நான் கலந்துகொண்ட பிரம்மாண்டத் திருமணங்களில் ஒன்று கல்கத்தாவில் அறுபதுகளில் நடந்த எனது பிக் பாஸ் பி.எம். பிர்லாவின் பேத்தி கல்யாணம். நான்கு நாட்கள் பகலும் இரவும் சொர்க்கத்தைக் காட்டுகிற மார்வாடி சாப்பாடு, குல்ஃபியிலேயே இருபது வகைகள்! இதெல்லாம் இருந்தாலும் நான் ஆச்சரியப்பட்டது மூன்றாம் நாள் நடந்த ‘சங்கீத்’ நிகழ்ச்சி. மணமக்களை அலங்கரித்து மேடையில் அமர்த்தி, மேடையின் ஒருபுறம் மணமகன் வீட்டு பத்து கன்னிகைகள், மறுபுறம் மணமகள் வீட்டு நெருங்கிய பத்து உறவுக்கன்னிகைகள்... Big Boss-2 Wild Card Entry! மணமகள் வீட்டு சுந்தரிகள் மணமகனைக் குறித்தும், மணமகன் வீட்டுப்பெண்டிர் மணமகளைக் குறித்தும் கேலியும் நக்கலும் கலந்த ஒரு நிந்தாஸ்துதி. பக்தன் என்னும் உரிமையில், கடவுளைக் கிண்டல் செய்து பாடுவது தான் நிந்தாஸ்துதி. “ஆடியபடியே சுற்றித் திரிந்த சிவபெருமானே! இப்படி ஒரு காலைத் தூக்கிக் கொண்டு ஒரேயடியாக நிற்பது ஏன் என்று சொல்வாயா? என்னும் பொருளில், “நடமாடித் திரிந்த உமக்கு இடதுகால் உதவாமல் முடமானது ஏனென்று சொல்லுவீர் ஐயா!” என்று நடராஜரிடம் கேள்வி கேட்கிறார் பாபவிநாச முதலியார். இந்தக் காம்போதி ராகப் பாடல் முசிறி, மகாராஜபுரம்,
சித்தூர் அரியக்குடி காலத்தில் ரொம்பப் பிரபலம். என் காலத்து தமிழ்ப்படமொன்றில் இப்படி ஒரு நிகழ்ச்சி பார்த்திருக்கிறேன். பாட்டு “மாப்பிள்ளை பார்.. அசல் சோளக்கொல்லை பொம்மை மாதிரியாய்...வந்து வாய்த்தாரே கூத்தாடும் கோமாளியாய்!” என்று வரும். (படத்தின் பெயரைச்சொல்லும் நபருக்கு ஆடிஞ் ஆணிண்ண்-2 ஙிடிடூஞீ இச்ணூஞீ உணtணூதூ இலவசம்!.. அப்படியா? அப்ப நானே சொல்லிடறேன். எம்.என். நம்பியார் ஹீரோவாக நடித்த “திகம்பர சாமியார்”!) சரி...விஷயத்துக்கு வருவோம்!
மணமகள் வீட்டுப்பெண்களுக்கு பாட்டெழுதி மெட்டமைத்து, பாடல்களாகப் பாடவைக்க பிரபல பாடகர்/இசை அமைப்பாளர் ஸலீல் சௌத்ரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார். எனக்குச் சங்கீதம் கொஞ்சம் தெரியுமென்று பி.எம். பாபு நினைத்ததால் என்னை மேற்பார்வைக்குப் பணித்திருந்தார். அது தான் நான் ஸலீல்தாவை முதலும் கடைசியாகவும் பார்த்தது. பதினைந்து நாட்கள் பத்து கொழுகொழு மார்வாடி அழகிகளுக்கு ஆர்க்கெஸ்ட்ராவுடன் கடும் பயிற்சி. (ஒரு அழகிக்கு என்மேல் மட்டுமே கண்!) மணமகன் வீட்டில் இன்னொரு பிரபலம் இசையமைத்தார். இரண்டுமணி நேரமும் நல்ல இசையோடு கேலியும் கும்மாளமுமாக அரங்கமே மகிழ்ச்சியில் மூழ்கும்.
