ஒவ்வொரு சமூகத்திலும் நிலவக்கூடிய விழுமியங்களின் அடிப்படையில்தான் அச்சமூகத்தின் வாழ்க்கை முறை தீர்மானிக்கப்படுகிறது. அந்த விழுமியங்கள் மாற்றம் அடைகின்ற போது இரு விதமான தரப்புகள் செயல்படுகின்றன.
ஒரு தரப்பு, அந்த விழுமிய மாற்றங்களை எதிர்க்கிறது. அதைத் தக்க வைக்க முயல்கிறது. அதனால் தனக்கு லாபம் இருப்பதாகக் கருதுகிறது. அந்த விழுமியத்தைத் தனக்கும் தன் அரசியலுக்கும் பயன்படுத்திக்கொள்ள விழைகிறது. இன்னொரு தரப்பினர் மாற்றங்களுக்கு உட்பட்டு மாறிப்போகிறவர்கள். இவர்களில் புதிய விழுமியங்களைத் தேடிச் செல்கிறவர்களும் இருக்கிறார்கள்.
பழசைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறவர்கள் புற அளவில் மாறிக்கொள்வார்கள். ஆனால் அக அளவில் மாற மாட்டார்கள். இது மாற்றம் அடைய வெகு நாள் ஆகும். இதை தங்கள் நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள நினைப்பவர்களுக்கு இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த சிக்கல் நம் சமூகத்தில் நிறைய இருக்கிறது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும்அரசியல், பிற்போக்கு சக்திகளும் செயல்படுகின்றன. இந்த பின்னணியில்தான் கருத்துரிமை சார்ந்த பிரச்சனைகளைப் பார்க்கவேண்டும்.
இப்படி இருக்கக்கூடியவர்கள் கருத்து சார்ந்து பேசவோ விவாதிக்கவோ தயாராக இருக்கமாட்டார்கள். அதன் பின்னணியில் அவர்கள் நம்பக்கூடிய விழுமியங்கள் உள்ளன. அதன் மீது வெறியுடன் இருக்கிறார்கள். அதில் சின்ன மீறலைப் பேசுகிறவர்கள், அதிலிருந்து விலகிச்செல்கிறவர்கள் மீது ஆத்திரமும் வெறியும் வருகிறது.
நம் சமூகத்தில் இது ஏன் இந்த அளவுக்கு இருக்கிறது? ஏனெனில் நம் சமுகம் அறிவு சார்ந்த சமூகம் இல்லை. பல சாதிகள் இப்போதுதான் அறிவுசார்ந்த வாழ்வில் நுழைகிறார்கள். இவ்வளவு காலமாக குறிப்பிட்ட சாதிகள்தான் அறிவுத்தளத்தில் இருந்தார்கள். பிறருக்கு அடிப்படைக் கல்வி கூட கிடையாது. அவர்கள் உடல் உழைப்பு சார்ந்தவர்களாக இருந்தார்கள். இப்போதுதான் அறிவுத்தளத்துக்கு வருகிறார்கள். அவர்களுக்கும் சாதாரணமான வேலைகளுக்கு தேவையான கல்வி அறிவுதான் கொடுக்கிறார்கள். அதைத்தாண்டி பல்வேறு கோணங்களில் சிந்திக்கக்கூடிய அறிவு சார்ந்த கல்வியை இன்றைக்கு நம் கல்விமுறை தரவில்லை. இன்றைக்குப் படித்தவர்களிடம் கூட கருத்துரிமைக்கு எதிரான கருத்தோட்டங்கள் இருப்பதற்குக் காரணமாக இதையே குறிப்பிடலாம். அவர்களுக்கு அறிவுசார்ந்த விஷயம் என்பது மிகக்குறைவாகத்தான் அறிமுகம் ஆகி உள்ளது.
