ஏன் திமுகவிலிருந்து விலகினார் சிவாஜி?

ஏன் திமுகவிலிருந்து விலகினார் சிவாஜி?
Published on

நடிகர் திலகம் சிவாஜி கணேசன். திராவிட இயக்கப் பற்றாளர். பெரியாரால் ரசிக்கப்பட்டவர்.

அண்ணாவால் அரவணைக்கப்பட்டவர். அப்படியிருந்தும் அவர் திராவிட இயக்கத்தில் தொடர்ச்சியாக நீடிக்கவில்லை. திராவிட இயக்கத்துக்கு மாற்றாக காங்கிரஸ் பேரியக்கத்துக்குச் சென்றுவிட்டவர். அதற்கு வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. உண்மையில், திமுகவிலிருந்து அவர் விலகிச்செல்ல என்ன காரணம்? என்ற கேள்வியினூடாக அதிகம் கேட்கப்படாத இன்னொரு கேள்வியும் இருக்கிறது. அது என்ன கேள்வி?

நாடக மேடைகளில் வலம் வந்தபோது பெரியார், அண்ணா போன்ற தலைவர்களைப் பார்க்கும் வாய்ப்பும் பழகும் வாய்ப்பும் கணேசனுக்குக் கிடைத்தது. அவர்களுடன் பேசினார். முக்கியமாக, அரசியல் பேசினார். பெரியாருடைய கருத்துகள் கணேசனைக் கவர்ந்தன. அண்ணா, என்.எஸ்.கே. எம்.ஆர்.ராதா, கருணாநிதி உள்ளிட்டோருடன் பழகியது அவரை திராவிட இயக்கத்தின் மீது நாட்டம் கொள்ள வைத்தது.

அந்த சமயத்தில் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தை எழுதினார் அண்ணா. அந்த நாடகத்தில் சிவாஜியாக நடிக்க எம்.ஜி.ஆரைத்தான் தேர்வுசெய்தார் அண்ணா. அரசியல் வசனங்கள் அதிகம் உள்ள நாடகம் என்பதாலும், அரசியல்வாதி ஒருவரே எழுத்தாளராகவும் வசனகர்த்தாவாகவும் இருப்பதாலும், அந்த நாடகத்தில் நடிப்பது எதிர்கால நலனுக்கு உகந்ததா என்று யோசித்தார் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி. அண்ணனின் எண்ணவோட்டத்தைப் புரிந்துகொண்டு அந்த நாடகத்திலிருந்து நாசூக்காக நகர்ந்துகொண்டார் எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆருக்குப் பதிலாக சிவாஜியாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற கேள்வி எழுந்தபோது அண்ணாவுக்கு நெருக்கமான பலரும் கணேசனைப் பரிந்துரைத்தார்கள். ஆகட்டும் என்று சொன்னார் அண்ணா. சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்தில் சிவாஜியாக நடித்தார் கணேசன். அவரது நடிப்பு பெரியாரைக் கவர்ந்தது. கணேசனின் நடிப்பைப் பாராட்டி, “சிவாஜி' என்ற அடைமொழியை கணேசனுக்கு வழங்கினார் பெரியார். அன்றுமுதல் கணேசன், சிவாஜி கணேசனானார்.

பெயர் வைத்தவர் பெரியார் என்றாலும் சிவாஜிக்கு அண்ணாவின் மீதுதான் அதிகபட்ச ஈர்ப்பு. கருணாநிதி போன்றவர்களோடு நட்பு. நாடக மேடைகளில் எம்.ஜி.ஆருடனும் பழக்கம் இருந்தது. பெரியார், அண்ணா, என்.எஸ்.கே. எம்.ஆர்.ராதா, கருணாநிதி என்று பழகியவர்கள் அத்தனைபேருமே திராவிட இயக்கத்தினர் என்பதால் திராவிடக் காற்றை வெகு இயல்பாக சுவாசித்தார் சிவாஜி.

