உலக அளவில் பல நடிகைகளை நாம் அறிந்திருப்போம். நடிகைகள் அல்லாத முக்கியமான பெண் கலைஞர்களும் சினிமா துறையில் உண்டுதானே..
உலக சினிமா வரலாற்றில் இடம்பெற்ற சிலரைப்பற்றிய குறிப்புகள்.
ஹாலிவுட்டில் ஆரம்பகாலத்தில் பிலிம் நெகடிவ்களை பெண் தொழிலாளிகள் தான் வெட்டித்தருவார்கள். 1915-ல் பள்ளிப்படிப்பை முடித்த மார்கரெட், இந்த வேலைக்கு வந்தார். வாரம் 10 டாலர் சம்பளம். மெல்ல வளர்ந்து, எல்லா வேலைகளையும் செய்ய பயிற்சிபெற்றார். எம்ஜிஎம் நிறுவனம் உருவானபோது இவரது திறமை கவனிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இவரை எம்ஜிஎம் நிறுவன தயாரிப்பு நிர்வாகி, முதல் முதலாக பிலிம் எடிட்டர் என்ற பெயரில் அழைத்தார். சினிமா வரலாற்றில் பிலிம் எடிட்டர் என்ற பெயர் வழங்கப்பட்டது ஒரு பெண்ணுக்குத்தான். பல படங்களுக்கு எடிட்டிங் வேலைகளை செய்த மார்கரெட் 1935-ல் ம்யூட்டினி ஆன் த பௌண்டி படத்துக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கபட்டார். 1978-ல் இவருக்கு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கினார்கள்.
பிரான்ஸிஸ் போர்ட் கப்போலாவுக்கே பாடம் எடுத்த இயக்குநர். மௌனப்படங்களின் காலகட்டத்தில் இயங்கி, பின்னர் பேசும்படங்கள் காலகட்டத்திலும் தாக்குப்பிடித்த பெண் இயக்குநர் டோரதி. ஹாலிவுட்டில் இருந்த மிகச்சில பெண் இயக்குநர்களில் ஒருவரான இவர் ஆரம்பத்தில் பாரமவுண்ட் பிக்சர்ஸ் பட நிறுவனத்தில் ஒரு தட்டச்சராக நுழைந்தவர். பெண்களால் பெண்களைப் பற்றி எடுக்கப்பட்ட படங்களை உருவாக்கிய இயக்குநர் என்று நினைவுகூரப்படுகிறவர். டான்ஸ் கேர்ள் டான்ஸ் என்பது இவரது புகழ்பெற்ற படங்களில் ஒன்று.
திரைப்பட பேஷன் டிசைனர். பல்லாண்டுகளாக அமெரிக்க
சினிமாவின் ஆடைகளை இவர்தான் தீர்மானித்தார். 35 முறை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டு எட்டுமுறை வென்றவர். இயக்குநர்கள் நடிகைகளை தேர்வு செய்து புக் செய்வதுபோல், தங்கள் படத்துக்கு எடித் ஹெட் தான் காஸ்டியூம் டிசைன் பண்ணவேண்டும் என்று விரும்புவார்களாம்.
ஆல்ப்ரட் ஹிட்ச்காக்குக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் பாரிஸில் பிறந்தவரான அலிஸ் கய். லூமியர் சகோதரர்கள் தங்கள் திரைப்படக் கருவியை இயக்கிக் காண்பித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் இவர். 1896-ல் இவர் எடுத்த கேபேஜ் பேரி என்ற படம் வெளியானது. இதுதான் முதன்முதலில் வெளியான விளக்கப்படம் ஆகும். காமாண்ட் திரைப்பட நிறுவனத்துக்காக இவர் 750படங்கள் எடுத்துள்ளார். குளோஸ் அப் ஷாட்டை கண்டுபிடித்தவர் என்ற புகழுக்குச் சொந்தமானவர் ஆலிஸ் கய் தான்! ஆனால் வெகுகாலத்துக்கு ஆலிஸுக்குக் கொடுக்கவேண்டிய அங்கீகாரத்தை காமண்ட் நிறுவனம் கொடுக்கவே இல்லை என்பது கசப்பான நிகழ்வு.
முதல் முதலில் ஒரு பெண்ணை முழு நிர்வாணமாகக் காட்டிய மைய நீரோட்ட திரைப்பட இயக்குநர் ஒரு பெண் தான்! தன்னுடைய ஹிப்போகிரைட்ஸ் என்ற படத்தில் இந்த காட்சியை வைத்தார் லாயிஸ் வெபர். இவர்தான் அமெரிக்காவின் முதல் பெண் இயக்குநர். 1914-ல் மெர்சண்ட் ஆப் வெனிஸ் என்ற படத்தை முதன்முதலாக இயக்கி இப்பெருமையைப் பெற்றார். பல சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர். வறுமை, தொழிலாளர் உரிமை, மரண தண்டனை, குடும்பக்கட்டுப்பாடு போன்ற ஆண்கள் எடுக்கத் தயங்கும் பிரச்னைகள் பற்றி படங்களை எடுத்தவர். தன்னுடைய படங்களில் முழுக்கட்டுப்பாடு செலுத்திய அவர் 130 படங்கள் எடுத்துள்ளார்.
