சரியாய் 20 ஆண்டுகளுக்குப் பின்னால், பாலாவின் 'சேது'அலுவலகம் இருந்த ஜெமினி பார்சன் காம்ப்ளக்ஸை நோக்கிப் பயணிக்கவேண்டிய இப்போதைய அவசியம் என்ன என்பது தெரியாமல்தான் இச்சிறு குறிப்புகளை எழுதத் துவங்குகிறேன். ஒரு குரங்குக் குட்டியின்
சாமர்த்தியத்தோடு,பத்திரிகைகளுக்கும்
சினிமாவுக்குமாக மாறி மாறித் தாவிக்கொண்டிருந்த நான் அப்போது 'குமுதம்'பத்திரிகையில் சினிமா நிருபராக சீரும் சிறப்புமாகக் குப்பை கொட்டிக்கொண்டிருந்தேன்.
இயக்குநர் பாலா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எனது ஜூனியர்.நான் ஆங்கில இலக்கியம் அவர் தமிழ் இலக்கியம். தமிழ்நாட்டின் டாப்டென் அறிவுஜீவிகளில் நானும் ஒருவன் என்று அப்போது நினைத்துக்கொண்டிருந்த சூழலால் கல்லூரியின் முக்கிய மக்கு மாணவர்களில் ஒருவரான பாலாவை நான் கல்லூரியில் சந்தித்த நிகழ்வுகள் மங்கலாகக் கூட ஞாபகம் வரவில்லை. தெளிவான எங்கள் முதல் சந்திப்பு என்பது, பாலுமகேந்திராவை, ஒரு பழைய மாணவனாக,எங்கள் அமெரிக்கன் கல்லூரி விழா ஒன்றுக்கு அழைக்க வந்தபோது நிகழ்ந்தது. இரண்டு துஷ்டர்கள் சந்திக்க நேர்ந்தால் நெருங்கிய நண்பர்களாவது சகஜம்தானே!
அடுத்து நான் எனது கல்லூரித்தோழன் ரமேஷ் கிருஷ்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியபோது, பாலா தி.நகரில் நான்
வசித்த வீட்டிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி தங்கி இருந்ததால், தினமும் சந்திக்கும் சூழல். இளையராஜாவின் சிபாரிசில் 'சேது'கதையை தமிழ் சினிமாவின் பாதித் தயாரிப்பாளர்களுக்கு சொல்லி முடித்து எதுவும் ஒர்க் அவுட் ஆகாத சமயம் அது. ஒரு கட்டத்தில் அந்தக் கதையை ரமேஷ் கிருஷ்ணனுக்கு இயக்கக் கொடுக்கக்கூட தயாராகிவிட, மறைந்த நடிகர் முரளியின் புண்ணியத்தால் அந்த சம்பவம் நடக்கவில்லை.
அடுத்து பாலாவின் மதுரை நண்பர்களால் தயாரிப்பாளர் கந்தசாமி தூக்கிக்கொண்டு வரப்பட்டு,துக்கப்பட்டு, துயரப்பட்டு, அரும்பாடுபட்டு ஒருவழியாய்ப் படத்தை முடித்து வைத்திருந்தார் பாலா. படத்தின் பின்னணி இசை துவங்கும் நேரம் இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் சிட்டாகப் பறந்தே போய்விட்டார், தயாரிப்பாளர் கந்தசாமி. இந்த இடத்தில்,
ராஜா, பாலாவுக்கு வேறெந்த இயக்குநருக்கும் தராத ஒரு இடத்தைத் தந்திருந்தது பற்றி சொல்லியே ஆகவேண்டும். பொதுவாகவே இயக்குநர்களிடம்தானே ராஜா கோபித்துகொள்வார்? ஆனால் முதல்படம்கூட ரிலீஸாகாத நிலையில் ராஜாவிடம் அவரது சொந்த மகனைப்போல அவ்வளவு உரிமை எடுத்துக்கொள்வார் பாலா.
ராஜா 'சேது'வுக்கு ரீரெகார்டிங் தொடங்கிய சமயம்தான் படம் குறித்து அவரது ஆர்கெஸ்ட்ரா கலைஞர்கள் மூலம் இண்டஸ்ட்ரியில் சின்னச்
சின்னதாய் படம் நன்றாக வந்திருப்பதாக செய்திகள் பரவ ஆரம்பித்தது. பாலுமகேந்திராவிடமிருந்து வெளிநடப்புச் செய்து பாலா கதை
சொல்லத் துவங்கிய காலத்திலிருந்தே தனக்கு நெருக்கமான தயாரிப்பாளர்களிடம் ''அண்ணே இந்தப் பையன்கிட்ட ஒரு நல்ல கதையிருக்கு... கேட்டுப்பாருங்க'என்று தன் இயல்பை மீறி சிபாரிசு செய்வதில் துவங்கி 'சேது'வின் ரீ ரெகார்டிங் முடிந்த பிறகும் கூட படத்துக்கு சம்பளம் வாங்காத ஒரு பி.ஆர்.ஓ.வாக ராஜா செயல்படவே செய்தார்.
