எவர் கிரீன் எடியூரப்பா!

எவர் கிரீன் எடியூரப்பா!
Published on

கர்நாடகத்தில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 100 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்கள் லிங்காயத் வாக்காளர்கள். இச்சமூகத்தில் செல்வாக்கு பெற்றவர்களை எந்த அரசியல் கட்சியாலும் புறக்கணிக்க முடியாது. ஆனால் 2013 தேர்தலில் பாஜக அந்த தவறைச் செய்து கையைச் சுட்டுக்கொண்டது. பி.எஸ்.எடியூரப்பாவைப் புறக்கணித்ததுதான் அந்த தவறு.

2007-இல் பாஜக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார் எடியூரப்பா. மதசார்பற்ற ஜனதா தளத்துடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி அக்கட்சி முதல்வர் பதவியில் இரண்டரை ஆண்டுகள் இருந்து விலகியபின் பாஜக  தன்னுடைய முறைப்படி ஆட்சிக்கு வரவேண்டும். அப்படி முதல்வர் ஆன எடியூரப்பாவை ஆதரவை விலக்கி கவிழ்த்துவிட்டது ம.ஜ.த. உடனே தேர்தல் வந்தது. இம்முறை பாஜகவுக்கு கூடுதல் சீட்கள் கிடைத்தன. சுயேச்சைகளை வாரிப்பிடித்து முதல்வராகி ஆட்சி அமைத்தார் எடியூரப்பா. தென்னிந்தியாவில் பாஜகவுக்கு ஆட்சி அமைக்கக் கிடைத்த ஒரே மாநிலம் கர்நாடகம். 39 மாதங்கள் எடியூரப்பா ஆட்சி. அவரது பெயர் ஒரு ஊழல் குற்றச்சாட்டில் சிக்க, பாஜக மேலிடம் அவரை 2011-இல் பதவி விலக உத்தரவிட்டது.

இதை எடியூரப்பா சாதாரணமாக எடுத்துக்கொள்ள வில்லை. தனக்கான அவமதிப்பாகக் கருதினார். பாஜகவிலிருந்து விலகியதுடன் தன் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்த அவர் கர்நாடக ஜனதா பக்‌ஷா என்ற புதிய கட்சியை 2012-இல் தொடங்கினார்.

2013-இல் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வந்தது. எடியூரப்பாவின் கட்சி 203 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வென்றது. பத்து சதவீத வாக்குகளைப் பெற்றது. எந்த பாஜக, எடியூரப்பாவை அவமதித்ததோ, அது 40 இடங்களை மட்டுமே வென்றது. கடந்த தேர்தலில் 110 இடங்களைப் பெற்றிருந்த கட்சிக்கு சரிவை உண்டாக்கினார் எடியூரப்பா. இதன் மூலம் டெல்லித் தலைமைக்கு தன் செல்வாக்கை நிரூபித்தார்.

ஆனால் நீர் அடித்து நீர் விலகுமா என்பதுபோல் 2013-இல் நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு தன் ஆதரவைத் தெரிவித்தவர், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தன் கட்சியை பாஜகவில் இணைத்தார். எம்பி ஆகவும்தேர்வானார். இதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் கர்நாடக ஜனதா பக்‌ஷா கட்சியின் ஆயுள் முடிவுக்கு வந்தது.

2016-இல் எடியூரப்பாவின் மீதான ஊழல் குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என தீர்ப்பு வந்தது. இதைத் தொடர்ந்து எடியூரப்பா கர்நாடக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதும் அடுத்த தேர்தலில் சிலபல குழப்பங்களுக்குப் பின் முதல்வராகவும் ஆனார். ஆனாலும் அவருக்கு எதிராக சதிகளும் தொடர்ந்தன. இரண்டாண்டுகள் முதல்வராக  நீடித்தநிலையில் 75 ஆண்டுகள் வயது வரம்பைக்காரணம் காட்டி எடியூரப்பாவே பதவி விலகும் வாய்ப்பு கொடுக்கப்பட, அதைக் காரணம்காட்டி கவுரவமாக விலகிக்கொண்டிருக்கிறார் எடியூரப்பா.

ஆனால் இனி அவ்வளவுதான் எடியூரப்பா என்று சொல்லப்பட்ட நிலையில் பாஜகவின் மத்திய நாடாளுமன்றக் குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டு, பாஜக எடியூரப்பாவின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுள்ளது. தான் தொடங்கிய கட்சியை மூடிவிட்டாலும் தன் அரசியல்வாய்ப்புகளுக்கு முடிவே இல்லை என நிரூபித்துள்ளார் எடியூரப்பா.

செப்டம்பர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com