எம்ஜி.ஆருக்கு பதின்மூன்று வயது இருக்கும் போது ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் ‘பால பார்ட்‘ நடிகராக சேர்ந்தார். முதன்முதலில் அவருக்குத் தக்க தனிப்பட்ட வேடங்களை வாங்கித் தந்தவர் காளி என். ரத்தினம் ஆவார்.
இதனைத் தொடர்ந்து அக்கம்பெனியில் ‘மனோகரன்'. ‘சத்தியவான் - சாவித்திரி' போன்ற நாடகங்களில் கதாநாயகனாகவும் ‘ராஜம்பாள்' நாடகத்தில் சாகசப் பெண்ணாகவும், ‘ராஜேந்திரன்' நாடகத்தில் வில்லனாகவும் எம்.ஜி.ஆர் நடித்தார். ஆனால், பின்னாளில் மகரக் கட்டல் குரல் உடைந்து, நயமிழந்ததால் அவர் கம்பெனியைவிட்டு வெளியேற நேரிட்டது. அதனால், 1930 இல் ரங்கூனுக்கு நாடகமாடச் சென்றாலும் திரும்பிவந்தபோது அந்த கம்பெனியிலேயே சேரவேண்டி வந்தது காலத்தின் கட்டாயமாயிற்று.
எம்.ஆர்.ராதாவைப் பொருத்தமட்டில் இளவயதில் ‘மனமோகன' அரங்கசாமி நாயுடுவின் ‘ஆலந்தூர் பாய்ஸ் கம்பெனி'யில் சேர்ந்தார். பின்னர் இராவண கோவிந்தசாமி நாயுடு, சிலோன் சாயபு கம்பெனி, சாமண்ணா அய்யர் கம்பெனிகளில் உருளும் கல்லாக புரண்டு வெவ்வேறு கம்பெனிகளில் சிறிது சிறிது காலமாக சேர்ந்து நடித்தார். உருளும் ராதாவின் வாழ்க்கையை நிலைப்படுத்தியவர் ஜெகன்னாத அய்யர் என்பவர் ஆவர். இவரது ‘பால மீன ரஞ்ஞனி சங்கீதா சபாவில்‘ ராதா தொடர்ந்து பதினைந்து வருட காலம் நடித்தார். பின் பல்வேறு இடர்பாடுகளால் அய்யர் கம்பெனியை மூடிவிட்டார். எனினும் அவரது மகன் ராமசுப்பு ‘பால மோகன ரஞ்ஞித சபா' என்ற புதிய நாடகக் கம்பெனியை உருவாக்கி நடத்தினார். இந்த கம்பெனியில் ராதா தனது நாடக வாழ்க்கையைத் தொடர்ந்தார். ஆனால் தனது முரட்டு குணத்தால் கம்பெனியில் பலரை விரோதித்துக் கொண்டதால் அந்த கம்பெனியிலிருந்தும் ராதா விலகினார். பின்னர் எம்.ஜி.ஆர் சேர்ந்திருந்த மதுரை ஒரிஜினல் பாயஸ் கம்பெனியில் ராதா சேர்ந்தார். இங்குதான் எம்.ஜி.ஆர். - எம்.ஆர். ராதா சந்திப்பு நிகழ்ந்தது. வரும் புதிய நடிகர் (எம்.ஆர்.ராதா) எந்த வேடத்தையும் ஏற்று நடிப்பவர், யாருக்கும் பயப்படாதவர், கட்டுப்படாதவர். ஆனால் எல்லோரோடும் சகஜமாகப் பழகக் கூடியவர் என்று அறிந்து, அவர் வரவை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நடிகர்கள் (எம்.ஜி.ஆர். உட்பட) ஆவலோடு எதிர்பார்க்க ‘தலை நிறைய முடி, கழுத்தில் மப்ளர், கோட்டு, வேட்டி, செருப்பு, வேக நடை இத்தியாதி தனித்துவங்களுடன் வந்து கம்பெனியை கலகலப்பாக்கியவர்தான் நடிகவேள் ராதா அண்னன்' என்று எம்.ஜி.ஆர் குறிப்பிடுகிறார். ‘அலிபாதுஷா' நாடகம் நடந்தது. அதில் பிச்சைக் காரர் வேடமிட்டு ஒரு கோஷ்டியை சேர்த்துக் கொண்டு, அடித்த கொட்டம் அரங்கத்தையே அதிரச் செய்தது. வேண்டுமென்றே விகாரமாக பாடி மக்களை ரசிக்க வைத்தவர் ராதா என்கிறார் எம்.ஜி.ஆர். ஏனென்றால் அன்றுவரை நாடகத்தில் அக்காட்சி கிடையாது. யாருடைய யோசனையையும் இரவலாகப் பெறாமல் ராதா தானே சிந்தித்து இக்காட்சியை அமைத்துக் கொண்டார் என்கிறார் எம்.ஜி.ஆர். ‘எனது நாடக வாழ்க்கையில் எம்.ஆர்.ராதா நாடக நடிப்பைக் காணவும் அவருடன் நாடகத்தில் இணைந்து நடிக்கவும் கிடைத்த நாட்கள் குறைவாக இருப்பினும் நடிப்புலகில் அது திருப்பத்திற்குக் காரணமாயிருந்தது. ராதா சில மாதங்களில் கம்பெனியை விட்டு விலகிச் சென்றுவிட்டார். ஆயினும் எனது வாழ்க்கைக்கு தேவையான நடிப்புத் தொழிலில் எனக்கொரு புதுப்பாதையைக் காண்பித்துவிட்டு அவர் சென்றார். நாடகத்தில் எனக்கு ‘மகரக்கட்டு‘ உடைந்த போது எந்த வேடத்தையும் ஏற்கும் நல்லதொரு வாய்ப்பை இது ஏற்படுத்தியது,'எனக்குறிப்பிட்டுள்ளார் எம்ஜிஆர்.
