எது சிறந்த நாவல்?

எது சிறந்த நாவல்?
Published on

இன்றைய காலகட்டத்தில் இரண்டு வகையான நாவல்கள் காணப்படுகின்றன என்று பொதுவாகக் கொள்ளலாம். ஒன்று மோசமானவை, இவை படிப்பதற்கு அருகதையற்றவை, படிக்க சகிக்காதவை. ஆனால், வேடிக்கை என்னவென்றால் இவைதான் பரவலாக பெரிதும் வாசிக்கபடுகின்றன. மற்றொன்று சிறந்தவை. வாசிக்க அவசியமானவை. ஆனால் இவை படிக்கப்படுவதில்லை. இலக்கிய பரிச்சயம் ஏற்பட்ட இளம் வயதிலிருந்து நாவல் கலையின் மீது என் மனம் அலாதியான ஈடுபாடும் உறவும் கொண்டிருக்கிறது. நவீன யுகத்தின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பே நாவல் கலைதான். நாம் இதுவரை அறிந்து கொண்டிராத இருத்தலின் சாத்தியங்களை நாவல் தன் ஞானப் பாதையின் வழி கண்டடைகிறது . இந்தக் கண்டுபிடிப்பைக் கொண்டிருக்கும் நாவலின் குரலும் ஞானமும் மகத்தானது . இவ்வகையில் படைப்பு மேதைகள், சிகர சாதனைகள் புரிந்திருக்கும் பேராற்றல் மிக்க கலை வடிவமிது . மகத்தான நாவல்கள் யதார்த்தத்தைப் பரிசீலிப்பதில்லை, மாறாக , இருத்தலின் சாத்தியங்களைப் பரிசீலிக்கின்றன. பொதுவாக , புறச்சூழல்களினால் தீர்மானிக்கப்படுபவர்களாக நாம் இருக்கிறோம் . அவற்றிலிருந்து வெளியேறுவதற்கான மாறுபட்ட சாத்தியங்களை நாம் அறியாதிருக்கிறோம். பொதுவாக, நம் வாழ்க்கை ஒரு பொறியில் சிக்கிக் கொண்டுவிட்டிருக்கிறது, அதே சமயம் , இந்த உலகம் மிக விசாலமானதாகவும் வாழ்க்கை எண்ணற்ற கோலங்களுக்கு இடமளிப்பதாகவும் இருந்துகொண்டிருப்பதால் தப்பிப்பதற்கான சாத்தியங்களும் இருந்துகொண்டிருக்கின்றன. அவற்றை பரிசீலிக்கும் ஒரு கலை வடிவம் தான் நாவல்.  ஃப்ரன்ஸ் காஃப்கா பற்றி மிலன் குந்தேரா குறிப்பிடுவதை நாம் கவனத்தில் கொள்வது, இதை நாம் மேலும் புரிந்து கொள்ள உதவும்.

‘நவீன உலக மனிதனின் இருப்புத்தான் காஃப்காவின் கவனமாகிறது . எவ்வளவு விதமான சாத்தியங்களுக்கு மனித இருத்தலை நகர்த்த முடியும்? பிறப்பு, உடல், இனம், நிறம், மரணம் எதுவுமே நம் தேர்வில் இல்லை. நமது இருத்தல் மட்டும்தான் குறைந்தபட்சம் நமது தேர்வில்   இருப்பது போலத் தோன்றுகிறது, ஆனால் மனித இருப்பை சட்ட திட்டங்களால் சமுகம் இறுக்குகிறது, திட்டமிடுகிறது. அப்போது குறிப்பிட்ட வாய்ப்புகளேயுள்ள வாழ்வை வாழத் தள்ளப்படுகிறோம் . இருப்பை சமூகம் பறித்துவிடுகிறது. இந்த நிலையில் மனிதன் தான் வாழ்வதற்கான சாத்தியங்களை விஸ்தரித்துக்கொண்டு போவதன் மூலமாகத்தான் அர்த்தத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும், இதனை காஃப்கா எதிர்கொள்கிறார்''  

 இவ்வாறு குறிப்பிடும் மிலன் குந்தேரா, தன் காலத்திய உலகமே ஒரு அலுவலகமாக மாறிவிட்டதாக காஃப்கா கருதுவதாகவும் சொல்கிறார். ஆக உலக வாழ்வே ஒரு அலுவலக நடைமுறையாகிவிட்டிருக்கிற இன்றைய நிலையில் வேறு வெளிகளை நோக்கியும், வெட்ட வெளிகளின் சுவாசத்தை நோக்கியும் நாவல் கலை நம்மை அழைத்துச் செல்கிறது. ஒரு நாவல் படைப்பாளியானவன், வரலாற்றாசிரியனோ தீர்க்கதரிசியோ அல்ல. அவன் இருத்தலை ஆய்ந்து அறிபவன்.

