எஸ். ராமகிருஷ்ணன் : அன்பும் நட்பும் மதிப்பும்

எஸ். ராமகிருஷ்ணன் : அன்பும் நட்பும் மதிப்பும்
Published on

எஸ். ராமகிருஷ்ணன் என்ற பெயர் அவர் எழுத வந்த சிறிதுகாலத்திலேயே நவீன தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்த  அடையாளமாக மாறிவிட்டது. 90 களில் வெளிவந்த சுபமங்களா இதழ் ஒன்றில் எதிர்கால நவீன இலக்கியத்தின் முகமாக  இருக்கப்போகும் ஐவரில் ஒருவராக எஸ்ராவும் இனம் காணப்பட்டிருந்தார். அது உண்மை என்பதை எஸ்ராவும் அவரது காலமும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது. எதார்த்த வாதத்திற்கு எதிராக பெரும் கோட்பாட்டுப் புயல்கள் உருவான 90களில் பெரும்பாலான எழுத்தாளர்கள் பதட்டமடைந்தார்கள். எதார்த்தவாதத்தின் காலம் முடிந்து போய்விட்டது என்று சஞ்சலமடைந்தவர்கள் ஒரு புறம் என்றால் சாரமற்ற வார்த்தைக் குவியல்களின் வழியே போலியான மிகை எதார்த்தக்கதைகளை எழுத முயன்றவர்கள் இன்னொரு புறம்.

இந்தக் குழப்பமான காலகட்டத்தில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கு. அழகிரி சாமி, கி.ராஜ நாராயணன், சுஜாதா , அசோகமித்திரன் போன்றவர்கள் உருவாக்கிய மிக வலுவான தமிழ்ச்சிறுகதை மரபிலிருந்து உருவாகி வந்தவர் எஸ்ரா. செறிவான ஒரு எதார்த்த மரபின் நுட்மான கதை சொல்லும் முறையை உருவாக்கிக்கொண்ட அவர் அதற்குள் மேஜிக்கல் ரியலிசக் கூறுகளை வெகுநேர்த்தியாக இணைத்தார். இந்த புள்ளியில்தான் எஸ்.ராவின் புதிய கதாயுகம் பிறக்கிறது.

எஸ்.ராவைபோலவே மொழியைக் கையாள முயற்சிக்கும் ஒரு தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகிவந்தார்கள். அவர்கள் எஸ்.ராவின் கதை மொழியின் எண்ணற நிழல்களையும் நகல்களையும் உருவாக்கினார்கள். ஆனால் எஸ்ராவிடமிருந்து நகலெடுக்கவே முடியாத ஒன்று அவரது புனைகதை மொழியில் சூரியனின் கிரணங்கள்போல எந்நேரமும் விழுந்துகொண்டிருக்கும் கவித்துவ தரிசனங்கள்தான். கவித்துவமான படிமங்களும் உருவகங்களும் அவரது மொழி நெடுக அவரது கதைமொழியின் அகக்கண்களை திறந்தவண்ணம் இருந்திருக்கின்றன. மௌனி, லா.ச.ரா, சுந்தரராமசாமிக்குப் பிறகு உரைநடையில் கவித்துவத்தின் நறுமணத்தை வெகு ஆழமாக தன் புனைகதைக்குள் பரவச்செய்தவர் எஸ்ரா.

எஸ்.ராவின் கதைகளின் உலகம் விரிந்து பரவக்கூடியது. அது எந்த ஒரு நிலப்பரப்புடனோ காலத்துடனோ கட்டுண்டதல்ல. எந்த நுழைவாயில் வழியே அவர் தன் கதை உலகிற்குள் நுழைவார் என்பதை யாரும் நிச்சயிக்கமுடியாது. ஒரு பெரும் நிலத்தில் இடையறாது நகர்ந்துகொண்ருக்கும் டைனோசரைப் போன்றது அவரது கதை மொழி. ஒரு சாமான்ய மனிதனின் ஒரு துளிக் கண்ணீரிலோ அல்லது வரலாற்றின் பேரவலம் ஒன்றிலிருந்தோ அல்லது புனைவின் எல்லையற்ற விசித்திரங்களிலிருந்தோ அது பிறக்கிறது.

