எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக யாராவது கை, காலை வெட்டிக்கொண்டால் அவர்களை என்ன சொல்லுவோம்?
அதற்கு ஒப்பான முட்டாள்தனங்கள் பல இந்த எடைக்குறைப்பு வணிகத்தில் நடந்துகொண்டுள்ளன.
எடையைக் குறைக்க ஆயிரமாயிரம் டயட்டுகள், சந்தையில் ஆயிரமாயிரம் மருந்து, மாத்திரைகள், உடல்பயிற்சி முறைகள், ‘ஆரோக்கிய உணவு‘ எனும் முத்திரையை தாங்கி வரும் உணவுகள், உணவகங்கள்...என ஒரு மிகப்பெரிய பிசினஸ் சந்தை இது.
பட்டினி கிடந்து உடலை இளைக்கவைக்கும் டயட்டுகள் பல உள்ளன. வெறும் பழங்கள், காய்கறிகளை உண்ணும் டயட்டுகள் உள்ளன. புரதச்சத்து அற்ற இந்த உணவுகளை உண்டு எடையை குறைத்தாலும், நாம் இழக்கும் எடை பெரும்பாலும் மஸில் எனும் தசை எடையாகவே இருக்கும். அதனால் நம் உடல்நலம் கெடும். எலும்புகள் வலுவிழக்கும்.
ஆக இதற்கு நாம் தேர்ந்தெடுக்கும் உணவுமுறையானது நீண்டகால நோக்கில் பின்பற்றதக்கதாக இருப்பது அவசியம். எந்த உணவுமுறையை தேர்ந்தெடுத்தாலும் அதில்போதுமான அளவு புரதம் உள்ளதா என பார்ப்பது அவசியம். குறைந்தது 60 கிராம் புரதமாவது எடுப்பது அவசியம். 60 கிராம் புரதத்தை அடைய 2 கோப்பை பால், 2 முட்டைகள்,200 கிராம்
சிக்கன் என எடுக்கலாம். உங்கள் உணவை மாவுச்சத்து உள்ள உணவுகளை சுற்றி அமைக்காமல், புரதச் சத்து உள்ள உணவுகளை மையப்படுத்தி அமைப்பது அவசியம் அதாவது காலை உணவாக 4 இட்டிலி, ஒரு காப்பி என எடுப்பதை விட ஒரு ஆம்லட், ஒரு கோப்பை பால் என எடுக்கலாம். மூன்று முட்டை ஆம்லட்டுடன் ஒரு கோப்பை பால் எடுக்கையில் 26 கிராம் புரதம் காலை உணவிலேயே கிடைத்துவிடுகிறது. புரதம் மிகுந்த உணவு உங்களை நீண்ட நேரம் பசிக்காமல் இருக்கவைக்கும்.
அதுபோல் மதிய உணவை சிக்கனுடன் எடுக்கலாம். ஒவ்வொரு வேளை உணவிலும் ஒரு புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ள ஒரு காய்கறி இருப்பதை உறுதி செய்தால் பசி எடுப்பது வெகுவாக மட்டுப்படும்.
மூன்று வேளை உணவு என்பது இப்போது ஆறுவேளை உணவாக மாறிவிட்டது. காலை உணவு, அதன்பின் அலுவலகம் போய் காலை 11 மணிக்கு 2 வடை, ஒரு காப்பி, அதன்பின் மதிய உணவு, நாலு மணிக்கு பப்ஸ் மற்றும் டீ, இரவு உணவு, அதன்பின் உறங்குமுன் ஒரு ஸ்னாக் என ஆறு வேளை உண்டால் எடை எப்படி குறையும்?
ஆக இந்த நொறுக்குத்தீனி உண்ணும் வழக்கத்தை ஒழிக்கவேண்டும். அப்படி நொறுக்குத்தீனி சாப்பிட்டே ஆகவேண்டுமெனில் வீட்டில் இருந்து வறுத்த நட்ஸ் கொண்டு செல்லலாம். சீஸ், சர்க்கரை இல்லாத பால், க்ரீன் டீ முதலியவற்றை எடுக்கலாம்.
கொளுத்தும் கோடையில் பெப்ஸி, கோக் முதலான குளிர்பானங்களை குடிப்பதை விட்டுவிட்டு நீர் மோர், இளநீருக்கு மாறலாம் உணவகத்தில் உண்ணும் வழக்கத்தை விட்டுவிட்டு, வீட்டில் சமைத்த உணவுகளை உண்டால் எடைகுறைப்பு நன்மை மட்டுமல்ல, பர்சில் ஏராளமான பணமும் மிச்சமாகும். பல உணவகங்களில் பல முறை சமைத்த எண்ணெயையே மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதால் இதயநலம் கடுமையாக கெடுகிறது. வீட்டில் சமைத்த உணவுகளில் இந்த சிக்கல்கள் இல்லை உடல்பயிற்சி என்பது வாக்கிங், சைக்கிளிங் போவது மட்டும் தான் என இல்லை. நாள் முழுக்க உட்கார்ந்திருப்பதும் உடல் எடைக்கு மட்டுமல்ல, உடல் நலனுக்கும் பகை. ‘நாள் முழுக்க சும்மா உட்கார்ந்திருப்பது தினம் மூன்று சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம்‘ என்கின்றன மருத்துவ ஆய்வுகள். நீங்கள் மாலையில், அல்லது காலையில் ஒரு மணிநேரம் வாக்கிங் போய்விட்டு நாள் முழுக்க உட்கார்ந்து வேலை பார்த்தால் எந்தப் பலனும் இல்லை. 23 மணிநேர சோம்பலை, 1 மணிநேர வாக்கிங் கட்டுபடுத்தாது விழித்திருக்கும் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் குறைந்தது ஐந்து முதல் 10 நிமிடமாவது நடக்கவேண்டும் என ஆய்வுகள் கூறுகின்றன. போன் கால்களை பேசவேண்டுமெனில் உட்கார்ந்து பேசாமல் அறைக்குள் எழுந்து நடந்தபடி பேசலாம். சும்மா மூன்றுமணிநேரம் வீட்டில் உட்கார்ந்து டிவி பார்ப்பதை விட வரவேற்பு அறையில் ஒரு எக்சர் சைக்கிளை வாங்கிபோட்டு அதை மெதுவாக ஓட்டியபடி படம் பார்க்கலாம்.
