எங்கிருந்துப்பா கண்டு புடிச்சானுக, இந்த எழவு வெஜிடபிள் பிரியாணிய...

எங்கிருந்துப்பா கண்டு புடிச்சானுக,  இந்த எழவு  வெஜிடபிள் பிரியாணிய...
Published on

அன்பே வா’ படத்தில், டி.ஆர்.ராமச்சந்திரன், சிம்லாவில் நாகேஷிடம் இட்லி சாம்பார் தோசை வடையை  ரகசியமாக ஏற்பாடு செய்து தரக் கேட்டிருப்பார். அவரும் டிராலியில் எல்லாவற்றையும் ஒளித்து வைத்துக் கொண்டு வருவார். அதைக் கவனிக்காமல் டி ஆர் ராமச்சந்திரன் “டேய் டேய் நாக்கை நம்பி வாழறவண்டா நான், தின்னு கெட்ட குடும்பம்ன்னு எங்க பரம்பரைக்கே பட்டப்பேரு கூட உண்டுடா...” என்று அடுக்கிக் கொண்டே போவார். அந்த வசனத்தைப் பேசிப் பேசிச் சிரிக்காத ஆட்களே திருநெல்வேலியில் அப்போது இருக்க மாட்டார்கள். தெருவுக்குத் தெரு அப்படி நாலு குடும்பமாவது இருக்கும். நாலுல நாங்க ஒன்னு.

அக்கா கல்யாணத்திற்காக மும்முரமாக வேலைகள் நடந்து கொண்டிருந்தன. பந்தல்க்காரர், மேளக்காரர், வாங்கா ஊதுபவர், பூக்காரர்,வெத்திலைக்காரர் என்று ஒவ்வொருவராக வந்து அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். அப்பாவின் சினேகிதர் நாயகம் சித்தப்பா, கொடுத்ததையெல்லாம் கணக்கில் எழுதிக் கொண்டிருந்தார். அப்பா எதுவும் பேசாமல், சித்தப்பா தொகையைச் சொல்லச் சொல்ல ஒத்தை ரூபாய் புதுக் கட்டிலிருந்து எண்ணி எண்ணிக் கொடுத்துக் கொண்டிருந்தார். தவசுப் பிள்ளை வந்தார்.  “யாரு  பேராச்சியா நீ இப்ப ஏட்டுத் தவசுப் பிள்ளை ஆய்ட்டேராம்லா. எப்பா.. சொல்லு உன் சம்பளம் எவ்வளவு. உனக்கும் அட்வான்ஸ் உண்டுமா.”

 “யாரு முதலாளி அட்வான்ஸ் கேட்டாக, என்ன சமையல், எத்தனை பேருக்கு, எத்தனை கோட்டை அரிசி, காய்கறி பலசரக்குச் சாமான் லிஸ்ட் போடணும், விறகுக்கு சொல்லணும். நல்ல பரணி, கார்த்தியல் நாள் பார்த்து ‘கோட்டை அடுப்பு’ப் போடணும், அதுக்குத்தான் வந்திருக்கேன்.”

“ஆமாப்பா அரைக் கோட்டை அரிசி வடிச்சு, ரெண்டு வகைக் கறி வச்சிரணும். முந்தின நாள் ஒரு வகைக் கறி வச்சுரு, எதுவும் தட்டிப் போய்ட்டுன்னு பேச்சே வந்திரக் கூடாது. இரண்டு வகைக் கறின்னா ரெண்டு பொரியல், ஒரு அவியல், ஒரு கூட்டு, ரெண்டு பச்சடி. என்ன பொரியல், என்ன பச்சடி போடப் போறே?” “இப்ப பிலாப்பழக் காலம்தான முதலாளி பிலாக்காய் துவரம் போட்ருவோம், உருளைக் கிழங்கு புட்டு போட்ருவோம்.”

