எனக்கு இன்றும் ஒரு சந்தேகம்

முதல் புத்தகம்
Published on

திட வடிவத்தில் என் முதல் நூல் ‘கரைந்த நிழல்கள்.’

நான் 1964 தொடங்கியே ஒரு சிறுகதைத் தொகுதிக்குத்தான் முயற்சி செய்த வண்ணம் இருந்தேன். அன்றைய பதிப்பாளர்கள் சிறுகதைகள் விற்பதில்லை என்பதைத் தவிர நூலக வாங்குதலும் இருக்காது என்றார்கள். மிகப் பிரபலமான எழுத்தாளர்களுடைய நாவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கும், ஆனால் அவர்களுடைய சிறுகதைகள் பத்திரிகைகளோடு நின்று விடும்.

 அந்த நேரத்தில் ‘தீபம்’ நா. பார்த்தசாரதி அவர்கள் என்னை ‘தீப’த்தில் ஒரு தொடர்கதை எழுதச் சொன்னார். அவர் அப்பத்திரிகை தொடங்கியதிலிருந்து ‘தீபம்’ சுவரொட்டிகளில் எழுத்தாளர்கள் பெயர்கள்தான் கொண்டிருக்கும். நானறிந்து எழுத்தாளர்களுக்கு முதல் இடம் கொடுத்த பத்திரிகை ‘தீபம்’தான். அவரைப் பற்றிப் பல மணிக்கொடி எழுத்தாளர்கள் சாதகமான எண்ணம் கொண்டிராவிட்டாலும் நாபா அவர்களின் கதை கட்டுரைகளைக் கேட்டு வாங்கிப் போடுவார்.

 நாபா நான் எழுதப் போகும் கதையின் சுருக்கத்தைக் கேட்டார். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் இறுதி நாட்கள் பற்றி எனக்கொரு தகவல் கிடைத்திருந்தது. நான் பொதுவாக ஒருவழக்கில் பாதிக்கப்பட்ட நடிகர் பற்றி இருக்கும் என்றேன். அவரே அப்படி ஒரு நாவல் எழுதுவதாக இருந்ததாகச் சொன்னார். இது எனக்கு வசதியாகப் போய் விட்டது. என் தொடர் கதை அறிவிப்பு வந்து விட்டது. ஆதலால் கதை, அமைப்பு எல்லாம் என் விருப்பம் போல முடிவு செய்து கொள்ளத் தடை ஏதும் இல்லை.

நான் ‘கரைந்த நிழல்கள்’ நாவலை ஒரு பெரும் சாதனை என்று கருதியதில்லை. பத்து அத்தியாயங்கள். முதல் மூன்றும் ஒரு பாகம். அடுத்த மூன்று இரண்டாம் பாகம். ஏழாவது அத்தியாயம் ஒரு தனி பாகம். எட்டு, ஒன்பது நான்காம் பாகம் கடைசி அத்தியாயம் ஒரு பாகம். மொத்தம் ஐந்து பாகங்கள்.

‘தீபம்’ வாசகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. வலது கம்யூனிஸ்ட் வாசகர்களிடையேயும் விசேஷ கவனம் பெற்றது. வலது கம்யூனிஸ்ட்களுக்குப் பிடித்ததால் இடது கம்யூனிஸ்டுகளுக்குப் பிடிக்கவில்லை. நான் என்ன எழுதினாலும் செ. செந்தில்நாதன் வாங்கு வாங்கு என்று வாங்குவார். இதெல்லாம் முதல் ஓரிரு ஆண்டுகளுக்கு. அவர் வக்கீல் தொழிலில் ஆழ்ந்து விட்டார். நிழல்கள் கரைந்து விட்டன.

நான் 1956ம் ஆண்டு ‘கலைமகள்’ பத்திரிகையில் ஓர் அறிவிப்புப் பார்த்தேன். அடுத்த ஆண்டு அப்பத்திரிகைக்கு வெள்ளி விழா ஆண்டு. அதையொட்டி அவர்கள் நாவல் போட்டி,சிறுகதைப் போட்டி என இரண்டு போட்டி நடத்தினார்கள்.

சிறுகதை என்னிடம் தயாராக இருந்தது. அனுப்பி விட்டேன். நாவல் எழுதத் தொடங்கினேன். மூன்று அத்தியாயங்கள் எழுதினேன். அதற்கு மேல் எனக்கு அப்போது ஒரு பெரும் சோர்வு ஏற்பட்டது. பத்தாண்டுகள் கழித்துத்தான் அதைத் தொடர்ந்து எழுதி முடித்தேன். ‘கலைமகள்’ அமரர் சூடாமணி எழுதிய ‘மனதிற்கு இனியவள்’ என்ற நாவலுக்குப் பரிசு அளித்தது. அதுவும் சூடாமணி அவர்களுக்கு முதல் நாவல். என் சிறுகதை வெள்ளி விழா இதழுக்கு அடுத்த இதழில் பிரசுரமாயிற்று.

‘காலச்சுவடு பதிப்பகத்தார்’ நான் இதுவரை பிரசுரித்த சிறுகதைகள் அனைத்தும் ஒரே நூலில் இருக்கும்படிப் பிரசுரித்திருக்கிறார்கள். மலைப்பாகவும் இருக்கிறது, வெட்கமாகவும் இருக்கிறது.

‘காலச்சுவடு பதிப்பகத்தார்’ என்னுடைய கடைசி நாவலைப் பிரசுரித்திருக்கிறார்கள். ‘யுத்தங்களுக்கிடையில்.’ இதை எழுதும்போது நான்  நோய்வாய்ப்பட்டிருந்தேன். அது நல்ல நூலோ,இல்லையோ, என்னை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டது.

எனக்கு இன்றும் ஒரு சந்தேகம். எது முதல் நூல்? பிரசுரமாவது மட்டும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டுமா?

ஜூன், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com