ஒரு தாயின் சபதம்!

சோனியா காந்தி
சோனியா காந்தி
Published on

அது ஒரு வியாழக்கிழமை. அன்று இரவு ஒன்பது மணி இருக்கலாம். டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் இருக்கும் செய்தியாளர் அறையில் ஏராளமான செய்தியாளர்கள் கூடி இருந்தனர்.

அதுவரை அந்த அறைக்குள் நுழைந்திராத ஒருவர் உள்ளே வந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் முகத்தில் வெளிப்படையாக பூரிப்பு தாண்டவமாடியது.  ஒரே நேரத்தில் எல்லோரும் கேள்விகளைக் கேட்க,  அவர் எதற்கு பதிலளிப்பது என்று தெரியாமல் தடுமாறினார். கிடைத்த இடைவெளியில் அவரிடம் தென்னக செய்தியாளர் ஒருவர் ஒரு கேள்வியைச் செருகினார். பொடா என்ற கொடூரமான சட்டம் இருக்கிறதே அதை விலக்கிக்கொள்வீரகளா? அதுதான் முதல் கேள்வி. 'ஆலோசனை செய்து என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்வோம்'' என்று அவர் பதில் அளித்தார். ஆனால் முதலில் கேட்கப்பட்டிருக்க வேண்டிய கேள்வி அது அல்ல. ஏனெனில் அது 2004 - நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நாள். காங்கிரஸ் கூட்டணி அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி வெற்றி அடைந்திருந்தது. அத்துடன் கேள்விகளை எதிர்கொண்டவர் சோனியா காந்தி.

அவரிடம் கேட்கவேண்டியிருந்த கேள்வி, யார் பிரதமர் ஆகப்போகிறார்கள் என்பது. காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக உங்களைத் தான் தேர்ந்தெடுக்க உள்ளார்கள். அப்படியானால் நீங்கள் தானே பிரதமர்? என்று ஒருவர் கேட்டார். அதுதானே நடைமுறை என்று சோனியா பட்டும் படாமலும் சொன்னார்.
சோனியா தான் பிரதமர் ஆகிறார் என்று மறுநாள் செய்தித்தாள்கள் கூறின. ஆனால் உடனே பாஜகவில் எதிர்ப்பு கிளம்பியது. ஏற்கெனவே அவருடைய வெளிநாட்டுப் பின்புலத்தை வைத்துதான் தொடர்ந்து அவருக்கு எதிராக பிரசாரம் நடந்திருந்தது. பாஜக வில் இருந்து இரண்டு பெண்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். சுஷ்மா ஸ்வராஜ் மொட்டை அடித்துக் கொண்டு விரதம் இருக்கப்போவதாகத்தெரிவித்தார். மத்தியபிரதேச முதல்வர் உமாபாரதியும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

மறுநாள் சோனியா, குடியரசுத் தலைவர் அப்துல்கலாமைச் சந்தித்துவிட்டு வந்தார். கலாம் என்ன சொன்னார் என்பது பற்றி பல ஊகங்கள் உண்டு. அதன்பிறகு திடீர் திருப்பமாக நான் பிரதமர் ஆகப்போவதில்லை என்று உறுதியாகச் சொன்ன
சோனியா, மன்மோகன் சிங்கை  பிரதமர் ஆக்கி விட்டார். அடுத்த பத்து ஆண்டுகள் சோனியா காந்தி கண்ணசைவில் நாட்டின் ஆட்சி நடந்தது என்று
சொல்வது பொருத்தமாக இருக்கும். ஆனால் அதற்கு முன்னால் அவர் கடந்து வந்த பாதையைத் திரும்பி பார்ப்பது என்பது இன்றைய சூழலில் காங்கிரஸுக்கு மிக அவசியத் தேவை.

