எந்த மொழியும் அழியாமல் இருக்கவேண்டுமென்றால் அதை மக்கள் பேசும் மொழியாகவும் எழுதும் மொழியாகவும் பயன்பாட்டில் இருக்கவேண்டும். ஒரு மொழி வளரவேண்டுமென்றால் அந்த மொழியில் இலக்கியங்கள் நிறைய இருக்கவேண்டும். எழுத்தாளர்களும் நிறையபேர் இருக்கவேண்டும். அவர்கள்தான் புதிய சொற்களை உருவாக்குவார்கள். புதிய கருத்துக்களை கொண்டுவருவார்கள். அவர்கள்தான் அந்த மொழியைத் தக்கவைப்பார்கள். மொழி அறிஞர்களும், பல்கலைக்கழகங்களும் இணைந்து புதிய சொற்களை உருவாக்க வேண்டும். அதை மக்களுக்கு பரவலாக்க அரசு முயற்சி எடுக்கவேண்டும். அதேபோல் வட்டாரச்சொல் அகராதியை அரசும் பல்கலைக்கழகமும் சேர்ந்து உருவாக்கவேண்டும். ஒரு மொழி வளர்வதற்கும் வாழ்வதற்கும் மக்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு ஆகிய அனைவரும் பங்களிக்கவேண்டும்.
ஒரு மொழியானது அதனுடைய இலக்கிய இலக்கண செழுமைகளோடு நின்றுவிடாமல் மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றிருக்க-வேண்டும். அப்படியானால் வெறும் உரையாடலோடு நின்று விடாமல் ஆட்சிமொழி, பயிற்சி-மொழி, நீதிமன்ற மொழி இந்த மூன்றும் தாய்-மொழி-யில் நிகழவேண்டும். உயர்கல்வியான மருத்துவம், பொறியியல், கணினி அறிவியல், விலங்கியல், வேளாண்மை போன்றவைகளை அவரவர் மொழியில் கற்றுக் கொடுக்கவேண்டும். அப்போதுதான் கலைச்சொற்கள் கிடைக்கும், அந்த மொழியும் வளரும்.. இதைச் செய்யவில்லையென்றால் எந்த மொழியும் பட்டிமன்றத்திற்கு மட்டுமே பயன்படும். நிறைய எழுத்துக்கள் உடைய, சித்திர எழுத்துக்கள் என்று சொல்லக்கூடிய சீனமொழியில்தான் மருத்துவம் மற்றும் பொறியியல் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதேபோல் ஏன் நாம் செய்வதில்லை?
மொழி சம்பந்தப்பட்ட எல்லா துறைகளிலும் முன்னேற்றம் வரவேண்டும். இலக்கியம் மற்றும் இலக்கணத்தில் மட்டு-மல்லாமல் அறிவியல், சமூக அறிவியல், கலை துறை போன்றவற்றில் உருவாகும் புதிய சொற்களுக்கு அந்தமொழிச் சார்ந்து உரிய சொற்களைப்பயன்படுத்தவேண்டும். இந்திய மொழிகளில் நடக்கும் மாற்றங்களை உடனுடன் நம்மொழிக்கு கொண்டுவரவேண்டும். இதுதான் முதன்மையான பணி.
ஒரு மொழி வளர்வதற்கான முதன்மைத் தேவை அது பயன்பாட்டில் இருக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியினர் பேசும் தோடா, கோட்டா ஆகியவை உட்பட இந்தியாவில் 42 மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளன. உலகம் முழுவதும் 2500 மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளன. சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன் போன்ற மொழிகள் பேசப்படாத மொழிகளாகி விட்டன. இதற்குக் காரணம் அன்றாட பயன்பாட்டில் இந்த மொழிகள் இல்லாதது தான் காரணமாகும்.
அடுத்ததாக புதிய இலக்கிய படைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். காலத்திற்கு ஏற்ப புதிய சொற்கள் உருவாக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில் அவற்றுக்கான பெயர்கள் பொதுவாக ஆங்கிலத்திலோ அல்லது கண்டுபிடிப்பு நிகழ்த்தப்படும் நாட்டின் மொழியிலோ தான் வைக்கப்படுகின்றன. அத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு அவற்றின் பயன்பாடு சார்ந்து ஒவ்வொரு மொழியிலும் புதிய பெயர்கள் கண்டுபிடித்து சூட்டப்பட வேண்டும். இவற்றின் மூலம் ஒரு குறிப்பிட்ட மொழியில் படைப்புகளும், வார்த்தைகளும் புதிதாக சேரும். இது தான் வளர்ச்சி.
