வண்ணதாசனுடைய முதல் வாசகன் நான்தான். அவருடைய கதை மற்றும் கவிதைகள் முழுத்தொகுதியாக வந்தபோது அவரது வீடு தேடிப்போய் உன்னுடைய வாசகன் நம்பி வந்திருக்கேன்னுதான் சொன்னேன்.
அவருடைய தொகுதிகளை எனக்குப் படிப்பதற்குக் கொடுத்தார். இங்கே நான் விக்கிரமாதித்யன் இல்ல, நம்பிதான். அவருக்கு நான் நம்பிதான்.
எழுத்தாளர் லா.சா.ரா நெல்லை டவுன் பஞ்சாப் நேஷனல் பேங்க்கில் வேலை பார்த்தபோது அவரது கதைகளைத் தீவிரவாக வாசித்துவிட்டு ஒரு வாசகனாதான் சந்திப்பேன். அதே மாதிரி கல்கி, வல்லிக்கண்ணன், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், ஜானகிராமன், மௌனி, சுந்தரராமசாமி இப்படி எல்லாருக்கும் வாசகனா இருப்பதுதான் எனக்கு மிகப்பெரிய இஷ்டம். இது ஒரு மிகப் பெரிய பட்டியல்.
மதுரையைச் சேர்ந்த வாசகன் எஸ்.எஸ்.கே. (செந்தில்குமார்). அவங்க அப்பா பி.சி. பெருங்காயம் தொழில் செய்றவங்க. குற்றாலம் சாரலுக்கு வந்தவர் நம்மைத் தேடி வீட்டிற்கு திடீரென்று வந்தார். இப்படி நான் தரையில் சூட்கேஸ் மேல் வைத்து உடகார்ந்து எழுதுவதைப் பார்த்து அதிர்ச்சியாகி அண்ணாச்சி ஊருக்கு போன உடனே உங்களுக்கு மேசை நாற்காலி அனுப்பி வைக்கிறேன் என்றார். தம்பி அதெல்லாம் வேண்டாம், எனக்கு இது பழகிடுச்சு. என்று சொன்னேன் ஆனால் அவர் ஊரு திரும்பி மூன்றாவதுநாள் எனக்கு மேசையும்; நாற்காலியும், பீரோவும் அனுப்பிவைத்துவிட்டார். நான் எப்ப சென்னைக்குப் போனாலும் குடிப்பழக்கம் வேற இருந்ததுனால சாப்பாட்டுல அலட்டிக்கமாட்டேன். ஆனா தம்பி வந்து சென்னையில் உள்ள முருகன் இட்லி கடையில்தான் எனக்கு சாப்பாடு வாங்கிக் கொடுப்பார். பிறகு டிராவலுக்கு டிக்கெட்டும் கைச்செலவுக்குப் பணமும் பஸ் கிளம்பும்வரை நின்று என்னை வழி அனுப்பிவிட்டுதான் செல்லுவார். மதுரைக்கு எப்பப்போனாலும் அவரது போன் நம்பரை மட்டும்தான் எடுத்துக்கிட்டுப் போவேன் எனக்கு என்ன செய்யனுமோ அதையெல்லாவற்றையும் செய்வார். மதுரையில் உள்ள பாடல்பெற்ற சிவத்தலங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கு நானும் என் மனைவியும் சென்றவுடன் கார் அனுப்பியிருந்தார் அதே மாதிரி எனது பசங்க மதுரைக்குப் போனாலும் அவரது வீட்டில்தான் தங்குவாங்க... அப்படி குடும்பநண்பராக மாறிட்டாரு. இன்னைக்கு வரைக்கும் அவரோடு தொடர்பு இருக்கு.
நவீன இலக்கிய ஆளுமைகள் சிலரின் கஷ்டங்களைக் கேள்விப்பட்டு சென்னையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் எனக்கு ஐந்து வருடம் நான்காயிரம் ருபாய் பணம் அனுப்பிருந்தார். நான் என்னுடைய புத்தகங்களை இவர்கள் இரண்டு பேருக்கும் சமர்ப்பணம் பண்ணியிருப்பேன்.
