ஓடிடி உலகில் டிரெண்டிங் தொடர்கள்

ஓடிடி உலகில் டிரெண்டிங் தொடர்கள்
Published on

ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கப்படும்  என்ற தத்துவம் எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ ஓடிடி வலைதளங்களுக்கு மிக துல்லியமாக பொருந்தும்.

வீட்டில் ஒரே பெட்டியை வைத்துகொண்டு  எல்லோரும் எனக்கு இந்த நிகழ்ச்சிதான் வேண்டும் என்று மல்லுக்கட்டும் அவசியமின்றி ஹாலில், சமையல் அறையில் ஏன் பாத்ரூமில் அமர்ந்துகொண்டு கூட பார்க்கலாம்.  பார்ப்பது மட்டுமன்றி நீங்கள் எதையேனும் இந்த சமூகத்திற்கு வழங்கவேண்டும் என்று விரும்பினால் யூட்யூப், விமியோ, போன்ற தளங்கள் மூலம் நீங்களே  பங்குபெறலாம். இப்படி ஒரு புதிய புரட்சி  உலகை ஒரு குடையின் கீழ் இணைத்துகொண்டிருக்கிறது.

ஒரு விஷயம் அளவுக்கு அதிகமாக வந்துவிட்டாலே சின்ன குழப்பம் நேரிடும். எதை பார்ப்பது? எதை தவிர்ப்பது ? இது ஒவ்வொருவரின் அக விருப்பம்  என்றாலும்  உலகமெங்கும் இருந்து அலைவரிசையில் ஊடாடிகொண்டிருக்கும் தொடர்களின் ஒரு விருப்பப்பட்டியல். ஓடிடி  படைப்புகள் என்றாலே பாலியல், வன்முறை, வசைப்பேச்சு மலிந்து கிடப்பதை தவிர்க்கமுடியாத நிலையில் இருக்கிறது.  இதில் ஓரளவுக்கு சலித்து எடுக்கப்பட்டவை இவை:

இந்தியா: இந்திய கிராமங்களைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டுமெனில் நீங்கள் நிச்சயம் 'பஞ்சாயத்' (Panchayat) என்ற இந்த சீரிஸை தவறவிடக்கூடாது. கிராம பஞ்சாயத்து அலுவலகம் ஒன்றுக்கு குமாஸ்தாவாக பணிபுரிய வருகிறான் ஓர் இளைஞன். அங்கு முறைப்படி ஊர் தலைவியாக தேர்ந்தெடுக்கப் பட்ட தனது மனைவிக்கு பதிலாக ஆட்சி செய்துகொண்டிருக்கும் கணவன் (பல ஊர்களில் நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம் ) ஆட்டத்தில் சிக்கி, அவன் படும் அவஸ்தைகளை காமெடியாக சொல்லும் தொடர்.  இந்திய கிராமங்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் இந்த தொடர் இறுதியில் பெண்களுக்கான அரசியல் விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வை ‘நச்சென்று' எடுத்துரைத்து நிறைவு தருகிறது. இது தவிர The Family man, Mirzapur, Sacred என  தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பேசும் இந்திய படைப்புகள் பல வரிசை கட்டி நிற்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை மேற்கத்திய படங்களின் காப்பியாக இருக்கிறது. புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாக பல இந்திய தொடர்கள் கெட்ட வார்த்தையும், வன்முறையும் நிரம்பி நிற்பது துரதிஷ்டம். இது ஒரு கற்பனை வறட்சி எனலாம். இருப்பினும் சில தொடர்கள் நம்பிக்கை தருகின்றன. டில்லியில் நடந்த நிர்பயா பாலியல் நிகழ்வை அடிப்படையாக வைத்து ஒரு பெண் காவல்துறை அதிகாரியின் பார்வையில் விரிவடையும் Delhi Crime ஒரு சிறந்த தொடர் எனலாம். கடந்த ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் எம்மி விருதுகளை வென்றது இந்த தொடர்.

