எனது கனவு

எனது கனவு
Published on

கனவு மெய்ப்பட வேண்டும்  என்று நினைக்காதவர்களே இல்லை.எழுதிக் கொண்டே இருப்பது மட்டுமே எனது கனவாக இருந்தது.

பொதுவாகவே பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் பொழுது பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். அப்படித்தான் எனக்கும் நூறுக்கும் மேற்பட்ட மேடைகளில் பேசுவதற்கான வாய்ப்பு கிடைச்சுது. மேடைகள்ல பேசும் போது நம்ம கனவு அது இதுன்னு பெருசா பேசுவோம் ஆனா கால ஒட்டத்துல அது எல்லாம் கரைஞ்சு போயிடும்.

12ஆம் வகுப்பு முடிச்ச உடனே தமிழை பாடமா எடுத்து படிக்கணும்னு நெனச்சு கனவு கண்டேன் . ஆனா அது நிறைவேறாம போயிடுச்சு.என்னோட குடும்பத்துல முதல் எஞ்சினியர் நான்தான் அப்படீன்னு என் சொந்தக்காரங்க முன்னாடி சொல்லணும்னு ஆசைப்பட்ட  என் அம்மாவோட கனவ நான் நிறைவேத்த வேண்டிய கட்டாயத்துல இருந்தேன். பன்னிரண்டாம் வகுப்பில் மாநில அளவில் 3-வது மதிப்பெண், மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்று  பூசாகோ பொறியியல் கல்லூரியில்  சேர்ந்து எஞ்சினியரிங் படிக்க வேண்டியதாக இருந்தது.என் கனவு அப்படியே கலைஞ்சு போயிடுச்சு. என் அம்மா அப்பா கனவு நிறைவேறினது சந்தோஷம்.

கல்லூரிக்கு அப்புறம் அது ஆணோ பெண்ணோ , கனவ துரத்துவதை விட விட காச துரத்தறதுக்கு தான் அதிகம் போராடனும். அது தான் வாழக்கையோட யதார்த்தம் . கல்லூரி முடிச்சு Accenture ல  சாப்ட்வேர் என்ஜினீயர் பிளேஸ்மென்ட் கிடைச்சதுக்கு அப்புறம் என் கனவைத் துரத்திக் கொண்டே இருந்தேன். காலேலேர்ந்து இரவு வரைக்கும் ஆங்கிலம் மட்டுமே பேசி மெயில் மட்டுமே போட்டுகிட்டு இருக்கிற ஒரு  கார்ப்பரேட் நிறுவனத்துல வேலை பார்த்துகிட்டே என் தமிழ் எழுத்துக்களை எப்படி அச்சாக்கலாம்னு தினமும் கனவு காணுவேன். அப்ப தான்,பல தொலைக்காட்சி மேடைகள்ல,  பல பொது மேடைகள்ல , கவியரங்கம் பட்டிமன்றம், தனிப்பேச்சுன்னு நிறைய நிறைய மேடைகள்ல வாய்ப்புக் கிடைச்சுது.

வேலைக்கு இடையே தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்த ஒரு கட்டத்துல எனக்கான களம் கிடைச்சுது. என் எழுத்துக்கள என் பேச்சுகள புத்தகமா மாத்த கனவு கண்டேன். என் நண்பர் அருண்பாரதி அந்த கனவ நிறைவேத்தி வச்சார். அதுக்கு அப்புறமா தொடர்ந்து நிறைய பத்திரிக்கைகள்ல  என்னோட சிறுகதைகள், நாவல்கள்,தொடர்கதைகள் எல்லாமே பிரசுரம் ஆக ஆரம்பிச்சுது.

வேலைய விடாம மும்பை,பெங்களூர்,ஹைதராபாத் இப்படி பணி நிமித்தமா பயணிக்கும் போது நான் சந்திச்ச  மனிதர்களை பற்றி, அங்க இருந்த சூழல்கள் பற்றி, ஐடி வாழ்க்கை முறை பற்றி, பெண்களின் வாழ்க்கை நிலை பற்றி, சோனாகாச்சி விபசார விடுதிகள்ல ஆரம்பிச்சு வாரணாசியில பெற்றோர்களை கொண்டு விடும் இன்றைய தலைமுறையினர் வரை  நிறைய எழுதினேன். அது தான் , புரட்சியின் உச்சகட்டம், வாரணாசி, நிறமி, சாலிகிராமத்தில் ஜானகி இப்படி பிரசுரம் ஆச்சு.

எழுத்து தனி, வேலை தனின்னு  இருந்த என்னோட வாழ்க்கையில எழுத்தையே என்னோட தொழிலா மாத்தணும் அப்படிங்கறது தான் பெரிய கனவா  இருந்தது. அதை நிறைவேற்ற என்  கணவர் அருண்பாரதி தைரியத்தை கொடுத்தார். அதன்பிறகுதான் தொலைக்காட்சி தொடர்கள் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப தைரியத்தோட பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் என்னுடைய மென்பொருள் பணியிலிருந்து விடுபட்டு முழுநேர எழுத்தாளரா மாறினேன் .

கிட்டத்தட்ட 20 தொலைக்காட்சி தொடர்களுக்கும் மேல திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறேன்.  இப்பவும் கனவ துரத்துறேன். கண்ணுக்குள்ள இருக்கிற கனவைக் காட்சிப்படுத்த, கடின உழைப்பு தேவை . அடுத்தவன் என்ன பண்றான்னு யோசிக்காம அடுத்து என்ன பண்ணணும்னு யோசிக்கிறேன்.

அக்டோபர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com