ஆனந்த விகடனில் ஜோக்ஸ் போட ஆரம்பித்த காலத்தில் அவற்றை வாசகர்கள் எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்று யோசிப்பேன். தவிர யாராவது வாசகர்கள் என்னைப் பாராட்டி கடிதம் எழுத மாட்டாரா என்ற ஏக்கமே என்னிடம் இருக்கும்.
ஒவ்வொரு வாரமும் விகடனில் கடிதங்கள் வரும்போது அவற்றை எடுத்து வைத்துக்கொண்டு பார்ப்பேன். எனக்கு எதாவது வந்திருக்காதா என்று. ஒருத்தர், ரெண்டு பேர், மூணுபேர் என்றுதான் எனக்குப் பாராட்டுக் கடிதங்கள் வர ஆரம்பித்தன. அந்த கடிதங்களில் சிலவற்றை நான் பத்திரப்படுத்தி வைத்ததும் உண்டு. பிற்காலத்தில் எனக்கு விகடனில் பதவி உயர்வு கிடைக்க வாசகர்கள்தான் காரணம். ஒரு வாரம் இரண்டு பக்கத்தில் ஜோக்ஸ் போட்டால் வாசகர்களிடம் இருந்து ஏராளமான கடிதங்கள் வரும். இந்தவாரம் நடுப்பக்கத்தில் வந்த மதன் ஜோக்ஸ் நல்லா இருந்தது என்றுதான் அவை சொல்லும். ஆனால் இந்த அதிக எண்ணிக்கையான கடிதங்கள் என்னை வேட்பாளர் மாதிரியும் அவர்களை வாக்காளர் மாதிரியும் ஆக்கிவிட்டது. எனக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வெச்சாங்க.. ஒரு நிர்வாகத்தில் தனிப்பட்ட ஒருத்தருக்கு பதவி உயர்வு கொடுக்கணுமா வேண்டாமா என்று பேசுவதற்கு உருவாகும் தருணங்கள் பொதுவாக அரிதாகவே உருவாகும். அது நம் அதிர்ஷ்டத்தைப் பொருத்தது. விகடனும் அதற்கு விதிவிலக்கு அல்ல. எனக்கு வாசகர்கள் போட்ட கடிதங்களால்... வெளிப்படையாகச் சொல்லவேண்டுமென்றால் விகடன் ஆசிரியர் குழு சற்று மிரண்டு போனது என்றே சொல்லலாம்! அதனால் வாராவாரம் என்னை நடுப்பக்கத்தில் ஜோக்ஸ் போட வைத்தார்கள்! எனக்குப் பதவி உயர்வுகளும் கொடுத்தார்கள்! என் வாழ்க்கையில் முக்கியமான திருப்பங்களை வாசகர்கள்தான் உருவாக்கினார்கள் என்பது உண்மை!
நான் எழுதிய எழுத்துகளுக்கும் கடிதங்கள் வர ஆரம்பித்தன. பேட்டிகள், ரிப்போர்ட்டிங்குகள் வர ஆரம்பித்தபோதும் கடிதங்கள் என்னைக் கவனித்தன. வாசகர்கள் நான் முன்னேறுவதற்காக என் முதுகைப் பிடித்து தள்ளினார்கள் என்றுதான் நினைக்கிறேன்! நாங்கள் அன்பாக ‘எம்டி' என்று அழைக்கும் விகடன் ஆசிரியர் அதை மிக விரைவாகப் புரிந்துகொண்டார்! உங்களிடம் வாசகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் விரும்புகிறார்கள் என்று சொல்லி பதவி உயர்வு கொடுத்தார் உதவி ஆசிரியர், கார்ட்டூனிஸ்ட் என்று! தமிழ்நாட்டு பத்திரிகை வரலாற்றிலேயே இப்படி ஒரு பதவி இருந்திருக்குமா என்பது தெரியவில்லை!
