எம்.எல்.வி. அம்மா

எம்.எல்.வி. அம்மா
Published on

என்னுடைய குரு என்றால் அது டாக்டர் எம்.எல்.வசந்தகுமாரி அம்மாதான். இசையை மட்டும் அவர் கற்றுத்தரவில்லை. வாழ்க்கை முறைகளையும் கற்றுக்கொடுத்தார். திறன்களையும் வளர்த்துக்கொள்ளச் செய்தார். தாயின் ஸ்தானத்தில் இருந்து அவர் என்னைப் பார்த்துக்கொண்டார். மத்திய அரசின் உதவித் தொகையுடன்தான் அவரிடம் சேர்ந்தேன். அது முடிந்த பின்னும் அவரிடமே தொடர்ந்தேன். 13 ஆண்டுகள் அவங்க கூடவே இருந்தேன். உன்னிடம் திறமை இருக்கிறது; குரல் இருக்கிறது. அத்துடன் விடாமுயற்சியும் எதைக்கண்டும் தளர்ந்துவிடாத மனமும் இருந்தால் எதிர்காலம் நன்றாக இருக்கும். அதன் மூலம் மக்களை ஈர்க்கக்கூடிய சக்தியைப் பெற்று நம்முடைய ஜிஎன்பி ஸ்கூலுக்கு பெரிய பெயரை வாங்கித்தருவாய் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.

அவங்க மிகப்பெரிய இசை அரசி. ஒரு முழுமையான இசைக் கலைஞர். முத்துமுத்தான திரைப்பாடல்கள் மட்டுமல்லாமல் சாஸ்திரிய இசையிலும் வளமான சாதனைகள் செய்தவர். இசை விமர்சகர் சுப்புடுவாலேயே வாய் நிறையப் பாராட்டப் பட்டவர். குறையே சொல்லமுடியாத பாடல் திறன் அவருடையது. கனிவான முகம்; அன்பான பேச்சால் யாரையும் ஆகர்ஷணம் செய்துவிடக்கூடியவர். அவரது கச்சேரியைக் கேட்டால் சில நாட்களுக்கு மனதை விட்டே அகலாது. அவரை எம்.எல்.வி அக்கா என்று கூப்பிடுவாங்க. நான் அம்மா என்று அழைப்பேன். அவங்க சொல்ற எல்லா வேலையும் செஞ்சுருக்கேன். சமைக்கிறது, கால் பிடிச்சு விடறது, லெட்டர் டெலிவரி பண்றது, கடைக்குப் போறது... ஏன் இந்த வேலையை எனக்குக் கொடுக்கிறீங்கன்னு நினைச்சது கூட கிடையாது. என்னை என்னுடைய பெற்றோர் அவங்க கிட்ட இசை கத்துக்க அனுப்பினது பூர்வ ஜென்ம புண்ணியம்தான்னு நினைக்கிறேன்.

நான் சேர்ந்தப்போ எனக்கு முன்னாடி ஒரு பத்து பேர் கத்துகிட்டு இருந்தாங்க. எனக்குப் பின்னாடி ஒரு ஆறேழு பேர் வந்தாங்க. எல்லாரும் இசைப் பயிற்சி ரேடியோ ஆர்ட்டிஸ்ட் இப்படி ஒவ்வொரு துறைக்குப் போயிட்டாங்க. நான் மட்டும் இசைக்கச்சேரிகள் செய்ற ஆர்வத்துடன் அவங்க கூடவே இருந்தேன். இதனால் பிரதிபலன் இருக்குமா என்றெல்லாம் பார்க்கலை. கண்ணை மூடிட்டு அவங்க கூடவே இருந்தேன். இப்ப நான் எட்டியிருக்கும் உயரங்கள் அந்த உழைப்புக்குக் கிடைத்த பலன்கள்தான்.

ஒரு பெண்ணா இருந்துட்டு இசைத்துறையில் முன்னேறணும்னா...  எந்தத்துறையா இருந்தாலும் சரி. எதையும் இடையில் விட்டுட்டு அப்புறம் வந்து பாத்துக்கலாம்னு நினைக்கக் கூடாது. பிள்ளைகளை வளர்த்துட்டு அப்புறமா வரலாம்னு நினைக்க கூடாது. கஷ்டத்தோட கஷ்டமா இதையும் செய்யணும். என்னோட மாணவிகளிடம் நான் இதைத்தான் சொல்றேன்.

 என்னை ரகுநாத் வீட்டில் வந்து திருமணத்துக்காகப் பெண் பார்த்துட்டுப் போனார். அது பத்தி எம்.எல்.வி அம்மா கிட்ட விவரம் சொன்னேன்.. எல்லோருக்கும் கொஞ்சம் கவலை. புகுந்த வீட்டில் தொடர்ந்து பாட அனுமதிக்கணும்; ஊக்கம் கொடுக்கணும்; கணவர் ஆதரவா இருக்கணும்னு. கிருஷ்ணகான சபா கச்சேரிக்கு ரகுநாத்தை அழைச்சிட்டு வா.. நான் பேசறேன்னு சொன்னாங்க. கச்சேரிக்கு அவர் வந்ததும் அம்மா கிட்ட காண்பித்துவிட்டேன். உடனே ரொம்ப பொருத்தமா அவர் பேர் வர்றா மாதிரி  ரகுவர.. ன்ற தியாகராஜ கீர்த்தனையைப் பாடினாங்க. அது ரகுநாத்துக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு. கச்சேரி முடிஞ்சதும் பேசினாங்க. வீட்டுக்கு அழைச்சுட்டு வரச்சொன்னாங்க. அவரைக் கூப்பிட்டுபோனேன். கொஞ்சநேரம் அவர் கிட்ட தனியே பேசும்போது,“உன்கிட்ட ஒரு வைரத்தையே ஒப்படைக்கிறேன். எல்லா நிலையிலும் ஆதரவா இருக்கணும்’ங்கிற மாதிரி சொல்லியிருக்காங்க. அது ஒரு மந்திரச் சொல் மாதிரி. இன்று வரைக்கும் ரகுநாதன் எனக்கு எல்லா விதத்திலும் பெரும் ஆதரவா இருக்கார். இன்னிக்கு எனக்கு பத்மவிபூஷன் கிடைச்சுதுன்னா அது எனக்கு மட்டும் இல்ல; உங்களுக்கும் சேர்த்துதான்னு நான் என்கணவர்கிட்ட சொல்றதுண்டு. ஏன்னா அந்த அளவுக்கு குடும்பத்துடைய அணுசரனை  முக்கியம். கால நேரம் அளந்து சொல்ல முடியாது. டூர் போனா மாதக்கணக்கில் இழுக்கும். அதான் நான் முன்னாலேயே சொன்ன மாதிரி எனக்கு கிடைத்த குரு என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அக்கறை செலுத்தினாங்க. இப்ப இருக்கிற மாதிரி வெறுமனே இசை மட்டும் கத்துக்கிட்டு போற மாதிரி இல்லை. அது கிட்டத் தட்ட ஒரு குருகுல வாசம்தான்”

(நம் செய்தியாளரிடம் பேசியதில் இருந்து)

மார்ச், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com