‘என்ன கூட்டம் போட்டு பேசுறீங்க?’

‘என்ன கூட்டம் போட்டு பேசுறீங்க?’
Published on

தமிழ் நாளிதழில் உதவி ஆசிரியராக வேலை கிடைத்து சென்னைக்கு வந்த புதிது. நுங்கம்பாக்கம் ரயிலடியிருந்து நடக்கும் தூரத்திலிருந்த அந்த மேன்ஷனில்தான் குடிபுகுந்தேன். கீழே கடைகள். மேலே அறைகள். அதிகமில்லை. ஏழெட்டு இருந்திருக்கலாம் என்று நினைவு. இருவர், மூவர் அறைகள் உண்டு. பெரும்பாலும் வேலையிலிருந்த அல்லது வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்த அன்பர்கள். பத்திரிகையாளனாக இருந்ததால், உரையாடுவதும் உறவாடுவதும் இயல்பாக இருந்தது. பலரும் குறுகிய காலத்தில் நெருக்கமாகிவிட்டார்கள்.

அந்த மேன்ஷனின் மானேஜர், உள்ளே நுழைந்து மாடிப் படியேறும் பகுதியை ஒட்டி இருந்த சற்றே பெரிதான அறையில் தங்கியிருந்தார். பராமரிப்பு, வாடகை வசூல் தவிர, மேன்ஷனில் தங்கியிருந்தவர்களுக்கு இரவு மட்டும் சப்பாத்தி செய்து கொடுத்து வந்தார். இணைத் தொழில். ஒவ்வொரு மாதமும் வாடகையுடன் அதற்கான தொகையைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும். புதிதாக வருபவர்களிடம், இரவு நேர உணவுக்கு வேறு எங்கும் அலைய வேண்டியதில்லை, இங்கேயே சப்பாத்தி கிடைக்கும் என்று நேயத்துடன் ‘கேன்வாஸ்' செய்வார். ஒப்புக்கொண்டவர்களுக்கு தனி மரியாதை உத்திரவாதம். அவரது சப்பாத்தியின் நுகர்வோராக இல்லாவிடில், சாத்தியமான நேரங்களில் கெடுபிடியான மொழியில் பேசுவார், இரவு உங்கள் அறையில் வெகுநேரம் விளக்கு எரிந்தது என்பது உள்பட. அவரது மொழிக்கு ஏற்ப நண்பர்களும் ஏற்ற இறக்கத்துடன் பேசிக் கடந்து செல்வார்கள். திடீர், திடீரென்று & ஓர் அவசரகால அறிவிப்புக்கு முன்பான படபடப்புடன் காணப்படுவார். அது அவரது வாடிக்கை என்பது புரிந்த நண்பர்கள் அவரைப் போல ‘‘மிமிக்ரி'' செய்தும் காட்டுவார்கள்.

இந்தப் பின்னணியில், நண்பர்களுடன் முன் ஆலோசனை செய்து, ஃஞுச்ஞ்தஞு ஞூணிணூ அttடிtதஞீடிணச்டூ இடச்ணஞ்ஞு (ஃஅஇ) என்ற பெயரில் அங்கே ஒரு குழுவை அமைத்தேன். வேலைக்கு வரும் முன்பு கல்லூரிக் காலங்களில் இருந்த முற்போக்கு இலக்கிய வட்டாரத் தொடர்பின் பின்விளைவு இது. வாராவாரம் சனிக்கிழமை ஓர் அறையில் கூடிப் பேசுவோம். படித்த, புரட்டிய அல்லது படிக்க வேண்டிய புத்தகங்கள் பற்றி, சமூக&அரசியல் நிலவரங்கள் பற்றி, ஒவ்வொருவரின் வாழ்வியல் அனுபவங்கள் பற்றி... நிறையப் பேசுவோம். நாங்கள் மது அருந்தும் பொருட்டே அவ்வாறு கூடுகிறோம் என்ற தவறான புரிதலில், மானேஜர் அந்தப் பொழுதுகளில் மேலே வந்து நோட்டமிட்டுச் செல்வார். சப்பாத்தி ரெடி என்பதைச் சொல்வதற்காக வந்தது போல, வந்து செல்வார். அவர் ‘நினைத்தபடி' எதுவும் பிடிபடவில்லை. ஒரு கட்டத்தில் ‘என்ன, அடிக்கடி கூட்டம் போட்டு பேசுறீங்க..?' என்று விசாரணை அதிகாரி தொனியில் கேட்டார். உள்ளபடி சொல்லி புரிய வைக்க முற்பட்டோம். அவருக்கு ஏற்பில்லை. நண்பர்கள் ஒவ்வொருவராக வேறு இடங்களுக்கு மாறிச் செல்ல, குழுவும் மறைந்தது.