இவற்றுக்கெல்லாம் மேலாக மாணவர்களுக்கான கற்பித்தல் மொழியாக திகழ வேண்டும். மொழியை வளர்ப்பதற்கான முதன்மை வழி இது தான். தமிழகத்தில் ஆங்கில வழிப் பள்ளிகளில் தமிழ் பாட மொழியாக இல்லை என்பதால் அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு தமிழ் மொழியைப் பேசத் தெரிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பணி நிமித்தமாக உலகின் பல நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வாழும் இனம் தமிழினம். ஆனால், இரு தலைமுறைகளாக வெளிநாடுகளில் வாழும் குழந்தைகளுக்கு தாய் மொழி தெரிவதில்லை. மொழி அழிவதற்கு இதுவும் ஒரு காரணம். எனவே, வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் தமிழ் கற்பிப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படுவதைப் போன்று உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும். தமிழ் வளர்ச்சிக்காக நான் கூறியவை பிற மொழிகளுக்கும் பொருந்தும்.
திருமாறன். ந.மு. வேங்கடசாமிநாட்டார் திருவருட் கல்லூரி முன்னாள் முதல்வர்
ஒரு மொழி வளர்வதற்கு அதற்குரிய எல்லா துறைகளிலும் அந்த மொழிச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். பயன்படாத எதுவும் முதலில் சிதையும். பின்னால அழியும். இதுதான் அறிவியல். ஆட்சியில், கல்வியில், வாழ்வியல் சடங்குகளில் மக்கள் உரையாடலில், ஊடகங்கள் உள்ளிட்ட எல்லா துறைகளிலும் அந்த மொழி பயன்பாட்டில் இருக்கவேண்டும். இதை ஆட்சியாளர்கள், அறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் துணையோடு செயல் படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக தமிழுக்கு என்று ஒர் எண் இருந்தது. ஆனால் நாம் ரோமன் எண்களைதான் பயன்படுத்துகிறோம். கர்நாடகம் மற்றும் கேரளத்தில் அரசு பேருந்துகளில் அவர்களின் மொழி எண்களை பயன்படுத்துகிறார்கள். ஆகவே நாம் மீண்டும் தமிழ் எண்களை வழக்கில் கொண்டுவரவேண்டும். ஆகவே முதலில் மொழியை காப்பாற்ற வேண்டும் பிறகுதான் வளர்க்கவேண்டும்.
சக்திஜோதி, கவிஞர்
புழக்கத்திலிருந்து விலகிச் செல்கிற ஒரு சொல் அந்த மொழியின் தேய்வுக்கு முதல் காரணியாகும். வழக்கிலிருந்து மறைந்துவிட்ட ஒரு சொல்லை கவனப்படுத்தும்போது அம்மொழி வளமையடைகிறது.. பேச்சு வழக்கு, இலக்கிய ஆக்கங்கள் என இரண்டுமே மொழியின் சொற்களைப் பாதுகாக்க வேண்டியவை. அவ்விரு முனைகளிலும் காலத்தை ஒட்டி புதியன பிறப்பது என்பது அம்மொழிக்கு வளம் சேர்க்கும்.
விஞ்ஞான மாற்றத்துக்கு தக்க ஒரு மொழியானது சூழலை உள்ளார்ந்து உள்வாங்கி அதற்கான புதிய கலைச்சொற்களையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். எந்த மொழியுமே புதுமையை உருவாக்கிக் கொள்வதும் பழமையை தக்கவைத்துக் கொள்வதும் அவசியமாகும். இவ்வாறாக அந்தந்த காலகட்டத்தில் சமூகத்தின் உள்ளார்ந்த விஷயங்களையும் புறம் சார்ந்தவற்றையும் தெளிவாக உணர்த்துகிற விதமாக ஒரு மொழியின் சொற்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படவேண்டும்.
ஒரு மொழியைத் தாய்மொழியாக கொண்ட மக்கள் வேறு மொழிச்-சொற்கள் கலவாமல் தன் மொழியிலே பேசிப் பழகவேண்டும். அந்த மொழி பேசுகிறவர்களை நாம் பாராட்டவேண்டும். போற்றவேண்டும். பிறகு அந்த தாய்மொழியில் வந்த நூல்களை வாங்கி படிக்கவேண்டும். அது எல்லா மொழிக்குமே பொருந்தும்.
