மனித சமூகமானது இயற்கையின் ரகசியங்களை அறிந்து கொண்டும் அதனுடன் இணங்கியும் போராடியும்தான் வளர்ந்து வந்துள்ளது. இவ்வளர்ச்சிப் போக்கில் அது பல்வேறு சடங்குகளை உருவாக்கிக் கொண்டது. வேட்டைச் சடங்கு, வேளாண்சடங்கு, மழைச்சடங்கு, நோய் போக்கும் சடங்கு, ஆவி விரட்டும் சடங்கு என இச்சடங்குகள் பல தரத்தன. சமூக வளர்ச்சிக்கு ஏற்ப இவற்றில் சில மறைந்து போயின. சில மாறுதலுக்கு ஆளாயின. சில புதியதாக உருவாயின.
சடங்குகள் குறித்துப் பேசும்போது இம்மூன்று நிலைகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம் முன்னர் உருவாக்கியவை நூற்றாண்டு காலமாக தொடர்பவை எனக் கருதி எல்லா சடங்குகளையும் இன்று பேணிப் பாதுகாக்க முடியாது.
சான்றாக, கணவனை இழந்த பெண்ணின் தாலியை கழட்டும் சடங்கு “ பிறந்த வீட்டுக் கோடி” “புகுந்த வீட்டுக் கோடி” என்ற பெயரால் வெள்ளைச் சேலையை அப்பெண்ணின் மீது வீசி எறியும் கோடிபோடும் சடங்கு, தலையை மழிக்கும் சடங்கு என்ற சடங்குகள் இன்றும் தொடர வேண்டும் என்று கூற முடியுமா? இது மறைய வேண்டிய சடங்கு அல்லவா. “கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக” என்று வள்ளலார் பாடியதே இத்தகைய சடங்குகளைத்தானே. கோவில்களுக்குள்ளும், வீடுகளுக்குள்ளும் நடைபெற்று வந்த சடங்குகளை எல்லை கடந்து பொதுவெளிக்குக் கொண்டு வருவதால்தானே சமய மோதல்களும் சமய கலவரங்களும் நிகழ்கின்றன.
செந்நிறமான குருதியை, செழிப்பின் அடையாளமாகக் கண்டு உயிர்ப்பலி வாயிலாக வெளிப்படுத்தி வந்தனர். இதை கட்டுப்படுத்தும் முறையாகத்தான் சுண்ணாம்பையும் மஞ்சள் பொடியையும் கலந்து ஆரத்தி எடுத்தலும், செந்நிறமான உட்பகுதியைக் கொண்ட பூசணியை உடைத்தலும் உருவாகியுள்ளன. இச்சடங்குகளை அவற்றின் மூலவடிவத்துக்குப் போய் செந்நிறக்குருதியை சுற்றி ஆரத்தி எடுக்கவேண்டும், வீட்டின் நடையில் தெளிக்கவேண்டும் என்று கூற முடியுமா?
தீட்டுக்குரியவர்கள் என்று தாம் கருதும் உழைப்பாளிகள் கட்டிய வீட்டில் பசுமாட்டை வீட்டினுள் உள்ளே அனுப்பும் சடங்கு செய்வதன் நோக்கம் என்ன? உழைப்பாளர்களை அவமதிக்கும் சடங்குதானே.
எனவே சடங்குகள் என்று பொதுவாகப் பார்க்கையில் சடங்குகளின் பின்னால் மறைந்துள்ள சாதிய மேலாண்மை பகுத்தறிவுக்கு பொறுத்தமற்ற நம்பிக்கைகள், பெண்மையை இழிவுபடுத்துதல் போன்றவற்றை வெளிப்படுத்தும் சடங்குகள் புறக்கணிக்கத் தக்கவைதான். அதேநேரத்தில் நம் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக நிலவும் சடங்குகளைத் தொடர்வதில் தவறு இல்லை.
இறந்தவரை எரிக்கும் பழக்கமுடையச் சமூகங்களில் எரித்து மறுநாள் எரியூட்டப்பட்ட இடத்தில் இருந்து சாம்பலைச் சேகரிப்பார்கள். இன்று மின்தகனத்தால் எரியூட்டி நகரங்களில் சில மணி நேரங்களிலேயே சாம்பலைப் பெற்றுவிடுகிறார்கள். எரியூட்டிய மறுநாள் மேற்கொள்ளும்; சாம்பல் கரைக்கும் சடங்கை எரியூட்டிய அன்றே நடத்தி முடித்து விடுகிறார்கள். இதுபோல் 16வது நாள் சடங்கை மறுநாளே செய்து முடிக்கும் வழக்கம் விடுமுறை சிக்கல் காரணமாக நடைமுறைக்கு வரத்தொடங்கியது.
