எஞ்சியது 16 தூண்கள் மட்டுமே

சோழர் பாண்டியர் இறுதிப்போர்
எஞ்சியது 16 தூண்கள் மட்டுமே
Published on

பிற்காலப் பாண்டியர்கள் - சோழர்கள் இடையிலான மோதலின் இறுதிக்கட்டம் பாண்டியர்கள் சோழர்களை பூண்டோடு அழிப்பதில் முடிந்தது.

மூன்றாம் குலோத்துங்கனின் மகன் மூன்றாம் ராஜராஜன் ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில் தெற்கே பாண்டியர்கள் எழுச்சி தொடங்கி இருந்தது. சோழர்கள் பல்வேறு நாடுகளை வென்றிருந்தாலும் அங்கிருந்த அரச வம்சத்தினரை தங்களுக்கு திறை செலுத்தி சிற்றரசாக தங்களுக்குக் கீழ் ஆட்சி செய்துகொள்ளும் உரிமையை அளித்தனர். அப்படி இயங்கும் சிற்றரசுகள் வலிமை பெற்று திறை செலுத்த  மறுப்பதும் படைகொண்டு அவர்களை சோழர்கள் அடக்குவதுமாகத்தான் சோழப்பேரரசின் போர்கள் நடந்துகொண்டிருந்தன.

மூன்றாம் ராஜராஜன் ஆட்சிக்கு வந்த நேரமே சரியில்லை என்பார் நீலகண்ட சாஸ்திரி.

பாண்டியர்களுக்கும் சோழர்களுக்குமான பகைமை பல தலைமுறைகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் விஷயமாக இருந்தது. பாண்டிய நாட்டை ஆண்ட ஜடாவர்மன் குலசேகரன் தனக்கு திறை செலுத்த மறுத்ததை அடுத்து மூன்றாம் குலோத்துங்கன் 1205-ல் அவனைப் போரில் தோற்கடித்து அவமதித்தான். அத்துடன் மதுரையைச் சூறையாடி அங்கிருந்த மாடமாளிகைகளை இடித்துத்தள்ளினான். தனக்கு அங்கு ‘சேர பாண்டியன் தம்பிரான்’ என வீராபிஷேகமும் செய்துகொண்டான். பிறகு குலசேகர பாண்டியன் பணிந்ததை அடுத்து அவனையே ஆட்சிசெய்ய அனுமதித்தான். பத்தாண்டுகள் கழித்து குலசேகர பாண்டியனின் தம்பி மாறவர்மன் சுந்தரபாண்டியன் அரியணை ஏறினான். அவன் சோழர்களைப் பழிவாங்கத் துடித்தான். மூன்றாம் குலோத்துங்கனின் மகன் மூன்றாம் ராஜராஜன் ஆட்சிக்கு வந்திருந்த காலகட்டத்தில் 1218-ல் சோழநாட்டில் படையுடன் புகுந்தான் சுந்தரபாண்டியன். உறையூரையும் தஞ்சாவூரையும் சூறையாடினான். மூன்றாம் குலோத்துங்கன் அப்போது உயிரோடு இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் அவன் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. சுமார் எழுபது வயது அவனுக்கு ஆகியிருந்திருக்கலாம். மூன்றாம் ராஜராஜனும் முதுமையில் இருந்த மூன்றாம் குலோத்துங்கனும் தப்பி ஓடினர். தஞ்சையில் வெறியாட்டம் நிகழ்த்திய பாண்டியப் படை திரும்பியபோது அங்கு மிச்சம் இருந்தது 16 தூண்கள் மட்டுமே என்று ஒரு பாடல் சொல்கிறது. பட்டினப்பாலை பாடிய உருத்திரங்கண்ணனார் என்கிற புலவருக்கு கரிகாலன் வழங்கிய கல்மண்டபம் அது. மண்டபிகா எனப்படும் விதானமற்ற கல்மண்டபமாக அது இருந்திருக்கவேண்டும்.

