வவல்லிக்கண்ணன் தமிழ்நாட்டு எழுத்தாளர்களிலேயே ரொம்ப வித்தியாசமான மனுஷர். நாங்க அவரை கேலி செய்வோம், காரணம் அவருக்கு கல்யாணம் ஆகவில்லை என்பதால் பல விஷயங்கள் தெரியாது.
என்னுடைய ‘பலாப்பழம்' கதையில் காலம் கடந்து அவன் பலாப்பழத்தை மனைவியிடம் கொண்டு வந்து கொடுப்பான். அதை அவள் தட்டிவிடுவாள். என்னிடம் இதை வல்லிக்கண்ணன் கேட்கிறார் ‘‘பலாப்பழம் கேட்டா. அப்ப கிடைக்கலை. இப்ப தந்துட்டான். வாங்கிக்கிட வேண்டியது தானே? ஏன் தட்டிவிடுறா?'' அது அவருக்கு புரியவில்லை. அந்த பெண்ணினுடைய கோபம், அதை அவள் வெளிப்படுத்தும் முறை புரியவில்லை. பெண்களுடைய ஆட்சேபம் எப்போதுமே வித்தியாசமாக இருக்கும். அது பெண்ணோடு பழகியவர்களுக்குத் தான் தெரியும். மற்றவர்களுக்கு தெரியாது.
நானும் சுந்தரராமசாமியும் இதைப்பற்றி பேசிக் கொண்டோம்.
'எங்கிட்ட இப்படிக் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறாரு'ன்னு அவர்கிட்டே
சொன்னேன்.
‘நீங்க பதில் எழுதுனீங்களா?'ன்னு கேட்டாரு.
‘நான் என்னத்த எழுதுறது? எழுதல'ன்னேன்.
‘கட்டாயம் எழுதணும் நீங்க' என்று சொன்னார்.
அப்புறம் நான் வல்லிக்கண்ணனுக்கு ஒரு
நீண்ட கடிதம் எழுதினேன். ‘பெண்கள் கேட்பதும், மறுப்பதும், ஆட்சேபிக்கிறதும் வேற மாதிரி இருக்கும். ஆண்கள் மாதிரி செய்ய மாட்டாங்க. அதுதான் பெண். அந்த வித்தியாசத்தை ரசிக்கிறவங்க உண்டு. அந்த வித்தியாசத்தை பார்த்து மௌனமாக இருக்கிறவங்க உண்டு' என ஒரு கடிதம் எழுதினேன்.
அவரிடம் ஒரு பழக்கம் இருந்தது. ஒரு கடிதத்துக்கு பதில் எழுதியாகிவிட்டது என்றால், வந்த கடிதத்தையும், கடிதத்துக்கு எழுதின பதிலோட நகலையும் கிழித்துப் போட்டுவிடுவார். எதற்கு கடிதம்? குப்பை சேர்ந்துவிடும். வருகிற கடிதங்களை ஆவணப்படுத்தினால் வீட்டில் இடம் இருக்காது என்று.
வல்லிக்கண்ணனுடைய கதைகளில், படைப்புகளில் பெண்ணிய விஷயங்கள் அறவே கிடையாது. எத்தனையோ நாவல்களில் நிறைய விஷயங்களை படித்துள்ளார், அதைப் பற்றியெல்லாம் எங்களிடம் சொல்வார். நிறைய படிச்சிருக்காரு.. ஆனால், அவரால் பெண்ணிய விஷயங்களை மட்டும் சொல்லமுடியாது. அதுதான் அதில் உள்ள விஷயம்.
ஒருமுறை நடந்தே மெட்ராசுக்கு செல்வது என்று தீர்மானித்து, அதைப்பற்றி பத்திரிகைகளில் அறிவித்தார். சிறு பத்திரிகைகளில் தான். பெரிய பத்திரிகைகள் போடாது. சிறு பத்திரிகைகள் ‘வல்லிக்கண்ணன் கிளம்புகிறார் சென்னைக்கு. நடந்தே போகிறார்' என்று செய்திகள் வெளியிட்டன.
அப்புறம் கடிதம் போடுவார். ‘இந்த இடம் வந்து சேர்ந்தேன். புறப்படுகிறேன்' என்று கடிதம் எழுதுவார். விருதுநகரில் முடித்துக் கொண்டார்.
‘என்னைய்யா? விருதுநகருக்கு அப்புறம் வண்டி நகரலையே' என்று கேட்டேன்
‘தெரியாத்தனமா சொல்லிட்டேன். ராத்திரி எங்க போய் படுக்கன்னு தெரியல'ன்னார்.
கூட்டமா வந்தா எடம் எல்லாம் பெருக்கி ரெடி பண்ணி வைச்சிருப்பாங்க படுக்குறதுக்கு,
சாப்பாட்டுக்கும் ரெடி பண்ணி வைச்சிருப்பாங்க. பின்னால ஒருத்தரும் வரல. தன்னந்தனியாக போவாருன்னு இவர் நினைக்கல. கொசுக்கடி தாங்கலையாம்.
நாமெல்லாம் நான்கு முழம் வேட்டி கட்டுவோம். அவர் நான்கரை முழத்தில் கட்டுவார். அந்த வேட்டியை அவிழ்த்து இரவு தூங்கும் போது போர்த்திக் கொள்வார். அதுதான் போர்வை, எழுந்தவுடன் அதுவே தான் வேட்டி. இந்த மாதிரி ‘என்னால் முடியல. கைவிட்டுவிட்டேன். தோத்துப் போயிட்டேன்னு' சொன்னார்.
