என் தாயின் சித்தப்பா மாணிக்கம் பிள்ளை தாத்தா தான் திருநெல்வேலியிலேயே முதல் முதலாக வாடகைக் கார் ஒன்றை ஓட்டியுள்ளார். அப்போது நெல்லைக்கு பண்டித ஜவஹர்லால் நேரு வந்த போது அவர் காரிலேயே பயணித்துள்ளார்.
எங்கள் வீட்டில் எனக்கு நான்கு வயது இருக்கும் போது யாதவ குலத்தைச் சார்ந்த அண்ணன் ஆழ்வார் ஓட்டுநராக இருந்தார். என் அம்மாவின் தலைமகன் அவர். அவரே பின்னாளில் நெல்லை வாடகைக்கார் ஓட்டுநர்களின் சங்கத் தலைவராக இருந்தார். 90 வயது வரை வாழ்ந்தார் நோய் நொடியின்றி.
நான் கார் வாங்கிய பின்னர் எனக்கு கார் ஓட்ட பலர் வந்தனர்; சிலரே நிலைத்தனர். அதில் தலையாய என் தோழன், ஆந்திரா என நெல்லை வாடகைக்கார் ஓட்டுநர்களால் அழைக்கப் படுகின்ற, என்னால் நாயுடு என்று கொஞ்சப் படுகின்றவராக இருந்தவர். அநேகமாக தமிழகத்தின் பல மேடைகளில் என்னால் பலமுறைப் பாராட்டப் படுகின்றவராக இருந்தார். ஒரு முறை தஞ்சாவூரில் பேசிக்கொண்டிருக்கின்ற நேரம். எங்க.. என்று நான் சொன்னவுடனேயே நாயுடு என்று கூட்டத்தில் இருந்து ஒருவர் அந்த வரியை முடித்து வைத்தார் எனில் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
முப்பது வயதிலேயே ஐம்பது வயது தோற்றம் கொண்டவன். தந்தையின் அன்பு கிடைக்கப் பெறாதவன். வெறி கொண்ட எம்.ஜி.ஆர் ரசிகன். சிறு வயதிலேயே ஒரு ஓட்டுநரிடம் க்ளீனராக பணிக்குச் சேர்ந்திருக்கின்றான். பணியை ஒழுக்கமாக அவன் செய்வதைப் பார்த்து அந்த ஓட்டுநர் பரோட்டா கடையில் நம்ம பையன் கேட்டதைக் கொடுங்கள் என்று சொல்லி விட்டு சென்றிருக்கிறார். பின்னர் இவன் சாப்பிடிருக்கின்றான். ஓட்டுநர் வந்து கடையில் கணக்கு கேட்ட போது உணவு விடுதி நண்பர் ஐம்பது ரூபாய் என்றவுடன் அதிர்ந்து போயிருக்கின்றார். விடுதிக்காரர் அவன் முப்பது பரோட்டா சாப்பிட்டான் என்ற உடன், மறுநாள் அந்த ஓட்டுநர் அவன் கையில் ஐந்து ரூபாயைக் கொடுத்து
சாப்பிட்டிட்டு வந்திரு என்றுசொன்னாராம். இது அவனே என்னிடம் சிரித்துக்கொண்டே சொன்னது. பின்னர் அந்த ஓட்டுநரும் ஒருநாள் சொன்னார்.
‘ஒங்க அரமனைக்கு தான் அவன் சரி' என்றார். இன்னொரு சங்கடம் அவனது உடல் வாகு. உட்கார்ந்து சாப்பிட இயலாது. எம்.ஜிஆர் படங்களைக் கூட படம் முழுக்க நின்று கொண்டேதான் பார்ப்பான். எங்கள் சமையல் காரன் பேசத் தெரியாம பேசினால் தொலைந்தான்; நின்று கொண்டே அவன் சுடச் சுட போடுகின்ற இட்லிகளை தின்று கொண்டேயிருப்பான்.
