அன்று நவம்பர் 13, 2006. 13 என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என்பார்கள். டெல்லி அருகே நோய்டாவில் வசித்த குப்தா குடும்பத்தினருக்கு அது மிகமிக துரதிருஷ்ட நாளாக அமைந்தது.
காலையில் மூன்று வயதான ஆனந்த் குப்தாவுடன் வீட்டு உதவியாளராக இருந்த பெண் பள்ளிக்குச் செல்லும் பேருந்தில் ஏற்றிவிடுவதற்காக வீடு அருகே நின்றுகொண்டிருந்தார் . இரண்டுபேர் பைக்கில் அருகே வந்தார்கள். சட்டென்று ஆனந்தைத் தூக்கிக்கொண்டு மாயமாக மறைந்துபோனார்கள்.
ஆனந்த் குப்தாவின் அப்பா நரேஷ் குப்தா சாதாரண ஆள் இல்லை. பன்னாட்டு மென்பொருள் நிறுவனமான அடோப்-பில் தலைமை அதிகாரி. ஏராளமாக சம்பளம் பெறுபவர். கடத்தல்காரர்கள் 60 லட்சம் பணம் கேட்டனர். நரேஷ் குப்தா ஐம்பது லட்சம் கொடுக்க முன்வந்தார். இதற்கிடையில் காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் கண்காணிக்க ஆரம்பித்தனர். முதல் தகவல் வீட்டு உதவியாளராக இருந்த பெண்ணிடமிருந்து கிடைத்தது. பையன் கடத்தப்பட்ட 20 நிமிடங்களுக்குள் பலமுறை சத்தர்பால் என்கிற ஆள் போன் செய்து என்ன ஆச்சு என்று கேட்டுக்கொண்டிருந்தான். அவன் பக்கத்துத் தெருவில் பால்விற்கும் கடை வைத்திருப்பவனின் மகன். மிக எளிதாக நூல்பிடித்து யார் யார் என்று பத்துமணி நேரத்தில் போலீஸ் கண்டுபிடித்துவிட்டது.
ஆனால் நரேஷ் குப்தாவுக்கு பணம் ஒரு பொருட்டில்லை. பையன் தான் முக்கியம். எனவே பணம் கொடுத்தபின் அவர்களைப் பிடித்துவிடலாம் என்று காத்திருந்தார்கள். 50 லட்சம் கைமாறியதும் ஒரு ரிக்ஷாவில் பையன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். விரைவில் கடத்தல்காரர்கள் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 57 லட்சம் மீட்கப்பட்டது. மூன்று பேர் முக்கியக் குற்றவாளிகள். சத்தர்பாலுக்கு வயது 18தான். மீதி இருவருக்கு 19, 20 வயதுதான். 19 வயதான ஜித்தேந்தர் என்பவனுக்கு அதற்குள்ளேயே கல்யாணமும் ஆகியிருந்தது. அவர்கள் மீது அதற்கு முன்பாக எந்த குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. இவர்கள் பிஞ்சிலேயே பழுத்தவர்கள்.
2011-ல் கடத்தல்காரர்கள் மூவருக்கும் கௌதம புத்தா நகர அமர்வு நீதிமன்றத்தால் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.
இதே போன்ற கடத்தல் சம்பவம் மூன்றாண்டுகளுக்கு முன் கோயம்புத்தூரில் நடந்தது. பள்ளி செல்லும் இரு குழந்தைகள் வேன் டிரைவரால் கடத்தப்பட்டனர். ஆனந்த் குப்தாவுக்கு இருந்த நல்லூழ் அவர்களுக்கு இல்லை. பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு அவர்கள் இருவருமே கொல்லப்பட்ட துயர சம்பவம் நடந்தது. பிடிபட்ட வேன் ஓட்டுநர் என்கௌண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்!
ஆகஸ்ட், 2014.