இதற்கு  இரண்டு சான்றுகளை நான் பெரிதும் நேசிக்கும் தமிழ் நாவல்களான ப.சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி' மற்றும் சம்பத்தின் 'இடைவெளி' நாவல்களை முன்வைத்து கோடிட்டு காட்டுகிறேன். இரண்டாம் உலக யுத்த காலத்தைப் பின்புலமாகக் கொண்ட 'புயலிலே ஒரு தோணி' நாவலில் அதன் மையபாத்திரமான பாண்டியன் லட்சியத்துடன் கூடிய சாகச வேட்கையை இருத்தலின் சாத்தியமாகக் கொள்கிறான். இந்தோனேசியாவின் மெபான் நகரில் ஒரு மராமத்து காண்ட்ராக்டரிடம் குமாஸ்தாவாக பணிபுரிந்த பாண்டியன் , இறுதியில் இந்தோனேசிய விடுதலைப்படையின் ராஜா கத்தாங் எனப் பெயர் பெற்று வடசுமத்ராவின் முதலாவது கொரில்லாப் படையை வழிநடத்துகிறான். நேதாஜியின் திடீர் மரணத்திற்குபின், இந்திய தேசிய ராணுவபடையிலிருந்த தமிழர்கள் பழைய வாழ்க்கை முறைக்குத் திரும்பும் போது பாண்டியன் மட்டும் இந்தோனேசிய விடுதலைப்படையில் தன்னை இணைத்துகொள்கிறான். யுத்த காலத்தில் பாண்டியன் தன் இருத்தலுக்குத் தேர்ந்தெடுத்த இந்த சாத்தியம் அபூர்வமானது. இந்நாவலின் ஆதார சுருதியாக இருப்பது.

 'இடைவெளி' நாவலில் சாவுப் பிரச்சனை தினகரனை ஆட்கொள்ளத் தொடங்கும் ஆரம்ப கட்டத்தில் தோல் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் முக்கிய பதவியில் இருக்கிறார் . பிரச்சனை தீவிர முகம் கொள்ளும்போது, வேலை அதிகமில்லாத மதிப்பில்லாத பேக்கிங் பிரிவுக்குத் தானே விரும்பிக் கேட்டு மாற்றிக்கொள்கிறார் . சாவு பற்றி , அதன் அடிப்படைத்தன்மையை அறியும் பிரச்சனையில் சிக்கிக்கொண்டு அவர் உழன்று தவிக்கும் போது, வீட்டிலும் வெளியிலும் அலுவலகத்திலும் அவருடைய நடவடிக்கைகள் பரிகசிக்கப்படுகின்றன. இவ்வாறாக , லௌதீக வெற்றியை நோக்கிவிரையும் பொது ஓட்டத்துக்கு எதிர் திசையில் நிகழ்கிறது இவர் பயணம். மனித ஸ்திதியின் மாறுபட்ட சாத்தியப்பாடு இது. இதிலிருந்துதான் நாவல் புது வெளிச்சம் கொள்கிறது.

ஒருசிறந்த நாவல் மிகவும் ஞானம் மிக்கதாக இருக்கிறது. சொல்லப்போனால் , அதனைப் படைத்த நாவலாசிரியனை விடவும் அது கொஞ்சம் கூடுதல் புத்திசாலியாக இருக்கிறது. இந்த ஞானத்திலிருந்தான் நம் வாழ்வுக்கு அர்த்தமூட்டும் அரிய கண்டுபிடிப்புகள் புலனாகிறது. நமக்கான திசைகளும், வெளிகளும் புலப்படுகின்றன. கனவுகளின்றி பரிதவிக்கும் நம் காலத்துக்கான கனவுகளை பரிசளிக்கின்றன. படைப்பின் ஞானத்தைப் புரிந்து கொள்வதற்கான இரண்டு உதாரணங்களாக தாஸ்தாயெவ்ஸ்கியின் 'கரம சோவ் சகோதரர்கள்' மற்றும் டால்ஸ்டாயின் 'அன்னா கரீனா' வைப் பார்க்கலாம்.