அதேமாதிரி சிவகங்கை அரசு உயர்நிலைப்பள்ளி நூலகத்தில் நூலகராக இருக்கிறார். அவரை செல்லமணி அண்ணன் என்றுதான் ஊர்ல கூப்பிடுவாங்க. நானும் அப்படித்தான் கூப்பிடுவேன். ஆனா அவரு எனக்கு இளையவர்தான். சிவகங்கைக்கு கவிஞர் ஜீவீதனை பார்க்கப்போவேன் அவர் வாசகர் பேரவை தொடங்கியிருந்தார். பேரவையில் நான் வண்ணதாசன் போன்றோர் பேசியிருக்கோம். அப்பதான் எனக்கு செல்லமணி அண்ணன் அறிமுகம் ஆனாரு.. நாங்க இலக்கியம் பேசுவோம். அப்படியே நெருக்கமாயிட்டாரு. செல்லமணி அண்ணனுக்கு ஒரு கெட்டபழக்கமும் கிடையாது. ஆனா எங்களுக்கு எல்லாமே வாங்கிக் கொடுப்பாரு. நான் எந்தப்பக்கம் போறேன் என்று கேட்டு எனக்குப் பணம் கொடுத்து அனுப்புவாரு.
இப்படித்தான் கும்பகோணம் பக்கத்தில அம்மாச்சி சத்திரம்கிற சின்ன கிராமம். எழுத்தாளர் சரவணன் ஊரு. இப்ப நியு செஞ்சுரி புக் ஹவுசில் வேலை செய்றார். அவரு மூலமா தலைமையாசிரியர் உத்தமசோழன் அறிமுகம் ஆனாரு. அவங்க இரண்டு பேரும் ஒரே பள்ளியில படிச்சவுங்க ஒரே ஊருக்காரங்க. உத்தமசோழன் ரொம்ப நல்ல மனுஷன். எந்தப் பழக்கமும் கிடையாது. அவரு முதலிலே சொல்லிவிடுவாரு அண்ணாச்சி கும்பகோணம் வருவதா இருந்தா முன்கூட்டியே சொல்லிடுங்க. ஏன்னா நாம அதிகாலையிலோ நடுசாமத்திலோ போயி கதவத் தட்டக்கூடிய ஆளு. அவர் வீட்டுக்குப் போனா விருந்து வைச்சி புதுவேட்டி சட்ட எடுத்துக்கொடுத்து நம்மளக் கொண்டாடுவாரு. இப்பவும் ஒரு நியாயமான விசயத்துக்காக எழுதிக்கிட்டு இருக்கேன் அக்கவுண்ட் நம்பர் தரேன் பணம் போட்டுவிடுங்கன்னு சொன்னா போதும் பணம் போட்ருவாரு. அவருதான் வண்டியில கூட்டிட்டுப்போயி எனக்கு உலகப் புகழ்பெற்ற கோணகிரிராஜபுரம் நடராஜர் சிலையை காண்பிச்சார். அவரோட சேர்ந்து நிறைய கோயில் கோயிலா ஏறி இறங்கி இருக்கேன். கிளம்பும்போது அண்ணாச்சி உடம்பப் பார்த்துக்கோங்க என்று சொல்லுவார், அப்படியின்னா அளவா குடிங்கனு அர்த்தம். இங்கதான் இளங்கோவனும் இருக்கான். என்னைப் பார்த்தா போதும் கையில வச்சி தாங்குவான்.
அதேமாதிரி வெவ்வேறு வாசகர்கள் எனக்கு இருக்கிறார்கள். கவிஞர் வெங்குட்டுவன் பல்லடம் பக்கத்தில் உள்ளவர். கொடைக்கானலில் சாவித்திரி அம்மாவுடைய பங்களா இருக்கு நீங்க கண்டிப்பா பார்க்கணும் அது உங்களுக்கு ஒரு கவிதை தரும் என்று மூணுமாசமா கூப்பிட்டுக் கொண்டே இருக்கார் நான்தான் போகமுடியல. எனக்கு பேச்சுத் துணைக்கு ஆள்வேணும், அதனால மணிவண்ணனை கூப்பிட்டேன். சிலேட் இதழ் வேலை நடந்துக்கிட்டு இருக்கு. ஜனவரியில் போகலாம்னு சொல்லியிருக்கிறான்.
