ஏ.ஆர். ரஹ்மான் - தமிழகம் மட்டும் அல்லாமல், இந்தியா முழுக்க இருக்கும் மக்களை அவருடைய இசையால் மயக்கியவர். கொஞ்சம் கொஞ்சமாக தன் சிறகுகளை விரித்து மொத்த உலகின் கவனத்தையும் தன் இசை மூலம் இந்தியாவின் பக்கம் திருப்பியவர். இவ்வளவு வெற்றிகள் இந்தச் சிறிய வயதில் எப்படி சாத்தியம்? அவரது வெற்றிக்குக் காரணமாக நான் கருதுகிற அவருடைய குணங்களை கொஞ்சம் பார்ப்போமா?
அவருடைய முதல் படமான ’ரோஜா’வில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அந்த படத்தின் எல்லா பாடல்களிலும் புதுமை இழையோடும். இது வரைக்கும் கேட்காத மாதிரி புதிதாகச் செய்யவேண்டுமென அவர் மெனக்கெட்டது அந்த பாடல்களை கேட்கும்போது தெளிவாகத் தெரியும். இவ்வளவு புதுமையா எப்படி இசை அமைக்கிறார்னு ஒரு பேட்டியில் கேட்டதற்கு அவரின் பதில் - ‘எதாவது புதுசா பண்ணிக்கிட்டே இருக்கணும். இல்லைனா எனக்கு போர் அடிச்சிடும்’.
’திருடா திருடா’ - அவரோட படங்களிலேயே அவர் அதிக experimentation செய்தது இந்தப் படத்தில் தான் என்று நான் சொல்லுவேன். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமா இருக்கும். படத்தின் பின்னணி இசையும் அற்புதமா உலகத்தரத்தில் இருக்கும். அந்தப் படத்தின் பின்னணி இசையில் நம் மண்ணின் இசையையும் வெஸ்டெர்ன் கிளாசிகல் இசையையும் சரியான விகிதத்தில் உபயோகித்திருப்பார். 20 வருடம் கழிச்சு இப்ப கேட்டாலும் புதுசா, ஃப்ரெஷ்ஷா, இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி இருக்கு என்பது ஆச்சரியம். அன்று ஆரம்பித்த இந்த பரிசோதனை முயற்சி ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ’கடல்’ என்று இன்றும் தொடருது. ப்ளுஸ், சைக்கடெலிக் ராக் மற்றும் ஹிந்துஸ்தானியோட கலவையில வந்த ‘ஆரோமலே’ ஆகட்டும், கடல் படத்தில் இடம்பெற்ற காஸ்பெல்லுடன் ப்ளூஸ் இணைந்த ‘அடியே’ ஆகட்டும், இங்கு இசையில் புதுமை புகுத்துவதில் முன்னோடியாக திகழ்வது ரஹ்மான் மட்டுமே.
‘என்னுடைய ஸ்டூடியோவில் இருந்து செல்லும் அனைத்தும் தரமானதாக இருக்க வேண்டும்’ என்று ரஹ்மான் அவருடைய முதல் இந்தி படமான ரங்கீலா ஒலிப்பதிவின் போது சொன்னதாக இயக்குநர் ராம் கோபால் வர்மா எழுதி இருந்தார். ரஹ்மான் சொன்னதில் ஆணவமோ அதீத தன்னம்பிக்கையோ இல்லை, அது அவர் எடுத்த முடிவு. அனால், அந்த பாலிசியை ரஹ்மானை தவிர இவ்வளவு கறாராக, compromise ஏதும் இல்லாமல் பின்பற்றும் ஒருவரை இன்று வரை நான் பார்க்கவில்லை என்கிறார் ராம் கோபால் வர்மா.
இந்த commitment தான் அவருடைய வெற்றிக்கு பெரும் காரணமாக நான் கருதுகிறேன்.
ஒரு முறை ரஹ்மான் சாரிடம் நான் கேட்டேன் - ‘உங்கள் பாடல்களில் வித்தியாசமான சின்னஞ்சிறு ஓசைகள், புது சப்தங்களை எல்லாம் ஒளித்து வைத்து விடுகிறீர்கள். பல முறை ஒவ்வொரு பாடலையும் கேட்கும்போது அந்த ஒலிகளையெல்லாம் புதுசா கண்டு பிடித்து புல்லரித்து போவோம். ஆனால், பெரும்பாலானோர் அதை எல்லாம் கவனிப்பதே இல்லை. அப்படி இருந்தும் ஒவ்வொரு பாடலுக்கும் இவ்வளவு மெனக்கெடுவது ஏன்?’