ஒரு பெண்வீட்டு அழகி இசையோடு நடனத்துடன், “எங்கவீட்டு சுந்தரிக்கு இப்படி ஒரு வயதான, பல்லும் பவிஷுமாய் கம்புடன் தள்ளாடும், கூனல் விழுந்த மாப்பிள்ளை வாய்க்க என்ன பாபம் செய்தோமோ?” என்று முடிக்க மணமகன் வீட்டு அழகி இதற்கு எசப்பாட்டு பாடுவாள். பெண் வீட்டிலிருந்து ஒருவர் பாடி முடித்ததும், ஆண் வீட்டு அத்தை ஒருத்தி அந்தப்பெண்ணுக்கு ஒரு வைர நெக்லெஸ் அணிவித்துவிடுவார். அதேபோல ஆண் வீட்டாருக்கு இவர்கள் பதில் மரியாதை செய்வார்கள். ஒரே மாதிரியான இருபது வைர நெக்லெஸ்கள் கழுத்தில் ஏறும். ஆண் வீட்டிலிருந்து போட்ட நகை ரூ. 50,000 என்பதைத் திருட்டுத்தனமாகக் கண்டுபிடித்து, இவர்கள் 60,000 ரூபாய் வீதம் பத்து மாலைகள் வாங்குவார்கள். இதெல்லாம் நடந்தது பத்துகிராம் தங்கத்துக்கு ரூ. 63.25 மட்டுமே விற்ற காலத்தில்!... இது தான் மார்வாடி கல்யாணம்!
திருமணங்களைப் பற்றிப் பேசும்போது எனக்கு என் அக்காவின் திருமண நிகழ்ச்சியொன்று நினைவுக்கு வருகிறது. அப்போது எனக்கு வயது பனிரெண்டு. அப்போதே என் தந்தை என்னை ஒரு வயதுக்கு வந்தவனாகவே நடத்தி வந்தார். (பணம் கொடுக்கல் வாங்கல் சில என் மூலமாகவே நடக்கும். “டேய்! அனந்தராமையர் பாக்கியை இன்னிக்கு தரேன்னார். அவாத்துக்குப்போ.. நீயா கேக்காதே... அவர் தர்றதை வாங்கிண்டுவா!”..) பார்வதிபுரத்தில் கல்யாணம். மாப்பிள்ளை வீட்டார் திருவனந்தபுரம் கரமனையிலிருந்து வரவேண்டும். ஒன்றரைமணி நேரப் பஸ் பயணம். அவர்களை அழைத்துவர திருவிதாங்கூர்-கொச்சி அரசு பஸ் ஒன்று ஏற்பாடு செய்திருந்தேன். அப்போது நிர்ணயம் செய்யப்பட்ட வாடகையை நாகர்கோவில் ட்ரஷரியில் பணமாகக்கட்டி அந்த சலானை மீனாட்சிபுரம் டிப்போவில் சமர்ப்பிக்கவேண்டும். நண்பகல் நேரத்தில் மாப்பிள்ளை வீட்டுக்கு பஸ்ஸோடு போய்ச்சேர்ந்து விட்டேன். என்னையும் என் உருவத்தையும் பார்த்த ’தூரத்து மாமா’ ஒருவர் “பெரியவா ஆரும் வரலியா?” என்று கேட்டுவிட்டு, பக்கத்திலிருப்பவரிடம் “கல்யாணத்துக்கு சம்பந்திமாரை அழைச்சிண்டுபோக பெரிய ஆளாத்தான் அனுப்பியிருக்கா!” என்று கேலியாகச் சொன்னதும் காதில் விழுந்தது. புறப்படும் நேரம் வந்ததும், பத்துமுறை பஸ் கூரைக்கு ஏறி இறங்கி அவர்கள் பெட்டிப் படுக்கைகளை மேலே ஒழுங்காக அடுக்கி, டார்பாலினால் மூடி இழுத்துக் கட்டி - பேருந்தில் நடத்துநர் ஓட்டுநர் மட்டுமே உண்டு -- பெரியவர்களை முன்னால் வசதியாக உட்காரச்செய்து, ‘போகலாமா?’ என்று நாலுதடவை கேட்டுத் தேங்காய் உடைத்து, பஸ் புறப்பட்டபோது எல்லார் கண்களிலும் ஒரு பிரகாசம் தெரிந்தது. போகும்வழியில் நெய்யாற்றின்கரையில் வழியில் சாப்பிட பிஸ்கட் பாக்கெட்டுகள், சீப்பு சீப்பாக பேயன் பழம், குழித்துறையில் அண்டிப்பருப்பு, நுங்கு/இளநீர் சர்பத், வெற்றிலை போடுபவர்களுக்கு ‘முறுக்கான்’, தக்கலை ‘போற்றி’ ஹோட்டலில் சுடச்சுட காப்பி, வடை சட்னியோடு, வழியில் கொறிக்கத் தூள் பக்கோடா - இப்படி அவர்கள் வாய்க்கு ஓய்வே கொடுக்காமல் பார்வதிபுரம் அழைத்து வந்தேன். அவர்களை வரவேற்ற என் தந்தை, “காபி, டிபன் சாப்பிடலாமே?” என்று அழைத்ததற்கு அந்த ‘தூரத்து மாமா’ அப்பாவிடம், “வழியெல்லாம் சாப்பிட்டு சாப்பிட்டு வயிறு ஃபுல்லா இருக்கு! நான் கூட நெனச்சேன் சின்னப் பையனை அனுப்பியிருக்காளேன்னு!.... உம்ம புள்ளாண்டன்...சும்மா சொல்லப்படாது... மூர்த்தி சின்னதானாலும் கீர்த்தி பெரிசு! எங்களையெல்லாம் நன்னா வெடிப்பா கவனிச்சிண்டான்!” என்றார். அப்பா ஒரு மோனோலிசாப் புன்னகையோடு Teen-க்கு வராத என்னைப்பார்த்தார்!