சமையல்காரன் அண்ணே என்னான்னு கேட்டா பசி அடங்கல, என்று சொல்லி மொத்த மாவுக்குமான இட்லிகளையும் தின்று விடுவான். சமையல்காரனுக்கு பழைய சோறுதான்.
என்னிடம் வருவதற்கு முன்னர் ஒரு மார்வாடியிடம் பணியிலிருந்தான். அவர் ஒரு முறைசொன்னார். ‘‘பெங்களுர்ல தங்கச்சி வீட்டில் அவ மகனுக்கு கல்யாணம். இவன் தான் வந்திருந்தான். நான் தங்கச்சி பிள்ளைகளை இவனுக்கு ஜிலேபி கொடுக்கச் சொன்னேன். அவர்களுக்கு இவனைப் பற்றித் தெரியாது அல்லவா? இருபது ஜிலேபிகளை ஒரு தட்டில்வைத்து கொண்டு வந்து கொடுத்திருக்கின்றனர். இவன் பானி என்றவுடன் அவர்கள் போய் தண்ணி எடுத்து வந்து பார்க்கும்போது ஜிலேபிகளைக் காணோம்; நான் அங்கே போன போது சொல்லுகின்றான், சேட் ஜிலேபியே தரல என்று..... பின்னர் அவர்களுக்கு இது வியப்பாய்ப் போக கொடுத்துக் கொண்டே இருந்தனர்,'' என்றார்.
என்னிடம் பணிக்கு வந்த பின்னர் ஒரு முறை பெங்களுர் சென்ற போது மாலை ஏழு மணி அளவில் நடைபாதை கடைகளில் விற்கின்ற பிசிபேளா பாத் சாப்பிட வேண்டுமென்றான். காரை அங்கே நிறுத்தி ஆறு பிளேட் என்றான். கொண்டு வந்த பையன் என்னிடம் ஒன்றைத் தர முன்வந்த போது, அங்கே வேண்டாம் என்று அத்தனை பிளேட்டுகளையும் வாங்கிக் கொண்டான் அந்தப் பையன் உள்ளே எட்டி எட்டி பார்த்துக் கொண்டே போனான். பின்னரும் ஒரு மூன்று தட்டு வாங்கிச் சாப்பிட்டான்.
சும்மா சொல்லக்கூடாது. இப்படியும் சாப்பிடுவான்; மூன்று நாள் சாப்பிடாமலும் வண்டி ஓட்டுவான். தலைவர் மூப்பனார் அவனைப் பார்த்த உடன், ‘‘ நாயுடு என்ன சாப்பிட்டீங்க?'' என்பார். ‘‘ஆறு கோழியும் தொட்டுக்கிட ஒரு சப்பாத்தியும் சாப்பிட்டேன்,'' என்பான். அவர் சிரிப்பார். புதுவை முதல்வர் வைத்தியலிங்கம் நாயுடுவிற்கு ஜாங்கிரி ஐந்து வையுங்க என்பார்.
பயணத்தின் போது ஒவ்வொரு நூறு கிலோ மீட்டருக்கும் வண்டிய நிறுத்தி விடுவான். வண்டிக்கு இஞ்சின் தான் இதயம். ஒய்வு கொடுக்க வேண்டாமா என்பான். அறுபதுக்கு மேல் போக மாட்டான்.அவசியமெனில் அசுர வேகத்திலும் போவான்; குறிப்பிட்ட உணவகங்களிலே வண்டி தானாகவே நிற்கும். அவன் சொல்லும் மொழி வேறு படும். மாடு இழுத்திட்டு அண்ணாச்சி! என்பான். வண்டி மாடுகள் வழக்கமா போகும் பாதைகளில் எங்கெங்கு வண்டி நிற்குமோ அந்த இடங்களில் எல்லாம் நிற்பதைக் குறித்து மாடு இழுத்திட்டு என்பான்.