நாளடைவில் மானேஜர் ‘நினைத்தபடி'யும் நடந்தோம். எல்லாம் கூடி வரும் வேளையில், முன்னிரவு குடியமர்வுகளும் நடந்தன. மானேஜர் சப்பாத்தி கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடுவார். அதன்பிறகு தொடங்குவோம். அதற்கு முன்பே, சற்று தொலைவில் பிரதான சாலையில் உள்ள ‘நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு' விளைவிக்கும் அந்தக் கடைக்கு போய் வாங்கி வருவோம். அக்காலங்களில், இடதுசாரி மற்றும் சுயேச்சை அறிவுஜீவிகளின் அடையாளமாக இருந்த ‘ஜோல்னா பை' யைத்தான் ஆளுக்கொன்றாக எடுத்துச் செல்வோம். அவ்வளவா... என்று அசந்துவிடாதீர்கள். பார்லி பானம்தான். கொள்கலன் பெரிது. சுருதி குறைவு. அநேக அன்பர்கள் தொடங்குவது இதில்தான். சிலர் அதிலேயே நின்றுவிடுவார்கள். சிலர் கடந்து சென்று புதிய உயரங்களைத் தொடுவார்கள். ஒருமுறை, வாங்கி வரும் வழியில் வீதி விளக்கு அணைந்துவிட்டது. நாய்கள் சில குரைக்க, சில துரத்த... பீதியில் ஜோல்னா பையின் இருபக்கத்தையும் சேர்த்துப் பிடித்தவாறே வேகமாக வந்தோம். ஓடோடி வந்தோம் என்பதே சரி. இன்னொரு முறை, படியேறும்போது இலக்கை நெருங்கிவிட்டோம் என்ற மெத்தனம் ஒரு நண்பருக்கு. பாட்டில்கள் மோதும் சப்தம். ஏற்கெனவே  சென்றிருக்க வேண்டிய மானேஜர் அன்று தாமதம். ‘என்ன, பாட்டில் வாங்கிட்டு போறீங்களா...

சத்தம் கேட்குது...' என்று கூடுதல் மாத்திரையில் கேட்டார். ‘‘அலெர்ட்'' என்பதற்கு இலக்கணமாக, பையை இன்னொருவர் இறுக்கிப்பிடித்து சப்தத்தை ஒடுக்க, மின்னல் வேகத்தில் அறைக்குச் சென்று பதுக்கிவிட்டோம். மானேஜர் வந்தார். பார்த்தார். கேட்டார். வழக்கம்போல, புலனாய்வில் எதுவும் சிக்கவில்லை. வழக்கத்தைவிட மிகத் தாமதமாக அன்று வீடு திரும்பினார். நாங்களும் வழக்கத்தைவிட தாமதமாகத் தொடங்கினோம். மானேஜர்தான் முதல் சுற்று ‘டாபிக்.'

