உலகத்துக்கு கொரோனா என்பது ஓர் ஆண்டுக்கு முன்னால்தான் வந்துள்ளது. ஆனால் தமிழ் சினிமாவில் கொரோனா எப்போதோ வந்துவிட்டது! சினிமாவைச் சார்ந்து இருக்கும் என்னைப் போன்ற இயக்குநர்கள் அவ்வப்போது இதுபோன்ற ஊரடங்கில்தான் இருப்போம். தயாரிப்பாளர் படத்தின் பாதியிலேயே காணாமல் போயிருப்பார். அல்லது கிடைத்திருக்கவே மாட்டார். எனவே லாக்டவுன் என்பது எங்களுக்கெல்லாம் பழக்கப்பட்டதுதான்.
எனவே இந்த லாக்டவுன்கள் எனக்கு எந்த நெருக்கடியையும் தரவில்லை. ஏற்கெனவே சில ஆண்டுகளாக படம் பண்ணாமல் நான் லாக்டவுனில் தான் இருக்கிறேன், இதில் என்ன புதிதாக லாக்டவுன்?
இந்த லாக்டவுன் என்பதெல்லாம் அன்றாடம் சம்பளம் வாங்குகிறவர்களுக்கு பெரும் நெருக்கடியைத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் என்னைப் போன்ற சன்மானமாகப் பெறும் பணத்தை வைத்துக்கொண்டு வாழ்கிறவர்கள், இதற்கெல்லாம் பழகியவர்கள். அதாவது கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு வாழ்வதற்குப் பழகி இருக்கிறோம். சிலசமயம் இருக்கும்; சில சமயம் இருக்காது என்பதுதான் நிலவரம். பழக்கப்பட்டதுதான். நாம் நம்மிடம் இருக்கும் பணத்தை வைத்து வாழும்போது கூடுதலோ குறைவோ வாழ்ந்துவிடுவோம். ஆனால் நம்மிடம் வந்து சிலர் பணத்தேவையைச் சொல்லும்போது நாம் அப்போது சிரமத்தை எதிர்கொள்வோம். பெரும் உதவி அல்ல; பத்தாயிரம் பத்தாயிரமாக பத்துப்பேருக்குக் கொடுத்தாலும் லட்ச ரூபாய் ஆகிவிடுமே.. லாக்டவுன் சீக்கிரம் முடியாவிட்டால் சினிமாவில் பலருக்கும் பெருந்துயரம் உருவாகும் என்பதே உண்மை.
என்னைப் பொருத்தவரை எப்போதுமே மன உளைச்சலுக்கு ஆளாகமாட்டேன். ஆனால் எனக்குத் தெரிந்தவர்களுக்கு சிகிச்சை பெற படுக்கை வசதி பெற்றுத்தர முடியாமல் சில நாட்கள் தவித்தபோது பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். ஏற்கெனவே இருந்த கட்டமைப்பு, இந்த அரசு எடுத்த வேகமான நடவடிக்கைகளாலும் பெரும் சேதாரம் இன்றி தப்பிவிட்டோம். இது மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
நாம் முதல் அலையிலும் சரி; இரண்டாம் அலையிலும் சரி; எந்த பாடமும் கற்கவில்லை. கூட்டம்கூட்டமாகத் திரிகிறோம். அதுபோலத்தான் என்
சொந்த பொருளாதாரமும். எதையும் கற்றுக்கொள்ளவில்லை! பொருளாதார நெருக்கடியை சரிபண்ணவேண்டும். அதற்காக முதலீடுகளை,
சேமிப்புகளைச் செய்யவேண்டும் என்றெல்லாம் சொல்கிறார்கள். எல்லாம் சரிதான். அதெல்லாம் எப்படி என்றுதான் தெரியவில்லை!
ஜூலை, 2021