நெல்லை நகரத்திற்குள் பாளை காளிமார்க்கில் நிறுத்தி விடுவான். சுடச்சுட தருகின்ற சின்ன அழகான பன்னில் ஒரு முப்பது பன் சாப்பிடுவான். மதுரையைத் தாண்டும் போதெல்லாம் பெரியவர் தேவ சகாயத்தின் எண்ணெய்ப் பலகாரக் கடையில், தனக்கு சோறு போட வருத்தப்பட்ட தனது நாயணாவிற்கு பண்டங்கள் வாங்கிக் கொள்வான். நிதம் அவன் தந்தைக்கு கோழி வாங்கிக் கொடுக்க பணம் தருவேன்.
சிறு வயதில் க்ளீனராக இருந்த போதிலிருந்தே தொழிலைக் கற்றுக் கொள்வதிலும் பழுது நீக்குகின்ற பட்டறைகளுக்கு போகும் போதெல்லாம் அவர்களின் வேலைகளைக் கவனித்தும் வைத்திருந்ததனால் அவனை நம்பி குடும்பத்தோடு எங்கேயும் போகலாம். அவனே எதையும் சரி பார்த்து விடுவான். வீட்டிற்கு எதிரே இருக்கின்ற உச்சினி மாகாளி அம்மன் கோயில் படிக்கட்டிலேயே உட்கார்ந்திருப்பான். தெருக் குழந்தைகட்கு அவன் தாத்தா. மிட்டாய்களாக வாங்கிவைத்திருப்பான், அந்தக் குழந்தைகட்கு தருவான்.
என்னைப் பார்க்க வருகின்றவர்களை அறிகின்ற திறன் அவனுக்கு அதிகம். பார்க்க வேண்டியவர்களைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்க மாட்டான். திடீரென்று ஒரு நாள் கல்யாணம் பண்ணப் போறேன், அண்ணாச்சி என்றான். பெண்ணுக்கு இவனே நகை போட்டான். திருமணத்திற்கு நான் என் குடும்பத்தோடு போயிருந்தேன் . இவனது முதுமைத் தோற்றம். பெண் ஒல்லியாக சின்னவளாக இருந்தாள். ஒரு குச்சு வீட்டில் குடி போனான். அதையும் அவன் சொன்ன விதம் வித்தியாசமாகவே இருந்தது. ‘‘ நம்ம வீடு அம்பாசிடர் கார் சைஸ்தான்,'' என்றான். ‘‘ நான் உள்ளே போனால் அவள் வெளியே வரணும் அவள் உள்ளே வந்தால் நான் வெளியே வரணும்,'' என்றான்.
அவன் வாழ்ந்த வளவிற்குள் இருந்த பெண்கள்... வாழ்ந்த என்று சொல்ல வாய் வர மறுக்கின்றது... அந்தப் பெண்ணிடம் ஒங்க வீட்டு தாத்தா வேலைக்குப் போயிட்டாரா என்றெல்லாம் பல கேள்விகள் கேட்டு அவள் மனத்தைக் காயப் படுத்தியிருக்கின்றனர். அந்தப் பெண்ணும் மற்றவர்களை வயசு வித்தியாசமின்றி காயப் படுத்தியிருக்கின்றாள்.
ஒரு நாள் காலை ஒன்பது மணியளவில் நாயுடு வந்தான். ‘‘அண்ணாச்சி, அவ வளவில ஒரு பெரிய ஆளப் பாத்து கெட்ட வார்த்தையில பேசிட்டா அண்ணாச்சி! அதாம் அடிச்சிட்டேன்,'' என்று சொல்லிவிட்டு
வண்டி வேலை முடிஞ்சிருந்தா எடுத்திட்டு வாரேன்ன்னுட்டு ஒர்க்ஷாப்புக்கு போனான். ஒரு பதினொரு மணியளவில் டவுண் இன்ஸ்பெக்டர் தொலை பேசியில் அழைத்தார். ‘‘அய்யா நம்ம வீட்டுல ராம்குமார் என்று ஒரு பையன் டிரைவரா இருக்காரா?'' என்றார். அப்போதுதான் நாயுடுவின் பெயரே எனக்குத் தெரிகின்றது. ‘‘என்ன?'' என்றேன். ‘‘அவன் பெண்டாட்டி தூக்கு போட்டுக்கிட்டு அய்யா!'' என்றார்.