கொரியா: கொரிய சினிமாவையும் இந்தியாவையும் பிரிக்கமுடியாது. இன்று பல இளம் இயக்குநர்களின் இன்ஸ்பிரேஷன் கொரியன் படங்கள்தான். காமெடியாகட்டும். திரில்லராகட்டும், ஆக்‌ஷன் ஆகட்டும் கொரியன்களின் கதை சொல்லும் பாணியே தனி. அந்த வகையில் சிரிக்க, ஜில்லிட (அட ! ரொமான்ஸ்) வைக்கும் தொடர் Do Do Sol Sol La La Sol. பியானிஸ்ட் பெண்ணுக்கும் , கிடைக்கும் வேலையை செய்து பிழைத்துகொள்ள முயற்சிக்கும் இளைஞனுக்குமான நட்பு, காதல் இத்தியாதிகளை சிரிக்க சிரிக்க அதே தென்கொரிய முத்திரையுடன் சொல்லும் தொடர் இது.

அமெரிக்கா: உலகின் பிக்பாஸாக இருக்கும் அமெரிக்கா பல துறைகளை போன்றே ஊடகத்தின் சந்தையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அவர்கள் அமெரிக்க பார்வையாளர்களுக்கு மட்டுமல்ல உலக பார்வையாளர்களை குறிவைத்தே சந்தையை கட்டமைக்கிறார்கள். இன்னொருபுறம் அவர்கள் எதை செய்தாலும் அதில் பெரும்பான்மையானவை உலகின் மூலைமுடுக்கெல்லாம் கைதட்ட வைக்கிறது. அமெரிக்க தொடர்களை பட்டியலிட்டால் இந்த கட்டுரைக்கான பக்கங்கள் போதாது. எனினும் ஜிலுஜிலு குளுகுளுவென ஒரு தொடரை நீங்கள் ரசிக்க விரும்பினால் Gilmore Girls தொடரை பார்த்து ரசிக்கலாம். Strangethings இன்னொரு அருமையான திரில்லர்.

கனடா: அமெரிக்காவுக்கு வெகு அருகில் இருந்தாலும் கனடா பொழுதுபோக்கு உலகில் தனக்கென்று ஒரு தனி வட்டத்தையும் சந்தையையும் உருவாக்கி வைத்திருக்கிறது. ஓடிடி உலகில் அமெரிக்காவுக்கு நிகராக போட்டியை தருகிறது கனடா. அவர்களின் லேட்டஸ்ட்  வசீகரம் Workin' Moms. பேரை கேட்டாலே சும்மா அதிருதுதில்ல என்பது போல் கதைசொல்லிகளான நமக்கு இந்த தலைப்பை வைத்தே கதை எதைகுறித்தது என்பதை உணர்ந்துகொள்ள முடியும். வீட்டையும் பார்த்துகொண்டு வேலைக்கும் சென்று  குடும்பத்தை காப்பாற்றும் தாய்மார்களின் அனுபவம் தான் இந்த தொடர்.

இஸ்ரேல்: Autonomies  எனும் தொடர் இஸ்ரேலில் இருந்து ஹீப்ரு மொழியில் வெளிவந்துகொண்டிருக்கும் திரில்லர் வகை தொடர். இஸ்ரேல் இன்று பாதுகாப்பு, நுண்ணறிவில் உலகின் அதிமுன்னணி நாடாக போற்றப்படுகிறது. ஆனால் அதே நாடு தான் பல்வேறு கட்டுப்பெட்டித்தனமான கட்டுபாடுகளிலும் திளைத்துகொண்டிருக்கிறது. இன்றைய நவீன இஸ்ரேலுக்கும் இந்த நம்பிக்கைக் கும் இடையேயான போராட்டத்தை பேசுகிறது. இதே போன்று Shtisel-3, Losing Alice போன்ற தொடர்கள் இஸ்ரேலிய கலாசாரத்தை பேசுகின்றன. The Spy, Fauna போன்றவை திரில்லர் வகை.

மோசாட்டின் சாகசங்களை தெரிந்துகொள்ள மோசாட் உளவு நிறுவனத்தினை அடிப்படையாக வைத்து பல தொடர்கள் இஸ்ரேல் சார்பில் வெளியாகியுள்ளன. தேடினால் திகட்டும் வரை ரசித்துபார்க்கலாம்!