அப்போதைய பிரிவியூ தியேட்டர்களாக இருந்தவை மேனா, சுப்ரகீத், தேவி ஸ்ரீதேவி, குட்லக்... இன்றைய லே மேஜிக் லேண்டர்ன்... ஆகியவையே. தியேட்டர் வாடகை தோராயமாக 600 முதல் 700 வரை. அத்தோடு படம் பார்க்க வருகிறவர்களுக்கு டீ பிஸ்கட் என்கிற வகையில் ஒரு ஷோவுக்கு ஆயிரம் ரூபாய் தேவை. அப்படித் தொடர்ந்து ஐந்தாறு காட்சிகள் போட்டு முடித்தவுடன் பாலா வெறுப்பாகிவிட்டார்.
பாலாவின் ஜெமினி பார்சன் அலுவலகத்தில் வறுமை கோரதாண்டவமாட ஆரம்பித்தது. 100, 200க்கே ததிங்கிணத்தோம் என்ற நிலையில் ஆயிரம் ரூபாய் செலவழித்து எத்தனை ஷோதான் போடுவது? இன்னொரு பக்கம் மீடியேட்டர்கள் படத்தின் க்ளைமேக்ஸை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று ஒரு எதிரான பிரசாரத்தை என்ன காரணத்தாலோ வலுவாகப் பரப்ப ஆரம்பித்தார்கள். பாலாவின் அலுவலகத்தில் கூட்டம் குறைய ஆரம்பித்தது. சாப்பாட்டுக்கே சங்கடம்தான். மதுரையிலிருந்து யாராவது நண்பர்கள் வந்தால் அவர் 'செத்தாண்டா சேகருதான்'. கொண்டுவந்த காசை ஓரிரண்டு பிரிவியூ ஷோக்கள் உட்பட செலவழித்துவிட்டு வெறுங்கையோடுதான் அவர் ஊர் திரும்பவேண்டும்.
அதையும் மீறிப் போடப்படும் சில காட்சிகளுக்கு வெகு குறைவான நபர்களே வருவார்கள். வெறுமனே 2 பேர் பார்ப்பதற்காக நடந்த சில காட்சிகளும் உண்டு. அந்த சமயத்தில் நம்பர் ஒன் தயாரிப்பாளர் ஒருவர் படத்தை நான் மொத்தமாக வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அவருக்காக ஏற்பாடு பண்ணப்பட்ட 10க்கும் மேற்பட்ட காட்சிகளுக்கு டிமிக்கி கொடுத்த சம்பவங்களும் உண்டு. இன்னும் சில பேர் இரண்டாவது ரீலிலேயே தூங்க ஆரம்பித்து வயிற்றெரிச்சலைக் கிளப்புவார்கள்.
ரிலீஸுக்குப் பின்னர் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய பத்திரிகை உலகம் அப்படத்தின் ரிலீஸுக்கு முன்பு எந்த வகையிலும் உதவவில்லை என்பதும் ஒரு கசப்பான உண்மை. ஆனந்த விகடன் போன்ற முன்னணிப் பத்திரிகைகள் கூட ரிலீஸுக்கு முன்பு அப்படத்தைப் பற்றி எதுவுமே பதிவு செய்யவில்லை. நான் வேலை செய்துகொண்டிருந்த குமுதத்தில் பெரும்பாடு பட்டு ஒரு பக்கச் செய்தி ஒன்றை ஓகே பண்ணினார் அப்போதைய நிருபரும், தற்போது விஜய் ஆண்டனியை வைத்து 'தமிழரசன்' படத்தை இயக்கி வருபவருமான பாபு யோகேஷ்வரன்.
இப்படியாக இந்திய சினிமா காணாத வகையில் பிரிவியூ காட்சிகளிலேயே செஞ்சுரியை நெருங்கிக்கொண்டிருந்த 'சேது' ஒரு வழியாக '99 டிசம்பர் 10 தேதி அன்று வெறுமனே தமிழ்நாடு முழுக்க 17 தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் ஆனது. சொன்னால் நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். ரிலிஸான முதல் நாள் பத்திரிகையாளர் காட்சி போடுவதற்கு பாலாவிடம் பணம் இல்லை. யாரோ ஒரு நண்பனின் செயினைப் பிடித்து இழுத்தார். லேபுக்குப் போனால் பழைய பாக்கியைக் கேட்பார்களே என்று கைவசம் இருந்த நாலைந்து மேக்ஸி சைஸ் ஸ்டில்கள் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு விமர்சகர்களுக்குத் தரப்பட்டது.
படம் ரிலீஸாகி முதல் மூன்று தினங்கள்
சொல்லிக்கொள்ளும்படி எதுவும் நிகழவில்லை. 4 வது நாள் முழுவதுமாக நம்பிக்கையிழந்து கிருஷ்ணவேணி தியேட்டரின் மாலைக் காட்சிக்கு நானும் பாலாவும் போயிருந்தோம். அங்கே எங்களுக்கும் முன்னால் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தனது சொந்தப்பட ரிப்போர்ட்டுக்காக காத்திருப்பதுபோல் ஆர்வமாகக் காத்திருந்தார். பாலாவை நெருங்கி வந்து கட்டிப்பிடித்தவர், 'இன்னும் அரை மணி நேரத்துக்குள்ள இந்தப் படம் ஹவுஸ் ஃபுல் ஆகலைன்னா' என்பது போல் ஏதோ சொல்லி பாலாவுக்கு நம்பிக்கையூட்டினார். அவர் சொன்னது அடுத்த பத்தாவது நிமிடமே பலித்தது. அத்தனை ஆண்டுகால பின் தொடரலில் அன்றுதான் பாலா அழுததை முதல் முறையாகப் பார்த்தேன்.
ஆகஸ்ட், 2019.