ஓடு மில்கா சிங் ஓடு!

ஓடு மில்கா சிங் ஓடு!
Published on

அதுவொரு வெற்றிகரமான டெம்ப்ளேட். ஏதாவது ஒரு விளையாட்டில் கெட்டிக்காரனான கதாநாயகனுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும். அதையும் மீறி போராடி, ஜெயித்துக் காட்டுவார். இந்த டெம்ப்ளேட், அது தரும் அனைத்து சாதக, பாதகங்களும் பாக் மில்கா பாக் படத்தில் உண்டு. அதையும் மீறி நம்மை கவனிக்க வைப்பது, அதன் ஊடாக வரும் அரசியலும் அது சுட்டிக்காட்டும் வரலாற்றுப் பிழையும்.

பாக் மில்கா பாக், இந்தியாவின் சிறந்த தடகள வீரரான மில்கா சிங்கின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப் பட்ட படம். மில்கா சிங், சுதந்திர இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத் தந்த முதல் விளையாட்டு வீரர். பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் பிறந்து, இந்தியப் பிரிவினை நேரத்தில் நடந்த கலவரங்களில் குடும்பத்தை பறிகொடுத்து, தப்பித்து இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவர். பாகிஸ்தானில் வசதியாக வாழ்ந்துவிட்டு, அகதியாக இந்தியாவுக்குள் தஞ்சமடைந்த சீக்கியர்கள், டெல்லியையே வாழுமிடமாக தேர்ந்தெடுத்தார்கள். அகதியாக டெல்லியில் வாழ்ந்த அத்தனை சீக்கியர்களும் நடுத்த வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்திய ராணுவத்திலும், விளையாட்டுத்துறையிலும் முன்னுக்கு நின்றவர்களில் பலர், இந்தியாவுக்கு அகதிகளாக வந்த சீக்கியர்கள்தான்.

‘உனக்கெல்லாம் இந்தியப் படம் வரைந்த கோட் கிடையாது' என்று சக இந்தியப் போட்டியாளர் அவமதிக்கும்போது, வெகுண்டெழுந்து வெறித்தனமாக மில்கா சிங் ஓடி வரும் காட்சி, இந்திய குடிமகன் என்னும் அங்கீகாரத்தை பெறுவதற்காகத்தான் என்பதை கச்சிதமாக சொல்லிவிடுகிறார்கள். ஃபர்ஹான் அக்தர், அச்சு அசலாக மில்கா சிங் போலவே இருக்கிறார் படம் முழுவதும் ஓடிக்கொண்டே இருககிறார். 40 வயதான அக்தர், 22 வயது இளைஞராக சிக்ஸ் பேக் காட்டி நடிக்க வேண்டிய கட்டாயம். தன்னுடைய பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். தில்  சாஹ்தா ஹை போன்ற படங்களின் மூலமாக சிறந்த இயக்குநராக அறியப்பட்டவர், இந்தப் படத்தில் சிறந்த நடிப்புக்காக பிலிம்பேர் விருதையும் பெற்றிருக்கிறார். சோனம் கபூர், காதலுக்காக கொஞ்ச நேரம் வந்து போகிறார். கிடா மீசையோடு நம்மூர் பிரகாஷ் ராஜ், ராணுவ கேப்டனாக வந்து மிரட்டுகிறார். எடுபடவேயில்லை!

படத்தின் கிளைமாக்ஸ், கவித்துமான காட்சியாக விரிகிறது. காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று ஓடி வரும்போது, அவருடைய பால்ய வயது உருவமும் உடன் ஓடி வருகிறது. ‘இங்கிருந்து எப்படியாவது தப்பி, ஓடிப்போய்விடு' என்று கலவரத்தில் சிக்கி, மரணத்தின் விளிம்பில் நின்றபடி அவரது அப்பா சொன்னதைக் கேட்டு ஓட ஆரம்பித்தவரை, கடைசிவரை நினைவுகள் துரத்திக்கொண்டே இருக்கின்றன.

கடந்த காலத்தின் கசப்பான நினைவுகளால் பாகிஸ்தான் போவதைத்  தவிர்க்கும் மில்கா சிங்கை அழைக்கும் பிரதமர் நேரு, பாகிஸ்தானுக்கு எதிராக தடகளப் போட்டியில் நீ ஓடவேண்டும் என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதாக காட்சிகள் வருகின்றன. எத்தனையோ தடகள வீரர்கள் ஓடினாலும், உண்மையான போட்டி என்பது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும்தான் என்பதை அடுத்தடுத்த காட்சிகள் குறிப்பிடுகின்றன. பாகிஸ்தான் ஜெனரல் அயூப் கான், மில்கா சிங்கை பாராட்டி, நீங்கள் ஓடவில்லை, பறந்து சென்றீர்கள் என்பதும் காட்சிகளாகப்பட்டிருக்கிறது.

ஒரு ஸ்போர்ட்ஸ் படம், விருதுகளை குவித்ததோடு 2013ன் முக்கியமான பாக்ஸ் ஆபிஸ் படமாகவும் வெற்றி பெற்றிருக்கிறது. பாக் மில்கா பாக் படத்தின் வெற்றியைப் பற்றி மில்கா சிங்கிடம் கேட்டபோது, நான் இப்போது இந்தியா முழுவதும் அறியப்பட்டவனாகிவிட்டேன் என்றாராம். அவலமாக இருந்தாலும், அதுதான் இந்தியா!

ஜூன், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com