என் பணிக்குத் துணை நின்றவர்

என் பணிக்குத் துணை நின்றவர்
Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு அவர்களை மனைவியர் சிறப்பிதழுக்காக சந்திக்க வேண்டி தொடர்பு கொண்டேன். மறுநாளே வெளியூர் செல்ல இருப்பதாகக் கூறினார். இன்று வேலை இருப்பதால் சந்திக்க இயலாது என்று அவர் கூறிவிடவே, வருத்தத்துடன் தொலைபேசியை வைத்துவிட்டேன். சற்றுநேரம் கழித்து அவரே மீண்டும் அழைத்தார். ’இன்று மாலை மூன்று மணிக்கு இல்லத்துக்கு வந்துவிடுங்கள்’ என்றார். இன்றைய வேலை ரத்தாகிவிட்டது எனப் புரிந்துகொண்டு மகிழ்வுடன் சரியான நேரத்தில் சென்னை நந்தனத்தில் உள்ள அவர் இல்லத்தின் முன்பாக புகைப்பட கலைஞர் பேஜர் கிருஷ்ணமூர்த்தியுடன் நின்றேன்.  மிகமுக்கியமான ஒரு தலைவரின் இல்லம் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் மிகமிக எளிமையாக இருந்தது அந்த வீடு. அழைப்பு மணி இல்லை. வெளிச் சுவர் வாசல் கதவைத் திறந்துகொண்டு உள்ளே முற்றத்துக்குச் சென்றபோது பூட்டப்பட்ட இல்லத்தின் உள்ளே இருந்து எட்டிப்பார்த்தார் தோழர். மெல்ல நடந்துவந்து வெளிப்பக்கமாக இருந்த அலுவலக அறையில் அமர்ந்து அந்திமழை இதழ் பற்றி விசாரித்தார். நான் கொண்டுபோயிருந்த பழைய இதழ்களைப் புரட்டினார். அன்பான ஒரு தாத்தா முன் அமர்ந்திருப்பதுபோல் இருந்தது. நான் பாஜக ஆட்சி பற்றியோ, உள்ளாட்சி தேர்தல் குளறுபடிகளைப் பற்றியோ கேள்விகள் கேட்பேன் என்று அவர் நினைத்திருக்கலாம். மெல்ல மனைவியர் சிறப்பிதழுக்காக தங்கள் துணைவியார் பற்றிச் சொல்லவேண்டும் என்று ஆரம்பித்தேன். அப்படியே ஆழமாக கொஞ்ச நேரம் பார்த்தார். பின்னர் அவரிடம் அபூர்வமான ஒரு குழந்தைத் தனம் வந்து ஒட்டிக்கொண்டது. சிரித்தார்.

கனிந்து உருகிய குரலில் தன் வாழ்க்கைத் துணையான ரஞ்சிதம் அம்மாளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். தியாகச் சுடரான வாழ்வை வாழும் நல்லக்கண்ணு அவர்களின் துணைவியாரின் வாழ்வு முறையும் அதற்குக் குறைந்தது அல்ல. தோழருடையது சமூகப் போராட்ட வாழ்வு. ரஞ்சிதம் அம்மாளுடையது குடும்பப் போராட்ட வாழ்வு. கணவருக்கு என்றைக்கும் துணை நிற்கும் வாழ்வு.

“எனக்குத் திருமணம் மிகவும் தாமதமாகத்தான் நடந்தது. 1949-ல் கட்சி தடைப்பட்ட சமயத்தில் ஓராண்டு தலைமறைவாக இருந்தபோது நெல்லை சதிவழக்கில் கைதானேன். தொண்ணூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். எங்களை சிறப்பு நீதிமன்றம் போட்டு விசாரித்து சிலபேரைக் கழித்தார்கள். பின்னர் அமர்வு நீதிமன்றத்தில் நாங்கள் தண்டிக்கப்பட்டோம். பாலதண்டாயுதம், ப.மாணிக்கம், மாயாண்டி பாரதி, நல்ல சிவம், நான் உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை. என்னிடம் ஆயுதம் இருந்ததால் கூடுதலாக ஆறு ஆண்டுகள். 52 தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் நின்றது. சென்னை மாகாணத்தில் மட்டும் 16 பேர் வென்று சட்டமன்றம் சென்றார்கள். இதையடுத்து வழக்கில் சிக்கி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆயுள் தண்டனை ரத்து செய்யப்பட்டாலும் வெடிகுண்டு சட்ட தண்டனையை  சிறையிலேயே கழித்துவிட்டு 56 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியே வந்தேன். அப்போது எனக்கு 31 வயது. தொடர்ந்து கட்சிப் பணியில் ஈடுபட்டேன். அப்போது வீட்டில் திருமணப் பேச்சுவார்த்தை நடந்தது. ‘இது சாத்தியப்படாது. நான் கட்சிப்பணியில் இருப்பவன். என்னைப் புரிந்துகொள்ளக் கூடிய பெண் இல்லாமல் எதுவும் சாத்தியமாகாது’ என்று கூறிவிட்டேன். அப்போதுதான் திருநெல்வேலிக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த அன்னசாமியின் மூத்த மகள் ஆசிரியராக வேலைக்குப் படித்துள்ளார் என்று  சொன்னார்கள். அன்னசாமி கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராக இருந்தவர். கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர். கட்சியின் மீது மிகுந்த பற்று உள்ளவர். எனவே அவருக்கு என் பணிகள் பற்றித் தெரியும் என்பதால் இந்த திருமணம் சாத்தியமானது. நெல்லைக் குறுக்குத்துறையில் பேராசிரியர் வானமாமலை தலைமையில் கட்சி உறுப்பினர்களின் வாழ்த்துக்களுடன் திருமணம் நடந்தது.