நாடகங்களில் நடிப்பது, இரவு நேரத்தில் அண்ணா நடத்திய திராவிட நாடு பத்திரிகை அலுவலகத்தில் தங்குவது என்று திராவிட வாசனையுடனேயே வாழத் தொடங்கினார் சிவாஜி. அந்தக் காலகட்டத்தில் நாடக மேடைகளுக்கு அடுத்து சிவாஜியை திராவிடர் கழகப் பிரசார மேடைகளில்தான் அதிகம் பார்க்கமுடியும்.

பெரியாரிடமிருந்து விலகி திமுகவைத் தொடங்கியபோது அண்ணாவுக்கு உறுதுணையாக இருந்தவர்களுள் முக்கியமானவர் சிவாஜி. பின்னாளில் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் என்று பல நட்சத்திரங்கள் திமுகவில் இணைந்து பிரசார மேடைகளை அலங்கரித்தனர். சிவாஜியின் சொல்லும் செயலும் திராவிட இயக்கத்தையும் திமுகவையுமே சுற்றிச் சுழன்றன. அந்த வகையில் சிவாஜியின் ஆரம்ப கால அடையாளம் திராவிட இயக்கம்.

திராவிட நாடு கோரிக்கையை திமுக மிகத்தீவிரமாக வலியுறுத்திக் கொண்டிருந்த சமயம் அது. திருச்சி லால்குடியில் நடந்த திமுக மாநாட்டில் திமுகவின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரான ஈவெகி சம்பத் பேசினார். சொல்லின் செல்வர் என்பது சம்பத்தின் அடைமொழி. அவரது சொல்லாடல்களைப் பார்த்து உணர்ச்சிவயப்பட்ட சிவாஜி, எழுந்து மைக்கைப் பிடித்தார்.

“அண்ணா ஆணையிட்டால் நான் பட ஒப்பந்தங்களை எல்லாம் கிழித்தெறிந்துவிட்டு, திராவிட நாட்டு விடுதலைப் போரில் ஈடுபடுவேன்' என்று முழங்கினார். அந்த முழக்கம் மாநாட்டில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதே மேடையில் பேசிய எம்.ஜி.ஆர், “திராவிட நாடு போராட்டம் தொடங்கும்போது விழப்போகும் முதல் பிணம் என்னுடையதாக இருக்கும்' என்று ஆவேசம் காட்டினார். சிவாஜியைவிட எம்.ஜி.ஆருக்கு விழுந்த கைத்தட்டல்கள் அதிகம். அந்த நொடியில் சிவாஜியின் நெஞ்சில் லேசான நெருடல்.

1957 ஆம் ஆண்டு தமிழ்நாட்டைப் புயல் தாக்கியது. பலத்த சேதம். நிவாரண நிதி திரட்டித் தாருங்கள் என்று கட்சியின் முன்னணித் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார் அண்ணா. ஆகட்டும் என்று சொல்லி சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட கலைஞர்கள் களமிறங்கினர். சாலையில் இறங்கி, கையில் துண்டேந்தி, பராசக்தி வசனம் பேசி நிதி திரட்டினார் சிவாஜி. அதிக நிதி அவருக்கே திரண்டது.

அதிக அளவில் நிதி திரட்டியவர்களுக்குப் பாராட்டும் பரிசும் வழங்கத் தயாரானார் அண்ணா. விழா ஏற்பாடு செய்யப்பட்டது. சொன்னபடியே அண்ணா பரிசையும் பாராட்டையும் வழங்கினார். அது, சிவாஜிக்கு அல்ல, எம்.ஜி.ஆருக்கு. அந்த விஷயத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டதால் அந்த விழாவில் பங்கேற்காமல் ஒதுங்கிக்கொண்டார் சிவாஜி. அது இரண்டாவது நெருடல். அண்ணாவைச் சுற்றியுள்ளோர் சதி செய்துவிட்டார்களோ என்று சந்தேகப்பட்டார் சிவாஜி.