 'அன்னா கரீனா' வின் முதல் கையெழுத்துப் பிரதியில் கரீனாவை மோசமான பெண்ணாகவும், தண்டிக்கப்பட வேண்டியவளாகவும்தான் டால்ஸ்டாய் சித்தரித்திருந்தார். ஒழுக்கம் சார்ந்த அவருடைய இறுக்கமான பிடிமானங்களே இதற்கு காரணம். ஆனால் நாவல் இறுதி வடிவம் பெற்றபோது அன்னா புரிந்துகொள்ளப்பட வேண்டியவள் என்ற மேலான நிலை உருவாகியிருக்கிறது. இதுதான் படைப்பின் ஞானம். முதல் பிரதிக்கும் இறுதி வடிவத்துக்குமான இடைப்பட்ட காலத்தில் டால்ஸ்டாயின் ஒழுக்கக்கோட்பாடுகளில் மாற்றமேதும் நிகழ்ந்திருக்குமென்று நான் நினைக்கவில்லை. மாறாக, அவர் ஒரு குரலுக்குச் செவி கொடுத்திருக்கிறார். அதுதான் படைப்பின் ஞானக்குரல். வேறு யாருடையதற்கோ அல்லது எதற்காகவுமோ குரல் கொடுப்பவனல்ல நாவலாசிரியன் என்பது மட்டுமல்ல, அவன் தன்னுடைய சொந்தக்கருத்துகளுக்கே கூட குரல் கொடுக்ககூடாதவன். குரல் கொடுக்க முடியாதவன்.

இதற்கான மற்றொரு உதாரணம் தான் தாஸ்தாயெவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்' கடவுளின் இருப்பு குறித்தும் கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவு குறித்தும் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடிச் சென்ற 19ஆம் நூற்றாண்டின் சிந்தனை வளம் கடவுளின் மரணத்தை கண்டறிந்தது. கடவுள் சமாதியானதின் தொடர்ச்சியாக மனித வாழ்வின் இலக்கு, அறங்கள் குறித்து புதிய கேள்விகள் எழுந்தன. 19ம் நூற்றாண்டின் குழந்தையான தாஸ்தாயெவ்ஸ்கியைப் பெரிதும் வதைத்த பிரச்சனை கடவுளின் இருப்பு பற்றியதுதான். கொலைகளும் குற்றங்களும் நிறைந்தது தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகம், அவருடைய கடைசி நாவலான 'கரமசோவ் சகோதரர்கள்' மூலமாக இந்த உலகில் கடவுளை மீண்டும் உயிர்ப்பித்துவிட அவர் விரும்பினார் . இந்நாவல் குறித்து அவர் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் குறிபிடுவது ‘என் வாழ்நாள் முழுவதும் என்னை நனவு நிலையிலும் நனவலி நிலையிலும் வதைத்துக் கொண்டிருக்கும் அடிப்படைப் பிரச்சனையை இப்புத்தகத்தின் எல்லாப் பகுதியிலும் அணுக இருக்கிறேன். கடவுளின் இருப்பு குறித்ததே அது.

 'கரமசோவ் சகோதரர்கள்' நாவலில் அநேகமாக கடவுள் தோல்வியடைகிறார். நாவலின் எல்லாப் பகுதிகளிலும் கடவுளுக்கு எதிரான குரல்களும் நடப்புகளும் வலுமிக்கதாக இருக்கின்றன. தாஸ்தாயெவ்ஸ்கியின் விருப்பத்தை நிறைவு செய்ய வேண்டிய அலோஷியாவின் குரல் பலவீனமாகவே ஒலிக்கிறது . இந்நாவலில் 'கூடஞு எணூச்ணஞீ ஐணணுதடிண்tணிணூ' என்னும் மிகப்பிரசித்தி பெற்ற பகுதியில் 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய சிந்தனைகளால் பீடிக்கப்பட்ட இவானுக்கும்  மானுடத்தின் ஆன்மீக அம்சமாக விளங்கும் அலோஷியாவுக்கும் இடையே நடக்கும் உரையாடலில் இவானே பெருமிதத்தோடு வெளிப்படுகிறான். தாஸ்தாயெவ்ஸ்கியின் விருப்பத்தை மீறி நாவல் நிறைவேற்றிய விருப்பமிது. எவ்வித பாவமும் அறியாத குழந்தைகளின் துயரங்களை முன்வைத்து கடவுளின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறான் இவான். இக்கேள்விகள் பதில்களின்றிப் பரிதவிக்கின்றன. ஞானக் குரலுக்கு தாஸ்தாயெவ்ஸ்கி இடமளித்தால்தான் 'கரம்சோவ் சகோதர்கள்'  நாவல் இலக்கியப் பரப்பில் உயர்ந்த இடத்தில் இன்றும் இருந்துகொண்டிருக்கிறது.