ஐம்பதுகளில் நடந்த பிராமணக் கல்யாணங்களில் சீர் செனத்தி, நகை நட்டு, பத்தமடை பட்டுப்பாயுடன் பாத்திரம் பண்டம், வரதட்சிணை, ஊரை வளைத்து பத்துப் பந்தி விருந்துச் சாப்பாடு எல்லாம் இருக்கும். ஆனால் ஒரு ஃபோட்டோக்ராபருக்கு நூறு ரூபாய் கொடுக்க மனம் வராது. அப்படியே வந்தாலும், “ஏய்! முக்கியமா நாலஞ்சு போட்டோ போரும். நீ பாட்டுக்கு ரீல் ரீலா எடுத்துத்தள்ளாதே!” என்ற அறிவுரை தவறாது. கல்யாண போட்டோ என்றால் நாகர்கோவில் ராஜா ஸ்டுடியோவில் மாப்பிள்ளையும் பெண்ணும் சிரிக்கத்தெரியாமல் ‘சிரிக்கும்’ மார்பளவு போட்டோ மட்டுமே. அதுவும் ஒரு காப்பி மூன்று ரூபாய் என்பதால் “நாலு காப்பி போடுங்க..போதும்!.” என் அக்கா கல்யாணத்தில் பட் பட்டென்று வெடிக்கும் ஃப்ளாஷ்பல்பின் சத்தத்தோடு வளைய வந்த போட்டோகிராபரும் அவர் பிறகு கொண்டுவந்து கொடுத்த கல்யாண ஆல்பமும் ஊருக்குப் புதிசு!
எனக்கு நடந்தது ஒரு காதல் கல்யாணம் என்பது உங்களில் அநேகருக்கு தெரிந்திருக்கும். அது எனக்கு வாழ்க்கையில் சந்தோஷத்தையும் ஒருசில வலிகளையும் தந்திருக்கிறதென்பது வெகுசிலருக்கே தெரியும். என் திருமணத்துக்கு இ.பா. குடும்பம் தூண்டுதலாக இருந்திருக்கிறது. இ.பா.வின் ‘மழை’ நாடகத்துக்கான ஒத்திகை முடிந்தபின் சக நடிகரான ஜமுனாவை அவரது டிஃபன்ஸ் காலனி வீட்டில் கொண்டுவிடுவது என் பணியாக இருந்தது. ஒருநாள் போகிறவழியில் இ.பா. வீட்டுக்குப்போனோம். எனக்கு காலாகாலத்தில் கல்யாணம் நடக்கவில்லையென்ற குறை இ.பா.வின் மாமியார் பரிமளா மாமிக்கு உண்டு. என் ஜாதகத்தை வாங்கி அதற்குப் பல பிரதிகள் எடுத்து பெண்ணைப் பெற்றவர்களிடம் கொடுத்திருந்தார். அன்று போனவுடன், “மணி! உன் ஜாதகம் விசுவநாதன் மகள் புஷ்பா ஜாதகத்தோடு நன்றாக சேருகிறதாம். வரும் ஞாயிற்றுக்கிழமை உன் அக்கா அத்திம்பேரை பார்க்கவரலாமா என்று கேட்டார்” என்று மாமி என்னிடம் விசாரித்தார். இதை கேட்டுக்கொண்டிருந்த ஜமுனா வீட்டுக்குப்போய் கநாசுவிடம் “அப்பா! நான் பலதடவை என் விருப்பத்தை மறைமுகமாக மணியிடம் தெரிவித்தும் அவர் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் ஜோக்காகவே நினைக்கிறார். நாளை காலை அவரை ஆபீசில் போய்ப் பார்த்து அவரது விருப்பத்தை அறிந்துவா!” என்று சொல்லியிருக்கிறார். அடுத்தநாள் காலை பத்தரைமணிக்கு நான் ஆபீஸ் ஏறும்போதே என் ப்யூன் “ஸாப்! உங்களைப்பார்க்க ஒரு பெரியவர் ஒன்பது மணியிலிருந்து காத்திருக்கிறார். அவருக்கு ஒரு சாய் போட்டுக் கொடுத்துவிட்டேன்!’ என்று சொன்னார். போய்ப்பார்த்தால் என் ரூமில் க.நா.சு காத்திருக்கிறார். அவர் அதுவரை என் ஆபீசுக்கு வந்ததேயில்லை. வெகுநேரத்துக்குப் பிறகு “பாப்பா Interior Designing Degree அடுத்தவருஷம் முடித்தபிறகு அவளுக்கு கல்யாணத்துக்கு பார்க்கணும். உங்கள் பெயர் முதலில் இருக்கு. உங்களுக்கு சம்மதம்னா நான் உங்க வீட்டுக்கு வந்து பேசறேன்” என்றார். அந்தக்காலத்து காதல் திருமணங்களுக்கிருந்த எதிர்ப்பு எதுவுமே இங்கே இல்லை. அக்காவிடம்சொன்னதும், ‘ஆஹா!.....நல்ல பொண்ணு...நமக்கு ஏண்டா இது முதல்லே தோணலே?’ என்பது தான் முதல் ரியாக்ஷன்.
