எப்போது ராஜினாமா செய்ய வேண்டும்?

எப்போது ராஜினாமா செய்ய வேண்டும்?
Published on

சராசரியாக ஒவ்வொரு பணியாளரும் ஓர் ஆண்டில் 16 முறை வேலையை விட்டுவிடலாமா என்று நினைக்கிறார்களாம்! அடுத்த 1-2 ஆண்டுகளில் இப்போது செய்துகொண்டிருக்கும் வேலையை விட்டுவிடவேண்டும் என்று நினைப்பவர்கள் 43% பேர் என்று ஓர் ஆய்வு சொல்கிறது.

ஆகவே வேலையை விட்டுவிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் தனி ஆள் இல்லை! ஆனால் வேலையை விட்டு விலகும் முன்பாக பின் வரும் விஷயங்களைக் கவனியுங்கள்.

1. புது வேலை பொருந்துமா என்று பாருங்கள். ஆரம்பத்தில் நம் கனவு வேலை இதுதான் என தோன்றலாம். ஆனால் அது எந்த அளவுக்கு நமக்கு செட் ஆகும் என்று யோசிக்கவேண்டும். வாய்ப்பிருந்தால் அந்த வேலையை தானாக முன்வந்து செய்து பாருங்கள்.

2. சில சமயங்களில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையே நன்றாகத் தான் இருக்கும். ஆனால் இன்னும் பெரிய கனவைத் தேடிச் செல்லும்போது, அது சரியாக இல்லா விட்டால் என்ன செய்வது என்பதற்கான திட்டம் உங்களிடம் இருக்கவேண்டும்.

3. வேலை பிடிக்கவில்லை; வேறு கூடுதல் சம்பளத் தேவைகள் உள்ளன என்றால் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் நிறுவனத்திலேயே முதலில் பேசிப்பார்த்து மாறுதல் செய்துகொள்ள முடியுமா எனப்பாருங்கள். கூடுதல் சம்பளம் கூட இங்கேயே கிடைத்துவிடலாம்.

4. வேலையை விட்ட பிறகு பழைய நிறுவனத்தின் சக பணியாளர்கள், முதலாளிகளுடன் நல்ல உறவைக் கொண்டிருங்கள். எதிர்காலத்தில் உங்கள் பணியில் அது உதவும்.

5. வேலையை விட்டுவிட்டோம். புதிய வேலை பிடிக்கவில்லை என்ன செய்வது என்று யோசிக்கவேண்டாம். திரும்பவும் பழைய வேலைக்கே வரலாம். ஒன்றும் குற்ற உணர்ச்சி கொள்ளவேண்டாம்! நம் முடிவுகள் நிரந்தரமானவை என நினைக்கவேண்டியது இல்லை.

சரி.. எப்போது வேலையை விட்டே ஆகவேண்டும்?

அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வரும்போது மிகவும் எதிர்மறையான எண்ணங்களுடன் வருகிறீர்களா? ஏதோ வேலையில் சரியில்லை என்று அர்த்தம். வேலை மாறுவது பற்றி யோசிக்கலாம்.

பார்க்கும் வேலை மிக வசதியாக இருக்கிறது என்று உணருகிறீர்களா? இது பணியில் மேலும் முன்னேற வெற்றியடைய வழி வகுக்கும் என்று நினைத்தால் அது தவறாக இருக்கலாம். வசதியாக, பாதுகாப்பாக இல்லாமல் உணர்பவர்கள் அதிகம் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளதாம். ஆகவே ரொம்ப நல்லா இருக்கே என்று யோசிக்கும்போது வேலை மாறுவது பற்றியும் யோசிக்கலாம்.

நான் ஆபீஸ் வர்றேன். வேலையை வேலையா மட்டும் பார்க்கிறேன் என்று சொல்பவரா நீங்கள்? ரொம்ப தப்பு. அலுவலகப் பணி என்பது தொடர்ந்து நமது திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு. அதில் அர்ப்பணிப்பு இருக்கவேண்டும். இதுவே உயர்வுக்கு வழி. வேலையில் புதிதாக தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாத போது புதிய வேலைக்குப் போகலாம்.

அதே போல் வேலையில் தொடந்து கவனக்குறைவாக தவறு செய்துகொண்டே இருக்கிறோம் என்றால் நமக்கு வேலையில் முழுக்கவனம் செலுத்தமுடியவில்லை என்று பொருள். உங்கள் நலனுக்காக புதிய வேலையைத் தேடிக்கொள்வது நல்லது என்று சொல்கிறார்கள்.

வெளியே இருந்து பார்க்கும்போது எல்லா பணியிடமும் நன்றாகத்தான் தெரியும். ஆனால்  உள்ளே போனபின்னர் சூழல் கொடூரமாக இருக்கும் நிலை தெரிய வரலாம். தினமும் மல்லுக்கட்ட நேரிடும். தாமதிக்காமல் வேலையை விட்டு ஓடிவிடுங்கள்.

கடைசியாக ஒன்று: கஷ்டப்பட்டு வேலை செய்தும் உங்கள் மீது நிர்வாகம் அக்கறை காட்டவில்லை அங்கே வேலை செய்வதே வேஸ்ட்!

செப்டெம்பர், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com