ஒரு சிறந்த படைப்பாளியான ஹென்றி மில்லர், தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்பை முதலில் வாசித்தபோது அவருக்குள் ஏற்பட்ட விளைவுகளை, நிகழ்ந்த மாறுதல்களை வெகு அழகாக பதிவு செய்திருக்கிறார்.

 ‘தாஸ்தாயெவ்ஸ்கியை முதன் முறையாக படிக்க அமர்ந்த அந்த இரவு என் வாழ்வின் முக்கியமான ஒரு நிகழ்வு. என் முதல் காதலை விடவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதுதான், விரிவான, பிரக்ஞைபூர்வமான என் முதற்செயல். அது என்னிடம் நிகழ்த்திய பாதிப்பு குறிப்பிடத்தக்கது. உலகின் முகத்தையே அது முற்றாக மாற்றிவிட்டது. ஒரு ஆழமான , நீண்ட முதலாவது வாசிப்புக்குபின் நான் நிமிர்ந்து பார்த்த  அந்த தருணத்தில் காலமுள் நின்றுவிட்டதென்பது உண்மையா இல்லையா என்பது பற்றி எனக்கு எதுவும் சரிவரத் தெரியவில்லை, அந்த ஷணத்தில் உலகம் இறந்துவிட்டிருந்தது என்பது எனக்குத்தெரியும் . ஒரு மனிதனின் ஆத்மாவிற்குள் முதன் முறையாக என் பார்வை விழுந்தது அப்போதுதான், அல்லது இதையே வேறுவிதமாகச் சொல்வதென்றால் , தன் ஆத்மாவை என்னிடம் வெளிப்படுத்திய முதல் மனிதன் தாஸ்தாயெவ்ஸ்கிதான். நான் அதற்கு முன்னரும் கூட சற்றே வித்தியாசமானவனாக ஆனேன். அசைக்க முடியாதபடியும் மன நிறைவோடும் இந்நிகழ்வு அமைந்தது. விழிப்பதும் அன்றாட காரியங்களுமான தினசரி உலகம் என்னைப் பொறுத்தவரை மடிந்துவிட்டது. எழுதுவது குறித்து நான் கொண்டிருந்த ஆசை, விருப்பமெல்லாம் நீண்டதொரு காலம் வரைக்குமாக அழிந்து போயின. பதுங்குகுழிக்குள் நீண்ட காலமாக வாழும் மனிதர்களைப் போல நான் நெருப்பினுள் வாழ்பவனானேன். என்னைப் பொறுத்தவரை மனிதனின் சாதாரண துயரங்கள், போட்டி பொறாமைகள், ஆசாபாசங்கள் அனைத்தும் உதவாக்கரை விஷயங்கள், குப்பை கூளங்கள் என்றாகின.''

இத்தகைய விளைவுகளுக்கு நம்மை ஆட்படுத்துவதுதான் ஒரு சிறந்த நாவல். சிறந்த படைப்புகளோடு வாசகன் மேற்கொள்ளும் பயணத்தினூடாக அவனுடைய மனவெளி பரந்து விரிகிறது. அந்த பயணத்தின் முடிவில், அந்த வாசிப்புக்கு முன்னான மனிதனில்லை அவன். புதிதாய் மலர்ந்திருக்கிற புது மனிதன்,

 இலக்கியம் இல்லாமல் உலகம் சிறப்பாக இயங்க முடியாதா என்று ஒருவர் கேட்கக்கூடும். நிச்சயம் முடியுமாக இருக்கும். ழீ- பால் - சார்த்தர் வார்த்தைகளில் சொல்வதென்றால், அது மனிதனே இல்லாமல் இன்னும் சிறப்பாக இயங்கக்கூடும்.

ஜனவரி, 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com