வேலை செய்கையில் ஒரு மணிநேரத்துக்கு ஒரு ஐந்து நிமிட பிரேக் எடுத்து, சும்மா பாத்ரூமுக்கு போவது போல நடந்துவிட்டு வந்தால் உடல் ஆக்டிவ் ஆக இருப்பது மட்டுமல்ல, நடக்கையில் மூளைக்கு கூடுதலான ஆக்ஸிஜன் போய், சுறுசுறுப்பாக சிந்திக்கவும் முடியும் கம்பனி மீட்டிங்குகளை எல்லாம் உட்கார்ந்து நடத்தாமல் நின்றபடி நடத்தும் மீட்டிங்குகள் பிரபலம் ஆகி வருகின்றன. பல கம்பனிகளில் பெப்ஸி,கோக், காபி, டீ மாதிரியான பானஙக்ளை கொடுப்பதற்கு பதில் க்ரீன் டீ, சூப் மாதிரியான பானங்களுக்கு மாறுகிறார்கள்.
வீட்டில் நொறுக்குத்தீனிகளை ஏராளமாக வாங்கி ஸ்டாக் வைக்கவேண்டாம். இருந்தால் சாப்பிட்டுகொண்டே இருப்போம். சீஸ், தயிர், வறுத்த பாதாம் மாதிரி ஆரோக்கியமான நொறுக்குதீனிகளை வைத்துக்கொள்ளவும்.
மூன்று வேளை உணவையும் 12 மணிநேரத்துக்குள் எடுத்து தினம் 12 மணிநேரம் எதுவும் உண்ணாமல் இருக்கவும். நள்ளிரவில் உண்ணும் வழக்கம் மிக கொடியது. சர்க்கரை வியாதி உள்ளிட்ட பல வியாதிகளை உண்டாக்கும் வழக்கம் இது. நல்ல ஓய்வு எடுக்கவேண்டிய இரைப்பைக்கு இரவிலும் வேலை கொடுத்தால் அது எப்படி தாங்கும்?
ஆக மேலே சொன்ன நடைமுறைகளை பின்பற்றினாலே பாதி வெற்றிதான். அதனுடன் நல்ல டயட் முறை, உடல்பயிற்சி ரெஜிமன் ஆகியவற்றை பின்பற்றினால் வெற்றி உறுதி.
மற்றபடி எடைகுறைப்புக்கு தேவை ஊக்கம் அல்ல, டிசிப்ளின்.
ஊக்கசக்தி இருந்தால் தான் அன்று டயட் இருப்பேன் என பலரும் நினைத்து ‘இன்னிக்கு மூட் இல்லை, டயட்டில் இருக்க முடியாது. எக்சர்சைஸ் பண்ண முடியாது‘ என சொல்வார்கள். மூடு எப்ப வரும், போகும்னு யாருக்கும் தெரியாது. ஆனால் டிசிப்ளின் என்பது மூடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு காரியத்தை செய்வது.
‘எனக்கு மூடு இல்லை. இன்னிக்கு பஸ் ஓட்டமாட்டேன்‘ என பேருந்து ஓட்டுனர் சொல்வது இல்லை. ‘எனக்கு மூடு இல்லை. இன்னிக்கு ஆபீஸ் போகமாட்டேன்‘ என நீங்கள் சொல்வது இல்லை. ‘எனக்கு மூடு இல்லை, பள்ளிக்கூடம் போகமாட்டேன்‘ என பிள்ளைகள் சொன்னாலும் நீங்கள் விடபோவது இல்லை.
நல்ல மூடோ, கெட்ட மூடோ...மனதைக் கல்லாக்கிக்கொண்டு அன்றாடம் அலுவலகம் போகிறோம். அதன் பெயர்தான் டிசிப்ளின். அதே டிசிப்ளின் தான் எடைகுறைப்புக்கும் தேவை. நாள் முழுக்க தோல்வி என்றாலும் அன்று டயட்டை வெற்றிகரமாக முடித்தேன், உடல்பயிற்சி செய்தேன் என்பதே ஒரு வெற்றிதானே? அதை ஏன் விடவேண்டும்?ஆக டிசிப்ளினை கைகொண்டால் எடைகுறைப்பு மட்டுமல்ல, எடுத்த காரியம் அனைத்தும் கைகூடும். ஊக்கமது கைவிடுங்கள். டிசிப்ளினை கைபிடியுங்கள்!
ஜூன், 2022