ஒரு வண்டி வாங்க எட்டுமுறை கடைக்கு ஏறி இறங்குறாங்க. ஆனா, திருமண விசயத்துல விசாரிக்க முன்வர்றதில்ல..

ஒரு வண்டி வாங்க எட்டுமுறை கடைக்கு ஏறி இறங்குறாங்க. ஆனா, திருமண விசயத்துல விசாரிக்க முன்வர்றதில்ல..
Published on

ஒரு கல்யாணத்தை முடிப்பதற்குள்ளே நமக்கெல்லாம் நாக்கு தள்ளிவிடும். அதனாலயேதான், ‘கல்யாணம் பண்ணிப் பாரு.. வீட்டைக் கட்டிப் பாரு...’ என்பார்கள். ஆனால், ஒன்றல்ல... இரண்டல்ல... சுமார் 3 லட்சத்து 35 ஆயிரம் கல்யாணங்களை அற்புதமாக முடித்து வைத்திருக்கிறது டி.வி.மோகனின் கல்யாண மாலை நிறுவனம்.  ஆறு பேருடன் ஆரம்பிக்கப்பட்ட அவரின் நிறுவனம் இன்று 60 ஊழியர்களுடன் மிளிர்கிறது. ஒரு மாலைப் பொழுதில் தி.நகரில் இருக்கும் ‘கல்யாண மாலை’ நிறுவனத்தில் அந்திமழைக்காக அவரைச் சந்தித்துப் பேசினோம்.

“எனக்கு கல்யாணம் 23 வயசுல நடந்துச்சு. அப்பவே, தெரிஞ்ச உறவினர்களுக்கு வரன் பார்த்துக் கொடுக்கிறதும், கல்யாணத்தை முன்னாடி இருந்து நடத்துறதுமா இருந்தேன். அது சொந்தங்களுக்காக பண்ணினது. ஆனா, இதுக்காக ஒரு நிறுவனம் ஆரம்பிப்போம்னு கனவுலயும் நினைக்கலை. இதுல என்னோட பங்கு ஒரு துளிதான். மத்தபடி என் தம்பி மனைவி மீரா நாகராஜன் உட்பட ஆறு இயக்குநர்களோட பங்கும் உழைப்பும் அதிகம்” என நெகிழ்வாக ஆரம்பிக்கிறார் அவர்.

“என்னோட சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பக்கத்துல இருக்குற நல்லமாங்குடி கிராமம். கே.பாலசந்தர் சார் ஊர். நாங்க அவரோட உறவினர்கள். அப்பா வைத்தியநாதன் அஞ்சல் துறையில வேலை பார்த்தார். அம்மா பெயர் காமாட்சி. வீட்டுல பசங்க நாங்க நாலு பேர். மூத்தது அண்ணன் பிரமிட் நடராஜன். உங்களுக்கு தெரிஞ்சவர்தான். பாலசந்தர் சாரோட இருந்து பிறகு தயாரிப்பாளராகி, நடிகரானவர். அடுத்தது நான். அப்புறம் ஒரு தங்கை. பிறகு தம்பி நாகராஜன். 1970களில் வேலைக்காக சென்னை வந்தோம். எங்களுக்கெல்லாம் ஆதர்சம் அண்ணன் நடராஜன். அவர்தான் முதல்ல சென்னை வந்து அடித்தளம் போட்டுக் கொடுத்தார். அதன்பிறகு நான் வந்து       சேர்ந்தேன்” என சிறிய அறிமுகத்தோடு பேசுகிறார் மோகன்.