விகடனில் கேள்வி பதில் பகுதியே முன்பு கிடையாது! கேள்வி பதில் பகுதி ஏன் இல்லை என்று வாசகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஒருவாரம் இந்தக் கடிதங்கள் அதிகம் வரவே எம்.டி, அனைவரையும் அழைத்து மீட்டிங் போட்டார்! அப்போது கேள்வி பதில் எழுதலாம் என்று முடிவானது! யார் எழுதுவது என்ற கேள்வி எழுந்தபோது, விகடன் ஆசிரியர் குழுவினர் ஒட்டுமொத்தமாக என்னைத் திரும்பிப் பார்த்தார்கள். எம்.டி, கொஞ்ச நேரம் கண்ணை மூடிக் கொண்டிருந்துவிட்டு என்னைப் பார்த்தார்! முகத்தில் ஒரு புன்னகை! என்ன மதன்? என்ன சொல்றீங்க? எல்லாரும் உங்களையே பார்க்கறாங்க, என்றார். நீங்களும் பாக்கறீங்களா என்றேன். நிச்சயமா என்றார் அவர். ஆனால் அவருக்கு ஒரு சந்தேகம்! நான் பொதுவாக எதையும் எனக்குப் போரடித்தால் நிறுத்திக்கொண்டுவிடுவேன். அது அவருக்குத் தெரியும்! எனவே அதுபோல் இந்தப் பகுதியையும் நிறுத்தக்கூடாது என்று உரிமையுடன் நிபந்தனை விதித்தார். அப்படித்தான் ‘ஹாய் மதன்' தொடங்கியது!
‘ஹாய் மதனி'ல் ஓரிரு வாரங்களுக்கு அப்புறம் பார்த்தால் நிறைய தகவல்கள் கொடுக்க ஆரம்பித்திருப்பேன்! அப்படி என்னை வாசகர்கள் திருப்பி விட்டுவிட்டார்கள்! தனித்துவம் உள்ள பதில்களாக அப்பகுதி மாறியது! நிறையத் தகவல்களை வாசகர்கள் கேட்க ஆரம்பித்ததால் விகடன் ஆசிரியர் இதற்காக ஒரு நூலகமே உருவாக்குமாறு அனுமதி கொடுத்தார்! ஏராளமான நூல்களை வாங்கி அடுக்கினேன்! வாசகர்களுக்கு எனக்கும் ஒரு சடுகுடு போட்டியே ஆரம்பித்தது! எதைப் பற்றியும் கேளுங்கள், எனக்குப் பதில் தெரியும் என்று அர்த்தமில்லை. ஆனால் அது எங்கே கிடைக்கும் என்று தேடிச் சொல்கிறேன் என்று அறிவித்தேன்!
ஆனால் வாசகர்களைச் சந்தித்தது வெகு அரிதாகவே இருந்தது! வாசகர்கள் என்னை சந்திக்க நிஜமாகவே விரும்பினார்கள் என்பதை நான் விகடன் பொன்விழாவின் போது அறிந்தேன். அதற்கான விழாக்களில் நூற்றுக்கணக்கான வாசகர்கள் என்னிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள்! புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்! எனக்கு எப்போதுமே சந்தேகம் உண்டு! நம்மை வாசகர்கள் நிஜமாகவே ஏற்றுக்கொண்டுவிட்டார்களா என்ற சந்தேகம். நானொரு ஈணிதஞtடிணஞ் கூடணிட்ச்ண் என்பதை வாசகர்களும் டெலிபதி வழியாக அறிந்து வைத்திருப்பார்கள் போலிருந்தது! எனவேதான் என்னை நேரில் பார்க்கும்போது வரவேற்று தங்கள் ஏற்பைத் தெரியப்படுத்தினார்கள்!
