ஒரே ஒரு வார்த்தை!

முதல் புத்தகம்
ஒரே ஒரு வார்த்தை!
Published on

என்னுடைய முதல் நூல் ‘கதவு’ என்ற சிறுகதைத் தொகுப்பு தான். அப்போதெல்லாம் நான் சிறுகதைகள் தான் எழுதிக்கொண்டிருந்தேன். எனது சிறுகதைகள் தாமரை, காந்தி முதலிய நடுவாந்தக இதழ்களில் வெளிவந்தன. ஒரு தொகுப்பு போடும் அளவிற்கு சிறுகதைகள்  சேர்ந்திருந்தது. ஒரு முறை நா. வானமாமலை  அவர்களைச் சந்தித்த போது, “ உங்கள் சிறு கதைகளை எல்லாம் தொகுத்து புத்தகமாகக் கொண்டுவரலாமே” என்றார் . நான் “ போடலாம் தான் யார் போடுவார்கள்?” என்று அவரிடம் கேட்டேன் . அதற்கு நா.வா “ என் முகவரிக்கு அந்தக் கதைகளை அனுப்புங்கள் நான் என்சிபிஎச்சில் சொல்லி புத்தகமாகப் போடச் சொல்கிறேன்” என்றார். அப்போது நா.வா அதன் புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் தேர்வுக்குழுவில் இருந்தார். எனவே எனது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கதவு’ என்ற நூல் எந்த வித சிரமமுமின்றி வெளிவந்தது. நூல் வெளிவந்த பிறகு நூலுக்கு ஒரு வெளியீட்டு விழா வைக்கலாமே என்று நா.வா கூறினார். நான் தான் வெளியீட்டு விழா எல்லாம் வேண்டாம் என்று மறுத்து விட்டேன்.

எனது முதல் நாவலை நான் கையெழுத்துப் பிரதியாகவே எழுதி வைத்திருந்தேன். தீரர் சத்தியமூர்த்தியின் மகள் லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கையெழுத்து பிரதியாக உள்ள நல்ல நாவல்களை நூலாக வெளியிடுவது என்ற எண்ணத்தில் செயல்பட்டு வந்தார். வாசகர் வட்டம் என்ற பெயரில் ஒரு புத்தக நிறுவனத்தை ஏற்படுத்தி அதன்மூலம் புதிய நாவல்களை வெளியிட்டு கொண்டிருந்தார். எழுத்தாளர் சிட்டி தான் எனது முதல் நாவலை வாசகர் வட்டம் என்ற பதிப்பகத்திற்கு அனுப்பச் சொன்னார். நானும் அனுப்பினேன். சிட்டி நாவலைப் படித்து பார்த்துவிட்டு அதிலுள்ள ஒரே ஒரு வார்த்தையை மாற்றச் சொன்னார். நான் மறுத்து விட்டேன். பின்னர் லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நாவலை படித்து விட்டு, “ கதையோட்டத்திற்கு அந்த வார்த்தை பொருத்தமாகத்தான் இருக்கிறது; அந்த வார்த்தை பேச்சு வழக்கில் வாழ்த்தாகவும் வரும். என் தந்தையே அந்த வார்த்தையை பலமுறை பேச்சு வழக்கில் பயன்படுத்தி இருக்கிறார் என்று சிரித்து கொண்டே சிட்டியிடம் சொல்லியிருக்கிறார் . கடைசியில் அந்த வார்த்தையோடே எனது முதல் நாவல் வாசகர் வட்டம் என்ற வெளியீட்டு நிறுவனம் மூலம் வெளியானது. அந்த வார்த்தை ‘தாயோழி’ என்பது. இன்றும் கிராமத்தில் பாடகன் ஒருத்தனைப் பாராட்டும் போது ‘ தாயோழி என்னமாப் பாடுகிறான்” என்று உணர்ச்சிகரமாகச் சொல்லுகிறார்கள். எனது முதல் நாவலான கோபல்ல கிராமம் வாசகர் வட்ட வெளியீடாக வெளிவந்தது. ரெண்டாம் பதிப்பாகத்தான் எனது முதல் சிறுகதை தொகுதியும், முதல் நாவலும் ‘அன்னம்’ பதிப்பகம் மூலம் வெளிவந்தது.

(தொகுப்பு: கழனியூரன்)

ஜூன், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com