“இங்கே வந்ததும் பின்னி மில்லில் வேலை கிடைச்சது. கிட்டத்தட்ட பத்து வருஷம். ஆனா, எனக்கு நிறுவனத்துல உட்கார்ந்து வேலை பார்க்க பிடிக்கலை. பிசினஸ்லதான் ஆர்வம். அதனால, வேலையை உதறிட்டு ஐஸ்கிரீம் கடை போட்டேன். ‘ஐஸ்கிரீம் பேரடைஸ்’னு பெயர் வச்சு பிசினஸ் பண்ணினேன். ஓகோனு போச்சு. ரத்தன் பஜார், ஸ்பென்சர்னு இரண்டு கடைகளா விரிவடைஞ்சது. விறுவிறுப்பாக ஓடிட்டு இருந்தேன். அப்போ, கல்யாண கண்ட்ராக்ட் பண்ணலாம் இன்னொரு ஐடியா தோணுச்சு. ஐஸ்கிரீமோட கல்யாண காண்ட்ராக்ட்டும் சேர்ந்தது.  இதுல கல்யாண வேலைகள் ஏ டூ இசட் செய்து கொடுத்தோம். அதனால, நல்ல பெயர் கிடைச்சது. சமையல் தெரியாத ஒருத்தர் சமையல் கான்ட்ராக்ட் எடுத்து பண்ணினது நானாதான் இருப்பேன். இப்போவரை அதைத் தொடர்ந்து செய்றேன். கிரிக்கெட்டர் அஸ்வின் ரவிச்சந்திரன் கல்யாணம் உள்பட பெரிய வெட்டிங் நிறைய பண்ணியிருக்கோம்.  எல்லா ஆர்டர்களும் செய்யும் போது நான் இரண்டு வேளையாவது கூட இருப்பேன்” என்கிறவர், கல்யாண மாலை ஆரம்பித்த சுவாரஸ்ய கதைக்குள் வந்தார்.

“என்னோட தம்பி மனைவி மீரா நாகராஜன், டிவிக்கு  நிறைய விஷயங்கள் பண்ணிட்டு இருந்தாங்க. அவங்கதான்  வரன் அறிமுகத்தைச் சின்னத்திரை மூலம் பண்ணின்னா என்னனு கேட்டாங்க. இதுக்கான விதை தூவியது அவங்கதான். பிறகு, எல்லோரும் உட்கார்ந்து யோசிச்சோம். அண்ணா நடராஜன் நிறைய யோசனை சொன்னார். மீரா நாகராஜன்தான் இயக்குநர். சன்டிவியில ஒரு புரோகிராம் கேட்டோம். ஓகே ஆச்சு. கடந்த 2000ம் வருஷம் எங்களோட சொந்தத் தயாரிப்புல கல்யாண மாலை நிகழ்ச்சியை ஆரம்பிச்சோம். முதல்ல பிரபலமானவங்களை தொகுப்பாளரா நியமிச்சு நிகழ்ச்சியைச் செய்றதா இருந்துச்சு. ஆனா, அது சரிவரலை. அதனால,  நீங்களே பண்ணுங்கனு  சொன்னாங்க. ஆரம்பத்துல  எனக்குத் தயக்கம் இருந்தது. கேமிரா, லைட்ஸ்க்கு புதுசு வேற. ரொம்பக் கஷ்டப்பட்டேன். அப்புறம், செட்டாகிடுச்சு. நிகழ்ச்சியும் ஒரு வருஷத்துல ஹிட்டாகி டிமாண்ட்டும் அதிகரிச்சது. அடுத்து, நிறைய தேவைகள் இருந்ததால நாங்க டுட்ட்ச்tணூடிட்ணிணதூ  என்ற ஒரு வெப்சைட் தொடங்கினோம். அந்நேரம் இன்டர்நெட் வசதி பெரிசாயில்ல. அதனால, அடுத்த வருஷமே, சாதாரண மக்களுக்காகக் ‘கல்யாண மாலை’னு ஒரு மாத பத்திரிகையும் ஆரம்பிச்சோம். இன்னைக்கு இந்தியாவுல வரன்கள் போட்டோவுடன் போகக் கூடிய மேட்ரிமோனியல் பத்திரிகை எங்க கல்யாண மாலைதான்” என உற்சாகம் கூட்டியவர்,  நிகழ்ச்சியில் நடந்த சில நெகிழ்வுத் தருணங்களையும் பகிர்ந்து கொண்டார்.