வள்ளியூரில் ஒரு வழக்கு. அதற்காக நீதிமன்றத்துக்கு நானும் ஆசிரியரும் சென்றிருந்தோம். நாங்கள் வந்திருக்கிறோம் என்று தெரிந்துகொண்டு அங்கிருக்கும் வாசகர்கள் பலர் வந்துவிட்டார்கள். அவர்கள் சும்மா வரவில்லை! பலாப்பழம், வாழைப்பழம் என்று பழங்களாகக் கொண்டுவந்து எங்கள் அறையை நிரப்பிவிட்டார்கள் ! என்ன செய்வது என்று தெரியவில்லை! எல்லாவற்றையும் டிஸ்ட்ரிபியூட் பண்ணுங்கோ என்று ஆசிரியர் சொல்லிவிட்டார்! இதுபோல் வாசகர்கள் அன்பைக் காட்டிய பல சம்பவங்களைச் சொல்லலாம்!
அப்புறம் கேள்வி அனுப்பும் பல வாசகர்கள் அவர்கள் பெயர்கள் மூலமாக அறிமுகம் ஆனார்கள். அவர்கள் முகம் எனக்குத் தெரியாது. எங்காவது என்னைப் பார்க்கும்போது கைகொடுத்து நான் யார் தெரியுமா என்பார்கள்! பின்னர் தன் பெயரைச் சொல்வார்கள். அவர்கள் பெயர் எனக்கு நன்றாகப் பரிச்சயமாகி இருப்பதால்.. அவர்களைச் சந்திக்கும்போது எனக்கு விஐபியைச் சந்திப்பது போல் இருக்கும். ஓ நீங்களா.. ஏன் 25 கேள்விகள் எழுதறீங்க… ஏன் இவ்வளவு கார்டு வாங்கி செலவு பண்றீங்க... என்று சொல்வேன்!
ஜூனியர் விகடனில் ‘வந்தார்கள் வென்றார்கள்' தொடர்தான் நான் முதலில் எழுதியது! எம்.டி,தான் என்னை வரலாறு தொடர்பாக எழுதுமாறு கூறினார்! நான் 12 வாரம் எழுதலாம் என்று சொன்னேன். ஆனால் அவரோ கஜினி, கோரி முகமது பற்றி எழுத ஆரம்பித்து முகலாயர் வரை எழுதுமாறு கூறினார். அந்தத் தொடர் என்னை வேறு தளத்துக்குக் கொண்டு சென்றது. லேசில் மற்றவர்களை ஏற்றுக்கொள்ளாத பல எழுத்தாளர்கள் கூட என்னை எழுத்தாளனாக ஏற்றுக்கொண்டது அதற்குப் பிறகுதான்!
இதில் ஒரு சிக்கலான நிகழ்வும் ஒன்று நடந்தது! திடீரென ஒரு பெண் என்னைத் தன் கணவராக கற்பனை செய்துகொண்டு கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டார். என்னை எங்கெங்கோ கண்டதாகக் கடிதம் எழுதுவார். எனக்கு அச்சமாக இருந்தது. அலுவலகத்திலிருந்து என் சார்பாக நிருபர்கள்கூட அவரைச் சந்தித்து இப்படிப் பண்ணாதீர்கள் என்று சொன்னார்கள்! ஆனால் அவரோ காவல் நிலையம்கூட சென்றுவிட்டார்! அங்கிருந்து ஒரு ஆய்வாளர் போன் செய்து சார் என்ன பிரச்சனை? தீர்த்துவிடுவோம் என்று சொல்லும் அளவுக்குப் போய்விட்டது! நான் அந்த அம்மாவுக்கு ஒரு பெரிய கடிதம் எழுதிக் கொடுத்தனுப்பினேன். நீங்கள் பார்க்கவேண்டியது ஒரு மருத்துவரை என! ஒரு கட்டத்தில் திடீரென கடிதம் வருவது நின்றது! அவர் குணமாகி இருக்கவேண்டும்! எனக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது!