முறையாக நிச்சயதார்த்தம் நடக்காவிட்டாலும், நான் அழைத்துப்- போகுமிடங்களிலெல்லாம் ‘She is my Fiancee!” என்றே அறிமுகப்படுத்தினேன். மாலைவேளைகளில், நாடகம், சினிமா என்று சேர்ந்து போவோம். க.நா.சு என்னிடம் சொன்னதெல்லாம் “Please drop her back at respectable hours!” என்பதுதான். ஜமுனா படிப்பை முடித்து ஒருவருடம் ஆனபிறகும் திருமணத்துக்கான எந்த ஏற்பாடும் நடக்கவில்லை. என் வீட்டில் கேட்க ஆரம்பித்தார்கள். ஒருநாள் க.நா.சு.விடம் இதைப்பற்றி கேட்டபோது, “என் கையிலியோ பேங்கிலியோ பணம் இல்லை. UNESCO-வுக்கு ராஜம் அய்யர் எழுதிய ‘கமலாம்பாள் சரித்திரம்’ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பியிருக்கிறேன். அது செலக்ட் ஆனால் ரூ. 5000 வரும். அதுவும் செலக்ட் ஆனால் தான்... அதற்குமேல் என்னிடம் ஒன்றுமில்லை!” என்று சொல்லிவிட்டார்.
அப்போது என் முன்னால் தெரிந்த வழிகள் இரண்டு. ஒன்று: ரெஜிஸ்டர் ஆபீசில் கையெழுத்துப்போட்டு, மாலை மாற்றிக்கொண்டு, நெருங்கிய நண்பர்களுக்கு ஒரு ஜாங்கிரி,, சமோசா, ஒரு கோக் கொடுத்து இருநூறு ரூபாயில் கல்யாணத்தை முடித்துக்கொள்வது. இரண்டு: தில்லியில் இருபது வருடங்களாக பல நண்பர்கள் வீட்டில் விருந்து சாப்பிட்டுக்கை நனைத்திருக்கிறேன். என் வாழ்வில் நடக்கும் முதல் வைபவத்துக்கு ஊரையே அழைத்து விருந்து படைக்கவேண்டும். கல்யாணம் ஜானவாசத்தோடு ஜாம் ஜாமென்று நடக்கவேண்டும். நான் இரண்டாவது வழியைத்தேர்ந்தெடுத்தேன். என் வங்கியில் இருந்தது பத்தாயிரம் ரூபாய் மட்டுமே. பல நண்பர்கள் உதவ முன்வந்தனர். “மணி! உனக்கு பணம் தேவைனு தெரியும். பேங்க்லெ போய் பாத்தேன். ஆறாயிரத்து சொச்சம் இருக்கு. அதில் ஐயாயிரம் தரேன். முடியறபோது திருப்பித்தா!’ இப்படி பல புண்ணியவான்கள் முன்வந்தார்கள். தில்லியில் எனக்கிருந்த பஞ்சாபி நண்பர்கள் பலத்தை அப்போது தான் உணர்ந்தேன். பந்தலுக்கு நண்பன் சோப்ராவின் Chopra Tent House, கல்யாண நகைகளுக்கு Khanna & Sons, பட்டுப்புடவைகளுக்கு கரோல்பாக் அணூணிணூச் Arora Silks......