“ஆமாடே உருளைக் கிழங்கை குழைவா வெந்து, உதுத்து நல்ல புட்டுப் போல வச்சிரு. அதில அண்டிப் பருப்பும் நெய்ல வறுத்துப் போட்ரு” சொல்லும் போதே அவர் திங்கிற மாதிரி ரசிச்சுச் சொன்னார். “அவியல்ல சேனைக் கிழங்கு மறக்காதே.  இப்ப சிறு கிழங்கு காலமில்லை, சிறு கிழங்கு போட்டா அது ஒரு தனி ருசில்லா.   தக்காளி வெண்டைக்காய் பச்சடி ஒன்னு மாமூல், இன்னொன்னு இஞ்சிப் பச்சடி போடலாமாப்பா”.

 ”முதலாளி அது மறு நாள் பலகாரப் பந்திக்கு  சொதி வைக்கும் போது போடணும்ல்லா, மாங்காய்க் காலம்தானே, தேங்காய், எள்ளு எல்லாம் போட்டு மாங்காய்ப் பச்சடி போட்ரலாம்”.

“முதல் நாள் ஒருவகைக் கறிக்கு வாழைக்காய் துவரம் போட்ரலாம்.  ஏய் பேராச்சி,  மதுரைப் பக்கம்ல்லாம், வாழைக்காய் துவரம், பொரியல்ன்னா என்னானு தெரியலைப்பா. வாழைக்காயை எண்ணெயில போட்டு பொரிச்சு, மசாலா தூவி வருவல் மாதிரித்தான் செய்யறாங்க. நம்ம பொரியலோ துவரமோ செய்யப் பக்குவம் தெரிய மாட்டேங்கு. அது சரி, தூத்துக்குடிப் பக்கம்ல்லாம் சொதிக் குழம்பு என்னமா திக்கா, கொழுகொழுன்னு இருக்கு நம்ம ஊர்ல கொஞ்சம் தண்ணியா வச்சிர்ரீங்களே”

“அது, முதலாளி, அவங்க கொஞ்சம் கசகசா ஊறப் போட்டு அரைச்சி சேர்ப்பாங்க.  நம்ம தனீத் தேங்காப் பாலு மட்டும்தான். லேசா எலுமிச்சம்பழம் புழிஞ்சுக் கிடலாம். முருங்கைக் காய் கொடிக்கால்க் காயா இல்லாம  வீட்டுக் காயா இருந்ததுன்னா அதும் ஒரு ருசி முதலாளி. சொதியே சிலோன்ல இருந்து வந்தது தானே. அங்கதான் பிராபல்யம். இங்க  வந்து நம்ம ஊரு மண்ணு தண்ணி வாக்குக்கு அது இன்னும் ருசியாருக்கு.  இன்னமும் நம்ம ஊரைத் தவிர வேற எங்கயும் இஞ்சிப் பச்சடி வைக்கத் தெரியாது முதலாளி. இஞ்சியை தகடா அரிஞ்சு,அதோட தேங்காய், மிளகாய் வத்தல், பொடி உள்ளி எல்லாத்தையும் வறுத்து அரைச்சு, புளி, பெருங்காயம், உப்பு சேர்த்து, கொஞ்சம் வெந்த துவரம் பருப்பை சேர்த்துக் கொதிக்க வச்சு லேசா மண்டை வெல்லமும் சேர்த்தா, இஞ்சிப்பச்சடி ரெடி. ஒரு மொளகாவத்தலை முழுசாப் போட்டு தாளிச்சுக் கொட்டிக்கிட்டா... சொதியையும் சோத்தையும் கொண்டா கொண்டான்னுல்லாக் கேக்கும் நாக்கு”

