இது எனக்கு வெள்ளி விழா ஆண்டு. ஆம். சரியாக இந்தாண்டு ஏப்ரல் 24 ம் தேதியுடன், நான் முழு நேர பத்திரிகையாளனாக பணியாற்ற ஆரம்பித்து 25 ஆண்டுகள் ஆகின்றன. 1991 ம் ஆண்டு ஏப்ரல் 24 ம் தேதி ‘விடிவெள்ளி’ தினசரியில் தான் நான் நிருபராக பணியில் சேர்ந்தேன். அதற்கு முன்பு ‘தினப்புரட்சி’ உள்ளிட்ட சில பத்திரிகைகளில் நிருபராக பணியாற்றிய போதும் அவை பகுதி நேர பணிகளாகவே இருந்தன. முழு நேர நிருபராக பரிணமித்தது 1991 ஏப்ரலில்தான். 1991 மே மாதம், மக்களவைக்கும், தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல்கள் வரவிருந்தன. 1991 ம் ஆண்டு ஜனவரியில் திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப் பட்டதாலும், சந்திரசேகர் அரசு மத்தியில் கவிழ்ந்ததாலும் இரண்டு தேர்தல்களும் ஒன்றாக நடக்கவிருந்தன. என்னுடைய பத்திரிகை உலக ஆசான் ‘விடிவெள்ளி’ ஆசிரியராக இருந்த தெள்ளூர் மு. தருமராசன் தான்.
அந்தாண்டு மே மூன்றாவது வாரத்திலிருந்து தேர்தல் செய்திகளைச் சேகரிப்பதற்காக நான் சென்னை மாநகரம் முழுவதும் செல்லத் துவங்கினேன். மே 20 ம் நாள், அதாவது ராஜீவ் கொலைக்கு முதல் நாள் போரூரில் அப்போதைய தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. நாங்கள் ஏழு நிருபர்கள் ஒரு வேனில் அழைத்துச் செல்லப் பட்டோம். அந்தக் கூட்டம் முடிந்து நான் திருவல்லிக்கேணியில் என்னுடைய வீட்டுக்குத் திரும்பும் போது அதிகாலை 4 மணியாகி விட்டது. மீண்டும் காலையில் 10 மணிக்கு விடிவெள்ளி அலுவலகத்திற்குச் சென்றேன். ஆசிரியர் அன்றுதான் எனக்கு அடையாள அட்டையும், கையில் செலவுக்கு 10 ரூபாயும் கொடுத்தார். மாலை 6 மணியளவில் எங்களை சத்தியமூர்த்தி பவனிலிருந்து இரண்டு வேன்களில் சென்னை விமான நிலையம் அழைத்துச் சென்றனர். விமானநிலையத்தினுள் எங்களை உள்ளே விட முதலில் போலீசார் மறுத்தனர். தற்போது ஏடிஜிபி யாக இருக்கும் ரமேஷ் குடாவாலா தான் அப்போது செங்கற்பட்டு எஸ்.பி. அவர் வந்த பிறகுதான் நாங்கள் உள்ளே சென்றோம். ராஜீவ் காந்தி சரியாக 8.30 க்கு விமான நிலைய செய்தியாளர் அறைக்கு வந்தார். நான் இலங்கை தமிழர்கள் பற்றியும், அப்போதைய தேர்தல்களில பாஜக அதிகமாக செலவு செய்வது பற்றியும் கேள்விகள் கேட்டேன். பின்னர் ராஜீவை நாங்கள் பின் தொடர்ந்தோம். போரூரில் ஒரு கூட்டத்தில் அவர் பேசினார். பின்னர் ஸ்ரீபெரும்புதூரில் கூட்ட மேடைக்குச் செல்லுவதற்கு முன்பாக நெடுஞ்சா லையில் அமைக்கப் பட்டிருந்த இந்திரா சிலையை திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் காரில் போய் மேடை அருகே இறங்கிய சில நிமிடங்களில் அந்த துயரம் நடந்தது. பெருத்த ஓசையுடன் குண்டு வெடித்தது. செய்தியாளர்கள் இருந்த வேன் மேடை அருகே போக ஏற்பட்ட காலதாமதத்தால் நாங்கள் உயிர் தப்பினோம். நான் கேட்டது ஒரு பெரிய வெடிச்சத் தம், கண்டது மஞ்சள் நிறத்தில் ஒரு பெரிய ஒளிப் பிழம்பு தரையிலிருந்து வானில் ஐம்பதடிக்கு மேலே கிளம்பியது. ஒரே குழப்பமாக இருந்தது. வேனை விட்டு இறங்கியவுடனேயே தெரிந்து விட்டது ராஜீவ் கொல்லப் பட்டு விட்டாரென்று. நாங்கள் வந்த வேனிலேயே இரண்டு மணி நேரத்தில் நானும், காங்கிரஸ் கட்சியின் உதயபானுவும் சத்தியமூர்த்தி பவனுக்குத் திரும்பி விட்டோம். இரண்டு நாட்கள் கழித்துத் தான் நான் விடிவெள்ளி அலுவலகத்திற்கே போக முடிந்தது. அப்போதைய நிலையில் நான்கு நாட்கள் கழித்துத் தான் விடிவெள்ளி நாளிதழ் கடைகளுக்கு வந்தது.