இப்படிக் காலணா முன்பணமில்லாமல் உதவிகள். எல்லாமே Payble when able basis! சமையலுக்கு தில்லியில் பிரபலமாக இருந்த ராமச்சந்திரன் - தண்டபாணி. அவர்களே நாதஸ்வரம், மாலை எல்லாவற்றுக்கும் பொறுப்பு. எல்லாவற்றுக்கும் மேற்பார்வை TD என்றழைக்கப்படும் TD Sundararajan and Reliance Balu! அக்னிகுண்டத்தின் முன் நான் ‘சுக்லாம் பரதரம்” சொல்லிக்கொண்டிருக்கும்போதே என் காதில் “மணி, சாயந்தரம் ரிஸப்ஷனுக்கு ஐஸ்க்ரீம் அட்வான்ஸ் மூவாயிரம் வேணும்”...நான் தலையசைக்க TDS பையிலிருந்து எடுத்துக் கொடுப்பான். நான் ஜமுனாவை ‘மழை’ நாடகத்தின் போது சந்தித்ததன் பலனோ என்னவோ ஜானவாசத்தின்போதே அடைமழை...தொடர்ந்து மறுநாள் காலை வரை. போட்ட பந்தல் எல்லாம் நீரில் முழுகி, நான் தாலி கட்டினது கன்னடா ஸ்கூல் ஆடிட்டோரியம் மேடையில்! ஒரு நடிகனுக்கு கடவுள் தந்த பரிசு!
தங்கம் பவுனுக்கு ரூ. 161 விற்ற 1972-ல் கல்யாண மொத்தச்செலவு ரூ. 1,78,500/- ஆகாதா பின்னே?
சிதம்பரத்திலிருந்து வந்த ஜமுனாவின் தாத்தா பாட்டிக்கு பட்டுவேஷ்டி, பட்டுப்புடவை, கநாசு கட்டியிருந்த பட்டு வேஷ்டி. மாமியார் பட்டுப்புடவை....நகைகளே இல்லாமலிருந்த ஜமுனாவுக்கு திருமங்கல்யத்திலிருந்து நெக்லெஸ், சங்கிலி, வளையல்கள் உட்பட. மாலை நடந்த கல்யாண ரிசப்ஷனில் ஒரு பக்கம் வாழையிலைபோட்டு சாப்பாடு, வட இந்திய வகைகள் இன்னொருபுறம், சித்திரான்னங்கள் ஒரு மூலையில்... ஒரே நேரத்தில் சுடச்சுட 20 மசால் தோசைகள் போட வரிசையாக காத்திருக்கும் வட இந்திய நண்பர்கள் மற்றொருபுறம். தில்லியிலிருக்கும் பிரபல புகைப்பட நண்பர்கள் ஐவர் “மணி! உன் கல்யாண கவரேஜ் என்னுது’ என்றார்கள். அதனால் என் வீட்டில் கல்யாண ஆல்பங்கள் ஐந்து இருக்கும்! எனக்கு திருமணம் நடந்த லோதி ரோடில் நடந்த ட்ராபிக் ஜாம் பார்த்து யாரோ ஒருவர் “மினிஸ்டர் வீட்டுக் கல்யாணமா?’ என்று கேட்டாரம்! எனக்கு திருமணமான இருபது வருடங்களுக்குப்பிறகு நான் வணங்கும் காமாட்சி மாமி ஒரு கல்யாணத்தின் போது கொடுத்த சர்ட்டிபிகேட்: “மணி! எத்தனை வருஷங்களானாலும் உன் கல்யாணம்போல வராதுடா. என்ன க்ராண்டா பண்ணினே!”
கல்யாணத்துக்கு இருவாரங்கள் முன்பு கநாசுவிடம் ரூ 10,000 கொண்ட கவரைக்கொடுத்து, “என் அண்ணன் கல்யாணத்தில் ரூ.8000 வரதட்சிணை என்று கொடுத்தார்கள். அது சரியோ தப்போ...தெரியாது. ஆனால் இரண்டாவது மருமகள் ஒன்றுமில்லாமல் வீட்டுக்கு வருவதை நான் விரும்பவில்லை. இன்று நல்ல நாளாக இருக்கிறது. இதை என் அக்காவிடம் கொடுத்துவிடுங்கள்!” என்று கேட்டுக்கொண்டேன். கல்யாண மண்டபத்தில் நான் ஆர்டர் செய்திருந்த புது ஆல்வின் ஃப்ரிஜ் ஒன்றும், எருமைமாடு போல் பெரிசாக ஒரு ஜேகே கருப்புவெள்ளை டெலிவிஷன் ஒன்றும் வந்திறங்கின. (கல்யாணமாகி ஒருவருடத்துக்குப்பிறகுதான் க.நா.சு, தி. ஜானகிராமனிடமிருந்து கல்யாணத்துக்காக ரூ.5000 கடன் வாங்கிய விவரம் தெரியவந்தது. அந்தத்தொகையை அவரிடம் கொடுத்து வாங்கிய கடனை உடனே அடைக்கச் சொன்னேன்.)
