ஒரு சமூகத்தின் வாழ்க்கைப் பதிவு

தலைமுறைகள்
நீல பத்மநாபன்
நீல பத்மநாபன்
Published on

நான் கல்லூரி படித்துக்கொண்டு இருந்த காலகட்டம். ஒருநாள் எதிர்வீட்டில் ஒரே களேபரம். அப்பதான் திருமணம் ஆகி இருந்த பெண்ணை அவளது கணவன் வீட்டை விட்டு விரட்டிகிட்டு இருந்தான். ஏன்னு தெரியல.. அவள் பெண்ணே இல்லை என்று சொல்லிகிட்டு இருந்தது மட்டும் காதில் விழுந்தது. எனக்கு நிறைய படிக்கவேண்டி இருந்தது. நான் தொடர்ந்து படிக்கச் சென்று விட்டேன். அந்த பெண்ணின் அழுகை தோய்ந்த முகம் மட்டும் என் மனக்கண்ணில் நின்றது.

அப்போது இதை எழுதப்போகிறேன் என்றெல்லாம் எனக்குத் தோணவில்லை.

நான் பிறந்ததில் இருந்து பார்த்துவந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்க்கை முறை, அவர்களின் நடைமுறைகள் என் மனதுக்குள் கிடந்துள்ளன.

பள்ளியில் படிப்பதில் இருந்தே நான் கவிதை, கதைகள் எழுதி வந்தேன். தலைமுறைகள் நாவல் எழுதத் தொடங்கியபோது கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் கிராமத்தில் உள்ள ஒரு சமூகத்தின் மையநீரோட்டத்தில் இடம்பெறாத அவர்களின் பழக்கங்கள் பேச்சு வழக்குகள் இவற்றையெல்லாம், கலைத்தன்மையுடன் ஒரு படைப்பாக ஆக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது. அது ஒரு முயற்சிதான். அதைப்பற்றி அப்போது ஒன்றுமே தெரியாது. எழுத எழுத எனக்கு சம்பவங்கள் வந்துகொண்டே இருந்தன. அப்போதுதான் என் மனதில் எங்கோ ஒரு ஓரத்தில் என்ன காரணம் என்று சொல்லாமலே ஒரு பெண்ணை இப்படித் துன்புறுத்துகிறானே இந்த பாவி என்ற எண்ணம் உறுத்திக்கொண்டே இருந்திருக்கிறது என தெரிய வந்தது. அதற்கு என்ன காரணமாக இருக்கலாம் என்ற குறுகுறுப்பும் சேர்ந்துதான் அந்த நாவல் உருவாக்கத்தில் உதவி செய்திருக்கலாம் என எனக்கு பின்னாளில் தோன்றியது. இதைத்தவிர வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று சொல்லும் அளவுக்கு எனக்குள் எந்த திட்டமும் இருந்திருக்கவில்லை என்பதே நிஜம்.

ஒரு படைப்பாளியைப் பொறுத்தவரை அவன் ஒரு பார்வையாளன் மட்டுமல்ல, பங்கேற்பாளனாகவும் ஆகமுடியும். அந்த மாதிரி நிகழ்ந்ததுதான் இது.

இன்று எனக்கு 83 வயது. அந்த நாவலை எழுதும்போது எனக்கு, இருபத்திஐந்து வயதுக்குள் இருக்கும். அதை எழுத எனக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளவில்லை. அதைப் படித்தவர்கள் இது ஏதோ வயசாளிதான் எழுதி இருப்பார் என்று நினைத்தார்கள். ஏனெனில் நான் என் சின்ன வயதிலேயே பெரும்பாலும் வயதானவர்களுடன் அதிகம் பேசிக்கொண்டிருப்பேன். அதில் எனக்கு மிகவும் சந்தோஷம். இதுபற்றி இலையுதிர்காலம் நாவலில் சொல்லி இருக்கிறேன். நான் ஒரு காலத்தில் வயோதிகம் பற்றி கேட்டதையும் பார்த்ததையும் எழுதியதுபோக, எனக்கே வயோதிகம் வந்தபோது இன்னும் எழுத நிறைய இருப்பதாக உணர்ந்தேன். அடடா.. தலைமுறைகள் பற்றி சொல்லிக்-கொண்டிருந்தவன் இலையுதிர்காலம் பற்றி பேச வந்துவிட்டேனே..

