தூக்கத்தில் அடிக்கடி என்ன கனவு வருகின்றது என்று யோசித்துப் பார்த்தால், கடைசியாக என்ன கனவு கண்டேன் என்பதே நினைவுக்கு வர மறுக்கிறது. ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு கனவு அடிக்கடி வந்திருக்கிறது.
சிறுபிராயத்தில் அப்பாவின் சைக்கிளில் அவருடன் பயணிப்பது போல கனவுகள் வரும்; அப்போது இராணுவத்தினர் வீதிகளில் மறித்து அடையாள அட்டை கேட்பார்கள். பதின்ம வயதுகளில் வந்த கனவுகளின் அடிநாதம் லட்சியங்கள் நிரம்பியதாக இருந்திருக்கிறது. அதன் மையச்சரடு ஒன்றே, தமிழர்கள் இரண்டாந்தர பிரஜைகளாக வாழாத நிலம் வேண்டும் என்பதோடு தொடர்பு பட்டதாக இருந்திருக்கிறது. அன்றைய கால பதட்டங்கள் கொந்தளிப்பாக நினைவுக்கு வருகின்றன. அதன் பின்னர் நிலம்விட்டு நீங்க வேண்டும் என்ற கனவு எனக்குள் வளர்ந்தது. அது ஏன் என்பதற்கான பௌதிக காரணங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், என் அடையாளங்களுக்காக அடிப்படை உரிமைகள் அவமதிக்கப்பட்டு மறுக்கப்படும் இடங்களில் வாழ விரும்பாத ஒரு லட்சியக் கனவு உள்ளே இருந்ததா என்றும் யோசித்துப் பார்க்கிறேன்.
ஐரோப்பிய புகலிடச் சூழலும் அடையாளங்களுடன் சேர்ந்தே தனிமனிதர்களை அணுகுகிறது. மிக நுண்மையான புறக்கணிப்புகள் இருக்கவே செய்கிறன. ஆனால், ஒப்பீட்டளவில் என்னுடைய பூர்விக நிலத்தில் இருந்த உள்ளார்ந்த அச்சம் இங்கில்லை என்பது பென்னம்பெரிய ஆசுவாசத்தைத் தருகின்றது. யுத்த காலத்தில், கிடைக்க வேண்டிய வயதில் எனக்கு போலியோ சொட்டு கிடைத்தது. அத்தனை இடப்பெயர்வுகளிலும் உணவு கிடைத்தது. உயிர்பிழைத்தேன் என்பதற்கு அப்பால், ஊனம் அடையாமல் என்னை அத்தனை எறிகணை வீச்சிலிருந்து பாதுகாத்த என் பெற்றோரை நினைத்துப் பார்க்கிறேன். ஒரு காலகட்டத்தில் எல்லாப் பெற்றோரின் மகத்தான கனவுகளும் அவையாகவே இருந்தன. அந்தக் கனவு எனது வருங்கால என் சந்ததிகள் மீது எனக்கு இல்லை என்பது, ஒரு தலைமுறையின் பெரிய விடுதலையும் கூட. எழுத வேண்டியதும், என் இனத்துக்காக செய்யவேண்டியதும் நிறைய இருக்கிறன.
அக்டோபர், 2022