“வத்தக் குழம்பு வைக்கணுமா ஐயா”. “ஆமாடே மாப்பிள்ள  அழைப்புக்கு வேணும்ன்னா வத்தக் குழம்பும் போடுடே. இப்ப கோடை காலம்தானே  புதுசாப் போட்ட எல்லா வத்தலும் வீடுகள்ளேயே செழிக்கச் செழிக்க இருக்கும். சீனியவரைக்காய் வத்தல், வெண்டை வத்தல், மா வத்தல், குறுத்தக்காளி வத்தல், சுண்டைக்காய் வத்தல்ன்னு சகலமும் ரெடியாவே இருக்கும். மிளகு, சீரகம், மல்லி தனித்தனியா வறுத்து வெங்காயமும் பூடும் சேர்த்து மையா அரைச்சு புளி கரைச்சுக் கூட்டி கொதிக்க வச்சு,  இந்த வத்தல்களையெல்லாம் வறுத்து குழம்புல போட்டா அது ருசியே தனிதான். வத்தக் குழம்புக்கு ஜோடி, பருப்புப் பொடிதான். குத்துப் பருப்பு- வெள்ளை உளுந்தம்பருப்பு- கொஞ்சம் கடலைப் பருப்பு, மிளகு ஒரு கரண்டி, பேருக்கு ஒரே ஒரு மிளகாவத்தலை எண்ணய் விடாம வறுத்து திரிச்சு எடுத்துப் பருப்புப் பொடி போட்டு, நெய் விட்டு, வத்தக் குழம்பு விட்டுச் சாப்பிடணும். அதுவும் தாமிரபரணி ஆத்துல, குதியாட்டம் போட்டு குளிச்சுட்டு நடந்து வந்து பசியோட சாப்பிட்டா ஒரு சொகம்தான்,  சொல்லும் போதே நாக்கில தண்ணி ஊறுதே, என்னவே மைனரு” என்று என்னைப் பார்த்துக் கேட்டார் நாயகம் சித்தப்பா.

எனக்கு சிரிப்பாணி தாங்க முடியலை.“ சரி அண்ணாச்சி, நாளைக் கழிச்சு சித்ரா பௌர்ணை வருதே, கல்யாணத்தை சாக்காக வச்சு, ராத்திரி ஒரு நிலாச் சாப்பாடு போடுங்களேன்” என்றார் நாயகம் சித்தப்பா, அப்பாவைப் பார்த்து. கேட்டால் போதாதா அப்பாவுக்கு, பேராச்சி தவசுப் பிள்ளையைப் பார்த்து “முப்பது பேரு சாப்பிடற மாதிரி நாளைக் கழிச்சு ராத்திரி கூட்டாஞ்சோறு ஏற்பாடு பண்ணிரு” என்றார். “கோடையும் கூட்டாஞ்சோறும்ன்னே பேரு,” என்றாள் அதுவரை அமைதியாய் இருந்த அம்மா. அம்மாவுக்கும் எனக்கும் சொதியை விட கூட்டாஞ்சோறே அதிகம் பிடிக்கும்.  “ஒரு பக்காவுக்கு கால் பக்கா துவரம் பருப்பு சேர்த்து  அரை வேக்காடா வெந்து வரும் போது வாழைக்காய், சேனை , உருளைக் கிழங்கு முருங்கைக் காய், முருங்கைக் கீரை யெல்லாம் முதலிலேயே போட்டு வேக வச்சு,கத்திரிக்காய், சீனியவரை,  மாங்காய் எல்லாம் கொஞ்சம் லேட்டாப் போட்டு, முழுசா  வதக்கின பொடி வெங்காயம், மஞ்சப் பொடி காயத்தோட, வெங்காய வடகம் தாளிச்சுக் கொட்டி உப்பைக் கடைசியாப் போடணும். இல்லேன்னா துவரம் பருப்பு வேகாது..” என்று அம்மா சொல்லவும், பேராச்சி, “ஆச்சிக்குத் தெரியாத பக்குவமா என்னையப் போயி கூட்டாஞ்சோறு கிண்டச் சொல்லுதிய”  என்கவும், “எப்பா 30 பேருக்குன்னா, வீட்டு ஆளுக செய்ய ஏலுமா” என்று சொல்லி விட்டு எழுந்தாள்.