ரொம்ப முன்னாடி பெங்களூர் ஆர். மகாலிங்கம் சிறுபத்திரிகைகளைத் தேடி வந்தவர். முதலில் பாளையங்கோட்டை சிவசுவைப் பார்க்க வந்தார். அவர்தான் நம்பிகிட்ட நிறைய சிறுபத்திரிகை இருக்கும் அவன் சேர்த்து வைத்திருப்பான் என்று மகாலிங்கத்திடம் சொல்லி என்னிடம் அனுப்பிவைத்தார். எனக்கு ஒரு பழக்கம் உண்டு. பிடித்த இலக்கிய புத்தகத்தையொல்லாம் டிரங்கு பெட்டிக்குளதான் வைத்திருப்பேன். கோணங்கியும் அப்படிதான் வைப்பான். நாங்க ரெண்டுபேரும் புத்தகம் திரும்ப வருமா என்று யோசித்து விட்டுத்தான் இரவலே கொடுப்போம். இல்லனா கொடுக்கமாட்டோம். ஆனால் பெங்களூர் மகாலிங்கம் என்னிடம் உள்ள சிறுபத்திரிகைகளைக் கேட்டபோது நான் எல்லாவற்றையும் எடுத்துக் கொடுத்துவிட்டேன். அவரும் இன்னைக்கு வரைக்கும் வாசகனாத்தான் இருக்காரு. எழுத ஆசைப்படமாட்டாரு.
பெங்களூர் டி.வி. ராமசந்திரன். லால்பார்க் அருகே பெரிய எழுதுபொருள் விற்பனை நிலையம் வைத்திருக்கிறார். அவரும் இப்படித்தான் ஒருநாள் நிறைய எழுதுவதற்கான நோட்டோடு வீடுதேடி வந்துட்டார். குறிப்பிட்ட நோட் என்று இல்லாமல் வகைவகையான நோட்டாக இருந்தது. அந்த நோட்டுக்காவே எழுதலாம் போல தோன்றிற்று.. சென்னையில் இருக்கும்போது புதுமணத் தம்பதியாகவே என்னைப் பார்க்க வந்திருக்கிறார். அவரும் எங்களுடைய குடும்ப நண்பராகிவிட்டார். இப்ப பெங்களூரு போறது குறைஞ்சிருக்கு. ஆனா எப்போதுமே அவர்கள் என்னுடைய வாசகர்கள்தான்.
டி.எம். நந்தலாலா எழுத்தாளர் கார்த்திகா ராஜ்குமாருடன் சேர்ந்து சுரம் இதழைக் கொண்டுவந்தவர். நந்தலாலா திருக்கோவிலூர் குமார் எல்லோரும் சேர்ந்து யோகிராம்குமாரை முதன்முதலில் பார்க்கப் போயிருந்தோம்.
திருச்சியில ஸ்ரீராம், சாய்ராம், ஸ்ரீராமசுப்பிரமணியன். இவர்களில் ஸ்ரீராமசுப்பு எல்ஐசியில் வேலை செய்கிறார். ஸ்ரீராமுக்கு இலக்கியத்தை விட ஆன்மிகத்தில நல்ல ஈடுபாடு உண்டு. திருச்சியிலுள்ள கோயில்கள் எல்லாம் சுற்றிக் காண்பிப்பார். சிலநேரம் நான் அவரைச் சந்திக்கும் போது என் காலில் செருப்பு இருக்காது. அவரு ‘என்ன நம்பி செருப்பு இல்லாம நடக்கிறீங்க' என்று சொல்லிச் செருப்பு வாங்கிக் கொடுப்பாரு. அதேமாதிரி சாயங்கால நேரமாக இருந்தால் ‘கடைக்கு' கூடிட்டுபோயிட்டு பஸ் ஏத்தி விட்ருவாரு. இவங்க மூன்று பேருமே எனக்கு முக்கியமான வாசகராக இருந்தார்கள்..