எந்த ஒரு சிறந்த எழுத்தாளனும் அறிவுசார் துறைகளின்மீதும் பிற கலைகளின்மீதும் எந்த அளவு ஈடுபாடும் அக்கறையும் கொண்டிருக்கிறான் என்பதில்தான் அவனது படைப்பு மொழியின்  செறிவு இருக்கிறது. எஸ்.ரா உலக இலக்கியங்களைப் பற்றியும் உலக சினிமாவைப் பற்றியும் இடையறாமல் எழுதிவந்திருக்கிறார். ஓவியங்கள் பற்றி எழுதியிருக்கிறார். பயணக்கட்டுரைகளின் வழியே இந்தியப் பண்பாடு குறித்த மிக ஆழமான சித்திரங்களை உருவாக்கியிருக்கிறார். வரலாற்றை தொடர்ந்து புதிய குறுக்கு வெட்டுத்தோற்றங்களில் எழுதிவந்திருக்கிறார். குழந்தைகளுக்கான நூல்களை தொடர்ந்து எழுதி வருகிறார். ஒரு கல்வியாளரின் பணியை, ஒரு ஆய்வாளரின் பணியை, ஒரு வரலாற்றாசிரியன் பணியை, ஒரு இலக்கிய விமர்சகரின் பணியை எஸ்ரா ஏற்று செயல்பட்டு வந்திருக்கிறார். அவ்வகையில் அவர் ஒரு  தனிநபரல்ல, ஒரு இயக்கம்.

தமிழ்நாட்டில் பேச்சாளர்கள் பலர் எழுத்தாளர்களாக மாறமுயன்று தோல்வியடைந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சிறந்த  எழுத்தாளனே சிறந்த பேச்சா ளனாகவும் இருக்கும் தருணங்கள் என்பது மிகவும் அரிது. தமிழகம் முழுக்க ஏராளாமான பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் எஸ்.ரா இடையறாத உரைகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார். புத்தகக் கண்காட்சிகள், இலக்கியக் கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகளில் எஸ்.ராவின் உரைகளைக் கேட்பதற்கென்றே பெரும் எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருவதைக் கண்டிருக்கிறேன். உலக சினிமா, உலக இலக்கியம் குறித்த அவரது தொடர் சொற்பொழிவுகள் பெரும் புகழ்பெற்றவை. இன்றும் அதைக் கேட்டவர்களால் அவை நினைவுகூரப்படுகின்றன. பறந்து பறந்து ஆகாயத்தை நோக்கி உயரும் பறவைக் கூட்டம் போல பரவசம் ஏற்படுத்துவது அவரதுபேச்சுக்கலை!

எஸ்.ராவை 90களின் ஆரம்பத்தில் மதுரையில் சுபமங்களா நாடகவிழாவில் பார்த்தேன், விழா நடந்த அரங்கிற்கு வெளியே அவரும் கோணங்கியும் கிட்டத் தட்ட இரண்டு மணிநேரம் நின்ற நிலையில் பேசிக் கொண்டே இருந்தார்கள். அப்படி என்னதான் பேசுவார்கள் என்று வியப்புடன் சற்று தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டே இருந்தேன். அந்தச் சித்திரம் ஏனோ மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அப்போது நான் நினைத்ததில்லை, அவரோடு எனக்கு ஒரு மிக நீண்ட பயணம் இருக்கப்போகிறது என்று. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு காலச்சுவடு இதழுக்காக எஸ்.ராவை, சி.மோகனுடன் இணைந்து ஒரு நீண்ட நேர்காணல் செய்தேன். திருநெல்வேலியில் ஒரு இரவு முழுக்க விடிய விடிய பேசினோம் இன்றளவும் எஸ்.ராவின் சிறந்த நேர்காணல்களில் ஒன்று அது. எஸ்.ரா தன் இலக்கியம் சார்ந்த அணுகுமுறையை அதில்  தெளிவாக முன் வைத்தார் .

