என்னை மாற்றிய வாழ்க்கைத் திருப்பங்கள்

என்னை மாற்றிய வாழ்க்கைத் திருப்பங்கள்
Published on

ஜோதிமணி நாடாளுமன்ற உறுப்பினர்

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது பல திருப்புமுனைகளைக் கடந்து வந்திருப்பதைக் காணலாம். உங்கள் வாழ்க்கையின் திருப்புமுனைகளைப் பற்றிக் கூறுங்கள் என பல ஆளுமைகளிடம் கேட்டபோது அவர்கள் நம் செய்தியாளரிடம் பகிர்ந்துகொண்டதின் தொகுப்பு இது.

கல்லூரி முடித்த பிறகு அம்மா-விற்கு உடல்நிலை சரியில்லை என்பதால், ஒரு வருடம் ஊரிலேயே இருந்தேன். அப்போதுதான் தெரிந்தது, எங்கள் ஊரில் குடிப்பதற்கு தண்ணீர் இருந்தாலும், அது தலித் மக்களுக்குக் கிடைக்கவில்லை என்று.

தண்ணீர் இல்லை என்றால் எல்லோருக்கும் தானே இல்லாமல் இருக்க வேண்டும்? தண்ணீர் விடாமல் இருப்பது அநீதி என்று நினைத்தேன். ‘நம் கையில் அதிகாரம் இருந்தால் எல்லோரும் தண்ணீர் கிடைக்கச் செய்யலாம்‘ என்ற யோசனை தோன்றியது. அப்போது 21 வயது.

தமிழ்நாட்டில் பெண்களுக்கான 33 சதவீத இடொதுக்கீடு 1996ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தல் மூலம் நடைமுறைக்கு வந்தது. அந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முடிவெடுத்தேன். அதற்கு வீட்டில் கடுமையான எதிர்ப்பு. என்னுடைய பிடிவாதத்தால் அரைகுறை மனதுடன் அம்மா ஒப்புக் கொண்டார். தேர்தலில் நிற்பது என்று முடிவானதுடன் எதிர்ப்புத் தெரிவித்தவர்களும் தேர்தல் வேலை செய்ய வந்தனர். மக்கள் ஆதரவால் என்னை எதிர்த்து நின்ற எல்லோரும் வைப்புத் தொகையை இழந்தனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தான் தெரிந்தது, ஊரில் இருக்கும் தண்ணீர் பிரச்னை குறுகிய கால பிரச்னை இல்லை, அதற்குப் பின்னால் சாதி உள்ளது என்று. சாதி, பாலினப் பாகுபாடு பற்றி அப்போது தான் தெரிந்து கொண்டேன்.

பதினைந்து நாள் வேலைக்கு, மூன்று வருடம் போராட வேண்டியிருந்தது. அதிகாரிகள், அரசியல்வாதிகள் என எல்லோரும் ஒரே மனநிலையில் இருந்தனர். தலித்துகளுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதில்.

அதேபோல், அமராவதி ஆற்றில் மணல் அள்ளுவதற்குக் கொடுத்த அனுமதியை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்துக்குச் சென்றேன். வழக்கு முடிவுக்கு வரவில்லை என்பதால், மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டியிருந்தது. பத்து வருட காலம் ஊராட்சி மன்ற தலைவராக வேலை பார்த்த அனுபவமும், வாசிப்பும், எழுத்தும் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. மேலும், சமூக அமைப்பும், அரசியலமைப்பும் எவ்வளவு ஒடுக்குமுறை நிறைந்தது என்பதையும் புரிந்து கொண்டேன்.

அரசியல் நமக்கு சரிப்பட்டு வராது என்று நினைத்து, 2006ஆம் ஆண்டு அரசியலிருந்து முழுமையாக விலகி விட்டேன். அப்போது தமிழக இளைஞர் காங்கிரஸின் மாநில துணைத் தலைவராக இருந்தேன். அந்த சமயத்தில் தான் ராகுல்காந்தி மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராக பதவி ஏற்றார். இந்தியா முழுவதும் சிறப்பாக செயல்படுகிற 1800 இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ஆந்திராவில் பயிற்சி ஒன்று கொடுத்தார்கள். அதில் என்னையும் கலந்துகொள்ள சொல்லி எங்களுக்கான பொறுப்பாளர் ஒருவர் வலியுறுத்தினார். அந்தப் பயிற்சியில் தான் ராகுல் காந்தியை முதல் முறையாக சந்தித்தேன். எங்களை ஒரு சாதாரண கிராமத்தில் தங்கவைத்து பயிற்சிக் கொடுத்தார்கள். ராகுல் காந்தியின் பேச்சைக் கேட்டு கொஞ்சம் மனது மாறினேன். அரசியலில் தொடரலாம் என்று. பிறகு இரண்டு மாதங்கள் கழித்து ராகுல் காந்தியை நேரில் சந்தித்தேன். இதைத் தொடர்ந்து இளைஞர் காங்கிரசுக்குத் தேசிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியா முழுவதும் அனுப்பி வைத்தார் ராகுல். அதில் தமிழ்நாட்டிலிருந்து நான் தேர்வாகிச் சென்றேன். இப்போது தலைவர் ராகுலின் பின்னால் நடந்து கொண்டிருக்கிறேன்.