தமிழ்ப்புலவருக்கு வழங்கிய கட்டடத்தை இடிக்கவேண்டாம் என்று அதை விட்டு வைத்தானாம் பாண்டியன்.இதை அடுத்து பொன்னமராவதியில் முகாமிட்டிருந்த சுந்தரபாண்டியனை சோழர்கள் அடிபடிந்தனர். தன் குழந்தையை சுந்தரபாண்டியனின் காலில் வைத்து உன் திருநாமம் என்று சொல்லி அடி பணிந்ததை அடுத்து தஞ்சைப்பகுதியை மூன்றாம் ராஜராஜனே ஆளட்டும்  என்று அனுமதித்தான் சுந்தரபாண்டியன். இதையடுத்து சோணாடு வழங்கியருளிய பெருமான் என்றும் அவன் அழைக்கப்பட்டான் ஆனால் அதற்குமுன்பாக ஒரு அரசியல் செயல்பாடாக, சோழநாட்டின் ஒரு பகுதியை தன் தோள்வலியைப் பாடிய புலவருக்கு சோழன் எனப் பட்டம் தந்து வழங்கத் தவறவில்லை. ஏனெனில் மூன்றாம் குலோத்துங்கன் ஏற்கெனவே தன்னைப் புகழ்ந்துபாடிய புலவனுக்கு பாண்டியன் எனப் பட்டம்  வழங்கி பாண்டியர்களை அவமதித்திருந்தான். அதற்கு இப்படி பழிதீர்த்தான் பாண்டியன். இந்த போரை அடுத்து விரைவிலேயே மூன்றாம் குலோத்துங்கன் இறந்துவிடுகிறான்.

இந்த காலகட்டத்தில் ஏற்பட்டிருந்த சமூக அரசியல் மாற்றங்களையும் கவனிக்கவேண்டும்.

சாளுக்கிய வம்சாவளியைச் சேர்ந்தவனான முதலாம் குலோத்துங்கன் சோழ மன்னனாக 1070- இல் முடிசூட்டிக்கொண்டான். அதை அப்போதிருந்த சோழ அரசப்படையினரின் வலங்கை உய்யக்கொண்டார் என்ற ஒரு பகுதியினர் ஏற்கவில்லை. அவர்கள் பாண்டிய நாட்டுக்கு இடம்பெயர்ந்து சென்றுவிடுகின்றனர். அந்த படையினர் சுமார் 120 ஆண்டுகள் கழித்து அதாவது நான்கு தலைமுறைகள் கழித்து பாண்டியர் படையுடன் மதுரைக்கு வந்துபோரிடுகின்றனர். பாண்டியனின் பழிவாங்கும் உணர்ச்சியுடன் வலங்கை உய்யக்கொண்டாரின் உணர்ச்சியும் இணைந்துகொள்கிறது. இதற்குமுன் பாண்டிய நாட்டுக்குப் படையெடுத்துவந்திருந்த  சோழ மன்னர்களுக்கு பாண்டிய நாட்டில் இருந்தும் கூட அவர்கள் எந்த உதவியும் செய்ததாகத் தெரியவில்லை. அவர்கள் நான்கு தலைமுறைகளாக போர்ப்பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு தக்க சமயத்துக்காக காத்திருக்கின்றனர் எனக்கொள்ளலாம்.

இதற்கிடையில் வட தமிழகத்தில் பல்லவ அரசகுலப் பிரிவான காடவர் குலத்தைச் சேர்ந்த கோப்பெருஞ்சிங்கன் என்ற மன்னன் வலிமை பெறுகிறான். அவன் உளுந்தூர்ப்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆள்கிறான். வடமேற்கே கன்னடர்களான ஹொய்சாலர்கள் வலிமை பெற்ற அரசாக அமைகின்றனர். இதற்கிடையில் சோழ அரசு வலிமை குன்றுகிறது. பாண்டியனும் தெற்கே எழுச்சி பெறுகிறான். சோழர்கள் கோப்பெருஞ்சிங்கனுடனும் சரி; ஹொய்சாலர்களுடனும் சரி, மண உறவு கொண்டிருக்கின்றனர். சுந்தர பாண்டியனின் படையெடுப்பை அடுத்து ஹொய்சால மன்னன் இரண்டாம் வல்லாளன் என்பவனிடம் உதவி கேட்டு மூன்றாம் குலோத்துங்கன் தூது அனுப்புகிறான். அவன் தன் மகன் நரசிம்மனின் தலைமையில் படை அனுப்புகிறான். அப்படை ஸ்ரீரங்கத்திற்கு வந்து முகாமிட்டது. இதையடுத்து ஹொய்சாலர்களின் தலையீட்டின் பேரில்தான் சோழர்களை மீண்டும் அரசாள சுந்தரபாண்டியன் அனுமதித்திருக்கவேண்டும். சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே சமாதானம் செய்துவைத்து அரசியல் செய்துகொண்டிருந்தவர்கள் ஹொய்சாலர்கள்.