ஒரு மொழி வாழவேண்டுமானால் பேச்சிலும் எழுத்திலும் முடிந்தவரை அந்தமொழிக்கான சொல் இருக்கும்போது அதை தவிர்த்து பிறமொழி சொற்களைப் பயன்படுத்தக்கூடாது. உதாரணமாக மறைமலையடிகளார் காலத்தில் வடமொழி சொற்கள் தமிழில் அதிகமாக கலந்தது போல் இப்போது அதைவிட அதிகமாக ஆங்கில சொற்கள் கலக்கிறது. இந்தமாதிரியாக நாம் பேசிக்கொண்டு இருந்தால் ஒருகாலத்தில் சிதைந்தமொழியாக அல்லது வேறுமொழியாக மாறிவிடும். உலகத்தில் பலமொழிகள் இவ்வாறு அழிந்திருக்கின்றன.
மொழி வளர்ச்சி என்பது அம்மொழியைத் தொடர்ந்து பயன்படுத்துவதிலிருந்து தொடங்குகின்றது. எழுதுவது, பேசுவது, கேட்பது, படிப்பது என்ற நான்கு நிலைகளிலும் மொழிவளர்ச்சி வேர்பிடிக்கின்றது. தமிழகத்தில் இந்த நிலை இன்று சரிவு நிலையில் உள்ளது. மக்களும் அரசும் அந்த மொழிக்கு வேலியாக இருந்து பாதுகாக்க வேண்டும். சிங்கப்பூரில் நான்கு மொழிகள் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டு, அந்த அந்த மொழிக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. இந்தியாவில் பலமொழி பேசும் மக்கள் இருப்பதால் அந்த அந்த மக்கள் பேசும் மொழிக்கும் அந்த அந்தப் பகுதிகளில் முக்கியத்தும் வழங்கப்படுதல் வேண்டும். சிங்கப்பூர் முன்னேற்றத்தில் மட்டும் நமக்கு முன்னோடி நாடு அன்று. மொழியை வளர்த்தெடுப்பதிலும் நமக்கு முன்னோடி நாடு.
மொழி, மானுடத்-தையும் சமூகத்-தையும் இணைக்-கும் கருவியாகச் செயல்--படுவதால் அதை சமூகக் கருவி என்பார்கள். மானுட நேயம் செழிக்க, மொழியின் மீது பாசமோ பக்தியோ கொள்வதை விட அதை மனதாரக் காதலிக்க வேண்டும். அப்போது மொழி வளர்ந்து மானுட நேயமும் மலரும்
ஒரு மொழி வளர்க்கப்ப்பட வேண்டுமானால் அதற்கு அம்மொழியை நூல்களில் பதிவு செய்வது ஒரு முக்கியமான வழி. நிறைய நூல்கள் வெளிவரும்போது மொழியின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அதே சமயம் அரசுகளின் ஆதரவும் மொழி வளர்ச்சிக்கு முக்கியம். நூல்கள் வெளிவரும்போது அவற்றை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கும் அரசுகள் ஆதரவுக் கரம் நீட்டவேண்டும்.
எந்த மொழியாக இருந்தாலும் சமூகத்தில் அதன் நிலை என்ன? அதன் தேவைகள் என்ன? எந்நோக்கில் அது வளர்த்தெடுக்கப் படவேண்டும் ஆகிய கேள்விகளைக் கொண்டு அதற்கான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். உதாரணத்துக்கு தமிழ் மொழி வளர்ச்சிக்கான திட்டங்களை பழங்குடி இன மொழியான தோடாவுக்குப் பொருத்த இயலாது. கல்வி, ஊடகம், நிர்வாகம், அரசியல், நீதிமன்றங்கள் போன்றவைகள் தொடர்பான திட்டங்கள் மொழியின் நிலைக்கேற்ப உருவாக்கப்படவேண்டும்.