பேராச்சி, “ஆச்சி, இன்னக்கி நம்ம வீட்ல ‘பொரிச்ச குழம்பு’ மாதிரி  வாசனை தூக்குதே, ரெண்டு வாய்  சாப்பிட்டுட்டு போகலாம் போலிருக்கே” என்றார்.  “மவராசனா சாப்பிடு, ஆனா ஒனக்கு வராத பக்குவமா,” என்றாள் அம்மா . பேராச்சி பதினோரு ரூவா அட்வான்ஸ் வாங்கிய கையோடு தோட்டத்துப் பக்கம் வாழையிலை வெட்டி வரப் போனார். பொரிச்ச குழம்பு என்கிற ‘புளியில்லாக் கறி’ திருநெவேலியின் இன்னொரு அடையாளம்ல்லா, “மதினி நானும் சாப்பிட வாரேன்.. எங்க வீட்ல முத்தம்மாளுக்கு இது வைக்கவே வராது” என்று நாயகம் சித்தப்பாவும் உக்காந்தார். “அது என்ன அப்படிச் சொல்லுதிய முத்தம்மா மாங்காய்த் தொக்கு போட்டான்னா என்னமா இருக்கும். வாழைப்பூவுல அவ அரைக்கிற துவையலும், நார்த்தை இலையும் புளியும் உப்பும் சேர்த்து அவ இடிக்கிற தவணாப் புளியும் நாக்குல தண்ணி ஊறுமே. பக்குவம் சொன்னா செஞ்சுட்டுப் போறா,” என்ற படியே “பொரிச்ச குளம்புக்கு மிளகு சீரகம்தான் மெயின். அதோட கடலைப் பருப்பு துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு மூன்றோடையும் மிளகாவத்தலை குறையாச் சேத்து வறுத்து, தண்ணி சேத்து அரைச்சு வச்சுக்கிடணும். அரிசி களைஞ்ச மூணாவது தண்ணியில முருங்கைக் காய்தான் முக்கியம், அது, கத்திரிக்காய், வேகவைச்ச முருங்கைக் கீரை போட்டு இந்த அரைச்சு வச்சதையும் சேர்த்துக் கரைச்சு கொதிக்க வைக்கணும். தேங்காயோட ரெண்டு சீரகம், உள்ளி  அரைச்சுப் போட்டுக் கலக்கி, வெந்த துவரம் பருப்பு போட்டு இறக்க வேண்டியதுதானே. புளியே கிடையாது. புள்ளைப் பெத்தவளுக்கு ஏத்த பத்தியச்சாப்பாடு. கூட்டாஞ் சோத்துக்கும் பொரிச்ச குழம்புக்கும் அப்பளம், கூழ் வத்தல், வெங்காய வடகம்ன்னா தொட்டுக்கிடறதுக்கு ஏத்தாப்ல இருக்கும்.”

  அம்மா எல்லாரும் சாப்பிட ஆரம்பிக்கும் முன்னால் இலையில் ஒவ்வொரு நெய் விளங்காய் வைத்தாள். நெய் விளங்கா வாயில போட்டா மாவாக் கரைஞ்சிரும். சிறு பருப்பையும் சீனியையும் தனித்தனியா வறுத்துத் திரிச்சு, ரெண்டையும் கலந்து ஏலக்காய் தட்டிப் போட்டு, நெய்யை சூடாக்கிக் கொஞ்சம் கொஞ்சமா மாவுல விட்டுக் கிளறி சூட்டோட உருண்டை உருண்டையாப் புடிக்கணும். சிறு பருப்புக்குப் பதிலா பொரிகடலை மாவிலயும் செய்யலாம். அது ஒரு ருசி, இது ஒரு ருசி.

“பேராச்சி, கல்யாண வீட்ல முறுக்கு வத்தல் அதாம்பா மெதுக்கு வத்தல்  போடாம இருந்துராத. அது எப்படி ஆச்சி, உப்பு வைச்சதும் மூனு மூனு முறுக்கு வத்தலும் மோர் மிளகாயும் வச்சிர்றது வழக்கம்தானெ. மிதுக்கு வத்தல் சீரண சக்திக்கு ரொம்ப நல்லதுன்னு பல பேருக்கும் தெரியலை ஆச்சி. சொதியோட தேங்காய் பித்தத்தை எடுக்கத் தானே இஞ்சிப் பச்சடி. வேர்க்கடலைப் பித்தத்திற்கு  அச்சு வெல்லம். பலாப்பழம் பித்தத்துக்கு அதோட பிலாக்கொட்டை.