“ஒரு வங்கியில பணியாற்றுகிற பெண், ‘வயசான அப்பா அம்மா இருக்காங்க.  நான் பையனா பிறந்திருந்தா எப்படி என் பெற்றோரைப் பார்த்துப்பேனோ அதுமாதிரி பார்த்துக்கணும் நினைக்கிறேன். அதனால, என்னோட சம்பளத்துல என் பெற்றோருக்குப் பாதித் தொகையை கொடுக்க ஒத்துக்கிற ஒரு நபர் வேணும்’னு சொன்னாங்க. அது டிவியிலயும் டெலிகாஸ்ட் ஆச்சு. அதுமாதிரி ஒருத்தர் வந்தார். நான் அந்தக் கல்யாணத்துக்கு போயிருந்தேன். அப்புறம், இன்னொரு பெண் தன் அம்மாவோட வந்திருந்தார். ரொம்ப நேரம் பேசவேயில்ல. கேமிரா ஓடிட்டு இருந்துச்சு. நான் எதுவும் புரியாம கேமிராவை  ஆஃப் பண்ணச்  சொல்லிட்டு அவங்ககிட்ட பேசினேன்.  அவங்க அழ ஆரம்பிச்சிட்டாங்க. அந்தப் பொண்ணுக்கு கர்ப்பப்பையில கட்டி இருந்ததால அகற்றியிருக்காங்க. ஆனா, தாம்பத்யத்துல பிரச்சனையில்ல. அவங்ககிட்ட பேசிட்டு, அதுபற்றி நானே டிவியில, ‘இந்தப் பொண்ணு மனைவியாகும் போதே தாயாகணும் ஆசைப்படுறாங்க. அதனால, தாய் இழந்த குழந்தைகள் இருக்குற தகப்பன் அணுகலாம்’னு குறிப்பிட்டேன். அடுத்த வாரம் தன்னோட இரண்டு குழந்தைகள அழைச்சிக்கிட்டு அந்தமான்ல இருந்து ஒரு தகப்பன்  என் வீட்டுக்கே வந்துட்டார். அவர் மனைவி விபத்தில் தவறிவிட்டதால அந்தப் பொண்ணை திருமணம் பண்ணிகிறேன்னு சொன்னார். பேசி முடிச்சு வச்சோம். 17 வருஷ நிகழ்ச்சியில் இதுமாதிரியான இனிமையான தருணங்கள் நிறைய இருக்கு. எல்லாத்தையும் சன்டிவிதான் கொண்டு சேர்த்தது” என்கிறவர், பெற்றோரிடம் கல்யாண மாலை சொல்கிற விஷயங்களை அடுக்கினார். 

“ஒரு வண்டி வாங்க ஏழு எட்டுமுறை ஷோரூம்கள ஏறி இறங்குறாங்க. ஆனா ஒரு சிலர் திருமண விஷயத்துல விசாரிக்க முன்வர்றதில்ல. அதைப் பெற்றோர் செய்யணும்னு சொல்றோம். நாங்க இரண்டு தரப்புகிட்டயும் சொல்லிடுவோம். உங்கள விசாரிச்சுதான் கொடுப்பாங்கனு. அதேமாதிரி பெற்றோர்கிட்ட இரண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசுங்கனு சொல்றோம். அப்புறம், மாப்பிள்ளையையும், பெண்ணையும் பேசச் சொல்றோம்.  இரு பக்கமும் சரியான துணையா, திருப்தியா இருக்கானு பார்த்து முடிக்க சொல்றோம். அடுத்து, ஒரு பக்கம் மட்டும் ஜாதகம் பாருங்கனு சொல்றோம். ஏன்னா, இரண்டு பேருக்கும் பிடிச்சிருந்தும், ஜாதகத்தால வேண்டாம்னு சொல்லக்கூடாதுங்கிறது எங்க நோக்கம். பொதுவா, என்னோட கோரிக்கை எல்லாம் மாப்பிள்ளைக்கு நல்ல பழக்கவழக்கங்கள் இருக்கணும். குறிப்பா, குடி, சிகரெட் இல்லாம இருக்கணும். அப்படியிருந்தா குடும்பம் பாதுகாப்பா இருக்கும். பிரச்சனையில்லாம போகும்” என்கிற மோகனிடம் எதிர்காலத் திட்டம் என்ன? என நிறைவாகக் கேட்டோம்.

“இப்போ, தமிழகத்தில் பல ஊர்கள்ல கல்யாண மாலை பண்ணிட்டு இருக்கோம்.  வெளிமாநிலத்திலும் வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகள் பண்றோம். அடுத்ததா தெலுங்குப் பக்கம் போகப் போறோம். அங்குள்ள சுய விவரங்களச் சேகரிக்க ஆரம்பிச்சிருக்கோம். சீக்கிரமே தெலுங்கிலும் ஹிந்தியிலும் கல்யாண மாலை பார்க்கலாம். இந்தியா முழுக்கவும் நடத்தத் திட்டம் இருக்கு’ என நம்பிக்கையாக முடிக்கிறார் டி.வி.மோகன்!

ஆகஸ்ட், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com