சந்தேகம் கொடுத்த சோர்வால் முடங்கிக்கிடந்த சிவாஜியைத் தோள் தட்டி எழுப்பினார் இயக்குநர் பீம்சிங். ”வாருங்கள், திருப்பதி போய்விட்டு வரலாம்.' அன்பான அழைப்பு. அப்போது அந்த அணுக்கமும் அரவணைப்பும் சிவாஜிக்குத் தேவைப்பட்டது. பீம்சிங்கோடு திருப்பதி கிளம்பினார். ஏழுமலையானை தரிசித்தார். பக்திப்பயணத்தை முடித்துக்கொண்டு பத்திரமாகக் காரில் வந்த சிவாஜிக்குத் தமிழ்நாட்டில் அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது.

தினத்தந்தி நாளிதழில் ‘நாத்திக கணேசன் ஆத்திக கணேசன் ஆனார்' என்று தலைப்புச் செய்தி போட்டிருந்தார்கள். திருப்பதி கணேசனுக்கு கோவிந்தா, கோவிந்தா என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள் சிவாஜியை வரவேற்று வெறுப்பேற்றின. அதிர்ச்சியாகவும் அவமானமாகவும் இருந்தது சிவாஜிக்கு. வீட்டுக்கு வந்தபிறகும் செய்திகள் வருவது நின்றபாடில்லை. சிவாஜி படத்தின் சுவரொட்டிகள் மீது சாணி அடிக்கிறார்கள் என்று செய்தி வந்தது. இது காலம் காலமாக வருகின்ற வழக்கமான செய்திதான். ஆனால் அதுவெல்லாம் சினிமா விவகாரம். ஆனால் இப்போது நடப்பது அரசியல் விவகாரம் என்பது துல்லியமாகப் புரிந்தது சிவாஜிக்கு.

பகுத்தறிவு பேசும் திமுகவின் பிரசார பீரங்கி திருப்பதி செல்வதா என்று சிவாஜிக்கு எதிராகக் கட்சிக்குள் கலகக்குரல்கள் வெடித்தன. அவரைக் கட்சியிலிருந்தே நீக்கவேண்டும் என்றார்கள். அப்போதுதான் தெரிந்தது, சிவாஜி திமுகவின் அதிகாரபூர்வ உறுப்பினரே அல்ல என்பது. ஆம், நான் திராவிடர் கழகத்திலோ, முன்னேற்றக் கழகத்திலோ எந்தக் காலத்திலும் சந்தா கட்டிய உறுப்பினராக இருந்ததில்லை என்று பின்னாளில் சொன்னார் சிவாஜி.

திமுகவில் தனது வளர்ச்சியைப் பிடிக்காத சில முக்கியத் தலைவர்கள் நடத்தும் காய் நகர்த்தல்களே சமீபத்திய நிகழ்வுகள் என்பதைப் புரிந்துகொண்ட சிவாஜி, இனியும் அமைதி காப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்தார். அந்த நொடியில் அவர் தனக்கான புதிய அரசியல் பாதையைத் தேர்வு செய்தார். அந்தப் பாதை, தேசியப் பாதை.

விரக்தியின் விளிம்பில் நின்ற சிவாஜியை காமராஜர் என்ற காந்தம் கவர்ந்திழுத்தது. இனி காமராஜரே என்னுடைய வழிகாட்டி என்று சொன்னார் சிவாஜி. திராவிட இயக்கப் பற்றாளரான சிவாஜி காங்கிரஸில் இணைந்ததில் அண்ணாவுக்கு அளவில்லா வருத்தம்தான். அதனாலென்ன, எங்கிருந்தாலும் வாழ்க என்று சொல்லி தனது அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்தினார் அண்ணா.

(ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர். ‘திராவிட இயக்க வரலாறு', ‘தமிழக அரசியல் வரலாறு' முதலான நூல்களின் ஆசிரியர்.

ஏப்ரல், 2023

logo
Andhimazhai
www.andhimazhai.com