ஓர் உண்மையான விடையை நூறு முறை சொல்லிச் சொல்லி நமக்குச் சலித்துப் போய்விட்டது. ஆனால் ஒரு புனைவு திரும்பத் திரும்ப முன் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
அந்தப் புனைவு இதுதான் - ‘திராவிட இயக்கமும், திமுக ஆட்சியும் தமிழுக்கு, தமிழர்களுக்கு, தமிழ் நாட்டிற்கு என்ன செய்து விட்டன? எதுவும் செய்யவில்லை.
வேறு வழியில்லை. நாமும் திரும்பத் திரும்ப விடை சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது.
1916 ஆம் ஆண்டு, திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சி என்று அறியப்படும் தென்னிந்திய நல உரிமைக் கழகமும், தனித்தமிழ் இயக்கமும் தோன்றின. 1926 இல் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் இணைந்து 1944 இல் திராவிடர் கழகம் ஆகியது. அதன்பின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து 1949 ஆம் ஆண்டு திராவிடமுன்னேற்றக் கழகம் பிறந்தது.
தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் மொழி அடிப்படையில் ஒன்றின. ஆனால், சமய அடிப்படையில் வேறுபட்டு நின்றன. சமற்கிருத மேலாண்மை எதிர்ப்பு, பழந்தமிழ்ச் சொற்களின் மீட்டுருவாக்கம், மொழிக் கலப்பற்ற எழுத்து, பேச்சுஆகியன தனித்தமிழ் இயக்கத்தின் நிலைப்பாடும், தொண்டுமாக இருந்தன. எனினும் அவர்களின் பணி, தமிழ் மொழி அறிவும், புலமையும் உள்ளவரிடமே பெரிதும் சென்று சேர்ந்தன என்று சொல்லலாம்.
வெகுமக்களிடம் தமிழ் உணர்ச்சியை எழுப்பிய இயக்கம் திராவிடர் இயக்கமே. சமற்கிருதப் பெயர்களைத் தமிழ்ப் பெயர்களாக மாற்றிக் கொள்வதைத் திராவிட இயக்கம், குறிப்பாகத் திமு கழகம் ஓர் இயக்கமாகவே நடத்திற்று! தலைவர்கள் பலர் தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டனர். நாராயணசாமி நெடுஞ்செழியன் ஆனதும், ராமையா அன்பழகன் ஆனதும், சின்னராஜு சிற்றரசு ஆனதும் எல்லாம் அந்தக் காலகட்டத்தில்தான். 1960களில் வணக்கம் என்று சொன்னாலே நீங்கள் திமுககாரரா என்று கேட்பதும், தமிழ்ப் பெயர் இருக்குமானால், உங்கள் அப்பா திமுக காரரா என்று கேட்பதும் இயல்பாக இருந்தது.
பேராசிரியர் கா. சிவத்தம்பி, ‘நாவாவின் ஆராய்ச்சி' என்னும் ஆய்வேட்டில், ‘திராவிட இயக்க வரலாற்றில், அதன் கருத்து நிலைப் போக்கில், ஒரு முக்கிய பெரு பேறாக அமைந்தது தமிழ்ப் பிரக்ஞை, தமிழ்த் தேசிய உணர்வு ஆகும்' என்று எழுதுகிறார்.
பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த எழுத்தாளர் பொன்னீலன், ‘‘கழகத் தலைவர்கள் தட்டி எழுப்பிய தமிழ் உணர்ச்சியாலும், தமிழ் மக்களைத் திமுக சென்றடைந்தது.'' என்று, ‘தற்காலத் தமிழ் இலக்கியமும், திராவிட இயக்கச் சித்தாந்தங்களும்' என்னும் தன் நூலில் குறிப்பிடுகின்றார்.