எல்லாமே மனசுக்கு திருப்தியாக நடந்து முடிந்தபின் உட்கார்ந்து யோசித்தேன். நான் முன்பு வேலை பார்த்த State Trading Corporation of India Provident Fund -ம் தற்போது வேலை செய்யும் Birla Brothers Provident Fund -ம்சேர்த்தால் ரூ. ரெண்டேகால் லட்சம் வரை கைக்கு வரும். அதில் எல்லாக் கடன்களையும் அடைத்துவிடலாம் என்பது என் எண்ணம். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது பிறகுதான் தெரியவந்தது. ஒரு ஸ்தாபனத்தில் ஐந்துவருடங்கள் தொடர்ந்து வேலை செய்தால் தான் கம்பெனி நாம் போட்ட தொகைக்கு ஈடாக அவர்களும் contribute பண்ணுவார்கள். நான் எஸ்.டி.ஸியில் வேலை செய்தது நான்கு ஆண்டுகள் தான். அதனால் நான் போட்ட தொகை மட்டுமே கைக்கு வரும். ஆனால் கம்பெனியில் நான் போட்ட தொகை தற்போது வேலை செய்யும் பிர்லா பிரதர்ஸ் ப்ராவிடண்ட் பண்டுக்கு மாற்றப்பட்டால் எஸ்டிஸியும் சமபங்கு செலுத்தவேண்டும். அதனால் EPF -ஐ இணைக்க முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால் அது ஒருவருடத்துக்கு மேலாக இழுத்தடித்தது. ஆமை வேகத்தில் வேலை செய்யும் அரசு ஸ்தாபனங்களில் ஒன்று Employees'' Provident Fund Organisation. அங்கே எந்த பாச்சாவும் பலிக்காது. அப்போது தொடங்கியது என் துயரக்கதை.
தாமாக கடன் தந்த நண்பர்கள் நெருக்கத் தொடங்கினார்கள். வீட்டில் டெலிபோன் மணி அடித்தாலே அடிவயிற்றில் என்னவோ செய்யும். நினைத்தபடியே அது நகைக்கடைக்காரராகவோ, ஜவுளிக்கடைக்காரராகவோ தான் இருக்கும். அவர்களும் எத்தனை நாட்கள் ஒரே சால்ஜாப்பை கேட்டுக்கொண்டிருப்பார்கள்? சிலசமயம் போனை எடுக்கும் க.நா.சு யாரென்று கேட்டுவிட்டு, “போன் உங்களுக்குத்தான்” என்று சொல்லி போனை கீழே வைத்துவிட்டுப் போய்விடுவார். உண்மையாகவே கடன்பட்டார் நெஞ்சம் எப்படி கலங்கும் என்பதை என் வாழ்நாளில் தெரிந்துகொண்ட சமயமது. கொடுத்த பணத்தை உரியநேரத்தில் திருப்பித்தராமல் நான் நாணயஸ்தன் தான் என்பதை எப்படித்தான் நிரூபிப்பது? ஆனால் ஒருதடவை கூட வந்த போனை அட்டெண்ட் பண்ணாமல் “வீட்டில் இல்லை” என்று பொய் சொல்லியதில்லை!.....அதெல்லாம் போதாதே! பணம் வைக்கிற இடத்தில் பணத்தைத்தான் வைக்கவேண்டும்!.....அனுபவித்தவர்களுக்குத்தான் அது புரியும்!
