எங்கேயும் எப்போதும்

வானொலி நூற்றாண்டு
எங்கேயும் எப்போதும்
Published on

நூறாண்டுகளுக்கு முன், 1920ஆம் ஆண்டு, வானொலி தேர்தல் முடிவுகளை ஒலிபரப்பத் தொடங்கியது. அதன் விளைவாக மாறியது ஊடகங்கள் மட்டுமல்ல, அரசியலும்தான்.

பைடனா, டிரம்பா என்று நகத்தைக் கடித்துக் கொண்டு (பல்லையும்தான்) நடு இரவில் (நமக்கு இரவு அங்கே பகல்) விழித்துக் கொண்டு காத்திருந்த நண்பர்களைப் பார்த்தபோது நான் 100 வருடம் பின்னால் போய்விட்டேன். 1920ஆம் வருடம் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரிலிருந்த ஒரு வானொலி நிலையம் முதன் முறையாக அமெரிக்கத் தேர்தல் முடிவுகளை குரல் வழி ஒலிபரப்பத் தொடங்கியது. தொலைபேசி மூலம் தகவல் பெற்று வானொலி மூலம் ஒலிபரப்பத் தொடங்கியது, அது ஒரு திருப்பு முனைத் தருணம். காரணம் தேர்தல் முடிவுகளை அறிய அடுத்தநாள் நாளிதழைக் காணும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. அன்றன்றைய அப்பம் அன்றன்றே தரப்படும்.

இந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர் ஃபிராங்க் கொனார்ட். ஏழாம் வகுப்பு வரைதான் படித்தவர். அவர் இறக்கும் போது அவரிடம் 200க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் இருந்த கோடீஸ்வரர்.

ஹெர்ட்ஸ் அலைகள் மூலம் (அவை பின்னால் ரேடியோ அலைகள் என்றே பிரபலமாகிவிட்டன) தகவல்களை அனுப்ப முடியும் என்று மார்கோனி 1890இல் கண்டறிந்து விட்டார். 1909இல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1910ல் சில அமெச்சூர் வானொலிகள் தோன்றின. ஆனால் அவற்றில் மிகச் சிலர் பெரும்பாலும் பாட்டுக் கேட்டுக் கொண்டு உடகார்ந்திருந்தார்கள். பலரிடம் ரேடியோ பெட்டி என்பதே கிடையாது.

1920ஆம் வருடம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் மூலம் அதிகம் பேரை வானொலி கேட்கச் செய்யலாம் என்று ஃபிராங்க் தனது முயற்சியைத் தொடங்கினார். அது அரசியல் உலகை மட்டுமல்ல, ஊடக உலகையே மாற்றியது. எப்படிப்பட்ட மாற்றம் என்றால் இன்றைய சமூக ஊடகங்கள் செய்திருப்பதைப் போன்ற மாற்றம். உள்ளது உள்ளபடி, உள்ளது உடனுக்குடன் என்ற இரண்டு அம்சங்கள் ஊடகங்களின் முக்கிய அம்சங்களாகின. ‘என் பேச்சைத் திரித்து விட்டார்கள்' என்று அரசியல்வாதிகள் அச்சுப் பத்திரிகைகள் மீது சுமத்தி வந்த பழியை இனிமேலும் சுமத்த ,முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அரசியல்வாதிகள் நல்ல

பேச்சாளர்களாக ஆக வேண்டிய அவசியம் நேர்ந்தது. ஹிட்லரின் வளர்ச்சிக்கு வானொலி ஒரு முக்கிய காரணம். சர்ச்சிலுக்கும்தான். அவர் உலகப்போரின் போது மக்களிடம் ‘நேரடியாக' வானொலி வழி பேசி வந்தார். அதற்குக் களன் அமைத்துக் கொடுத்தது பிபிசி.

இன்று பிபிசி, கொரானாவில் வீடடங்கி இருந்தவர்களுக்கு ஓர் அருமருந்தாக இருந்தது. பிரிட்டனில் கோவிட் தொற்று காரணமாகத் தனிமைப்பட்டவர்களின் உடனிருக்கும் ஒரே உற்ற துணையாக இருந்தது வானொலி. அவர்களுக்காகச் சிறப்பு நிகழ்ச்சிகளை பிபிசி ஒலிபரப்பியது. அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த நிகழ்ச்சிகள் தனிமையில் தெம்பூட்டும், நம்பிக்கையை விதைக்கும் நிகழ்ச்சிகளாக இருந்தன.

மற்றெந்த ஊடகங்களைக் காட்டிலும் வானொலி சமூகம் சார்ந்த கடமையுடனே செயல்பட்டு வந்திருக்கிறது, அநேகமாக எல்லா நாடுகளிலும். இந்தியாவில் வேளாண் துறையில் அது நிகழ்த்தி யிருப்பது ஒரு புரட்சி. டிரான்சிஸ்டரை டிராக்டரில் மாட்டிக் கொண்டு வயலுக்குப் போகும்

விவசாயிகளை பஞ்சாபில் நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் ரேடியோ கோதுமை என்றொரு ரகத்தையே உருவாக்கினார்கள்.

அச்சு ஊடகத்தில் வேர் கண்டு தொலைக்காட்சியில் பூ உதிர்த்தேன் என்றாலும் என்னைப் பின்னிப் படர்ந்த கொடியாகவே வானொலி இருந்திருக்கிறது. எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் இரவு ஒன்பது மணிக்கு வானொலிக்கு அருகே வந்தமர வேண்டும் என்று என் தாத்தா வற்புறுத்துவார். அது ஆங்கிலச் செய்தி நேரம். ஒரு துளியும் புரியாது. ஆனாலும் அதில் சிமிட்டிக் கொண்டிருக்கும் பச்சை விளக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்போம். பின்னர் அந்தப் பொறுமை கிரிக்கெட் விளையாடக் கை கொடுத்தது. வானொலியில் கிரிக்கெட் வர்ணனை கேட்டுத்தான் ஆட்டத்தில் ஆர்வம் பிறந்தது.