அவர் சொன்ன பதில் வியக்க வைத்தது. அவர் சொன்னார், ‘ஒரு முறை மைக்கேல் ஏஞ்செலோ ஒரு சர்ச்சுக்கு பின்னால், அவ்வளவாக யாரும் செல்லாத ஒரு இடத்தில அழகான ஓவியம் வரைந்து கொண்டிருந்தார். யார் கண்ணிலும் படாத ஒரு இடத்தில் இப்படி முட்டாள் மாதிரி வரைந்து கொண்டிருக்கிறாரே, யார் பார்க்கப் போகிறார்கள், பாராட்டப் போகிறார்கள்? என்று பலர் கேலி பேசினர். அப்பொழுது மைக்கேல் ஏஞ்செலோ சொன்னார், ‘நான் இறைவனுக்காக வேலை செய்கிறேன். எங்கிருந்தாலும் அவன் பார்த்து ரசிப்பான்.’ எல்லாவற்றுக்கும் உடனடி அங்கீகாரம், பாராட்டு எல்லாம் அவசியம் இல்லை. பாடல்களில் உள்ள சிறிய நகாசு வேலைகள் யாரேனும் ஒருவரை சென்றடைந்தால் கூட எனக்கு மகிழ்ச்சியே.’
திரை இசையில் அவரோட வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம் இயக்குனர்களின் திடிண்டிணிண-ஐ சரியாக அறிந்து கொண்டு, திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியின் உணர்ச்சியையும் துல்லியமாக புரிந்து கொண்டு அதற்கு மிகச்சரியான இசையை அமைப்பது தான். சினிமா பற்றி புரிதல் மற்றும் உணர்ச்சிகளின் அதீத புரிதல் அவருக்கு உண்டு. கன்னத்தில் முத்தமிட்டால், அலைபாயுதே, லகான், ஸ்வதேஸ், ரங் தே பசந்தி, ஸ்லம்டாக் மில்லியனர் போன்ற படங்களில் அவர் பின்னணி இசையாலேயே பேசி இருப்பார். குறிப்பாக, கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு சிறுமியின் குரலில் வரும் ஆலாபனை, படம் பார்க்காமல் தனியாக கேட்டால் கூட கண்களில் நீர் வர வைத்து விடும்! எவ்வளவு தான் வெற்றி வந்தாலும், ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்று சொல்லி ஈகோவே இல்லாமல் இருப்பது ரஹ்மானின் சிறப்பு. அவருடைய வெற்றிக்கு மிகப்பெரும் காரணமாக இதையும் நான் பார்க்கிறேன்.
அவர் முதன் முதலில் திரை இசைக்கு வந்த போதும் சரி, இப்போதும் சரி - நிறைய விமரிசனங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. ‘அவர் வெறும் சவுண்ட் எஞ்சினியர் தான், அவருக்கு இசை தெரியாது’, ‘வெறும் கம்ப்யூட்டர்-ஐ வைத்து இசை அமைக்கிறார்’, ஆனால், அவை எதை பற்றியுமே கவலைப்படாமல் தான் உண்டு, தன் இசை உண்டு என்று அவர் இருக்கிறார். இது எத்தனை பேருக்கு சாத்தியம்?
நிறைவாக, அவர் இந்த உயரத்தை எட்ட முக்கியக் காரணம், அவருடைய அன்பு. ஆஸ்கார் மேடையில் அவர் சொன்ன வார்த்தைகள் - ‘என் வாழ்க்கை முழுவதும் என் முன்னால் அன்புப் பாதையும், வெறுப்புப் பாதையும் இருந்தன. நான் அன்புப் பாதையைத் தேர்ந்தெடுத்தேன். அதனால் தான் நான் இங்கிருக்கிறேன்.’
(ஏ.எம்.அரவிந்த் இயற்கையையும் இசையையும் ரசிப்பவர். தொழிலதிபரான இவர் குறும்படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.)
காத்திருக்கிறேன்
புகழ்பெற்ற இந்திய ஜாஸ் பியானிஸ்ட் மாதவ் சாரி, ஜாஸ் இசையை ரசிக்க ப்ராங்க் சினாட்ராவின் இசையைக் கேட்டுத் தான் ஆரம்பிக்க வேண்டும் என்பார். எனக்கு இசையில் சினட்ராவின் இடத்தைப் பிடித்து பல இசை ரகங்களை ரசிக்கவைத்தவர் ரஹ்மான். இவரை ஒரு குறிப்பிட்ட வகையிலான இசைகளை அமைப்பவர் என்று சொல்ல இயலாது. அவருடைய இசையே தனிவகையாகப் பிரிக்கத் தக்கது. அவருடைய இசையைக் கேட்பது எனக்கு புதிய கண்டுபிடிப்பாக ஒவ்வொரு முறையும் உள்ளது. உதாரணத்துக்கு ‘து போலே’ ஜாஸ் வகையாக இருக்கலாம்; ‘எலே கீச்சான்’ அமெரிக்க நாட்டுப்புற இசையை சேர்ந்ததாக இருக்கலாம் என்கிற புரிதல்.
பாடுவதைத் தீவிரமாக நான் மேற்கொண்டதற்குக் காரணம் ரஹ்மான் தான். என் இறுதி இலக்கு அவரது இசையில் பாடுவதே. அதைவிட அதிகம் எதுவும் வேண்டாம். எவ்வளவு அருகில் சென்றும் இந்தக் கனவு இன்னும் நனவாகவில்லை. ஆனால் நான் காத்திருக்கிறேன். ரஹ்மான் தன் ஆரம்ப கட்டத்தில் ஒரு பெரும் வாய்ப்புக்காகக் காத்திருந்ததைப் போல.
ஜனவரி, 2014.