சிறை தந்த திருப்பம்

திருச்சி சிவா, நாடாளுமன்ற உறுப்பினர்

எ ல்லோருடைய வாழ்க்கையிலும் எதா வது ஒரு நாள், ஒரு நிகழ்வு, ஒரு நபர், பெரும் மாற்றத்திற்கு காரணமாக இருப்பது இயற்கை. இது தான் உலக வரலாறு. அப்படி ஒரு மாற்றம் எனக்கும் நிகழ்ந்தது.

என்னுடைய இளம் வயது கனவு ஐ.ஏ.எஸ். அதிகாரி-யாக வேண்டும் என்பது. அதற்காகவே இளங்-கலை மற்றும் முதுகலையில் ஆங்கில இலக்கியம் படித்தேன். சிறு வயதிலிருந்தே இயக்கத்தின் (திமுக) தாக்கம் எனக்குள் இருந்-தாலும், நான் படித்த பெரியார் கல்லூரி, உடன் படித்த மாண-வர்கள், சூழ்நிலைகள், அரசியல் ஆர்வம் எல்லாம் ஒன்று சேர்ந்து அரசியல் மீதான தீவிரத்தை அதிகப்படுத்தியது.

முதுகலை படித்துக் கொண்டிருக்கும் போது தான் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டது. இதனால் திமுகவின் ஆட்சி கலைக்கப்பட்டு, கட்சியின் முன்னணி தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டனர். அதேபோல், திமுகவில் பணியாற்றிய துடிப்பு மிகு இளைஞர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் நானும் ஒருவன். அப்போது எனக்கு 21 வயது.

சிறையில் ஒரு வருட காலம்  இருந்தேன். பிறகு, இழந்த ஒரு வருடம் எதற்காக என்று யோசித்-தேன். முழுநேரமாக இயக்கத்திற்காகவும், நாட்டிற்-காகவும் பணியாற்றலாம் என முடி-வெடுத்-தேன். ஐஏஎஸ் கனவைக் கைவிட்டேன். எதையும் இழந்துவிட்டதாக நான் வருந்தியதே இல்லை. இப்போது முழு மனநிறைவுடன் திராவிட முன்னேற்றக் கழக இயக்கத்திலிருந்து மக்களுக்கு தொண்டாற்றிக் கொண்டிருக்கிறேன்.

அந்த மூவர்!

மகிழ் திருமேனி,திரைப்பட இயக்குநர்

மூ ன்று நபர்கள் என் வாழ்க்கையில் முக்கிய-திருப்பங்களை அளித்தவர்கள். கௌதம் மேனன், செல்வராகவன், மாலா மணியன்.

முதல் முறையாக உதவி இயக்குநராக பணியாற்று-வதற்கு வாய்ப்புக்கொடுத்தவர் இயக்குநர்செல்வராகவன். இவரிடமிருந்துதான் சினிமா தொழில்-நுட்பத்திற்கான அரிச்சுவடியைக் கற்றுக் கொண்டேன். அடுத்ததாக கௌதம் மேனன். என்னை உதவி இயக்குநராக சேர்த்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், ‘காக்க காக்க‘ படத்திற்கு வசனம் எழுதவும், மற்றப் படங்களுக்கு பகுதி வசனம் எழுதவும் வாய்ப்புக் கொடுத்தார். நான் சினிமா பற்றிய எல்லா ஞானத்தையும் இவர்களிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். அதேபோல், எனக்கு முதல் படம் எடுக்க வாய்ப்புக் கொடுத்தவர் மாலா மணியன். நான் இயக்குநர் ஆவதற்கானதொடக்கப் புள்ளி அவர்கள் தான். என் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் இந்த மூன்று பேருக்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

அந்த சந்திப்பு

எஸ்.எஸ்.பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர்,விசிக

என்னுடைய சிற்ய் வயதிலிருந்தே எழுச்சித் தமிழரை (தொல்.திருமாவளவன்) தெரியும். என்றாலும், சிறிது காலம் அவருடன் தொடர்பே இல்லை. என்னுடைய அப்பாவுக்கும் (எம்.எஸ்.மணி), தலைவருக்குமான உறவைப் பற்றி தலைவரே ராணி வார இதழில் கட்டுரை இன்று எழுதியிருக்கிறார். அதை அப்பாவின் நண்பர் ஒருவர் காண்பித்தார். அதை படித்துவிட்டு, ஏறக்குறை முப்பது வருடங்கள் கழித்து தலைவரைப் பார்க்க சென்றேன். ஐந்து நிமிடம் பேசிக்கொண்டிருந்தோம். இப்போது நான் இருக்கும் இடத்திற்கு அந்த சந்திப்பே காரணம்!