அவனை ஒர்க்ஷாப்பில் இருந்து அழைத்து வரச் சொல்லி ஸ்டேசனுக்கு அனுப்பி வைத்தேன். ஏட்டையா ‘‘என்ன பெரியவரே சின்னப்புள்ளைய ஏன் கல்யாணம் பண்ணினீருன்னு'' கேட்டிருக்கார். இவன் சர்ட்டிபிகேட்ட காட்டிருக்கான். அந்தப் பிள்ளைக்கு போட்ட நகைகளை அவங்க அம்மகிட்டய கொடுத்து அடுத்த பிள்ளை கல்யாணத்துக்கு வச்சுக்கிடுங்கன்னு கொடுத்திட்டு வந்திட்டான். என்கிட்ட சொன்னான் ஒங்க கூட இருக்கென்னு காட்ட வேண்டாமா அண்ணாச்சி, என்றான்.
அத்தனை அன்பானவன். பண்பானவன், எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தான். காருக்கு பின் சீட் புதுசா தைக்கணும்ன்னு சொல்லியிருந்தான். தைக்க சொன்னேன்; கேட்ட பணத்தைக் கொடுத்தேன். பக்கத்து ஒர்க்ஷாப் காரர் இதற்கு உங்களிடம் அதிகமாக பணம் வாங்கியிருக்கின்றான் என்று சொன்னார். பலரும் சொன்னார்கள். நான் எப்படி அவனிடம் கேட்பேன்? கேட்கவில்லை. மறுநாள் இரவு அவன் என் வீட்டிலிருந்த தன் உடமைகளையெல்லாம் எடுத்துக்கொண்டுபோய் விட்டான். ஊருக்குள்ளேயே இருக்கின்றான், என் முன்னாலேயெ வர மாட்டேனென்கின்றான். கேட்பவர்களுக்கு ஓரே பதில் என்னய கூடப் பொறந்தவனா வச்சிருந்த பெரிய மனுஷர்ட்ட சின்னத்தனமா நடந்துகிட்டேன். அண்ணாச்சி அதப் பத்தி பேசலவே அதான்வே அண்ணாச்சி.... நான் அவங்க உப்பைத் தின்னவன்வே.... திருக்குறள் எனக்கும் தெரியும்லா.. என சொல்லிருக்கான். போனவன் ஒரு மாதத்திற்கு முன்னர் போயே விட்டான்.
இப்போது என்னிடம் ஓட்டுநராக இருப்பவர் சண்முகம். அண்ணன் இராமசாமி நாயுடுவின் மகன். என் மகன் அய்யப்பன். ‘‘அப்பா ஒங்களுக்கு ஒரு நல்ல டிரைவர் தாரேன்''னு சொல்லி ரொம்ப நல்லவனைத் தந்திருக்கின்றான்.
அவன் வீடுபெருக்குகின்றான்; வீதி சுத்தமாக்குகின்றான்; தாதியர் செய் குற்றமெல்லாம் தட்டி அடக்குகின்றான் என்கின்ற பாரதி வரிகளுக்கு ஏற்றவன். உணவு தருவதும் மாத்திரை மருந்துகளைத் தருவதும் வீட்டிற்கு என்ன தேவை என்பதை என்னிடம் கூறாமலே அவனே வாங்கி வருவதும் பேரன் பேத்தியருக்கு வேண்டியதும் அவர்கள் கையிலேயே தருவான். அவர்களும் அவனை மாமா மாமாஎன்று பாசம் காட்டுவர். எல்லா நிகழ்ச்சிகளையும் அழகுற படம் எடுத்து விடுவதும் வருகின்றவர்களை அனிச்ச மலராகவே கருதி முகம் வாட விடாமல் விருந்து உபசரிப்பதுமாக பெருமை சேர்க்கின்றான்.
ஆகஸ்ட், 2020.