சில ஆண்டுகள் சென்ற பின் மூன்றாம் ராஜராஜன் மீண்டும் பாண்டியனுக்கு திறை செலுத்த  மறுக்க, பாண்டியப்படை மீண்டும் தாக்குகிறது. சோழ அரசியும் சிறைப்பிடிக்கப்படுகிறாள். ராஜராஜன் தப்பி ஓடுகையில் கோப்பெருஞ்சிங்கன் அவனைப் பிடித்து சேந்தமங்கலத்தில் சிறைப்படுத்திவிடுகிறான். இத்தனைக்கும் அவன் ராஜராஜனின் மைத்துனன். இதையெல்லாம் கேள்விப்பட்டு ஹொய்சால மன்னன் இரண்டாம் நரசிம்மன் தன் தண்டநாயகர்கள் இருவர் தலைமையில் படையை அனுப்புகிறான். அவர்கள் கோப்பெருஞ்சிங்கனின் நாட்டில் சில பகுதிகளை கடுமையாகத் தாக்கி அட்டூழியம் செய்ய கோப்பெருஞ்சிங்கன்  நிலைகுலைந்து போய், ராஜராஜனை விடுவிப்பதாக கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன. அவன் மீண்டும் சோழ நாட்டுக்கு ஆட்சிப்பொறுப்பில் அமர்கிறான்.

 அத்துடன் இந்த காலகட்டமே சத்திரியர்களின் ஆட்சி முடிந்து பிற பிரிவினரின் ஆட்சி உருவான காலம்.

சோழமண்டலத்தில் வேளாளர்களின் ஆதிக்கம் ஓங்கியது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு சடையப்ப வள்ளல். இவர் தொண்டைமண்டல வேளாளர் பிரிவைச் சேர்ந்தவர். இவர் காலத்தில் ஆட்சி செய்தது மூன்றாம் ராஜராஜன் என்று நான் கருதுகிறேன். கம்பராமாயணம் எழுதப்பட்ட காலம் இந்த 13-ஆம் நூற்றாண்டு. அதனால்தான் பலம் குன்றிய சோழ மன்னனைப் பற்றி கம்பராமாயணத்தில் எந்த குறிப்பும் இல்லை. மாறாக சடையப்ப வள்ளலைப் பற்றியே கம்பர் குறிப்பிடுகிறார். ஆந்திரப்பகுதியில் காகதீய வம்சத்தினர் எழுச்சி பெறுகின்றனர். மூன்றாம் ராஜராஜனுக்குப் பின்னர் அவனது மகன் மூன்றாம் ராஜேந்திரன் ஆட்சிக்கு வருகிறான்(1256). இவனது காலத்திலும் பாண்டியர்கள் கையே ஓங்கி இருக்கிறது. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் மிகப்பெரும் பாண்டிய சாம்ராஜ்யத்தை நிர்மாணிக்கிறான். அவனுக்குப் பின் வந்த குலசேகர பாண்டியனுடன்  1279-ல் மூன்றாம் ராஜேந்திரன் போர் செய்து தோற்கிறான். இவனுக்கு வாரிசுகள் இல்லை.

இதற்கடுத்து தமிழ்நாட்டில் சோழவம்சம், சோழ ஆட்சி பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை. (எஸ்.ராமச்சந்திரன், கல்வெட்டு ஆய்வாளர். நமது செய்தியாளரிடம் பேசியதில் இருந்து)

மே, 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com