2002ல் உயிர்மையை நான்கு பெரும் தூண்களுடன் துவங்கினேன். சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன் என தமிழின் நவீனத்துவத்தை உருவாக்கிய நான்கு முதன்மையான ஆளுமைகள் ஒரு பதிப்பகத்தில் இணைந்திருந்த அபூர்வமான சந்தர்ப்பம் அது. அந்த நாட்கள் நினைத்துப் பார்க்க உவப்பானவை. பின்னர்  சுஜாதா மறைந்துவிட்டார். ஜெயமோகன் விலகிச்  சென்றுவிட்டார். சாருவுடனான உறவில் சில குழப்பங்கள் நிகழ்ந்தன. எஸ்.ராவுடனான இந்த உறவு இந்த பதினைந்தாண்டுகளில் ஒரு உறுதியான மரம்போல வேர்பிடித்து வளர்ந்து வந்திருக்கிறது. பரஸ்பரம் பெரும் அன்பும் நம்பிக்கையும் சகிப்புத்தன்மையும் இருந்தால் மட்டுமே இது  சாத்தியம். எஸ்.ராவுடனான உறவில் அது என்றும் இருந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் - ஜூலை மாதங்களில் வரும் ஆண்டு புத்தகக் கண்காட்சிக் காக புத்தகங்களை திட்டமிட தொடங்குவேன். முதலில் எஸ்.ராவிடம்தான் பேசுவேன். அவர் சில திட்டங்களைக் கூறுவார். உடனே என் மனம் மற்ற வேலைகளுக்கு ஆயத்தமாகிவிடும். அந்த வகையில் அவர் எனக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்திருக்கிறார். எஸ்ராவின் பெரும்பாலான நூல்களை உயிர்மையே பதிப்பித்திருக்கிறது. அந்த வகையில் உயிர்மையின் அடையாளத்தில் எஸ்.ராவின் தடங்கள் ஆழமாக பதிந்திருக்கின்றன.உயிர்மை இதழ் தொடங்கப்பட்டு 13 வருடங்கள் கழிந்துவிட்டன. இவ்வளவு காலத்தில் உயிர்மையின் ஒரு இதழ் தவறாமல் எஸ்ரா எழுதியிருக்கிறார். இது மிகவும் அபூர்வமானது. ஒரு எழுத்தாளனுக்கும் ஒரு இதழுக்கும் இடையே இப்படி ஒரு உறவு வேறு எங்கும் இருந்திருக்கிறதா தெரியவில்லை. இது ஒரு பதிப்பாளனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு அல்ல, அப்படியிருந்திருந்தால் அந்த உறவில் இயல்பாகவே ஏற்படக்கூடிய சில குழப்பங்கள் காரணமாக அது நீர்த்துவிட்டிருக்கும். எஸ்.ரா நம்காலத்தின் மகத்தான கலைஞன் என்ற முறையில் நான் அவர் மேல் காட்டக்கூடிய ஈடுபாடும் மதிப்பும் அன்புமே இந்த உறவை மேலும் மேலும் வலிமைப்படுத்தி வந்திருக்கிறது.

எஸ்.ரா தற்காலிக கவன ஈர்ப்பிற்காக எந்த சர்ச்சையிலும் ஈடுபட்டவரல்ல. நியாயமற்றவகையில் அவர் அவமதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில்கூட அவர் அந்தச் சர்ச்சைகளை புறம் ஒதுக்கிவிட்டு புன்னகையுடன் நடந்து சென்றிருக்கிறார். அதே சமயம் தமிழில் அவர் யார் கொண்டாடப்படவேண்டியவர்கள் என்று நினைக்கிறாரோ அந்த ஆளுமைகளைப் பற்றி இடையறாமல் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். பல இளம் எழுத்தாளர்களை அவர் கண்டடைந்து ஊக்கப்படுத்தியிருக்கிறார்.

எஸ்.ரா. போன்ற ஒரு மாபெரும் படைப்பாளி வேறொரு சமூகத்தில் வாழ்ந்திருந்தால் எவ்வளவோ அதிகாரம்  சார்ந்த அங்கீகாரங்களும் வாய்ப்புகளும் கிட்டியிருக்கும். அவர் நம் சமூகத்திற்குள் தமிழ் சமூகம் குறித்த இடையறாத உரையாடலை நிகழ்த்திக்கொண்டேயிருக்கிறார். அவை நம் காலத்தின் உரையாடலாக இருக்கின்றன. இனியும் இருக்கும்.

ஜனவரி, 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com