இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை..” ‘’அல்லாவை நாம் தொழுதால்..” எல்லாப்புகழும் இறைவனுக்கே போன்ற பாடல்களை நாகூர் ஹனிபா பாடிக் கேட்டிருப்பீர்கள். அதேபோல் காற்றினிலே வரும் கீதம் என்று எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடியும் கேட்டிருப்பீர்கள். இவ்விரண்டு பாடல்களும் இதயத்தில் தாளமிடும் நேரத்தில் ஒரு பெயரை கொஞ்சம் நினைத்துக் கொள்ளுங்கள். அது எஸ்.வி.வெங்கட்ராமன். இந்த பாடல்களுக்கு இசை அமைத்தவர் இவர்தான்.
1998-ல்தான் இந்த இசைக்கலைஞர் மறைந்தார். அவரது இசையில் வெளியான கடைசிப்படம் ஸ்ரீகிருஷ்ண லீலா(1976) என்ற படம்.
எஸ்.வி.வி என்பது சோழவந்தான் வரதராஜன் வெங்கட்ராமன் என்பதன் சுருக்கம். கருவுற்றிருந்த இவரது அம்மா லஷ்மி அம்மாள், குணசீலத்தில் ஓர் உறவினரைப் பார்த்துவிட்டுத் திரும்புகையில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, அய்யம்பாளையம் சிவன்கோயில் வாசலிலேயே இவரைப்பெற்றெடுத்தார் என்பது விசேஷத் தகவல். மூன்றுவயதில் தந்தையை இழந்தவர் எஸ்.வி.வி. மானமதுரையில் இருந்த சித்தப்பா ஆதரவில் வளர்ந்தார். சின்னவயதில் பாட்டுக்கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம். இந்த ஆர்வத்தில் மதுரை ஜகன்னாத அய்யர் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்தார். அப்போதெல்லாம் பாடித்தானே நடிக்கவேண்டும்?
எஸ்.வி.வி கதாநாயக நாடக நடிகர் ஆனார். 1930களில் பேசும் தமிழ்சினிமா ஆரம்பமானபோது நளதமயந்தி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் எஸ்.வி.வெங்கட்ராமன். இதற்கு அடுத்தப்படத்தில் இவரது கையில் வெட்டுப்பட்டு நடிக்க இயலாமல் போன போது பெங்களூரில் இவரைப் பார்த்த ஏவி மெய்யப்பச்செட்டியார் தன் நந்தகுமார் என்ற படத்துக்கு தயாரிப்பு நிர்வாகப் பொறுப்பை அளித்தார். அந்த படம் தமிழ், ஹிந்தி, மராத்தி என மூன்று மொழிகளில் தயார் ஆனது. அப்படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு இசை அமைக்குமாறு எஸ்.வி.வியை கேஷுவலாகச் சொன்னார் ஏவிஎம். எஸ்.வி.விக்கு இன்னொரு கதவு திறந்தது.
நந்தகுமார் படத்தில் நடித்த தேவகி பாடும் முறை சரியில்லை என்பதால் அவருக்குப் பதிலாக லலிதா வெங்கட்ராமன் என்கிற பாடகியை ஏவிஎம்மின் ஆலோசனையின் பேரில் பாடவைத்தார் எஸ்.வி.வி. இதுதான் தமிழின் முதல் பின்னணிப்பாடலாக மலர்ந்தது.
அதன் பின்னர் சிலபடங்களுக்கு இசை அமைத்த இவருக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்தை ஜூபிடர் நிறுவனத்தின் கண்ணகி(1942) படம் அளித்தது. ஆர்.எஸ். மணி இயக்கத்தில் பியு சின்னப்பா, கண்ணாம்பா இருவருக்குமே இது முக்கியமான படம். இதன் பாடல்கள் பெரும் புகழ் அடைந்தன. பி.யு.சின்னப்பா பாடும்,‘ஆனந்த சந்திரோதயம் இதிலே..காணுவதுன் செந்தாமரை முகமே’ என்ற பாடல் மிகவும் இனிமையான பாடல். பாடல்களை எழுதியவர் உடுமலை நாராயண கவி.
இதன்பிறகு மூன்றாண்டுகள் கழித்து 1945 தீபாவளி தினத்தில் வெளியான படமே மீரா. எல்லிஸ் ஆர் டங்கனின் இயக்கத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே முத்துக்கள். கல்கி எழுதிய பாடலே காற்றினிலே வரும் கீதம். இப்படத்துடன் எம்.எஸ்.சுப்புலட்சுமி திரைப்படங்களில் தோன்றுவதை ராஜாஜி அறிவுரையால் நிறுத்திவிட்டார். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரல் உலகப் புகழ் பெற்றது. அதனால்தானோ என்னவோ இசையமைப்பாளரின் பெயரைச் சொன்னால்தான் தெரிகிறது!
நந்தனார், ஸ்ரீமுருகன், நாகபஞ்சமி, மனோகரா(1954), இரும்புத்திரை போன்றவை எஸ்.வி.வி தொடர்ந்து இசை அமைத்த படங்கள்.
1948-ல்வெளிவந்த ஞானசவுந்தரிக்கு எஸ்.வி.வி அமைத்த இசையும் குறிப்பிடத்தகுந்ததாக அமைந்தது. அதில்தான் ஜிக்கிக்கு முதல் பாடல் வாய்ப்பை அளித்தார்.
“மனோகரா படத்தில் சிங்காரப் பைங்கிளியே பேசு போன்ற அழகிய பாடல்கள் இருப்பினும் வசனத்துக் காகவும் நடிப்புக்காகவுமே அப்படம் பேசப்பட்டது. இது மீராவில் நடந்ததுபோலவே நடந்துவிட்டது” என்கிறார் இசை ஆய்வாளர் பி.ஜி.எஸ். மணியன்.
மாமன் மகள் படத்தில் வந்த, ‘கோவா மாம்பழமே. மல்கோவா மாம்பழமே’ பாடல் எஸ்.வி,வி இசை அமைத்ததே. அடுத்து ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’ என்ற படத்துக்கு இசை அமைத்தார். அதில் கிடைத்த அருமையான முத்துதான் ‘புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே... தங்கச்சி கண்ணே’ என்று திருச்சி லோகநாதன் குரலில் வரும் பாடல்.
“நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று புரியுமா?” இது அறுபதுகளில் காதலர்களின் கீதம். ஜெமினி நிறுவனத்தின் இரும்புத்திரை படத்தில் வந்த பாடல். சிவாஜி- வைஜயந்திமாலா நடித்து பெருவெற்றி பெற்ற படம். பாடல்வரிகளுக்கு சொந்தக்காரர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இதைத் தொடர்ந்து சிவாஜி நடித்த மருதநாட்டுவீரன் (1961), பின்னர் அறிவாளி (1963) உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தார். அதன் பின்னர் எஸ்.வி.வி மெல்ல மெல்ல திரை உலகில் இருந்து மறக்கப்பட்டார்.
28 வயதில் சரஸ்வதி என்பவரை மணந்த எஸ்.வி.விக்கு நான்கு மகன்கள் நான்கு மகள்கள். ஏப்ரல் 7, 1998-ல் எஸ்.வி.வெங்கட்ராமன் மறைந்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதன், டிகே ராமமூர்த்தி, ஜி.கே, வெங்கடேஷ் ஆகிய இசையமைப்பாளர்களும் இவருடன் பணிபுரிந்துள்ளனர். எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் பாடிய பஜகோவிந்தமும் இவரது இசையே என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி, 2014.