கல்யாண சமயத்தில் ரூ.3,000 கொடுத்துதவிய நண்பனொருவன் பலமுறை போன் பண்ணி அலுத்துவிட்டான். ஒருநாள் Prem Kumar Ahuja, Advocate என்பவரிடமிருந்து ஒரு பழுப்பு நிறக்கவர் ரெஜிஸ்டர்ட் போஸ்டில் வந்தது. பிரித்துப்பார்த்தால், “On behalf of my client, Mr. Ramachandran, I would like to state the following facts என்று தொடங்கி, இன்ன தேதியில் அவரிடமிருந்து நீங்கள் ரூ. 3,000 வாங்கியதையும் எட்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டதால் இன்றிலிருந்து ஒரு வாரத்துக்குள் கொடுத்த தொகையும் வட்டியாக 18% சேர்த்து செட்டில் செய்யாவிட்டால், என் வாடிக்கையாளர் கோர்ட்டுக்கு போகவேண்டியிருக்கும் என்பதை தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன்”..... இது தான் மேட்டர்!
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மூவாயிரம் ரூபாய்க்கு வக்கீல் நோட்டீசா? அதை கிழித்துப்போட்டுவிட்டு பேசாமலிருக்கத் தோன்றவில்லை. “நான் இன்ன தேதியில் உங்களிடம் ரூ. 3000 பெற்றுக்கொண்டேன். திருப்பித் தரும்போது 18% வட்டியுடன் சேர்த்து தருவேன் என்று உறுதிமொழிகிறேன்” என்று ஒரு பிராமிஸரி நோட் ஒன்று தயார் செய்து --- இரண்டு மாதங்களுக்கு முன் ரெவென்யூ ஸ்டாம்ப் மாற்றியமைக்கப்பட்டதால் வாங்கிய தேதியில் நிலுவையில் இருந்த பழைய ரெவென்யூ ஸ்டாம்ப் இரண்டு ஒட்டி கையெழுத்துப்போட்டு தயார் செய்தேன். வக்கீலுக்கு எழுதிய கடிதத்தில், ”நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆனால் இப்போது திருப்பித்தரமுடியாத நிலையில் இருக்கிறேன். ஆனால் நீங்கள் அறிவித்தபடி உங்கள் வாடிக்கையாளர் கோர்ட்டுக்குப்போனால் அங்கே documentary evidence தேவைப்படும். அதனால் நான் பின் தேதியிட்ட ஒரு ப்ராமிசரி நோட் இத்தோடு இணைத்திருக்கிறேன்..அப்போது நிலுவையிலிருந்த பழைய ரெவென்யூ ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்தும் போட்டிருக்கிறேன். கோர்ட்டில் கேஸ் போட இது மிகவும் உதவும். இத்தோடு Birla Brothers Provident Fund எனக்கெழுதிய கடிதத்தின் நகலும் இணைத்திருக்கிறேன். அதிலிருந்து இன்னும் ஓரிரு மாதங்களில் என்னால் வாங்கிய கடனை வட்டியோடு திருப்பிச்செலுத்த முடியுமென்று நம்புகிறேன். நீங்கள் விரும்பினால் கோர்ட்டில் கேசும் போடலாம்” என்று முடித்திருந்தேன்.
நாலைந்து நாட்களுக்கப்புறம் மாலை வேளையில் என் வீட்டின் முன்னால் ஒரு பழைய ஃபியட் கார் ஒன்றிலிருந்து செக்கச்செவேலென்று ஆறரையடி தாட்டியான மனிதர் ஒருவர் இறங்கி, ‘Is this Mr. Mani's House?” என்று கேட்டார். உள்ளே வரச்சொன்னேன். அவர் சட்டைப்பையில் வக்கீலுக்கு நான் எழுதிய கடிதம் துருத்திக்கொண்டிருந்தது. Come in...Mr. Ahuja! என்றதும் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தார். நான் எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டினேன். உள்ளே வந்தவர் கேட்ட முதல் கேள்வி:: “Beta! Kyon apne pair pe khulaadi maarte ho?... குழந்தாய்! ஏன் உன் காலையே கோடாலியால் வெட்டிக் கொள்கிறாய்?” என்பது தான். என் நிலமையை நான் விளக்கிச் சொன்னேன். அவர் பாக்கெட்டிலிருந்த (நான் எழுதிய) கடிதத்தை என்னிடம் கொடுத்து, கிழித்துப்போடச் சொன்னார். “கிழித்துப்போடுவதற்காக அந்த கடிதத்தை நான் எழுதவில்லை’யென்று மறுத்துவிட்டேன். விடை பெறும்போது என்னைக்கட்டிப்பிடித்து, “உன் பெற்றோரை கும்பிடுகிறேன்... உன்னை வளர்த்த விதத்துக்காக. உன்னை பாக்கணும்னு தோணிச்சு...வந்தேன்! ஒருநாள் நீ விண்ணைத் தொடுவாய். Ek din tum aasmaan chchooyoge! என்று பஞ்சாபியில் சொல்லிவிட்டுப் போனார். இதுவரையிலும் விண்ணைத் தொட வாய்ப்பு கிட்டவில்லை!