பாகிஸ்தான்: இந்திப்படங்கள் தான் பாகிஸ்தானின் முக்கிய பொழுதுபோக்கு களம் என்று நினைத்துகொண்டிருக்கிறோம். ஆனால் பாகிஸ்தானியர்கள் படைப்புலகில் ஒரு புதிய அலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றனர். Sharmeen Obaid Chinoy எனும் இளம்பெண் இயக்குநர் Saving Face, A girl in the river: The Price of Forgiveness ஆகிய விவரணப்படங்களுக்காக ஆஸ்கர் விருது வென்றிருக்கிறார். ஓடிடி தொடர்களிலும் இவர்கள் தரமான சம்பவங்களை செய்துகொண்டிருக்கின்றனர். புதிய சூழலுக்கு இடம்பெயரும் ஒரு குடும்பம் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிகொள்ள எப்படியெல்லா அட்ஜெஸ்ட் ஆகிறார்கள்  என்பதை பேசும் தொடர் Middle Se Opar. நகைச்சுவையும், குடும்பபாசமும் நிறைந்த இந்த தொடரில் மூன்று குட்டீஸ்கள் வருகிறார்கள். அவர்கள் தம் அம்மா, அப்பாவுடன் செய்யும் உரையாடலும் சேட்டையும் மொழியை மீறி நம்மை ரசிக்க செய்யும்.

பிரிட்டன்: ஆங்கில ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுபட்டு உருவான பெரும் தேசமான நமது இந்தியர்களுக்கு பிரிட்டன் மீது இன்றும் விட்ட குறை தொட்டகுறையான பாசம் அதிகம். அங்கு நிகழும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனிக்கிறோம். அவர்களோடு தொடர்புபடுத்திகொள்கிறோம். இன்று ஜனநாயகவழியான ஓர் அரசமைப்பு அங்கும் இங்கும் இருந்தாலும் இவ்விரு தேசங்களும் ராஜாக்கள் வழி ஆளப்பட்டவைதான். இந்தியாவில் இந்த ஆட்சிமுறை முற்றிலும் ஒழிக்கப்பட்டாலும் இன்னும் ஜமீன், ராஜா என்று கெத்துடன் உலா வரும் குடும்பங்கள் ஏராளம். அதே போன்று பிரிட்டிஷ் ராஜாக்கள் குடும்பம் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. வழிவழித்தொடராக  வரும் இந்த பிரிட்டிஷ் சாம்ராஜியத்தின் தற்போதையை ராணியாக இருக்கும் எலிசெபத் அம்மணியின் வாழ்க்கை தொகுப்புகளை சொல்லும் தொடர் The Crown. இரண்டாம் ஜார்ஜ் மன்னரின் காலத்தில் ஆரம்பித்து தற்காலம் வரை  பிரமாண்டமான முறையில் கதை விவரிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் உறவுமுறைகளை புரிந்துகொள்வதே சிக்கலானது. அப்படியில்லாமல் ஒவ்வொன்றாக தெளிவாக விவரித்துள்ளார்கள். கதாப்பாத்திரங்களை அப்படியே நிஜபாத்திரத்திற்கு ஏற்ப கண்டுபிடித்து நடிக்கவைத்திருப்பது சிறப்பு. குறிப்பாக இளவரசி டயானாவின் பாத்திரம் அப்படியே நம் கண்முன்னே நிற்கிறது.

ஸ்பெயின்: ஸ்பானிஷ் தொடர் என்றால் நமக்கு எல்லாம் உடனே நினைவுக்கு வருவது Money Heist. குப்பையில் பொறுக்கிய குன்றிமணியாக ஸ்பெயினில் படுதோல்வி அடைந்த இதன் முதல் பகுதியை நெட்பிளிக்ஸ்  மலிவு விலைக்கு வாங்கி வெளியிட்டது.  இதன் எதிர்பாராத ஹிட் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தையை தலைகிறுகிறுக்க செய்ய அடுத்தடுத்து நான்கு சீசன்கள் வெளியாகி இன்னமும் உலகமெங்கும் டிரெண்டிங்கில் இருக்கின்றன. புதிய கதைகளை பிடிப்பதில் ஸ்பெயின் படைப்பாளிகளின் தனித்துவமே தனி. அந்த வகையில் வசீகரிக்கிறது Little Coincidences. ஒரு ஆண்,  ஒரு பெண். இருவரும் வெவ்வேறு சூழல்களில் வாழ்கின்றனர். இருவரும் ஒன்றிணைய இருவருக்குள்ளும் ஏற்படும் சம்பவங்களின் ஈர்ப்புவிசையின்  நிகழ்வுகள்தான் தொடர். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ளாத நிலையிலும் ஒரே போன்ற நிகழ்வுகள் இருவரின் வாழ்க்கையில் நிகழ்வதாக  கதை நகர்கிறது. உனக்கென பிறந்தது உனக்கேதான் என்று வார்த்தைக்கு அர்த்தம் தரும் தொடர் இது.