இந்த பிரச்னைகளைக் கருத்துரீதியாக எதிர்கொள்ளும் பழக்கம் இங்கு இல்லை. கருத்துரீதியாக எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளைக் கூட வன்முறையால் எதிர்கொள்ளச் சின்ன தூண்டுதலே போதுமானதாக உள்ளது. புனைவை புனைவாகப் புரிந்துகொள்ளும் பார்வை இல்லை. கேரளத்தை எடுத்துக் கொண்டால் அவர்கள் எந்த துறை சார்ந்தவர்களாக இருந்தாலும் இலக்கியம் பற்றிய புரிதல்இருக்கும். ஆனால் நம்மிடம் எவ்வளவு படித்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இலக்கிய அறிமுகம் மிகக்குறைவாக இருக்கிறது. ஒன்றை எழுதினால் அதை அப்படியே உண்மை என்று நம்புகிறார்கள். உண்மை என்று நம்பவைப்பதற்காக அப்படிக் கட்டமைக்கப்பட்டது என்றால் புரிவதில்லை. இந்தச் சூழலை கருத்துரிமைக்கு எதிரான ஆட்கள், அல்லது தங்கள் சுயநலத்துக் காகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் ஆட்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் மிக எளிமையாக வெற்றி அடைய முடியும். என்னுடைய ஒரு நாவலை மட்டுமல்ல, இங்கே யாருடைய நாவலை வேண்டுமானாலும் அப்படி எடுத்துப் பயன்படுத்த முடியும். அப்படியான சூழல் இங்கே இருந்துகொண்டே இருக்கிறது. இது அச்சம் தரக்கூடிய சூழல். சமூகத்தில் இப்படிப் பயன்படுத்தக் கூடிய ஆட்களைக் குறை சொல்வதை விட, இதற்கு ஆளாகிறார்கள் அல்லவா அவர்களுக்கு மிகப்பெரிய விழிப்புணர்வைக் கொடுக்கவேண்டியது மிகவும் அவசியம் என்று நான் நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட சாதியினர் அல்லது பிரிவினர் அவர்களைப் பற்றி ஒரு படைப்பில் வந்தது என்றால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும். எந்தவொரு இனமுமே பிரிவுமே நிறைகளோடு மட்டுமே வாழக்கூடியவர்கள் கிடையாது. குறைகளும் இல்லாமல் இருக்காது. இந்த விழிப்புணர்வு மக்களுக்கு வரவேண்டும். இல்லையென்றால் அறிவுஜீவி தளத்தில் மட்டுமே இந்த விவாதம் முடிந்துவிடும். நம்முடைய எழுத்துமுறை, சொல்முறையை மாற்றி பாதுகாப்பை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படவேண்டிய நிலை வரும்.
நம் வணிக சினிமாவை எடுத்துக்கொண்டால் சாதியை குறிப்பிடமாட்டார்கள். ஒரு இடத்தைக் காட்டும்போது அங்குள்ள ஆதிக்க சாதியைப் பற்றி மட்டும் காண்பிப்பார்கள். அல்லது எந்த அடையாளமும் காண்பிக்க முடியாமல் ஒரு படத்தை எடுப்பார்கள், இது மழுங்க சிரைக்கப்பட்ட ஒரு தலைபோல எனக்குத் தோன்றுகிறது.
ஒரு படைப்பு பிடிக்காமல் போவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. கருத்துரீதியாக ஒத்துப்போகவேண்டிய அவசியம் இல்லை. அது இயல்புதான். அப்படி இருக்கிறவர்கள் இதை எப்படி எதிர்கொள்வது? கண்டனம் தெரிவிக்கலாம். ஆர்ப்பாட்டம் செய்யலாம். இதற்கான அமைதியான எதிர்ப்பு வடிவங்களைக் கடைப்பிடிக்கலாம். வழக்குத் தொடர்வதைத் தவிர்க்க முடியாத சூழலில் செய்யலாம். ஏனென்றால் நம் நீதி அமைப்பில் சாமானியர்கள் அதை அணுகுவதும் எதிர்கொள்வதும் சிரமமாக உள்ளது. ஆனால் தடை செய்யவேண்டும் என்பதும் தாக்குதல் நடத்துவதும் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று சொல்வதும் பொதுவெளியில் இயங்கமுடியாமல் செய்வதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இயல்பான ஜனநாயக சமூக வெளியையே இது கெடுக்கும். யார் இதைச் செய்கிறார்களோ நாளை அவர்களுக்கே இது எதிரானதாக மாறும் வாய்ப்பு உண்டு.
மாதொரு பாகன் நாவலுக்காக தமுஎசதான் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்கள். நீதிபதி என்னுடைய தரப்பை வலியுறுத்திக் கேட்டார். அதன் பின்னர் எனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும்நான் என் தரப்பை தாக்கல் செய்தேன். பியுசிஎல் சுரேஷ் பதிப்பாளரான காலச்சுவடு கண்ணன் சார்பில் வாதிட்டார். என்னுடைய வழக்கறிஞராக சதீஷ் பராசரன் இருந்தார். என் தரப்பு அஃபிடவிட்டைவிளக்கிச் சொன்னால் போதும் என்று அவரிடம் கூறினேன். சுரேஷின் பங்களிப்பு இதில் முக்கியமானது.
நீதிபதி எஸ்கே கவுல், புரிதலுள்ளவராக இருந்ததால் இந்த தீர்ப்பு மிகவும் இலக்கியத்தரம் வாய்ந்ததாக படைப்புரிமைக்கு மிக முக்கியமான தீர்ப்பாக வந்தது.
என் அனுபவத்தில் இருந்து சக எழுத்தாளர்களுக்குச் சொல்வதென்றால் நாம் ஒன்றும் சூழலை மாற்றக்கூடிய வல்லமை படைத்தவர்கள் அல்ல. நாம் நினைக்கக்கூடியவற்றை சொல்லவேண்டும் எழுதவேண்டும். ஆனால் அதில் ஒரு வித எச்சரிக்கை உணர்வும் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
( நமது செய்தியாளரிடம் பேசியதில் இருந்து)
ஏப்ரல், 2017.