தலைமுறைகள் எழுதி முடித்ததும் அதை பதிப்பிக்க பல பதிப்பாளர்களை அணுகினேன். யாரும் முன்வரவில்லை. அந்த நாவலை முதலில் படித்தவர்கள் நகுலனும் ஷண்முகசுப்பையாவும். அவர்கள் இது நன்றாக வந்திருக்கிறது, பெரிய அளவில் கவனம் பெறும் என்று அன்றே சொன்னார்கள். ஹெப்சிபா

ஜேசுதாசனும் வாசித்துப் பாராட்டினார். இதன் நடையைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் தமிழாசிரியரான அவருடைய முன்னுரையைப் பெற்று இருந்தோம். ஆயினும் இது தமிழா மலையாளமா என்று கேட்டுதான் பலரும் இதை பதிப்பிக்க மறுத்தார்கள்.

கேரள பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றிய சாவே சுப்ரமணியம் அவர்களின் உதவியுடன் திருநெல்வேலியில் ஒரு கோஆபரேட்டிவ் ப்ரெஸ்ஸில் நாவலை அச்சிட்டோம். அங்கேயே ராப்பகலாகத் தங்கி, பிழை திருத்தி வேலைபார்த்தேன். அச்சிடும் செலவுக்கு பணம் போதாத நிலையில் என் மனைவியின் நகையை அடகு வைக்க வேண்டி வந்தது. அதற்கு விற்பனை உரிமை பாரி நிலையம் என்று போட்டதாக நினைவு. ஆனால் பெரும்பாலும் முதலில் அச்சிட்ட பிரதிகளை எல்லாம் இலவசமாகவே கொடுக்கவேண்டி வந்தது. இந்த நிலை இன்னும் எழுத்தாளர்களுக்கு தொடரும் சோகம்தான்.

எழுத்தாளனைப் பொருத்தவரையில் அவனுக்குக் கொடுக்கும் ஆகப்பெரிய விருது அவனது நூலைப் படிப்பதுதான். அதுதான் அவனுக்குப் பெரிய மதிப்பு.

தலைமுறைகள் நூலாக்கம் ஆனபோது அதை சரியாகப் புரிந்துகொண்டவர் கா.நா.சுப்ரமணியம் ஒருவர் மட்டுமே. மற்ற பல எழுத்தாளர்கள் இது நாவலா, இதில் கலையம்சம் உண்டா என கடும் விமர்சனம் செய்தனர். கா.நா.சு. என்னிடம் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அனுமதி கேட்டார். ஓரியண்டல் பேப்பர் பேக்ஸில் அந்த நூலை பத்தாயிரம் பிரதிகள் போட்டனர். பிறகு சென்னை மேக்மில்லன் அதைப் போட்டார்கள். தமிழைப் பொருத்தவரை வானதி சில பதிப்புகள் வெளியிட்டுள்ளனர். காலச்சுவடு கிளாசிக் பதிப்பு வரிசையில் போட்டுள்ளனர்.

இந்த நூலை இயக்குநர் வ.கௌதமன் பலமுறை ஊன்றி வாசித்துள்ளார். இதை அவர் திரைப்படமாக்க முன்வந்தபோது அனுமதி அளித்தேன். மிகவும் சிரமப்பட்டு தயாரிப்பாளரைப் பிடித்து இதை மகிழ்ச்சி என்ற பெயரில் படமாக்கினார். நாவலின் இறுதிக்கட்டம் சோகமாக அமைந்திருக்கும். அந்த நாவலைப் படித்தவர்களால் இந்த சோகத்தைத் தாங்கமுடியவில்லை.

சினிமாவிலும் இப்படி சோகத்தைக் காட்டாமல் மாற்றி அமைத்துள்ளனர். படத்தின் பெயரே மகிழ்ச்சி என்பதுதானே...

( நீல.பத்மநாபன் அவர்களுடனான  தொலைபேசி உரையாடலில் இருந்து எழுதப்பட்டது)

ஜனவரி,2022

logo
Andhimazhai
www.andhimazhai.com