ஸ்ரீவில்லிபுத்தூர் பாலகுரு அந்தக்காலத்தில இலக்கிய வெளிவட்டம்& என்ற இடதுசாரி சிந்தனையுடன் வந்த காலாண்டிதழை கொண்டுவந்தார். அதில் தமிழவன், ராஜ்கௌதமன் உட்பட எல்லாருமே எழுதியுள்ளார்கள். ஈழப்பிரச்சனைக்கு இதழ் சார்பாக மாநாடு நடத்தினார்கள். அவர் ஆண்டாள் கோயில் அருகேதான் கோயில் பூஜைக்கு வேண்டிய சாமன் கடை வைத்திருக்கிறார். பெரியார் மீது நம்பிக்கை கொண்டவர். நான் அங்கே போனால் ஆண்டாள் கோயிலுக்கு போவேன். என்னை கிண்டல் செய்வார்.
பாலசுப்பிரமணியன் நம்ம ஊருக்காரன்தான் இவனது கவிதையை சந்தியா பதிப்பகம் கொண்டு வந்திருக்கு. கோணங்கி இவரைப்பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்... இவனும் திருமேனியும் கவிதைப்பட்டறைக்கு வந்தா, நம்மள இரவு ‘கைதாங்கலா' வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுவாங்க.. இதில திருமேனி என்னுடைய தொகுப்பு ‘உள்வாங்கும் உலகத்துக்கு' முன்னுரை எழுதியிருக்கான். இரண்டுபேரும் நல்லா வருவாங்க.
கடலூர் மருத்துவமனையில் கோகிலவாணி வரவேற்பாளராக இருக்கிறார். என்னையும் மனைவியையும் கபாலீஸ்வரர் அம்மன் சன்னதியில் வைத்து அடையாளம் கண்டுகொண்டு நீங்க விக்ரமாதித்யன்தானே என்றார். ஆமாம் என்றவுடன் அந்த இடத்திலேயே காலில் விழுந்து கும்பிட்டார். கடந்த தீபாவளிக்கு வேஷ்டி சட்டை சேலை எடுத்து அனுப்பியிருந்தார். அதேபோல ஸ்ரீரங்கம் வாசுவும் அப்படித்தான், குடும்பத்தோடு அவன் வீட்டுக்குப் போனால் சேலை சட்டை எடுத்துக்கொடுப்பார். இப்ப நான் உடுத்தியிருக்கிற வேஷ்டி கூட ஒரு வாசகர் எடுத்துகொடுத்ததுதான். நாம வேண்டாம் என்று மறுத்தாலும் அவர்கள் தொடர்ந்து கடமை மாதிரி செய்கிறாங்க. அதனால நான் எதுவும் சொல்லுவதில்லை.
மா.முருகன் திருநெல்வேலிக் காரர்தான். இனிய உதயம் பொறுப்பாசிரியராக ஆனபின்னர் அவரிடம் எழுத்தாளர்களிடம் சிறுகதைகள் எப்படி எழுதுறீங்க என்ற தலைப்பில் கேளுங்க என்றேன். அவர் கந்தர்வன், அசோகமித்திரன், பா.செயபிரகாசம், பூமணி உட்பட்ட பலரிடம் கேட்டு அதைத் தொடராகவே எழுதினார். என்னிடம் கவிதைகள் கேட்டு வாங்கிப் பல வருடங்களாக என்னுடைய கவிதைகளை மாதம் தவறாமல் பிரசுரித்தார். என்னுடைய கவிதைக்கு அவர் வாசகர்தான்.
என்னை கிராமப்புற வாசகர்கள் தெரிந்து வைத்திருப்பதற்கு காரணம் ஆனந்தவிகடன்தான். கரூர் முருகேசன் என்னை வந்தடைந்தது அவரது ஊர் கிளை நூலகததிற்கு வந்த ஆனந்த விகடனில் எனது கவிதையைப் பார்த்தபிறகுதான். இதற்காக நான் ரா.கண்ணனுக்கு ரொம்பக் கடமைப்பட்டிருக்கேன். ஆனா முனைப்புடன் யாரையும் சந்திப்பதில்லை. கண்ணன் ஆசிரியர் ஆவதற்கு முன்பு நக்கீரன் துரையைப் பார்க்கப் போகும்போது கண்ணனைச் சந்தித்தேன். அவர் என் கவிதை மீது அபிமானம் கொண்டு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு பாராட்டினார்.