கல்லூரி நாட்களில் காதல் கற்பனைகளை விதைத் ததும், கண்ணதாசன் மீது காதல் சுரக்கவும் காரணமாக இருந்ததும் வானொலிதான். பகல் நேரங்களில் இலங்கை வானொலியும் இரவு நேரங்களில்

 சென்னை வானொலியும் இசைத்துக் கொண்டே இருந்தன. சௌந்தரராஜன், ஜானகி, சுசீலா, சீர்காழியோடு ஜெயங்கொண்டானும், கூத்தபிரானும் காதை நிறைத்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கள் இளவேனிற் காலத்தின் இன்னொரு தென்றலாக இளையபாரதம் அமைந்தது. அகில இந்திய வானொலி அப்போதுதான் இளைஞர்களே இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகளைத் தொடங்கத் தனியொரு அலைவரிசையை ஆரம்பித்தது. தமிழ் அலைவரிசையின் தொடக்கப்பாடலாக (Signature) ஆக என் கவிதை தேர்வாயிற்று.

என்னைச் செதுக்கிய உளிகளில் ஒன்று இளையபாரதம். என் தலைமுறையில் எத்தனையோ பேரின் திறமைகளை, அச்சு ஊடகங்களுக்கு முன்பாகவே அடையாளம் கண்டு அரவணைத்த ஒளிபடைத்த கண்கள் இளையபாரதத்திற்கு உண்டு. வைரமுத்து, பொன்மணி, பாலகுமாரன் எனப் பல உதாரணங்கள் உண்டு.

எழுபதுகளின் மத்தியில் நான் வாசகன் என்றொரு இலக்கியச் சிற்றேட்டை என் நண்பர் அக்ரிஷுடன் இணைந்து ஆரம்பித்தேன். அப்போது அப்ரண்டீஸ்க்கு அரசு அளித்து வந்த ஸ்டைஃபண்ட் 250ரூபாய்தான் வாழ்வாதாரம். ஆனால் இளையபாரதத்தில் மாதம் நான்கைந்து நிகழ்ச்சி செய்தால் காகிதம் வாங்க வேண்டிய காசு கிடைத்து விடும். அந்த வகையிலும் இலக்கிய சேவை செய்தது வானொலி.

அரசியல் விமர்சகனாக தொலைக்காட்சிக்கு முன்னரே எனை அங்கீகரித்த்தும் வானொலிதான். ஆனால் அது அயலக வானொலி. பிபிசி. அதன் தமிழ்ச் சேவைப் பிரிவில் மாதம் ஒரு கடிதம் வீதம் பத்தாண்டுகள் செய்தி மடல் அளித்து வந்தேன்.

அமெரிக்காவிற்குப் படிக்கப் போனபோது அங்கேயும் பற்றிக் கொண்டது வானொலி. எங்கள் பல்கலைக்கழகத்தில் ஒரு பண்பலை வானொலி நிலையம் இருந்தது. பண்பலை அங்கு பிரபலம். காலையில் காரேறி வேலைக்குப் போகிறவர்கள் என்ஜினுக்கு அடுத்தபடியாக முடுக்குவது வானொலியைத்தான். காரணம் அவர்களுக்கு அதிகாலையில் செய்தித்தாள் வாசிக்க நேரம் இராது. வாரத்திற்கு இரண்டு நாள் காலைச் செய்தி அறிக்கையையும் ஒரு நாள் முன்னிரவுச் செய்தி அறிக்கையையும் எழுதித் தயாரிக்கிற வேலை எனக்கு. படிப்போடு தொடர்புடைய செய்முறைப் பயிற்சி. அதிகாலைக் குளிரில் நடுங்கிக் கொண்டு நிலையத்திற்குள் முதலாளாய் நுழைந்து காபி மேக்கரை ஆன் செய்துவிட்டு வேலையைத் தொடங்குவது தனியொரு அனுபவம்.

வானொலி என்பது இன்று பாட்டுக் கேட்கிற பண்பலையாகிவிட்டது. இசை என்பது அதன் எத்தனையோ முகங்களில் ஒன்று. அது ஆற்றியிருக்கும் சமூகப் பணிகள் பற்றி அதிகம் பேசப்பட்டதில்லை. புயல் முன்னெச்சரிக்கையிலிருந்து குடும்பக் கட்டுப்பாடு வரை அது விரிந்து கிடக்கிறது.

இந்தியாவில் அச்சு ஊடகம் தனியார் கையிலும் வானொலி அரசின் வசமும் இருந்தது ஜனநாயகத்தில் ஒரு சமன்பாட்டை நிறுவியது. செய்திக்கென ஒரு மொழியை உருவாக்கியதில் வானொலிக்கு ஒரு கணிசமான பங்குண்டு.

இன்று என்னிடம் வானொலி பெட்டியில்லை. ஆனால் வானொலி இருக்கிறது என் கைபேசியில். பிரமாண்டமான பெட்டியிலிருந்து

கையடக்கத்தொலைபேசிக்குள்வந்தஇந்தஇடைப்பட்டகாலம்தொழில்நுட்பம்நிகழ்த்தியிருக்கும்ஒருமாஜிக். அதைஎழுதஎனக்குத்திறமில்லைஎன்றாலும், யாரேனும்எழுதத்தான்வேண்டும். எதிர்காலமாணவனுக்காக

டிசம்பர், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com