இறந்தவர்களின் ஆவி வீட்டிற்குள் வரும் என்ற நம்பிக்கையால் வழி தெரியவிடாது அதைக் குழப்புவதாக நம்பி இறந்த உடலை சுமக்கப் பயன்படுத்தும் பாடை அல்லது தேரை மூன்று முறை சுற்றி விடுவார்கள். இது கண்ணாமூச்சி ஆட்டத்தில் துணியால் கண் கட்டப்பட்ட சிறுவர் சிறுமியரை சுற்றி விடுவது போன்ற செயல்.
தள்ளுவண்டிகள் பயன்பாட்டுக்கு வந்தவுடன் அதைச் சுற்ற முடியாத நிலையில் முன்னும் பின்னும் மூன்றுமுறை தள்ளிவிட்டு இழுக்கும் பழக்கம் உருவானது. “அமரர் ஊர்தி“ என்ற பெயரில் எந்திர வாகனங்கள் அறிமுகமானவுடன் இதுவும் நின்று போனது.
அடிப்படையில் சடங்குகள் ஒரு சமூகத்தின் பொருளாதார நடவடிக்கைகளுடன் இணைந்தவை. சான்றாக சங்ககாலத்தில் மீன் பிடித்து வாழ்ந்த நெய்தல் நில மக்கள் சுறாமீனின் கொம்பை நட்டு அதைச் சுற்றி வந்து செழிப்பை வலியுறுத்தும் விதமாக நடனம் ஆடும் சடங்கை மேற்கொண்டிருந்தனர். ஆநிரை வளர்த்து வாழ்ந்த முல்லை நில மக்கள் எருமைக்கொம்பை நட்டு அதைச்சுற்றி நடனம் ஆடும் சடங்கினை மேற்கொண்டிருந்தனர். சடங்குகளும் அதில் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளும் சமூகத்திற்கு இடையே ஓர் இணைப்பு உண்டு. சமூகம் மாறும் போது சடங்குகள் நிகழ்த்தும் முறையிலும் சடங்குகளுக்கு ஆட்படும் பொருள்களிலும் மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டே வந்துள்ளன.
ஓலைச்சுவடிகளை அடுக்கி அவற்றின் மேல் சந்தனத்தைத் தெளித்து மாலையிட்டு பொட்டிட்டு சரஸ்வதி பூசை கொண்டாடப்பட்டு வந்துள்ளது. காகிதம் அறிமுகம் ஆன பின்னர் சுவடிகள் இடத்தில் புத்தகங்கள் வந்தன. தற்போது புத்தகங்களுடன் மடிக்கணினி வைத்து வணங்கும் வழக்கம் துவங்கி உள்ளது.
கைவினைஞர்கள் தம் தொழிற்கருவிகளுக்கு மாலை அணிவித்து பொட்டிட்டு அதை பூசை செய்து வந்தனர். தற்போது ஏ.கே 47 துப்பாக்கிக்கு ஆயுதபூசை நிகழ்கிறது. மாட்டுவண்டிகளையும் அவற்றை இழுக்கும் மாடுகளையும் மையமாகக் கொண்டு உருவான சடங்குகள் இன்று சக்கர வாகனங்களுக்கு நிகழ்கின்றன. இன்று உலகமயமாக்கலின் விளைவாக இந்திய சமூகம் ஒருவிதமான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. போராடி பெற்ற பணி பாதுகாப்பும், வரையறுக்கப்பட்ட பணி நேரம் என்பன மறுக்கப்படும் நிலை உருவாகி வருகிறது. கல்வி,மருத்துவம் என்ற சேவைத்துறைகள் வணிகமயமாக்கப்பட்டுவிட்டன. இந்த நெருக்கடிகளிலிருந்து இன்று தப்பிப்பதாக நினைத்துக்கொண்டு சாமியார்களிடமும் சடங்குகளிடமும் மக்கள் தஞ்சம் அடையத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் சடங்குகளின் தாக்கம் அதிகரிப்பதிலும் புதிய சடங்குகள் தோன்றுவதிலும் வியப்பு இல்லை. இறுதியாக சக மனிதர்களை இழிவுசெய்யும் சடங்குகள் உயிர்பெறுவதை தடுக்கும் கருத்துநிலைப் போராட்டங்கள் உருவாவதையும் தடுக்கமுடியாது.
(சந்திப்பு: கண்ணன்)
ஆகஸ்ட், 2016.