ஊடகம் : இளைஞர்கள்

இளைஞர் சிறப்பிதழ்
ஊடகம் : இளைஞர்கள்
Published on

இம்மென்றால் ட்விட்டரிலும் முகநூலிலும் எழுதிவிட்டுப் போய்விடுகிறார்கள் இந்தகாலத்தில். சமூக வலைத்தளங்களால் பெரும் அழுத்தத்தை சந்திப்பது பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள். இந்த சவாலான சூழலில் ஊடக உலகில் பல இளைஞர்கள் தனித்துவத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். புதிய தொலைக்காட்சிகளும் செய்தித்தாள்களும் நிறைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்திருப்பதும் ஆரோக்கியமான ஒன்று.  பத்திரிகை, தொலைக்காட்சிகளில் இயங்கும் சில நம்பிக்கையூட்டும் இளைஞர்கள் இங்கே.

பாரதி தம்பி, 31

பாரதி தம்பி என்கிற ஆர்.சரவணனின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள ஆழிவாய்க்கால். மொத்த பத்திரிகை வருட அனுபவம்: 13 ஆண்டுகள். இதில் 8 ஆண்டுகள் விகடனில். குமுதத்தில் 4 ஆண்டுகள், சன் டி.வி-யில் 6 மாதங்கள்.  தஞ்சாவூர், திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய இடங்களில் பணிபுரிந்து தற்போது சென்னையில் நிலை கொண்டுள்ளார். குளிர்ந்த மழை போன்ற எழுத்து இவருடையது. அரசியல், சமூகம், சூழலியல் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர். எதிர்ச்சொல் என்ற கட்டுரைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.

---

கடற்கரயும், 34

குங்குமத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றி, இப்போது குமுதம் நிறுவனத்தில் பணிபுரிகிறார். விருத்தாசலத்துக்காரரான இவர் இப்போது இலக்கியம், திரைப்படம் சார்ந்து செய்திக்கட்டுரைகளை எழுதிவருகிறார். கவிஞராகவும் அடையாளம் காணப்படுபவர். இயல்பின்றித் தவிக்கும் வீடு, விண்மீண் விழுந்த இடம், கண்ணாடிக் கிணறு ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கவிஞனின் மனதோடு ஊடக உலகில் இயங்கும் வெகுசிலரில் கடற்கரயும் ஒருவர் என்பதால் அவர் கவனத்துக்கு உள்ளாகிறார்.

---

நெல்சன் சேவியர், 28 

திருச்சியைச் சேர்ந்த நெல்சன் சேவியர் கணிதம் பயின்றவர். கல்லூரிக் காலங்களிலேயே மாணவர் இதழ்களில் எழுதியவர். சென்னை லயோலா கல்லூரியில் படித்தபோது விஜய் தொலைக்காட்சியின் தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு  நிகழ்ச்சியில் அரையிறுதி வரை வரும் வாய்ப்பைப் பெற்றவர். பின்னர் அதே தொலைக்காட்சியில் பணிக்குச் சேர்ந்தார். செய்தி மீது கொண்ட ஆர்வத்தால் பாலிமர் தொலைக்காட்சி. இப்போது கடந்த மூன்று ஆண்டுகளாக சன் நியூஸ் தொலைக்காட்சியில் சிறப்புச் செய்தியாளராக இருக்கிறார். இவரது சுத்தமான தமிழ் உச்சரிப்பு இவர் நடத்தும்செய்தி சார்ந்த விவாத நிகழ்ச்சிகளை சுவாரசியம் ஆக்குகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் தமிழரான மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் கடத்தப்பட்டபோது 21 நாட்கள் தங்கள் தொலைக்காட்சி சார்பாக அங்கே இருந்து செய்தி தந்தது சிறந்த அனுபவம் என்கிறார்.

---

தியாகச் செம்மல், 27

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் முதன்மைச் செய்தியாளர். 2005 ம் ஆண்டு பத்திரிகை துறையில் விகடன் மாணவர் நிருபர் திட்டத்தில் நுழைந்தவர். துடிப்பான இளம் செய்தியாளரான இவர், தன்னை பத்திரிகைத் துறையில் செழுமைப் படுத்திக் கொள்ள உதவிய ஊடகங்களாக ஆனந்த விகடன், சன் தொலைக்காட்சி, பாலிமர் தொலைக்காட்சி போன்றவற்றைக் குறிப்பிடுகிறார். செய்திகளை விருப்பு வெறுப்பின்றிச் சொல்வதில் கவனமாக இருப்பவர்.

யுவகிருஷ்ணா, 35

 துள்ளலான எழுத்து நடை கொண்ட யுவகிருஷ்ணா, தினமலரில் பத்திரிகை வாழ்க்கையை ஆரம்பித்தவர். அதற்கு முன்பாக  விளம்பரத்துறையில் பணி செய்துகொண்டிருந்தவர். தற்போது புதிய தலைமுறை வார இதழில் அசிஸ் டெண்ட் எடிட்டர். இணைய உலகில் வலைப்பூக்கள் மூலம் எழுதி பிரபலமாக அறியப்பட்டது இவரது இன்னொரு முகம். சுண்டி இழுக்கும் விளம்பர உலகம், விஜயகாந்த், தேமுதிக, சைபர் கிரைம், அழிக்கப் பிறந்தவன் ஆகியவை இவரது நூல்கள். எல்லா துறைகளைப் பற்றியும் எழுதக் கூடியவர். அனைத்தையும் பற்றி தெளிவான ஓர் அரசியல் பார்வை கொண்டிருப்பது இவரது பலம்.

கவின்மலர், 35

நாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு புலம் பெயர்ந்தவர். காரைக்கால் பண்பலையில் ஒன்றரை ஆண்டுகள் அறிவிப்பாளராக பணியாற்றியதுதான் ஆரம்பம். தினபுலரி, புதிய தலைமுறை, ஆனந்த விகடன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றி இப்போது தமிழ் இந்தியா டுடேவில் அசோசியேட் காப்பி எடிட்டர். பயணம் செய்து கள நிலவரங்களைக் கண்டு எழுதுவதில் ஆர்வம் கொண்ட பத்திரிகையாளர். சமூகப் பிரச்னைகளை எழுதும் வலுவான கருத்துகள் கொண்ட ஒரு சில செய்தியாளர்களில் இவரும் ஒருவராக வளர்ந்துவருகிறார்.

செப்டம்பர், 2013

logo
Andhimazhai
www.andhimazhai.com