டேய்... எந்திர்றா.. காலேஜுக்கு லேட் ஆயிடுச்சு..”
“ஏண்டி... செல்போனையே நோண்டிட்டு இருக்கே...- இந்தக் குரல்கள் கேட்காத வீடுகளே பெரும்பாலும் இல்லை. இதிலிருந்து ஆரம்பிக்கும் மோதல் பெரிதாகி பல குடும்பங்களில் அப்பாக்கள் பிள்ளைகளிடம் பேசுவதே இல்லை. வெளியே கல்லூரி அல்லது பள்ளியில் படிப்பின் சுமையையும் எதிர்காலம் குறித்த கேள்விக்குறியையும் சுமந்துகொண்டிருக்கும் பிள்ளைகளை நினைத்தால் திக்கென்றிருக்கிறது. பள்ளித்தேர்வுகள் முடியும்போதெல்லாம் பிள்ளைகள் தற்கொலை செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. அனிதாக்களின் மரணங்கள் ஒரு புறம் இருக்க, ஆசிரியையை வகுப்பில் கத்தியால் குத்திய மாணவனும் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கிறான்.
“டீனேஜில் இருக்கும் பிள்ளைகள் மன அழுத்தத் ததுக்கு உள்ளாகப் பல காரணங்கள் இருக்கின்றன. எதிர்பாலின ஈர்ப்பு மற்றும் உறவுகளால் உருவாகும் மன அழுத்தம், குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள், பொருளாதார நெருக்கடிகள், தேர்வில் ஏற்படும் தோல்வி, சக மாணவர்களால் கிண்டலுக்குள்ளாதல், போதைப்பொருட்களுக்கு அடிமையாதல் போன்றவை அவை,” என்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த மனநல மருத்துவர் டாக்டர். ஜான் தினேஷ்.
“கல்லூரிக்கு பதினெட்டு வயதில் நுழையும் அரும்பு மீசை இளைஞனுக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. தன்னைவிட வலிமையான, பெரிய மாணவர்களிடமிருந்து வரும் கிண்டலும் கேலியும் அதில் ஒன்று. உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். முதல் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் கண்ணாடி போட்ட ஒல்லி இளைஞன் அவன். அவனை வகுப்பில் அவனது நண்பர்களே மிகக்கடுமையாக ஓட்ட ஆரம்பித்தார்கள். அப்பா அம்மா பாதுகாப்பில் வெளியுலகமே தெரியாமல் வளர்ந்த பையன் அவன். இந்தக் கிண்டலை எதிர்கொள்ள அவனால் சுத்தமாக முடியவே இல்லை. வகுப்புக்குச் செல்லவே அவனுக்குப் பிடிக்கவில்லை. அந்த பையனை என்னிடம் அழைத்துவந்தார்கள். அவனுக்கு மருந்துகள் எதுவும் கொடுக்கத்தேவை இருக்கவில்லை. இன்று உன்னை ஓட்டும் அதே பையன்கள்தான் நாளை நெருக்கமான நண்பர்கள் ஆவார்கள். என் நண்பர்கள் தானே எப்படி வேண்டுமானாலும் கிண்டல் செய்யட்டும் என்று முடிவெடுத்து வகுப்புக்குப் போ. எல்லாம் மாறிவிடும் என்று ஆலோசனை சொன்னேன். அவன் பள்ளிக்காலத்தில் பேட்மிண்டன் விளையாடுகிறவன். கல்லூரி வந்ததும் அதை நிறுத்தியிருந்தான்.
அவனை தொடர்ந்து விளையாடுமாறு சொன்னேன். அவன் புரிந்துகொண்டான். இப்போது அவனைக் கிண்டல் செய்து மன அழுத்தத்துக்கு உள்ளாக்கியவர்கள் பாடங்களில் சந்தேகம் வந்தால் இவனிடம்தான் வருகிறார்கள்,” என்கிற ஜான் தினேஷ் பதின் வயதுடையவர்கள் மன அழுத்தங்களில் இருந்து விடுபட முக்கிய வழிகளில் ஒன்றாக உடற்பயிற்சியிலும் விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் என்கிறார். “பள்ளிப்பருவத்தில் விளையாடிவிட்டு கல்லூரி வந்ததும் நிறுத்திவிடுவார்கள். அப்படி இல்லாமல் விளையாட்டுகளைத் தொடரவேண்டும். அப்போது மூளையில் சுரக்கும் எண்டார்பின்கள் என்கிற ஹார்மோன்கள் ஒருவருக்கு நேர்மறையான எண்ணங்களை வழங்கக்கூடியவை. எந்த மன அழுத்தமும் பாதிக்கவிடாமல் இவை பார்த்துக்கொள்ளும்,” என்கிறார்.
“பெற்றோர் தோழமை உணர்வுடன் பிள்ளைகளிடம் அமர்ந்து மனம்விட்டுப் பேசுவது முக்கியம். மனம் விட்டுப் பேசுவதற்கான வாய்ப்பை படிப்படியாக அவர்களிடம் சிறுவயது முதலே ஏற்படுத்தியிருக்க வேண்டியதும் அவசியம்,” என்கிறார் உளவியல் நிபுணர் டாக்டர்.செந்தில்குமார்.
“அவர்கள் பாலியல் ரீதியான சந்தேகங்களைக் கேட்டால் அதை காக்கா, குருவி கதை போல் சொல்லாமல் அறிவியல் ரீதியான விளக்கங்களைச் சொல்ல வேண்டும். அதைவிடுத்து இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று சொல்வது சிக்கலை உருவாக்கும். இது புரியாத வயது, அறியாத வயது என்று எண்ணத் தேவையில்லை. இன்றைய தொழில்நுட்பங்களாலும், நண்பர்களாலும் தவறாகவும், சரியாகவும் தெரிந்துகொண்டுதான் இருப்பார்கள். ஆசிரியர்களின் பங்கு இதில் முக்கியமானது.
சத்தான உணவுகளைப் பழக்க வேண்டும். டென்ஷனாக இருந்தார்கள் எனில் ஒரு பூங்கா, கடற்கரை, சினிமா என அழைத்துச் செல்லலாம். பிரச்னை என்ன என்று தொடர்ந்து நச்சரிக்காமல் பெற்றோர்களே அதை புரிந்துகொண்டு அதற்கான தீர்வை நோக்கிச் செயல்பட வேண்டும்.
தவறே செய்தாலும் கூட எது சரியென அவர்களைக் கேட்டு அதைச் செய்யச் சொல்ல வேண்டும். தவறைச் சுட்டிக் காட்டியே பேசும்போது நான் தப்பே பண்ணிட்டுப் போறேன் என்று எதிர்மறையாக பேசுவார்கள். எப்போதாவது அறிவுரை சொல்லலாம். எப்போதுமே சொல்லக் கூடாது,” என்கிறார் செந்தில்குமார்.
இன்னொரு முக்கியமான விஷயம் வீட்டில் ஏதாவது முடிவுகள் எடுக்கும்போது டீனேஜில் இருக்கும் பிள்ளைகளையும் கூப்பிட்டு இப்படிச் செய்யப்போகிறோம். உன் கருத்தைக் கூறு என்று கேட்கவேண்டும். இது அவர்களின் மனதில் கூடுதலாகப் பொறுப்புணர்ச்சியை சேர்க்கும்.
அக்டோபர், 2017.