சாப்பாட்டுப் பித்தத்தை முறிக்கிறதுக்கு சாப்பாடேதானே மருந்து. காலைச் சாப்பாட்டுக்கு கத்திரிக்காய் கிச்சடி நல்லாருக்கணும் பாத்துக்கோ. என்னத்தையும் காறல் கத்திரிக்காயா வாங்கிராதா. சேலம் பக்கம் போனோம்ல, அங்க கத்திரிக்காய் கிச்சடி, பீர்க்கங்காய் கிச்சடி எல்லாம் தெரியவே தெரியாதுங்காக. சுரைக்காய் சீவிப் போட்டு அடை சுட்டா என்னம்மா மெதுவா இருக்கும். அதுந்தெரியாதாம். அடைக்கு அவியல்ன்னு போத்தி கடையிலேயே போடுதாங்க. நாம தோசைக்கு இட்லிக்கு  சாம்பார் விட்டு சுண்ட வச்ச அவியலைத் தொட்டுக்கற மாதிரி”

“ ஆமா, ‘சுண்டக் கறி”ய தோசையில் வச்சு சுட்டா அதுதான் மசாலாதோசை” என்று நாயகம் சித்தப்பா சிரித்துக் கொண்டார்.

சமீபமாக ஒரு கல்யாண வீட்டுக்குப் போயிருந்தேன். பக்கத்தில் இருந்தவர் ஒரு ஜாடைக்கு நாயகம் சித்தப்பா மாதிரி இருந்தார். ஆனால் சித்தப்பாவெல்லாம் எப்பவோ செத்தப்பாவா ஆயிட்டார். மள மளவெனக் கேட்டரிங் ஆட்கள் அரை அரைக் கரண்டியாகப் பரிமாறிப் போனார்கள். அதில் வெங்காயச் சம்பலும் ஒன்று. அதை வச்சதும், பக்கத்திலிருந்த ஆள் “போச்சு, இந்த எழவு வெஜிடபிள் பிரியாணியை வச்சிருக்காணுவளா.. இது எங்க இருந்துப்பா கண்டு புடிச்சானுக... இப்ப காலி ஃப்ளவர் வைப்பானுவளே... பட்டை சோம்பு போட்டு உருளைக் கிழங்கு கூட்டு வேற, தம்பி இதெல்லாம் உங்களுக்குப் புடிக்குமா இருக்கும்” என்றார். “இல்லை, இந்த வெஜிடபிள் பிரியாணி போடக் கூடாதுன்னு நான் போராட்டமே பண்ணப் போறேன், அண்ணாச்சி”. “அப்படியா, தம்பிக்கு பொறந்த ஊரு எது?”  “திர்நெவேலி, அண்ணாச்சி”. “அதுதான பார்த்தேன், ஒம்ம வாயில சோமாசியைத்தான் போடணும். சோமாசி, உளுந்தங் களில்லாம் என்ன மாதிரியான இனிப்புன்னே இப்ப உள்ளவங்களுக்குத் தெரியாது. என்னமோ அவியலையாவது  அப்படியே விட்டு வச்சிருக்கானுவ... அந்தா, அந்த அவியலை இங்கே கொண்டா, வேற ஒண்ணையும் வாயில வைக்க முடியலை..” சத்தமாகச்  சொன்னார். “தம்பி அரை கிளாஸ் மோர்ல ஒரு கரண்டி ரசம் விட்டுச் சாப்பிட்டுருக்கேரா, ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்” என்றார். நாயகம் சித்தப்பாக்கள் ஒரு போதும் சாவதில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

அக்டோபர், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com