ஒரு நாள் ‘நைட் ஷிப்ட்' முடிந்து மூத்த நண்பருடன் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்துகொண்டிருந்தேன். எங்கள் மேன்ஷன் இருந்த சாலையின் முனையில் என்னை இறக்கிவிட்டுவிட்டு, அவர் நேராகச் செல்ல வேண்டும். அதன்படி இறங்கி, விடைபெற்றேன். நாலடி வந்திருப்பேன். அறைக்கு செல்லும் வரை ‘‘தம்'' அடித்துக்கொண்டே செல்லலாம் என்று தோன்றியது. சட்டென்று திரும்பி வேகமாக அவரை உரக்க அழைத்தவாறே விரைந்தேன், அவரிடம் தீப்பெட்டி வாங்க. ‘நான் வீட்டுக்குதானே போறேன்... நீங்க எடுத்துட்டு போங்க' என்று கூறி அவர் தீப்பெட்டியைக் கொடுத்தார். வாங்கிக்கொண்டு திரும்பினேன். இதையெல்லாம், தெரு முனையில், கூரை வேயப்பட்ட ஒரு பெட்டிக்கடையின் முன்பு உள்ளடங்கியவாறு அமர்ந்திருந்த இரவு நேரக் கண்காணிப்பு போலீசார் இருவர் கவனித்திருக்கிறார்கள். நான் அவர்களைப் பார்த்துவிட்டுத்தான், வேகமாக ஓடிச் சென்று நண்பரிடம் ஏதோ சொல்லிவிட்டு வந்ததாக‘கருதிக்கொண்டார்கள்.' உள்ளிருந்து வெளியே வந்து, என்னை வழிமறித்து தீவிர தொனியில் விசாரித்தார்கள். பத்திரிகை அலுவலகம், மேன்ஷன் பற்றிய எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்தேன். முதலில் ஒருமையில் விளித்தவர்கள், பத்திரிகையாளன் என்று தெரிந்தவுடன் ‘ங்க' சேர்த்துக்கொண்டார்கள். ‘ஏதோ, அவருகிட்ட வாங்கிட்டு வந்தீங்களே... என்னது?' என்றார்கள். தம் அடிக்க தீப்பெட்டி என்றேன். ‘இங்கேல்லாம் அடிக்க வேண்டாம். ரூமுக்கு போய் அடிங்க.' என்ற அறிவுறுத்தலுடன் அனுப்பினார்கள். பற்றவைக்காமலேயே கனல் எழுந்தது, நெஞ்சில்.

இன்னொரு நாள், எங்கள் மேன்ஷன் இருந்த வீதியிலேயே உள்ள சைக்கிள் கடைக்கு சென்று, வாடகை சைக்கிள் கேட்டேன். சக்கரத்தில் டியூப்பை மாட்டிக்கொண்டே ஏறிறங்கப் பார்த்த சைக்கிள் கடைக்காரர், இல்லை என்பது போலத் தலையசைத்தார். சூடாகிவிட்டேன். அதே வீதியிலிருக்கும் மேன்ஷனில்தான் தங்கியிருக்கிறேன்... பத்திரிகையில் வேலை பார்க்கிறேன்... என்றெல்லாம் வேகமாகச் சொன்னேன். ‘உங்களப் பார்த்தா சிறீலங்கா ஆள் மாதிரி இருக்கு... வேற கடைல கேளுங்க' என்று உறுதியாக மறுத்துவிட்டார். ஒரு தமிழ்ப் பத்திரிகையாளனுக்கு வாடகை சைக்கிள்கூட

சாத்தியமில்லாமல் போய்விட்டேதே என்று பெரும் வருத்தம். அது, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா படுகொலைக்குப் பிந்தைய காலம்.

மேன்ஷன் வாழ்க்கையிலும் மேன்ஷன் காலத்து வாழ்க்கையிலும், எல்லோரையும் போல, எனக்கும் நிறைய அனுபவங்கள். விடிய, விடிய பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களுடன் பொழுது கழிந்தது என்று பொய் சொல்ல விரும்பவில்லை. மனிதர்களை அதிகம் வாசித்தேன். நெருக்கடியான, கொந்தளிப்பான தருணங்களில் நண்பர்களுடன் ஆறுதலாகக் கூடவே வந்தது, இளையராஜாவின் இசை. மற்றபடி, அன்றெழுந்த கேள்விகள் பல இன்றும் கேள்விகளாகவே தொடர்கின்றன. தொடரும்.

கடைசியாக, ஒரு தலைப்புச் செய்தி: பின்னாளில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஓர் இலக்கிய ஆளுமை, அன்று மேன்ஷனில் என்னுடன் தங்கியிருந்தார் அல்லது அவருடன் நான் தங்கியிருந்தேன். ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே பாயில் உறங்கியதில்லை. ஆனாலும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். நிறைய உரையாடுவோம். நீண்ட இடைவெளிக்குக்குப் பிறகு, வாழ்வின் வெவ்வேறு முனைகளில் மீண்டும் சந்தித்தோம். இன்றும், குன்றாமல் தொடர்கிறது நட்பு. அவர் எழுதிய முதல் நாவலின் தலைப்பு ‘உலகு' என்று முடியும்.

செப்டம்பர், 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com