மறைந்த க.சீ.சிவகுமார் என் கவிதை மீது மிகுந்த பற்று கொண்டவன். ஒருநாள் புத்தகக் கண்காட்சில பார்த்துவிட்டு அண்ணாச்சி உங்களுக்குக் கவிதை எப்படித் தோணுகிறது என்று கேட்டான். நான் விளையாட்டுக்குத்தான் கேட்கிறான் என நினைத்து அது ‘‘உள்ள போனா'' வரும்டா என்று சொன்னேன். ஆனால் அவன் ஆனந்தவிகடனில் அதை எழுதிவிட்டான். என்னை மட்டுமல்லாமல் சா.கந்தசாமி, ஜெயகாந்தன், சுஜாதா, நாஞ்சில்நாடன் ஆகியோர் பற்றியும் எழுதியிருந்தான்.
ஐடி துறையைச் சேர்ந்த ஆர்.ராஜகோபால் எப்படியோ என் நம்பரை பிடித்து என்னிடம் பேசினார். அண்ணாச்சி லட்சுமி மணிவண்ணன் கவிதைகள் எனக்கு புரியவில்லை. நீங்க சொன்னா நல்லா இருக்கும் சந்திக்கலாமா? என்று கேட்டார். உடனே தம்பி என்னிடம் கவிதைத்தொகுப்பு இல்லை நீங்க கொண்டுவந்துடுங்க என்றேன். சாயங்காலம் ஆரம்பித்த கச்சேரி சாமம் வரை போயிற்று. பிறகு அவரே என்னை வீட்டில் வந்து கொண்டு விட்டார். காலையில் எழுந்திருச்சி டீ குடிக்க சட்டை பையில கைய உட்டா ஆயிரம் ருபாய் இருந்தது. அதற்கு அப்புறம் அவரை நான் பார்க்கவேயில்லை.
செல்வராஜ் ஜெகதீசன் அபுதாபியில் இருக்கிறார். முதல் தொகுப்புக்கு முன்னுரை கேட்டார் . அப்ப நான் பாலா படத்துல நடிச்சிட்டு இருந்தேன். அதனால என்னால உடனே எழுதிக்கொடுக்க முடியாது லேட் ஆகும் நீங்க வேற யாருக்கிட்டயாவது கொடுங்க என்றேன். அண்ணாச்சி நீங்கதான் எழுதனும் என்று பிடிவாதமாக சொன்னார். பிறகு எழுதிகொடுத்தேன்.
கோர்ட் உத்தரவால் தென்காசியில் கடையே இல்லை. நானும் கவிஞர் குமணனும் செங்கோட்டை தமிழ்நாடு சுற்றுலா கடையில குடிச்சிக்கிட்டு இருக்கும்போது பணம் காலியாயிட்டு. உடனே பஸ் பிடித்து நெல்லைக்கு வந்தோம். தி.க.சி. மகன் நெல்லையப்பன் டவுனில் இருக்கிறார். அவரைப் பார்த்து பணத்தை வாங்கிக்கொண்டு டவுன் குறுக்குத்துறை பக்கத்தில இருக்கிற கடைக்குப்போனோம். பாட்டில வாங்கிவிட்டு போகும்போது பார் ஓனர் ஓடி வந்து ‘‘ஐயா நீங்க விக்ரமாதித்யனா?'' என்று கேட்டார். ஆமாம் என்றேன். ஏதாவது சாப்பிடுறீங்களா? என்றார். சாப்பிடத்தானே வந்திருக்கோம் என்றேன். அவரும் சிரித்துக்கொண்டே பையனைக் கூப்பிட்டு ஐயாவைக் கவனி என்று சொன்னார். இப்படி எங்கப் போனாலும் வாசகர்கள் என்னை அடையாளம் கண்டுகொள்ளுகிறார்கள்.
(சந்திப்பு: மா.கண்ணன்)