மொழி என்பது பெயர் சொற்களாலும், வினைசொற்களாலும் ஆனது. வேறு நாட்டில் கண்டுபிடிக்கப்படுகின்ற பொருள்களுக்கு நம் நாட்டில் அதே சொற்களில் பயன்படுத்தாமல் நம்முடைய மொழியில் உள்ள சொற்களில் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.உரிய சொற்களை உருவாக்கவேண்டும். இந்த இரண்டும் தொடர்ந்து நடக்கின்ற போது மொழி வளர்ந்து கொண்டே இருக்கும். ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை அந்த மொழியிலேயே நடக்கின்ற போது மிக எளிதாக இந்த வளர்ச்சி ஏற்படும்.
ஒரு மொழிக்கு நாம் எதுவும் செய்ய-வேண்டியதில்லை. நாம் மொழியை வளர்க்க முடியாது. காக்கிற முயற்சிதான் செய்ய வேண்டும். அதற்கு முதலில் ஒரு மொழி கல்வி மொழியாக, சட்டமொழியாக, அரசு மொழியாக, வழிபாட்டு மொழியாக, வாழ்க்கை மொழியாக இருக்க வேண்டும். ஒரு நாட்டில் மொழி வளர்ந்தால் மொழியை வைத்துக்கொண்டு உரிமை கேட்பதற்கு வழி ஏற்படும். ஒரு மொழியை வாழ்க்கைக்கு உரிமையுடையதாய் மாற்றுவதற்கு முதலில் அதற்கான சிந்தனையை உருவாக்க வேண்டும்.
ஒரு மொழி வளர, மக்கள் அந்த மொழி-யின் மீது உண்மை-யாகவே பற்றும் நம்பிக்-கையும் கொண்டிருக்க-வேண்டும். இதனை மொழிப்பற்று (Language loyalty) என்கிறோம். அடுத்ததாகத் தங்கள் தாய்மொழியை, கல்வி, அலுவலகம், அறிவியல், ஆட்சித்-துறை, வணிகத்தொடர்பு முதலான அனைத்துத்-துறை-களிலும் பயன்படுத்தும் முனைப்புக் கொண்டிருத்தல் வேண்டும். இதனை மொழி தொடர்பான மனப்போக்கு (Language Attitude) என்கிறோம். அடுத்த-தாகக் காலச்சூழலுக்கும் உலகின் போக்குக்கும் ஏற்பத் தங்கள் மொழியில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்-கள் குறித்துத் திட்டமிட்டு அரசும் மக்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.இதனை மொழித் திட்டமிடுதல் (Language Planning) என்கிறோம். இந்த மூன்றும் சிறப்பாக அமைந்தால்தான் மொழி சீராக வளரும்.
1. மொதல்ல பெத்த கொழந்தைகளோட பேரு தாய் மொழில தப்பித்தவறிக்கூட இருந்திடவே கூடாது...
2. தேசியமோ... திராவிடமோ... தமிழ்த் தேசியமோ... இல்ல சர்வதேசியமோ... அதப் பேசறவங்களோட புள்ளைக எக்காரணம் கொண்டும் தமிழ் வாயில்ல... அதாவது தமிழ் மீடியத்துல படிச்சிறவே கூடாது...
3. அரசு பள்ளி... இல்ல அரசு உதவி பெறும் பள்ளிக பக்கம் சுனாமிக்குக்கூட ஒதுங்கீறக் கூடாது...
4. சாவுல இருந்து கண்ணாலம் வரைக்கும் நடக்குற சடங்குகள்ல தமிழ் தலைநீட்டிக்கூட பாத்துறக்கூடாது...
5. கடவுள் கண்ண தொறக்கணும்னாலோ.. கண்ணடிக்கணும்னாலோ... எந்த வெங்காய மார்க்கமா இருந்தாலும் ஊரான் மொழிலதான் கும்புடணும்...
6. கடன்வாங்கிக் கட்டி ஊறுகாயத் தொட்டு நக்கிக்கிட்டு இருக்குற ஊடுன்னாலும் கண்டிப்பா ஏதாவது செத்து சுண்ணாம்பாகிப்போன மொழிலதான் பேரு வைக்கணும்...
இப்புடி பொறப்புல இருந்து தூக்கீட்டுப் போறவரைக்கும் கவனமா இருந்தம்ன்னா....
பாக்டம்பாஸ்... யூரியா... இயற்கை உரம்ன்னு எதுவுமே போடாம ஒவ்வொருத்தனோட மொழியும் நேரா நட்டுக்குத்தலா ஓகோன்னு வானத்தைப் பொளந்துகிட்டு வளரும்...
போதுமா?
அக்டோபர், 2018.