1991 - ல் தேர்தல் பிரசாரத்தின்போது ராஜீவ் கொல்லப்பட்ட உடனே, காங்கிரஸ் செயற்குழு கூடி, சோனியா காந்திதான் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. அவரை கட்சித்தலைவர்கள் சந்தித்துக் கோரினர். துயரம் நீங்காத மனநிலையில் இருந்த அவர் மறுத்துவிட்டார். ஆனாலும் கட்சித் தொண்டர்கள் அவர் இல்லம் முன்பு நின்று கட்சித் தலைமையை ஏற்கவேண்டும் எனப் போராடுவது சில நாட்கள்
நீடித்தது. ஆனாலும் அவர் உறுதியாக இருந்தார்.

சோனியா காந்தி
சோனியா காந்தி

நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. சோனியா பேசாமல் அமைதியாக இருந்தார். ஆனாலும் கட்சி அரசியல் அவரை விடுவதாக இல்லை. காங். மூத்த தலைவர்கள் அவரை வந்து பார்த்துச் சென்றுகொண்டிருந்தனர். 1995 - ல் அமேதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் முதல்முறையாக ராகுல் பிரியங்காவுடன் மேடை ஏறினார். ராஜிவ் படுகொலை விசாரணை முறையாக நடக்கவில்லை என்ற கோபம் அவருக்கு இருந்தது. ''ராஜிவ் மரண விசாரணை, அதாவது முன்னாள் பிரதமரின் விசாரணையே இப்படி இழுத்துக்கொண்டு போனால், சாதாரண குடிமகன்களின் நிலைமை எப்படி இருக்கும்?'' என்றார். இது நரசிம்மராவைப் பார்த்து அவர் கேட்ட கேள்வி. சோனியா முழுமையாக அரசியலை விட்டு விலகவில்லை.எந்த தெருச்சண்டைக்கும் அவர் இறங்கத் தயார் என்ற
அறிகுறி தென்பட்ட நாள்.

காங்கிரஸ் 1996 தேர்தலில் தோல்வி அடைந்து, சீதாராம் கேசரி காங். தலைவர் ஆனார். அவர் படுத்திய பாடு சோனியா, காங். தலைமையை அதிரடியாகக் கைப்பற்ற வேகமாக வழிவகுத்தது. இதற்கு முன்பாக கட்சித் தொண்டர்கள் கோரிக்கையை ஏற்று 1997 ஆம் ஆண்டு வரும் பொதுத்தேர்தலில் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக அவர் அறிவித்தார்.  தேவகவுடா அரசை கேசரி கவிழ்த்தார் என்றால் அடுத்துவந்த குஜ்ரால் அரசை ஜெயின் ஆணைய இடைக்கால அறிக்கையைக் காரணம் காட்டி காங்கிரஸ் கவிழ்த்ததில் சோனியாவின் கையும் இருந்தது.

ஜெயின் ஆணைய இடைக்கால அறிக்கை ராஜிவ் கொலையில் திமுகவுக்குத் தொடர்பு இருப்பதாகச் சொன்னது. அப்படியானால் திமுகவை அமைச்சரவையில் இருந்து நீக்கவேண்டும் என்று காங்கிரஸ் ஆதரவில் நீடித்த குஜ்ரால் அரசிடம் கேட்டது. அதற்கு மறுக்கவே ஆதரவை விலக்கிக் கொண்டது. எந்த திமுகவை சோனியா காரணம் காட்டினாரோ அதே திமுகவை கூட்டணியில் சேர்க்க ஏழு ஆண்டுகள் கழித்து கோபாலபுரம் வந்தார். அதற்காக அவர் தயங்கவும் இல்லை.

சோனியா முதல்முதலில் பிரசாரம் செய்தது 1998 தேர்தல். அப்படி ஒன்றும் மந்திர மாயாஜாலம் நடக்கவில்லை. 142 இடங்களே கிடைத்தன. பாஜக வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது. அமேதி தொகுதிகூட பாஜக வசம் போய்விட்டது. (இப்போது 2019 - ல் மீண்டும் பாஜக வசம்). தோல்விக்குப் பின் சோனியா, காங்கிரஸ் தலைமைப் பதவியை கேசரியிடம் இருந்து கைப்பற்றினார். தலைவர் பதவியை லேசில் விட்டுத்தர கேசரி விரும்பவில்லை. கிட்டத்தட்ட அவரிடம் இருந்து பிடுங்கித்தான்
சோனியா வசம் தரப்பட்டது!