என் மனைவி ஒரு நடுநிலைப் பள்ளியில் வேலை பார்த்து அதை திருமணத்துக்குப் பின் உதறிவிட்டார்.

அப்புறம் அவருக்கு மாவட்ட போர்டு பள்ளியில் செகண்டரி கிரேட் ஆசிரியை வேலையில் அவர் நல்ல மதிப்பெண் எடுத்திருந்ததால் கிடைத்தது.

ஸ்ரீவைகுண்டத்தில் என்னுடையது விவசாய குடும்பம். ஆண்டுதோறும் சாப்பாட்டுக்கு நெல் கிடைக்கும். அதைத்தவிர என்னிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். கட்சியின் முழுநேர ஊழியராக, போக்குவரத்துச் செலவுகளுக்கு மட்டும் கிடைக்கும் தொகையே என் வருமானம். இரண்டு பெண்குழந்தைகள் பிறந்தன. மூத்த மகள் பிறக்கும்போது நான் உடன் இருந்தேன். இரண்டாவது பெண் பிறக்கும்போது உடன் இருக்க முடியவில்லை. அப்போதெல்லாம் மாதத்துக்கு இரண்டு நாள்தான் வீட்டுக்குப் போகமுடியும். மற்றபடி எல்லாம் கட்சிப் பணிதான். பலநாட்கள் தொடரும் உண்ணாவிரதப் போராட்டங்கள், சிறைவாசம் என்று போராட்டங்கள்.

அவர் கட்சிக் குடும்பம் என்பதால் ஏராளமான இலக்கியங்களையும் நூல்களையும் படித்தவர். அதனால் என் லட்சிய வாழ்வுக்கு எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக்கொண்டார். பிள்ளைகளின் பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு அனைத்தையும் அவர்தான் கவனித்துக்கொண்டார். அவர் எந்த கிராமத்தில் வேலை பார்த்தாலும் அங்கெல்லாம் அவருக்கு நல்ல பெயர். எல்லோருக்கும் உதவிகள் செய்யக்கூடியவர். பெரிய ஆசைகள் இல்லாமல் இருப்பதைக் கொண்டு வாழ்கிறவர்.

திருமணமான பின் பல ஆண்டுகள் கழித்து வெளியே கூட்டி வந்தது என்றால் சென்னையில் நடந்த உலகத் தமிழ்  மாநாட்டுக்குத்தான். முதல்வர் அண்ணாத்துரை நடத்திய மாநாடு அது. அதைவிட்டால் அவரை எங்கும் அழைத்துச் சென்றதில்லை. என்னுடன் எங்காவது சென்றுவிட்டு வீடு  திரும்புவதென்றால் அவ்வளவு எளிதில்லை என்று அவருக்குத் தெரியும். வழியில் கட்சித் தோழர்களைக் கண்டால் பேருந்து நிலையத்திலேயே மணிக்கணக்காக பிரச்னைகளைப் பேச அவர் காத்திருக்க வேண்டியிருக்கும்.

அவர் நிறையப் படிப்பார். ஆனந்தவிகடனை இன்று வரை அவர் விடாமல் வாசிப்பவர்.  பணி ஓய்வுக்குப் பின்னர் சென்னைக்கு என்னுடன் வந்துவிட்டார்.

கட்சிக்கு இருக்கும் மரியாதையில் அவர் பெருமை கொள்பவர். எதையும் எதிர்பாராமல் அவர் நடந்துகொண்டதால்தான் நானும் தடையின்றிக் கட்சிப் பணி செய்யமுடிந்தது. குடும்பம் என்பது எப்போதும் எனக்குப் பாரமாக இல்லாமல் பார்த்துக்கொண்டார்” தோழர் சொல்லிக்கொண்டே போனார். சில இடங்களில் தகவல் குறித்து மறதி ஏற்படுகையில் நூல்களை பார்த்து சரி செய்துகொண்டார். ”ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி வந்திரக் கூடாதில்லையா?” என புன்னகைத்தார்.

நேர்காணல் முடிந்து விடைபெறுகையில் திடீரென ஒரு விஷயம் அவர் நினைவுக்கு வர, “அவங்க அப்பா 95-ல்  நெல்லையில் நடந்த சாதிக் கலவரத்தில் கொல்லப்பட்டார். அன்றைக்கும் அவர் வருத்தப்பட்டு ஒரு வார்த்தை கூட பேசலை” என்றார். எளிமையான தோழரை வணங்கி விடைபெற்றேன்.

அக்டோபர், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com