எம்டன் கப்பலில் வந்தவர்

எம்டன் கப்பலில் வந்தவர்
Published on

திருவனந்தபுரத்தில் தலைமைக் காவலரின் மகனாகப் பிறந்த ஒருவர், ஐரோப்பாவில் பயின்று ஜெர்மனி மன்னர் கெய்சரின் அறிமுகம் பெற்று, பெரும் புரட்சியாளராகத் திகழ்ந்தது பெரும் வீரவரலாறு. அவர் செண்பகராமன் பிள்ளை!

எம்டன் என்ற பெயரைக் கேட்டாலே இன்றும் பலருக்குத் திக்கென்று இருக்கும். அது ஜெர்மன் போர்க்கப்பலின் பெயர். முதலாம் உலகப்போரில் இந்தியப் பெருங்கடலில் சஞ்சாரம் செய்த அக்கப்பல் பிரிட்டனின் பல கப்பல்களை மூழ்கடித்து அச்சத்தில் ஆழ்த்தியது. அக்கப்பலில் கேப்டனுக்கு உதவியாகப் பயணம் செய்து வந்தவர் செண்பகராமன் பிள்ளை. வங்கக்கடலில் ஆங்கிலக் கப்பல்களை அச்சுறுத்தி உலவிவந்த எம்டன், 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னைத் துறைமுகத்துக்கு வந்தது. அதன் சக்திவாய்ந்த விளக்குகள் சென்னை நகரின் வான் வெளியில் ஒளியை வீசின. அதன் பீரங்கிகள் வெடித்தன. குண்டுகள் நகரில் வீழ்ந்தன. மக்கள் ஊரைக்காலி செய்துவிட்டு ஓடினர். பெருமளவு அச்சுறுத்திய அதன் நினைவு இன்னும் எம்டன் என்ற பெயராக பேச்சுவழக்கில் நிற்கிறது.

திருவனந்தபுரத்தில் பள்ளிப் படிப்பின்போது ஜெர்மானிய உளவாளியான ஸ்ட்ரிக்லாந்து இவரையும் இவரது நண்பன் பத்மநாபனையும் ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றார்.

செண்பகராமன் பிள்ளை இத்தாலியில் நேபிள்ஸ் நகரில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படித்தார். ஸ்ட்ரிக்லாந்து அவருக்கான செலவுகளைப் பார்த்துக்கொண்டார். அதன்பின்னர் சுவிட்சர்லாந்தில் பொறியியல் படித்தார். சின்னவயதிலிருந்தே இந்தியாவை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க ஆர்வம் இருந்ததால் ஐரோப்பாவில் இருந்த பல புரட்சியாளர்களுடன் ஏற்பட்ட தொடர்பு அவருக்கு விடுதலை உணர்வைத் தூண்டியது. சுவிட்சர்லாந்தில் இருந்தவண்ணம் 1912ல் சர்வதேச இந்திய ஆதரவுக் கழகத்தைத் தொடங்கினார். பின்னர் ஜெர்மனியில் இருந்த நண்பர்கள் மூலம் அங்கும் செல்லத் தொடங்கினார். பின்னர் அவர் செயல்பாடுகள் ஜெர்மனியில் நிலைபெற்றன. இந்திய விடுதலை உணர்வு கொண்ட மேடம் காமா, வீரேந்திர நாத் சட்டோபாத்யாயா, லாலா ஹர்தயாள், ஷ்யாம் கிருஷ்ணவர்மா, ஹரிஷ் சர்மா போன்றவர்களின் தொடர்பு ஏற்பட்டது. புரோ இந்தியா என்ற பத்திரிகையைக் கொண்டுவந்தார். அதன் பின்னர் ஜெர்மன் மன்னரான கெய்ஸருடன் ஏற்பட்ட தொடர்பு மிகவும் முக்கியமானது. அவரது ஆதரவுடன் ஜெர்மன் நாட்டுத் தரைப்படையில் சேர்ந்து பயிற்சி பெற்றார். இதையடுத்து முதலாம் உலகப்போர் 1914ல் தொடங்கியபோது ஜெர்மன் கடற்படையில் எம்டன் கப்பலில் இணைந்தார். அதன் கேப்டன் முல்லரின் உதவியாளராகப் பணிபுரிய அவருடைய பொறியியல் அறிவு உதவியது. அவர் அந்தமான் சிறையில் இருக்கும் வீர் சாவர்க்காரை விடுவிக்கவே அந்த கப்பலில் பயணம் செய்ததாகவும் ஆனால் அது நிறைவேற வில்லை என்றும் தெரிகிறது. பின்னர் அவர் எம்டனில் இருந்து இறங்கி தரைவழியாக ஜெர்மனிக்குச் சென்றார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கனடாவின் கத்தார் இயக்கம், தென்னாப்பிரிக்காவின் போராட்டங்கள் என்று பங்கெடுத்துக்கொண்ட செண்பகராமன், ஜெர்மனியில் இருந்தவாறே இந்தியாவிலும் உலகெங்கும் இருந்த இந்திய புரட்சியாளர்களுடன் உறவு வைத்திருந்தார். அவரது தலைக்கு பிரிட்டிஷ் அரசு விலை வைத்தது. அவரைப் பிடிக்க உளவுக்காரியான மாதா ஹரி கூட முயற்சி செய்ததாக ‘ஜெய்ஹிந்த் செண்பகராமன்’ என்ற நூலில் ரகமி கூறுகிறார்.

மாடம் காமா மூலம் அறிமுகமான லட்சுமி பாய் என்றபெண்ணை அவர் 1930களில் மணந்துகொண்டார். அச்சமயம் ஜெர்மனியில் நாஜிக்கட்சி தலை தூக்கியது. ஹிட்லரையும் செண்பகராமன் சந்தித்துப் பழகியதாகச் சொல்கிறார்கள். ஒரு கூட்டத்தில் இந்தியர்களை ஹிட்லர் அவமதிக்க, அங்கே செண்பகராமன் அவரை எதிர்த்துக் கருத்துக்கூறினார். இதைத் தொடர்ந்து அவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டது. இத்தாலி சென்று சிகிச்சை பெற்று பெர்லின் திரும்பிய நிலையில் அவர் சாலையில் நாஜி குண்டர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். அது 1934. அவருக்கு வயது 42. அவரது மனைவி லட்சுமிபாய் பெரும் போராட்டத்துக்குப் பின் அவரது உடலைப் பெற்று, அவரது இறுதி விருப்பப்படி அஸ்தியை சேகரித்து இந்தியாவில் தூவுவதற்காக மும்பை வந்து அங்கேயே தங்கியிருந்தார். இந்திய விடுதலைக்குப்பிறகு செண்பகராமன் படம் மும்பையில் திறக்கப்பட்டது. 1966-ல் இந்திரா பிரதமராகப் பதவியேற்ற பின் அவரது அஸ்தி போர்க்கப்பலில் கொச்சி கொண்டுவரப்பட்டு, திருவனந்தபுரம் வந்து மரியாதைகளுக்குப் பின்னர் கன்னியாக்குமரி கடலில் கரைக்கப்பட்டது.

ஆகஸ்ட், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com