ஆய்வாளர் முனைவர் இரா. வேங்கடாசலபதி, ‘அந்தக் காலத்தில் காபி இல்லை' என்னும் தன் நூலில், ‘திராவிட இயக்கத்தின் முதன்மையான சாதனை, தமிழ் அடையாளம் மற்றும் தமிழ்ப் பண்பாட்டை மறு வரையறை செய்ததே! தமிழ் அடையாளமும், தமிழ்ப் பண்பாடும் அதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில், அதிகமான ஜனநாயகத் தன்மையுடனும், அனைத்துலகப் பொதுமை மற்றும் மானுடப் பண்புகளுடனும் கட்டமைக்கப்பட்டன' என்று குறித்துள்ளார். தமிழ் உணர்வைத் தழுவிச் செல்லும் இத்தகைய போக்கு இருந்ததன் காரணமாகவே, 1938 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியபோது, தங்களுக்குள் இருந்த சமயம் தொடர்பான மோதலைப் புறந்தள்ளி, மறைமலையடிகளுடன் பெரியார் இணக்கமான போக்கை மேற்கொண்டார்.
1935 ஆம் ஆண்டே ஒரு திருப்பம் ஏற்பட்டது. 'அறிவுரைக் கொத்து' என்னும் நூலில் மறைமலை அடிகளார் எழுதியிருந்த கட்டுரை ஒன்றை அப்போது பல்கலைக் கழகப் பாடத்திட்டத்தில் இணைத்திருந்தனர். அது சமற்கிருத மொழிக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருக்கிறது என்று கூறி, அதனை உடனடியாக நீக்க வேண்டும் என்று தினமணி, சுதேசமித்திரன் ஆகிய ஏடுகள் எழுதியிருந்தன. அந்த ஏடுகளைக் கண்டித்தும், அடிகளாரை ஆதரித்தும் தந்தை பெரியார் தலையங்கம் ஒன்றை எழுதினார்.
இதனை அடிகளாரே எதிர்பார்க்கவில்லை. சமயம் அவர்களைப் பிரித்தாலும், தமிழ் அவர்களை இணைத்தது. அதன்பின்பே இருவருக்கும் இடையில் ஓர் இணக்கம் ஏற்பட்டு, இந்தி எதிர்ப்புப் போரில், இரண்டு இயக்கங்களும் ஒருங்கிணைந்து நிற்க முடிந்தது. இதனை அடிகளார் தன் நாள்குறிப்பில் (28.06.1935) குறித்துள்ளார்.
தமிழ், தமிழர் என்று வந்துவிட்டால், தன் கடவுள் மறுப்புக் கொள்கையைத் தாண்டி ஒருங்கிணையும் பண்பு பெரியாரிடமிருந்தது. அவ்வாறே பிற்காலத்தில், சிலம்புச் செல்வர் ம.பொ.சி யுடன் பல கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், தமிழ், தமிழின முன்னேற்றத்திற்காக அறிஞர் அண்ணா அவருடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார். அதற்குப் பல எடுத்துக் காட்டுகளைத் தர முடியும்.
தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, மக்கள் நலப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கட்சி திமுக. 1952 இறுதியில் கடும்புயல் ஒன்று தமிழகத்தைத் தாக்கியது. விவசாயிகளும், நெசவாளர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அவர்களுக்கு உடனடியாக உதவ முன்வந்த கட்சி தி.மு. கழகம்தான். 1953 ஜனவரியில், தி.மு.கழகத் தலைவர்கள் தங்கள் தோள்களில் கைத்தறி ஆடைகளைச் சுமந்தபடி, ஊர் ஊராக, தெருத்தெருவாகச் சென்று அவற்றை விற்பனை செய்தனர்.
திருச்சியில் அறிஞர் அண்ணா, காரைக்குடியில் நாவலர், சென்னையில் கலைஞர் என்று எல்லோரும் துணிகளை விற்றனர். அன்று விற்பனையில் கிடைத்த தொகை முழுவதையும் நெசவாளர் துயர் துடைக்கக் கொடுத்துதவினர். அதன் பிறகுதான், மேடைகளில் கைத்தறித் துண்டு போடும் பழக்கம் திமுக வில் வந்தது.
அதே போல, 1953 பிப்ரவரி 1 ஆம் தேதி சேலத்தில், 'பரப்பிரம்மம்' என்னும் நாடகத்தைத் திமுக நடத்தியது. கலைஞர், சிவாஜி கணேசன், அரங்கண்ணல் ஆகியோர் அந்த நாடகத்தில் நடித்தனர். இடைவேளையின்போது, நடிகர் எம்.ஜி. ராமச்சந்தர் (எம்ஜிஆர் தான்) உரையாற்றினார். மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. பலர் நுழைவுச் சீட்டு கிடைக்காமல், ஏமாற்றத்தோடு திரும்பினர். அந்தத் தொகை அப்படியே புயல் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. இவையெல்லாம், தேர்தலை எண்ணிச் செய்த செயல்கள் இல்லை. காரணம், அப்போது திமுக தேர்தலிலேயே பங்குபெறவில்லை.