அல்ப்ரட் ஹிட்ச்காக்கைத் தெரியும் அவர் மனைவி ரெவில்? 1920களில் இங்கிலாந்து ஸ்டூடியோக்களில் தேநீர் வழங்குபவராக ஆரம்பித்தவர் ரெவில். அடுத்த பத்தாண்டில் உதவி இயக்குராக, திரைக்கதையாளராக, எடிட்டராகவும் மெல்ல வளர்ந்தார். 1923-ல் ஹிட்ச்காக் தன்னுடைய வுமன் டு வுமன் படத்தை எடிட் செய்ய ரெவிலை அழைத்தார். இருவரும் மணம் புரிந்துகொண்டு ஹாலிவுட்டுக்கு இடம் பெயந்தனர். பெரும்பாலான ஹிட்ச்காக்கின் படங்களில் தொகுப்பாளர் ரெவில்தான். ஹிட்ச்காக்கின் வெற்றியில் ஒருபங்கு இவருக்கும் உண்டு. சைக்கோ படத்தில் ஷவர் காட்சி எடிட்டிங்கில் இவர் யோசனைதான் அதை புகழ்பெற வைத்தது.
ஸ்பீல்பெர்க்கின் ஜாஸ், ஜார்ஜ் லூகாஸின் அமெரிக்கன் கிராபிட்டி போன்ற படங்களில் எடிட்டிங் செய்தவர் வெர்னா பீல்ட்ஸ். ஓர் ஒலி தொகுப்பாளராக ஹாலிவுட்டில் தொழில் கற்ற இவர், மெல்ல திரைப்பட எடிட்டர் ஆனார். ஸ்பீல் பெர்க் இவரை தாய்போன்ற தொகுப்பாளர் என்று பொருள் பட பாராட்டி இருக்கிறார். ஜாஸ் படம் தான் இவர் எடிட் செய்த கடைசிப்படம். அதற்காக ஆஸ்கர் விருது பெற்றார்.
ஒரு பொடியன் ஏலியனுடன் நட்புகொள்கிறான். இதுதான் ஸ்பீல்பெர்க் தன்னுடைய ஈடி படத்துக்குப் பிடித்த ஒன்லைன். இதை அவர் திரைக்கதையாக எழுதுமாறு பணித்தது மெலிசா மதிசனிடம். இவர் பிரபல ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்டுவின் மனைவி. இதுமட்டும் அல்ல அவர் தகுதி. ஏற்கெனவே 1979-ல் வந்த ப்ளாக் ஸ்டாலியான் என்ற படத்துக்கும் அவர்தான் திரைக்கதை எழுதி இருந்தார். இதற்காக ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். தற்போது ஸ்பீல்பெர்க்குடன் இன்னொரு படத்துக்கும் திரைக்கதை எழுதுகிறார் இந்த பெண்மணி.
அறிவியல் புனைகதைகள், கிரைம் கதைகள் எழுதுவதில் சமர்த்தர் லே ப்ராக்கெட். த பிக் ஸ்லிப் (1946), ரியோ பிராவோ(1959) ஆகிய படங்களுக்கும் திரைக்கதை எழுதியிருந்த இவரை அணுகினார் ஜார்ஜ் லூகாஸ். ஸ்டார்ஸ் வார்ஸின் அடுத்த பாகமான தி எம்பையர் ஸ்ட்ரைக்ஸ் பேக் என்ற படத்தை எழுதுமாறு பணித்தார். இந்த அறிவியல் திரைப்படத்துக்கு எழுதினாலும் படம் வெளியாவதற்குள், லே இறந்துவிட்டார்.
இவரும் ஒரு புகழ்பெற்ற பெண் படத்தொகுப்பாளர்தான். ஏழுமுறை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டு மூன்று முறை வென்றவர். பல ஆண்டுகளாக மார்ட்டின் ஸ்கார்சிசின் படங்களுக்கு இவர்தான் தொகுப்பாளர். போதுமா அம்மணி எவ்வளவு திறமைசாலி என்பதற்கு சான்று? ரேஜிங் புல், தி டிபார்டட், வுல்ப் ஆப் வால்ஸ்ட்ரீட் போன்ற புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களின் எடிட்டர் ஒரு பெண் என்றால் நம்புவதற்கு சிரமமாக இருக்கிறதா ப்ரோ?
நாடகமேடைகளில் நடிக்க ஆரம்பித்தவர், மௌனப்படங்களில் தோன்றினார். ஜுபைதா, சுல்தானா, ஷெஹாசி ஆகிய நடிகைகளின் தாயும் ஆவார். 1926-ல் இந்திய சினிமாவின் முதல் பெண் இயக்குநராக புல்புல் இ பாரிஸ்தான் என்ற படத்தை இயக்கினார். இது பேண்டசி படம். இதில் அவரது இரு மகள்களும் நடித்தனர். ஆனால் பட பிரதிகள் தான் இப்போது கிடைக்கவில்லை.
மார்ச், 2016.