கலைஞர் அவர்களின் ஒரு பிறந்த நாள் அன்று அவரை நிறைய ஓவியர்களை அழைத்துச் சென்று வரையச் செய்தேன். அவர் இயல்பாக அமர்ந்திருந்தார். ஓவியர்கள் அவரை வரைந்துகொண்டிருந்தார்கள். நான் அவர் அருகே சும்மா உட்கார்ந்திருந்தேன். நீங்க வரையலையா என்றார் கலைஞர். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை! நான் கார்ட்டூன் தான் வரைவேன் சார் என்றேன். பரவாயில்லை வரையுங்க என்றார். அங்கிருந்தவர்களிடம் வரைவதற்கான பொருட்களை வாங்கி அவசர அவசரமாக யோசித்து ஒரு கார்ட்டூன் போட்டேன். மேலாகவும் கீழாகவும் ஒன்றை ஒன்று பார்த்திருக்கும் இரு உள்ளங்கைகள். கீழே இருக்கும் கையில் கலைஞரை நிற்க வைத்திருந்தேன். மேலே இருக்கும் கையின் மீது பதவி என்றும் கீழே இருக்கும் கை மீது தமிழ் என்றும் எழுதி இருந்தேன்! பதவி போய்விட்டாலும் தமிழ் கைவிடாது என்ற அர்த்தத்தில்!! வாங்கிபார்த்த கலைஞர் நல்லா இருக்கு.. என மூன்று நான்கு முறை சொல்லிக்கொண்டே இருந்தார்! அவரையும் என் வாசகர் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம் இல்லையா?
டைட்டானிக் படம் வெளியான சமயம் ஒரிஜினல் டைட்டானிக் முழுகியது, டைட்டானிக் படம் எடுக்கப்பட்ட விதம், டைட்டானிக் பட விமர்சனம் என்று மூன்று வாரம் எழுதினேன். அமெரிக்காவில் ஒரு வாசகர். அவர் இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கொலம்பியா படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பியிருக்கிறார்! அவர்கள் தமிழில் இப்படியெல்லாம் எழுதுகிறார்களா என்று ஆச்சரியப்பட்டு அவர்களின் அடுத்த படமான காட்ஸில்லா வந்தபோது பிலிப்பைன்ஸ் தலைநகரமான மணிலாவில் இயக்குநர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு அனுப்பினார்கள்! அந்த வாசகரின் ஆர்வத்தால் கிடைத்த வாய்ப்பு அது! ஆனால் மணிலாவுக்குக் கிளம்பியபோது கிடைத்த ஒரு அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொண்டே ஆகவேண்டும்! வங்காள விரிகுடா மீது பறந்துகொண்டிருந்தபோது நான் பயணம் செய்த விமானத்தின் இறக்கையில் எஞ்சின் கோளாறு! காற்றை எதிர்த்துப் பறந்தால் எரிந்துவிடும் அபாயம்! விமானத்தைத் திருப்பப்போவதாக அறிவித்தனர்! என் சக பயணிகள் பதற்றத்தில் கடவுளைப் பிரார்த்திக்க ஆரம்பித்தனர்! சிலர் அழ ஆரம்பித்தனர்! சொன்னால் நம்ப மாட்டீர்கள்! நான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்! மரணத்தை எதிர்கொள்ளும் போது அதை அமைதியாக எதிர்கொள்வதுதான் மனிதனுக்கு ஒரே வழி என்று நினைக்கிறேன்! இந்த திகில் அனுபவம் சென்னைக்கு திரும்பி வந்ததுடன் முடிவடைந்தது. மறுநாள் மணிலாவுக்குச் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்! இந்த திகில் பயணத்தில் என்னை மாட்டிவிட்டதுகூட அந்த பெயர் தெரியாத வாசகர்தான் என்று சொல்லலாமா?
சந்திப்பு: அந்திமழை ஆசிரியர் குழு
ஜனவரி, 2018.