தமிழகத்தை உலுக்கிய பரபரப்பான செய்திகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது 1967-ஆம் ஆண்டு புரட்சி நடிகர் எம்ஜிஆரை நடிகவேள் எம்.ஆர்.ராதா சுட்டதுதான். அப்போது எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் தமிழ்க் கலையுலகில் மாபெரும் புகழ் பெற்றிருந்த கலைஞர்கள் ஆகியிருந்தனர். எம்ஜிஆர் திரையுலகில் புகழ்பெற்ற நாயகர் மட்டுமல்ல, திமுகவின் நட்சத்திர தலைவர். பரங்கி மலைத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்தலில் அப்போதுதான் குதித்திருந்தார். தொண்டையில் குண்டுபாய்ந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தவாறு எம்ஜிஆர் கரம்குவிக்கும் சுவரொட்டிகள் அந்தத் தேர்தலில் தமிழகம் முழுக்க திமுகவுக்கு வாக்கு கேட்கும் சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டன.
ராதா சுட்ட குண்டு எம்ஜிஆரின் இடது காதின் கீழ் நுழைந்து கழுத்தின் முதல் எலும்பின் பக்கத்தில் தங்கிவிட்டது. மருத்துவர்கள் அதை எடுத்தால் மேலும் பிரச்னை வரலாம் எனகூறி அப்படியே விட்டனர். ஆனால் சில மாதங்களில் அவர் இருமும்போது அந்த குண்டுத் துகள் வெளியே வந்துவிட்டது.
எம்.ஆர்.ராதாவும் எம்ஜிஆரும் சேர்ந்து சுமார் 20 படங்கள் நடித்துள்ளனர். இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்துள்ளது. சீனியர் என்பதால் ராமச்சந்திரா என்றுதான் ராதா அழைப்பார். ராதாண்ணே என்பார் எம்ஜிஆர். ராதா வீட்டுக்குப் போய் எம்ஜிஆர் கேரம்போர்டு ஆடிக் கொண்டிருப்பார். சபாஷ் மாப்பிள்ளே, இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களில் ஒன்று. இப்படத்துக்காக தன்னுடைய சம்பளத்தை எம்ஜிஆருக்காக பாதியாக குறைத்ததாக ராதா சொல்வார் எனப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பெற்றால்தான் பிள்ளையா என்ற படத்தை வாசு என்பவர் தயாரித்தார். அவர் ராதாவுக்கு நெருக்கமானவர். இதற்கான நிதி விவகாரத்தில் எம்ஜிஆருக்கும் ராதாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. சம்பவத்தின் போது அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்த ராதா, திநகரில் இருந்த தயாரிப்பாளர் வாசு வீட்டுக்குச் சென்று அங்கு சற்று ஓய்வில் இருந்த பின், கையில் ரிவால்வருடன் வாசுவை அழைத்துக்கொண்டு எம்ஜி.ஆர் இல்லம் இருந்த ராமாபுரம் தோட்டம் சென்று மோதியிருக்கிறார். அவரைச் சுட்டவர் தன்னையும் சுட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இருவருமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எம்.ஆர்.ராதா மீது கொலை முயற்சி வழக்கு, தற்கொலை வழக்கு ஆகியவை போடப்பட்டன. ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது. பிறகு அது ஐந்தாண்டுகளாக குறைக்கப்பட்டது.
சிறை வாசத்துக்குப் பின் வெளியே வந்த எம்.ஆர்.ராதா வழக்கம்போல் நாடகங்களில் நடித்தார். ‘ராமச்சந்திரனும் நானும் நண்பர்கள் ஐம்பது வருஷமா சிநேகிதம். இரண்டுபேரும் தமாஷா
சுட்டுகிட்டோம். கையிலே கம்பிருந்தா கம்பாலே அடிச்சிகிடுவோம்.. ரிவால்வர் இருந்திச்சு அந்த நேரத்தில்.. எடுத்து அடிச்சுகிட்டோம். அடிச்சது தப்புனு நிறுத்திட்டோம்...' என சாதாரணமாக அந்த சம்பவத்தை சொல்லிவிட்டுக் கடந்துபோனார் எம்.ஆர்.ராதா.
இச்சம்பவத்துக்குப் பிறகு பெரியார் மறைவு நிகழ்ச்சியிலும் இருவரும் சந்தித்துக் கொண்டனர். என்ன ராமச்சந்திரா எப்படி இருக்கே? என ராதா கேட்க, எம்ஜிஆர் வணக்கம் தெரிவித்தார். நடிகை மனோரமாவின் மகன் பூபதி திருமணத்தில் இருவரும் சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பகிர்ந்துகொண்டனர்.
1979-இல் எம்.ஆர்.ராதா திருச்சியில் தன் இல்லத்தில் மரணமடைந்தபோது திரையுலகமே அஞ்சலி செய்தது. அப்போது எம்.ஜி.ஆர். முதலமைச்சர். அஞ்சலி செலுத்த நேரில் செல்ல விரும்பியதாகவும் ஆனாலும் சில காரணங்களால் செல்லவில்லை எனவும் தகவல் உண்டு.
(எம்ஜிஆர்-ராதா இமைக் காலத் தகவல்கள் உதவி: திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன்)
ஏப்ரல், 2023