ஆஸ்திரேலியா: வளர் இளம் பருவத்தில் ஏற்படும் சிக்கல்களை அழகாக பேசும் பல மேற்கத்திய தொடர்கள் இருக்கின்றன.  இது உலகளாவிய அளவில் உள்ள இந்த வயதினருக்கு உரிய பிரச்னை என்றாலும் கூட மேற்கத்தியர்களின் கலாசாரம் வேறு. இருபது வயது ஜோஷ்ஷை பிரிகிறாள் அவனது கேர்ள் பிரண்ட். காரணம் ஜோஷுக்கு ஆண்கள் மீது மையல் அதிகம். தன்னை குறித்த இந்த

சிக்கல்களை அவன் உணரும் போது குழம்புகிறான். மனவேதனையுடன் பெற்றோரிடம் செல்ல அங்கு நிறைய அதிர்ச்சி சம்பவங்கள். இவற்றை எப்படி சமாளிக்கிறான் என்பதை சொல்கிறது Please Like Me எனும் ஆஸ்திரேலியா தொடர். நமக்கு பொருந்தாத கலாசார பிரதிபலிப்புகள் இருந்தாலும் ஒரு தனிமனிதன் வாழ்வியல் சிக்கல் என்பதால் நாமும் பொருந்தி செல்கிறோம். ஐரோப்பா, அமெரிக்க நாடுகளுக்கு போட்டி போடும் வகையில் இதுபோன்ற பல தொடர்களை உலாவவிட்டிருக்கிறது  ஆஸ்திரேலியா.

துருக்கி: உலகம் முழுவதும் டிரெண்டிங்கில் இருக்கும் தொடர்களை பற்றி பேசும்போது துருக்கிய தொடர்களை பற்றி பேசாமல் விட்டால் எப்படி ? தற்போது டிரெண்டிங்கில் இருக்கும்  தொடர் Kurulus: oSman. துருக்கியின் பிரதிபலிப்புகள் பல நாடுகளில் எதிரொலித்துகொண்டிருக்கின்றன. துருக்கியின் வரலாறு என்றாலே ஓட்டமான் சாம்ராஜ்யம் நமக்கு நினைவுக்கு வரும். அந்த சாம்ராஜ்யத்தின் பேரரசராக இருந்த  ஓஸ்மான் பற்றிய தொடர் இது. பிரமாண்டமான செட்டிங்குகள், உடைகள் என நம்மை புதியதொரு அனுபவத்திற்கு அழைத்துச் செல்லும் தொடர் இது.

ஓடிடிக்களை தரவரிசைபடுத்த தொடங்கினால் அது தொடர்ந்துகொண்டே இருக்கும். நான் இந்த கட்டுரையை தொடங்கி நிறைவு செய்துகொண்டிருக்கும் இந்த சில நிமிடங்களில் பலநூறு தொடர்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. எதை விடுவது? எதை ரசிப்பது? என்பது உங்களின் மனோநிலையையும், இரசனையையும் பொறுத்தது.

சினிமாவை ரசிக்க  இரசனை தேவைப்படுவது போல இந்த ஓடிடிக்களை ரசிக்கவும் இரசனையும் அனுபவமும் தேவைப்படுகிறது. உலகின் ஒவ்வொரு தேசத்தின் தனித்துவத்தையும் இருந்த இடத்தில் இருந்தே அறிந்துகொள்ள இந்த தொடர்கள் உதவுகின்றன. இதன்மூலம் நமது தனித்துவத்தை நாம்  போற்றி பாதுக்காக்கவேண்டும் என்ற எண்ணம் நம்முள் இயல்பாகவே எழும். அதே நேரம் உலகம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனக்குள்ள உரிமைகள் என்னை சுற்றி வாழும் சக உயிர்களுக்கும் உள்ளது என்பதையும் உணர்த்தும் இந்த அனுபவங்கள்.

மே 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com