அதன் தொடர்ச்சியாகவே, இந்தக் கரோனா காலத்தில் திமுக செய்துவரும் ‘ஒன்றிணைவோம் வா' என்னும் செயல்பாட்டை நாம் பார்க்க வேண்டும்.
மொழி, கலை, பண்பாடு ஆகிய தளங்களிலும் திராவிட இயக்கம் மற்றும் கட்சியின் பணி பெரியது. இந்தியாவில் எங்கு நோக்கினும் மதக் கலவரங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த 1947 கால கட்டங்களில் கூட, தமிழகம் அமைதியாக இருந்தமைக்கு என்ன காரணம்? பேராசிரியர் தொ.பரமசிவன், 8.4.2015 ஆனந்த விகடனில். ‘தமிழ்நாட்டில் பெரிய மதச்
சண்டைகள் ஏற்படாதது, திராவிட இயக்கச் சாதனை. திராவிட இயக்கத்தின் தோற்றத்தின் போதே, மதச் சண்டை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது' என்று எழுதுகிறார்.
இந்தியாவில் இன்றுவரையில் தீராமல் இருக்கும் மொழிச் சிக்கலுக்குத் திமுகழகம் தந்த தீர்வே சரியானது. 1965 மார்ச் 4 ஆம் தேதி தில்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் உரையாற்றிய அறிஞர் அண்ணா, எட்டாவது அட்டவணையில் காணப்படும் 14 மொழிகளும் (அன்று 14 மொழிகள் மட்டுமே இருந்தன. இன்று அவை 22 ஆக உயர்ந்துள்ளன) தேசிய மொழிகளாக ஏற்கப்பட வேண்டும் என்றும், அதுவரையில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக நீடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். அதனை நாடாளுமன்றம் அன்று ஏற்றுக்கொண்டிருக்குமானால், இந்தியாவின் மொழிச் சிக்கல் ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.
1970 டிசம்பர் 1 ஆம் நாள், தமிழே கல்லூரிக் கல்வி வரையில் பயிற்றுமொழி என்னும் சட்டத்தை முன்மொழிந்தவர் அன்றைய முதல்வர் கலைஞர். அதனை நடைமுறைப்படுத்துவதற்குள், அடுத்த மாதமே திமுக ஆட்சி கலைந்து விட்டது. எனினும், திமுக ஆட்சியில், தமிழ்வழிக் கல்வி பயின்றோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது என்பதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 1967 ஆம் ஆண்டு கல்லூரிகளில் தமிழ் வழிப் பயின்றோரின் எண்ணிக்கை 6300 மட்டுமே. ஆனால் 1975 ஆம் கல்வி ஆண்டில் அது 17,900 ஆக உயர்ந்திருந்தது.
2004 ஆம் ஆண்டு தமிழ் செம்மொழி என்று மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டது.தமிழர்களின் ஒரு நூற்றாண்டுக் கோரிக்கை வெற்றி பெற்றது. அதிலும் திமுகவின் பங்கு எத்தகையது என்பதை உலகம் அறியும்.
இன்னும் எவ்வளவோ செய்திகளைக் கூறிக் கொண்டே போகலாம். அத்தனைக்குப் பிறகும் திராவிட இயக்கமும், திமுகவும் தமிழுக்கும், தமிழருக்கும் என்ன செய்து விட்டன என்ற வினாவை, தூங்குவது மாதிரி நடிக்கும் நண்பர்கள் கேட்டுக்கொண்டேதான் இருப்பார்கள். நாமும் அவர்களைத் தட்டி எழுப்புவது போல விடைகளைச் சொல்லி, மக்களிடம் உண்மைகளைக் கொண்டுபோய்க் கொண்டேதான் இருக்க வேண்டும்!
அவர்கள் எழப்போவதும் இல்லை. நாம் விடப்போவதும் இல்லை!
ஜூலை, 2020.