“ A Room without books is like a body without a soul.” – Marcus Tullius Cicero
இந்தியாவில் மன்னராட்சி ஒழிந்ததால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் யார் தெரியுமா? என்ற கேள்வியை உற்சாகத்தின் உச்சத்திலிருந்த ஒரு இலக்கிய நண்பர் கேட்டார். பதிலையும் அவரே கூற விரும்பினார். யோசிப்பது போல் பாவனை செய்து விட்டு உதட்டை பிதுக்கினேன் . அவரது பதிலை கேட்பதற்கு முன்.
பெங்களூருக்கு அருகாமையிலுள்ள ஹசார்கட்டாவில் உள்ள ஓர் அமைப்பு எழுத்தாளர்களுக்கான முகாம் நடத்துவதுண்டு. எழுத்தாளர்களுக்கு உணவும் உறைவிடமும் இலவசமாக அளிக்கப்படும் . அவர்கள் அங்கு தங்கி தங்களது படைப்பு வேலையை கவனிக்கலாம். இந்தியா மற்றும் வெளிநாட்டு எழுத்தாளர்களும் அங்கு வருவதுண்டு. சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நண்பர் கவிஞர் சுகுமாரன் அங்கு வந்திருந்தார். சுகுமாரனது முகாம் முடிந்த நாளில் அங்கு சென்ற போது அங்கே சா.கந்தசாமியை சந்தித்து உரையாடிவிட்டு விடைபெறும் முன் இரண்டு வெளிநாட்டு பெண்களை அறிமுகப்படுத்தினார். இருவரும் எழுத்தாளர்கள். தலா ஒரு புத்தகம் எழுதியிருந்தார்கள். ‘ ஒரே ஒரு புத்தகம் தான் எழுதியிருக்கிறார்கள், அந்த புத்தகம் மூலம் கிடைத்த வருமானத்தில் கடந்த நாலைந்து வருடங்கள் நாடு நாடாக பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்’ காரில் ஏறிய பின் அந்த பெண் எழுத்தாளர்களைப் பற்றி சுகுமாரன் கூறியது.
இலக்கியத்தின் பின் திரிந்து கொண்டிருந்த கல்லூரிப் பருவத்தில் சென்னை தியாகராயர் நகர் பேருந்து நிலையத்திற்கு அருகிலிருந்த அசோகமித்திரன் வீட்டிற்கு பேட்டி எடுக்க நானும் நண்பர் நடராசனும் சென்றோம் . நீண்ட நேரம் நீடித்த உரையாடலின் ஒரு பகுதியாக அவர் எங்களுக்கு சொன்ன அறிவுரை,‘ இப்போ பாடத்தைப் படிங்க. படிச்சி முடித்து வேலையில் அமர்ந்த பின் இலக்கியத்தை படிங்க. அது எங்கேயும் போயிடாது.’ அந்த வார்த்தைகளை நாங்கள் எழுத்துக்கும் செல்வத்திற்கும் இங்கே ஏழாம் பொருத்தம் என்று புரிந்துகொண்டோம்.
இப்போது நண்பரின் பதில் ,‘ நம்மூரில் மன்னராட்சி ஒழிந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் எழுத்தாளர்களும் கலைஞர்களும் தான்’ என்று ஆரம்பித்து நிறைய பேசினார். மன்னராட்சி ஒழிந்ததால் எழுத்தாளர்களை யார் கொண்டாட வேண்டும் , மக்களாகிய நாம் தான் கொண்டாட வேண்டும்.
தமிழ் எழுத்தாளர்களை தோளில் தூக்கிக் கொண்டாட விரும்பிய அந்திமழையின் பட்டியல் நீண்டு போனது. முதற்கட்டமாக பனிரெண்டு எழுத்தாளர்களை இங்கே கொண்டாடுகிறோம். இந்த கொண்டாட்டத்தில் வாசகர்களும் பங்கேற்க வேண்டும்.
எழுத்தைக் கொண்டாடுவதால் வாசகனுக்கு ஒரு பெரும் பயன் காத்திருக்கிறது.ஒரு குடும்பம் தனது வருமானத்தில் ஒரு சதவீதத்தை புத்தகத்திற்கு செலவிட்டால் அவர்களது அடுத்த தலைமுறையின் வாழ்க்கை பண்பட்டு பல மடங்கு உயரும்.
என்றும் உங்கள்,
அந்திமழை இளங்கோவன்
ஜனவரி, 2017 அந்திமழை இதழ்