Editorial

அந்த நிகழ்வு

இடும்பாவனம் கார்த்திக், நாம் தமிழர் கட்சி

சொ ன்னா நம்ப மாட்டீங்க! நான் இயல்பிலேயே ரொம்ப கூச்ச சுபாவம் கொண்டவன். ஊரிலேயே யாரிடமும் பேச மாட்டேன். அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவன்.சனிக்கிழமை என்றால் விரதம் இருப்பேன். கோயிலுக்கு சென்று வந்த பிறகு தான் சாப்பிடுவேன். இதையெல்லாம் ஒரு நிகழ்வு மாற்றியது.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, கரும்புலி முத்துக்குமார் இறந்து போனார். கல்லூரியிலிருந்து பேருந்து ஏறுவதற்கு புதுக்கோட்டை வருகிறேன். அங்கு ஒரு பதாகை வைத்திருந்தார்கள். அதில், ‘தமிழா உன் வரிப்பணம்; நம் இனத்தை அழிக்கும் ஆயுதமா?' என எழுதியிருந்தார்கள். இந்த இந்த வரிகள் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின. அது இன உணர்வா என்று அப்போது தெரியாது.

ஈழத்தில் லட்சக்கணக்கான மக்கள் இறந்தபோது கடவுள் நம்பிக்கையே போய்விட்டது. 2009 ஈழப்படுகொலை என்னுடைய குணாதிசயத்தையே மாற்றி-விட்டது. என்னைப் போன்ற பல  இளைஞர்களை மாற்றிய சம்பவம் அது.

அம்மா தந்த பாடம்!

செந்தில் ஆறுமுகம், மக்கள் நீதி மய்யம்

பொ து சமூகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற முதல் விதையை விதைத்தவர் என்னுடைய அம்மா. பல வகைகளில் அவர் எனக்கு முன்னுதாரணமாக இருந்துள்ளார். பள்ளிப் பாடப் புத்தகங்களைத் தாண்டி, பொது புத்தகங்களைக் கொடுத்த படிக்க சொன்னவர். ஒரு முறை பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, ஒரு பிரச்னை ஏற்பட்டது. உடனே பேருந்தை காவல் நிலையத்திற்கு விடச்சொன்னார். பிரச்னையைக் கண்டு ஒதுங்காமல், அதை எப்படித் தீர்க்க வேண்டும் என சொல்லிக் கொடுத்தவர் அம்மா. அவர் அதுபோல வாழ்ந்தும் காட்டினார். எந்த இடமாக இருந்தாலும் தப்பைத் தட்டிக் கேட்க வேண்டும் என்பார். அம்மாவின் அந்த வார்த்தைகள் இன்றும் மனதில் இருக்கிறது.

கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து சமூகம் மற்றும் அரசியல் பணி செய்து வருகிறேன். அதற்கு வித்திட்டவர் என்னுடைய அம்மா என்றால், அது இன்று வரை தொடரக் காரணம் என்னுடைய மனைவி. நானும் என் மனைவியும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டோம். ஒருவர் வீட்டுக்கு, இன்னொருவர் நாட்டுக்கு என்று.

Editorial

வி.பி.சிந்தன் நடத்திய பாடம்!

ஜி.ராமகிருஷ்ணன் சி.பி.எம்.தலைமைக்குழு உறுப்பினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ள மேமாளூர் தான் என்னுடைய கிராமம். அங்கு தொடக்கக் கல்வியும், பக்கத்துக் கிராமமான ஜி.அரியூரில் பதினோராம் வகுப்பு வரையும் படித்தேன். அப்போது வரை அரசியல் ஈடுபடும் இல்லை; அதற்கான வாய்ப்பும் இல்லை.

பின்னர், பியுசி காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது நடைபெற்றசட்டமன்ற தேர்தல் (1967) சில அரசியல் புரிதலை ஏற்படுத்தியது. கல்லூரி மாணவர்கள் எல்லாம் சேர்ந்து திமுக-விற்காக தேர்தல் வேலை பார்த்தோம்.