வல்லிக்கண்ணன் மொழிபெயர்ப்புகளுக்காக நிறைய விஷயங்களை படிப்பார். பெரிய பெரிய புத்தகங்களை படித்துத் தீர்த்துவிடுவார். புத்தகத்தை தொடங்கி விட்டால் முடித்து விடுவார். ராத்திரி காபி சாப்பிட்டு தூங்கும் பழக்கம் வைத்திருந்தார். எங்களுக்கு காபி சாப்பிட்டால் தூக்கம் வராது. அவருக்கு தூக்கம் வரும்.
இந்த மாதிரி விஷயங்களை நாங்கள் பேசும் போது அதை அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பாரே தவிர, அதைத் திருத்துவது மறுப்பது என்று கலந்து கொண்டது கிடையாது.
காலையில் எழுந்தவுடன் குளிப்பது, குறிப்பிட்ட இடத்தில் சென்று குளிப்பது. கோவணத்தை தைத்து கட்டிக்கொள்வது. கோமணத்தை உலர்த்துவது. வருகிற கடிதங்களுக்கு பதிலை கார்டில் எழுதுவார். பதில் எழுதியதும் வந்த கடிதத்தை கிழித்து விடுவார்.
வல்லிக்கண்ணனுக்கு வந்த கடிதங்கள் மற்றும் அவர் எழுதிய கடிதங்களை பிரசுரிக்க அவரது நண்பர்கள் தடபுடலாக ஏற்பாடு செய்தார்கள். ஒரு கடிதம் கூட கிடைக்கவில்லை. கிழிச்சுப் போட்டா எப்படி கிடைக்கும்?
என்னிடம் வந்து அவர் எழுதிய கடிதங்களை கேட்டார்கள்.
நான் சொன்னேன், ‘எங்கிட்ட அவர் எழுதின கடிதங்கள் எல்லாம் இருக்கு. ஆனா
கொடுக்க முடியாது'
‘என்ன இப்படி சொல்லுதீய? அது புஸ்தகமா வர வேண்டிதில்லா'
'புஸ்தகமா வரவேண்டியது தான். நான் எழுதின கடிதங்கள் முதல்ல அவர்கிட்ட இருக்கா கேளுங்க'ன்னேன்.
‘ஐயா, அவர் எழுதின கடிதம்' இருக்கான்னு
கேட்டுருக்காங்க.
‘நான் தான் கிழிச்சுப் போட்டுட்டனே'னுருக்கார் அவர்.
‘அப்புறம் அவரும் உங்க கடிதத்தை கிழிச்சுத் தானே போட்ருப்பாரு. நீங்க கேக்குறது சரி கிடையா'ன்னுருக்காங்க.
நான் இப்படி ஒரு கலாட்டா செய்து, அதன்பின் சில கடிதங்களை கொடுத்ததாக ஞாபகம் இருக்கிறது.
அவர் சின்ன பத்திரிகைகளில் எல்லாம் வேலை பார்த்திருக்கிறார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் ‘நான் யாரிடமும் வேலை செய்யமாட்டேன். என்னை வேலைக்கு கூப்பிடாதீர்கள்' என்று அறிவிக்கிறார்.
என்சிபிஹெச்சில் (NCBH) ப்ரூஃப் பார்க்கும் வேலை இருந்தது. அநேக எழுத்தாளர்கள் பத்திரிக்கை ஆபிஸில் ப்ரூஃப் திருத்தும் வேலையில் தான் இருப்பார்கள். நான் கூட தோழர் மாணிக்கத்திடம் அந்த வேலைக்கு, ‘வல்லிக்கண்ணன் சும்மா தான் இருக்கார். அவர கூப்பிடலாமா?' என்று கேட்டேன். அவரும், ‘அவர் வந்தா ரொம்ப நல்லதுதான். ரொம்ப பொருத்தமான ஆள். சம்பளமும் அதிகமாகக் கொடுக்கலாம்' என்று சொன்னார். நான் அவரிடம் கேட்டேன். அவர் என்னிடம் அதுவரை அந்த குரலில் பேசியது இல்லை. ‘எனக்கு வேலை வேணுமின்னு யார் சொன்னா? நான் வேலையே செய்றதா இல்லை. ஆனாலும் நான் இந்த எழுத்தை நம்பித்தான் பிழைப்பேன்' என்று சொன்னார்.
இன்னொரு விஷயம், தன்னுடைய கல்யாணம் அம்மாவுடைய மரணத்திற்கு பிறகு தான்னு சொல்லிகிட்டு இருந்தார். ஏன் என்று கேட்டால், மாமியார் மருமகள் கொடுமை எல்லா இடத்திலயும் இருக்கு. என்னுடைய அம்மா கஷ்டப்படக்கூடாது. ஆகவே, அம்மா இருக்கிற வரை கல்யாணம் பண்ணமாட்டேன்' என்று உயர்ந்த முடிவெடுத்து இருந்தார்.
எல்லோரும் அவருடைய சாதியில் எத்தனையோ பெண்கள் படித்து வாத்தியார் வேலையில் இருப்பார்கள். நல்ல வேலை, தொந்தரவு இல்லாத வேலை. இவருக்கு கட்டி வைத்துவிட்டால் இவருக்கும் சாப்பாடு கிடைத்த மாதிரியாகிவிடும், குடும்பமும் பிரியாது என்று கணக்குப் போட்டார்கள். இவர் சம்மதிக்கவே இல்லை. ஆனால், அந்த அம்மா நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள். வல்லிக்கண்ணனும் வைராக்கியமாக கடைசிவரை கல்யாணமே ஆகாமல் இருந்தார்.
டிசம்பர், 2020.