஆகியோர் மாதந்தோறும் தனித்தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
புதுச்சேரி நகரத்தில் பிரெஞ்சு அரசுக்கு சொந்தமான பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் இந்தியவியல் துறை சார்பில் இலக்கிய ஆய்வு அரங்குகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதைபோல, அல்லயன்ஸ் பிரான்சே அரங்கத்தில் மேலை இலக்கிய நிகழ்வுகளும், புஸ்ஸி வீதியில் உள்ள கம்பன் கலையரங்கில் மரபு, நவீன இலக்கிய நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.
இதைபோலவே தனித்தமிழ் இயக்கம் என்றபெயரில் தமிழமல்லன் என்பவர் தலைமையில் மரபிலக்கியங்கள், சிற்றிலக்கியங்களுக்கான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இளங்கவி அருள் எனும் கவிஞர் ‘மீறல்'இலக்கியக் கழகத்தை நிறுவி அதன்சார்பில் வருடத்திற்கு ஒரு முறை கவிஞர்களுக்கு விருதுகள் வழங்குதல், எழுத்தாளர்களை கவுரவித்தல் போன்ற பணிகளைச் செய்துவருகிறார். இந்த அமைப்பு சார்பில் மாதாந்திர இலக்கிய நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.
கவிஞர் மு.பாலசுப்ரமணியன், ‘நடைவண்டி' என்ற பெயரில் சிறார்களுக்கான இலக்கிய கழகத்தை நிறுவி தொடர்ச்சியான நூல் வெளியீட்டு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறார். நண்பர்கள் தோட்டம் என்ற அமைப்பு பொதுவான நிகழ்வுகளை நடத்தி வருகிறது.
புதுச்சேரி முத்துலிங்கம் பேட்டையில் புத்தகப்பூங்கா என்ற அமைப்பு சார்பில் தேநீர் பேச்சு என்ற தலைப்பில் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டங்கள் நடைபெற்று வந்தன.
புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் என்ற அமைப்பை ஆறு.செல்வன் எனும் கவிஞர் நிறுவி மாதந்தோறும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இதுதவிர, புதுச்சேரி கலை பண்பாட்டு பேரவை, பாரதிதாசன் அறக்கட்டளை, பிரபஞ்சன் அறக்கட்டளை, நட்புக்குயில்கள், புறம், புதுச்சேரி சிந்தனையாளர் பேரவை, பாரதி அன்பர்கள், மாணவர் நல தொண்டியக்கம் போன்றவை சொல்லத்தக்க அமைப்புகளாக இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இதுதவிர புதுச்சேரியில் வாசகர் சாலை அமைப்பு சமீபகாலமாக ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள விளிம்புநிலை மக்களுக்கான வாழ்வாதார மையத்தில் மாதாந்திர இலக்கிய நிகழ்வினை நடத்தத் தொடங்கியிருக்கிறது.
இதுதவிர புதுச்சேரியில் இருந்து வெளிவரும் சிற்றிதழ்கள் சில தங்கள் இதழ்களின் பெயர்களில் இலக்கிய அமைப்புகளை வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது, புதிதாக வாட்ஸ்&அப் கவிஞர்கள் குழுக்களும் புதுச்சேரி இலக்கிய உலகில் புதிய தரிசனங்களைத் தருகின்றன.
புதுச்சேரியில் உள்ள ஒவ்வொரு இலக்கியவாதி களுமே, ஒவ்வொரு அமைப்பினை நிறுவி அதற்கு தலைவராக இருக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி.
ஜனவரி, 2020.