சோனியா காந்தி அடுத்த ஆண்டே இன்னொரு தேர்தலை சந்திக்கவேண்டி வந்தது. பாஜக தலைமையிலான தேஜகூட்டணி அரசு கவிழ்ந்து அடுத்த தேர்தல்.

இருங்க, இருங்க...அதற்குமுன் நடந்த ஒரு குட்டிக் கலவரத்தைப் பார்த்துவிட்டுப் போவோம்! 98&ல் பாஜக ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தபோது சோனியாவை சந்தித்து அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினால் ஆதரவு தருவதாக ஜெயலலிதா சொல்லி இருந்தார். அதன்படி சோனியாவும் ஒப்புக்கொண்டார். இது அவரது அரசியல் அனுபவமின்மையால் நடந்தது. கடைசியில் எல்லோரும் சேர்ந்து வாஜ்பாயி ஆட்சியைக் கவிழ்த்தார்கள். ஆனால் தங்களுக்குத் தேவையான ஆதரவைப் பெறமுடியவில்லை. சோனியாவை பிரதமர் ஆக்க காங்கிரஸ் முயன்று தோற்றது! ஆனால் ஆட்சி கவிழ்ந்ததற்காக முழுப்பொறுப்பையும் 'வெளிநாட்டுக்காரரான' சோனியாவே ஏற்கவேண்டி வந்தது. இதைத் தொடர்ந்து கட்சிக்குள் சரத்பவார், பிஏ சங்மா, தாரிக் அன்வர் ஆகிய மூவரும்
சோனியாவுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
'' நீங்கள் வெளிநாட்டில் பிறந்தவர். வெளிநாட்டுக்காரர் யாரும் பிரதமர் ஆகக்கூடாது என்று கட்சியின் சட்டவிதிகளை  மாற்றவேண்டும்'' என்றனர்.  கட்சிக்குள் தன் அதிகாரத்தை நிரூபிக்க வேண்டிய நேரம் இது! மேற்சொன்ன மூவரும் இப்படி கோரிக்கைகளுடன் கடிதம் கொடுத்த அதே நாள் தேதியிட்டு, சில நாள் கழித்து சோனியா தன் தலைவர் பதவி ராஜினாமாவை அளித்தார். காங்கிரஸ் குலுங்கியது. தொண்டர்களும் தலைவர்களும் பதவி விலகக்கூடாது என மன்றாடினர். சோனியாவை எதிர்த்த மூவரையும் பிற தலைவர்கள் கட்சியை விட்டுத் தூக்கிக் கடாசினர். அதன் பின்னர் சோனியா தன் விலகலைத் திரும்பப் பெற்றார். இந்த உள்கட்சி வெற்றி அவருக்கு மிக அவசியமான ஒன்றாக இருந்தது.