1968ஆம் ஆண்டு சென்னை மவுண்ட் ரோட்டில் இருந்த அரசுக் கலைக் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது நானும் சில நண்பர்களும் இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்தோம். சங்கம் நடத்துகின்ற போராட்டங்களில் கலந்து கொள்வதுண்டு

1969ஆம் ஆண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாணவர்களுக்கு வகுப்பு ஒன்று நடத்தினார்கள். அது எங்கு நடந்தது என்றால்... அப்போது சட்டமன்றத்தில் இடம்பெறக் கூடிய ஒவ்வொரு கட்சிகளுக்கும் ராஜாஜி ஹாலில் அறை ஒன்று கொடுத்திருந்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு மூன்றாம் நம்பர் அறையைக் கொடுத்திருந்தார்கள். அதில் தான் அந்த வகுப்பு நடைபெற்றது. மாநில முழுவதும் சென்று கட்சி வேலைப் பார்க்கும் அளவுக்கு பெரிய தலைவராக இருந்த வி.பி.சிந்தன், மார்க்சிய தத்துவம் தொடர்பாக வகுப்பு ஒன்று எடுத்தார். அந்த வகுப்பு, அதுவரை இருந்த என்னுடைய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார பார்வையை மாற்றியது.

மானுட விடுதலைக்கு வழிகாட்டக் கூடிய சரியான தத்துவம் மார்க்சியம் தான் என்பதை அந்த வகுப்பில் அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொண்டேன். பிறகு 1969ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானேன். இது தான் என்னுடைய வாழ்க்கையில் நடந்த முக்கியமான திருப்பு முனை.

சுயேச்சையாக பெற்ற வெற்றி!

எஸ். செம்மலை, முன்னாள் அமைச்சர்,அதிமுக

எ னது வாழ்க்கைப் பயணத்தில் திருப்பு முனை ஆண்டு என்றால் 1980ஆம் ஆண்டைச்சொல்லலாம். திருப்பு முனை நிகழ்வு, அந்த ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டதாகும். பேரறிஞர் அண்ணா அவர்களது மேடை சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்ட நான், அரசியல் ஈடுபாட்டோடு கல்லூரிக் கல்வியை முடித்து கொண்டு வாழ்க்கையையும், தொழிலையும் தொடங்கினேன். வாழ்வாதாரத்திற்கு வழக்குரைஞர் தொழில். பொது

சேவைக்கு அரசியல் என்று இருவழிப்பாதையைத் தேர்ந்தெடுத்தேன். அண்ணாவால் ஈர்க்கப்பட்ட நான் புரட்சித் தலைவர் இயக்கம் கண்டபோது அவரோடு ஐக்கியமானேன். அதிமுக சந்தித்த முதல் பொதுத் தேர்தலான 1977 சட்டமன்றத் தேர்தலில் தாரமங்கலம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை புரட்சித்தலைவர் எனக்குத் தந்தார். பின்னிட்டு 1980ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நான் நின்ற தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால் அந்த தேர்தலில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தொகுதி மக்கள் விடாப்பிடியாக என்னை வற்புறுத்தி தேர்தலில் போட்டியிட வைத்துவிட்டனர். சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கினேன். பயமறியாத வாலிப வயது, இருந்தாலும் புரட்சித் தலைவரின் பேச்சைக் கேட்காமல் எதிர்த்து போட்டியிடும் நிலை எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. தொகுதி மக்கள், இன்னும் சொல்லப்போனால் என்னை பின்வாங்கக்கூடாது என்று கட்டாயப்படுத்தினர். தேர்தலில் பணம் செலவழிக்காமல் மகத்தான வெற்றியை அத்தேர்தலில் மக்கள் தந்தார்கள். என்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் வைப்புத் தொகையைக்கூட இழந்தார். நாட்டுக்கே என்னை அடையாளம் காட்டிய நிகழ்வு அது. அனைத்துத் தரப்பினராலும் பேசும் பொருளாகப் பேசப்பட்டேன். எனது வெற்றிக்கு துணை நின்றது. வாக்காளர்கள் மட்டுமல்ல. புரட்சித் தலைவரும் கூட என்று சொல்லலாம். என்னை எதிர்த்து பிரசாரம் செய்ய நான் போட்டியிட்ட தொகுதிக்கு அவர் வரவேயில்லை. அது அவரது உயர்ந்த குணம்.  வெற்றிக்கு வாழ்த்தும் சொன்னார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள்கூட இதை பலமுறை பலரிடம் குறிப்பிடுகிற போதேல்லாம் எனக்கு கூச்சமாக இருக்கும். அந்த நிகழ்வு எனக்குக் கிடைத்த அரசியல் அங்கீகாரம் என்றும் சொல்வார்.

அந்த நிகழ்வுக்குப்பிறகு அரசியலில் எனக்கு இன்றுவரை ஏறுமுகம் தான். அந்த நிகழ்வு ஒன்றே எனது வாழ்க்கைப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லாமல், வேறென்ன சொல்லமுடியும்?

டிசம்பர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com