பி.கு: அந்த நல்ல மனிதர் நான் தில்லியில் இருந்தவரை தொடர்பில் இருந்தார். (அன்று என் வீட்டிலிருந்து திரும்பிப்போகும்போது, நான் அவருக்கெழுதிய கடிதத்தை அவரே சுக்குநூறாக கிழித்துப் போட்டுவிட்டாராம்!) எனக்கென்று ஒரு விலாசம் வந்தபிறகு வீட்டுக்கு வருவார். ஜமுனா செய்யும் ’ Madrasi Khaana’வை விரும்பிச் சாப்பிடுவார். ஐந்துபெக் ஸ்காச்சுக்கப்புறமும் அதே நிதானத்தோடு அதே ஃபியட் காரில் பட்டேல் நகர் வீட்டுக்கு திரும்பிச்செல்வார். ஆறு மாதங்களுக்கு முன் அவர் நினைவு வந்தது. போன் போட்டேன். போனை எடுத்தது அவரல்ல...2015-ல் தனது 93 வயதில் காலமானதாக அவர் மகன் தெரிவித்தார்.
வங்கியிலிருந்து பணத்தை எடுத்து, அசலையும் 15% வட்டியையும் கணக்குப்பார்த்து ஒவ்வொரு கவரில் போட்டு, வட்டி வாங்காத நண்பர்களுக்கு குழந்தைகளுக்குப் பரிசாக சின்ன வெள்ளிக் குத்துவிளக்கு, வெள்ளி டம்ளர், குங்குமச் சிமிழ் சகிதம் -- ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி வாங்கிய கடனை மீட்டுவிட்டு அன்று இரவு நான் தூங்கிய தூக்கம்.....அப்பப்பா!
இந்த விஷயங்கள் பொதுவெளியில் யாருக்கும் தெரியாது. வேண்டாமென்று தான் இருந்தேன். நாஞ்சில் உட்பட வெகுசிலருடன் தனிமையில் பகிர்ந்திருக்கிறேன். எனக்குத் திருமணமாகி நாகர்கோவில் போயிருந்தபோது, கிருஷ்ணன் நம்பிக்கு ஜமுனா தன் ‘கல்யாணக்கதை’யை சொல்லக் கேட்டிருக்கிறேன். நற்றிணை யுகன் ஏற்பாடு செய்த க.நா.சு. விழாவில் பேசிக் கொண்டிருந்த அசோகமித்திரன்,
“Mani, KaNaaSu's halo, if any, cannot be tarnished by anybody!....நீங்க எழுதலாம்!” என்று சொன்னார். வெங்கட் சாமிநாதன் இருந்தவரை, ” நீர் எழுதும்யா. எங்களுக்கெல்லாம் சுமாராகத் தெரிந்த விஷயம் தான்!’என்று சொல்லிக்கொண்டே இருந்தார். எப்படியோ?.....45 ஆண்டுகளாக மனதில் இருந்த சுமையை இறக்கி வைத்துவிட்டேன்.
என் எண்பது வயது வாழ்க்கையில், நான் கலந்துகொண்ட பல திருமணங்களில் நிகழ்ந்த சுவையான சம்பவங்களும் நிறையவே உண்டு. அதற்கு ‘அந்திமழை’ ஓர் இதழ் போதாது. செல்போனும் வாட்ஸப்பும் இல்லாத காலத்தில், ஒருமாதத்துக்கு முன்பே கொடுத்த கல்யாணப்பத்திரிக்கையை தொலைத்துவிட்டு, தேதி மட்டுமே ஞாபகம் இருந்து, விலாசம் தெரியாமல், கல்யாணப்பெண் தந்தை பெயர் தெரியாமல், பூனாவில் சோம்வார்பேட்டை, புத்வார்பேட்டைபோன்ற ஏழுபேட்டைகளில் ஏதோ ஒரு பேட்டையில் நடந்த என் நண்பன் டி. ராமதாஸ் கல்யாண ஊர்வலத்துக்கு பம்பாயிலிருந்து - அப்போது மார்க்கெட்டுக்கு புதிதாக வந்திருந்த விசிலடிக்கும் மில்க் குக்கர் ஒன்றை கல்யாணப்பரிசாக சுமந்துகொண்டு -- சரியாக போய்ச்சேர்ந்த என் சாமர்த்தியத்தைப் பற்றியும் சொல்லியாகவேண்டும்...
May be in another time!
ஆகஸ்ட், 2017.