இப்போது சோனியா தேர்தலில் போட்டியிட வேண்டும். அமேதியில் அவர் போட்டியிட விரும்பினார். ஆனால் அங்கு என்ன செய்தேனும் அவரை பாஜக தோற்கடித்து விடக்கூடும் என்ற அச்சம் இருந்தது. எனவே தெற்கே பாதுகாப்பான தொகுதியை,(முன்பு தன் மாமியார் செய்ததுபோல) தெரிவு செய்து போட்டியிட அவர் விரும்பினார். பாஜக இங்கும் எதாவது செய்யக்கூடும் என்ற அச்சம் இருந்தது. ஆந்திராவில் கடப்பா தொகுதியில் அவர் களமிறங்குவார் என்று சொல்லப்பட்டது.  வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளுக்கு முந்தைய நாள் மாலை ஹைதராபாத் நோக்கிக் கிளம்பினார்
சோனியா. அவரை எதிர்த்து கடப்பாவில் போட்டியிட அன்று முன்னிரவில் நடிகை விஜயசாந்தியை பாஜக தயார் நிலையில் வைத்திருந்தது. மறுநாள் காலையில் சோனியா வண்டியைத் திருப்பி(அதாவது விமானம்!) பெல்லாரி தொகுதியில் போய் இறங்கி வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் பாஜக காரர்கள் இரவு முழுவதும் தூங்காமல் இருந்து, பெல்லாரிக்கு
சோனியா போகிறார்  என்று மோப்பம் பிடித்து அங்கே போட்டியிட சுஷ்மா சுவராஜைத் தயார் செய்து காலையில் பெங்களூருக்கு அவரை வரவைத்து, அங்கிருந்து பெல்லாரிக்கு அழைத்து வந்து களமிறக்கிவிட்டனர்.

சோனியாவின் பலவீனமாக இருந்தது அவருடைய வெளிநாட்டுக்காரர் என்ற பின்னணி. சுஷ்மா, 'நான் மண்ணின் மகள்' என்ற குரலுடன் இறங்க, பாரம்பரியமான பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் டப்பா டான்ஸ் ஆடத்தொடங்கியது. உஷாராக அமேதியிலும் போட்டியிட்டார் சோனியா. ஆனால் இறுதி வெற்றி சோனியாவுக்கே. பெல்லாரியில் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! அமேதியில் மூன்று லட்சம் வாக்குகள்! ஆனால் பாஜகவே இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது!

முதல்முதலாக 1999 - ல் எம்பியாக நாடாளுமன்றத்தில் நுழைந்த சோனியா ஆரம்பத்தில் சரியாகச் செயல்படவில்லை. ஆனால் மெல்ல மெல்ல சில ஆண்டுகளில் அதற்கான பயிற்சியைப் பெற்றார். பிரதமர் வாஜ்பாயியையே சில ஆண்டுகளில் திகைக்க வைக்கவும் செய்தார்.

2004 தேர்தல் வந்தபோது, சோனியா மிக விரிவான ஒரு கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்தித்தால்தான் வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்திருந்தார். தன்னை எதிர்த்து வெளியே சென்று தனிக்கட்சி தொடங்கி இருந்த சரத்பவார்,  ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் ஜெயின் ஆணையத்தால் விடுவிக்கப்பட்ட திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க அவர் தயாராக இருந்தார். கூட்டணி பேச்சுவார்த்தைக்காக  டெல்லியில் இருந்து சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி இல்லத்துக்கே வந்தார்.  அந்த விரிவான கூட்டணி பாஜகவின் இந்தியா ஒளிர்கிறது முழக்கத்தை முறியடித்தது. 274 இடங்களில் சோனியா உருவாக்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது.

இப்போது கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்த சம்பவத்துக்கு வருவோம். மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கியவரை,  ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆலோசனைக் குழு ஒன்றை உருவாக்கி அதற்கு தலைவர் ஆக்கினார்கள். இது நடந்து ஓராண்டு கழித்து எம்பியாக இருந்துகொண்டே இன்னொரு பதவியிலும் இருக்கக்கூடாது என்று ஒரு விதியைச் சுட்டிக் காட்டி மீண்டும் சோனியா குறிவைக்கப்பட்டார். அவர் எம்பி பதவியை விட்டு விலகி அந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.  இந்திய அரசியலில் சோனியா எதிர்கொண்ட எதிர்ப்புகளும் அதை வெகு சாமானிய பெண்மணியாக இருந்து தாங்கிக்கொண்டு அரசியலில் பட்டைதீட்டப்பட்ட வைரமாக சுடர்விடும் அளவுக்கு தன்னை வளர்த்துக்கொண்டதும்தான் சோனியாவின் வரலாறு.

செப்டெம்பர், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com