1996 ம் ஆண்டும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் ஒன்றாகவே வந்தன. அப்போது திமுக தலைவர் கருணாநிதியுடன் சென்னை மாநகரம் முழுவதும் போயிருக்கிறேன். அதிமுகவுக்கு இருந்த எதிர்ப்பலையைக் கண்டதால் தேர்தல் முடிவுகள் எனக்கு அப்போதே தெரிந்து விட்டது.
அடுத்து வந்தது 1998 பிப்ரவரி மக்களவைத் தேர்தல்கள். ஜெயின் கமிஷன் விவகாரத்தால் ஐகே குஜ்ரால் அரசு கவிந்ததால் வந்த தேர்தல். முதன் முறையாக அஇஅதிமுக, பாஜக, பாமக, மதிமுக, சுப்பிரமணியன் சுவாமியின் ஜனதா கட்சி மற்றும் வாழப்பாடியின் ராஜீவ் காங்கிரஸ் ஆகியவை கூட்டாக நின்றன. நான் அப்போது ஏஎன்ஐ தொலைக் காட்சி செய்தி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. 1998 பிப்ரவரி 1 ம் தேதி பாஜக தலைவர்கள் வாஜ்பாயும், அத்வானியும் சென்னை வந்தார்கள். ஜெ வை அவரது வீட்டில் சந்தித்த பின்னர் சென்னை கடற்கரையில் பொதுக் கூட்டம். அவர்களுடன் ஏஎன்ஐ ஒளிப்பதிவாளர்கள் டில்லியிலிருந்து உடன் வந்தார்கள். அடுத்த நாள் வாஜ்பாய் ஒரு ஊருக்கும், அத்வானி வேறோர் ஊருக்கும் போக விருந்தார்கள். அந்த முறை இரண்டு காமிராமேன்கள் ஒருவர் வாஜ்பாயுடனும், ஒருவர் அத்வானியுடனும் வந்திருந்தார்கள். டில்லியிலிருந்து வாஜ்பாயுடன் வந்த காமிரா மேனை அத்வானியுடன் செல்லும் படியும், அத்வானியுடன் வந்த கேமிராமேனை சென்னையிலேயே தங்கி அடுத்த நாள் சென்னை வரவிருக்கும் பிரதமர் குஜ்ரால் கூட்டத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டது. அப்போது எனது தலைமை அதிகாரியாக இருந்தவர் இதை தலைகீழாக சொல்லி விட்டார். திடீரென்று இரவு 1.30 மணிக்கு இந்த குளறுபடி பற்றி எனக்கு தகவல் வந்து நான் இரண்டு கேமிரா மேனையும் தேடத் துவங்கி விட்டேன். இதில் ஒருவர் சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலிலும், மற்றவர் சோழா ஷெரட்டனிலும் தங்கியிருந்தனர். அப்போதெல்லாம் செல் பேசிகள் கிடையாது. விமான நிலையம் வரை போய் விட்ட குறிப்பிட்ட காமிராமேனை காரில் துரத்திப் போய் மீண்டும் அழைத்து வந்தேன்.
1999 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது ஜெயலலிதா பிரச்சாரத்தைக் கவர் செய்து கொண்டிருந்தேன். விழுப்புரத்தில் சோனியா காந்தி கலந்து கொண்ட கூட்டத்தில் கடைசி நேரத்தில் ஜெ, ஜகா வாங்கியது பரபரப்பான அனுபவம்.
2001 சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட முடியாத சூழல். காரணம் டான்சி வழக்கில் அவர் பெற்றிருந்த தண்டனை. ஆனாலும் திடீரென்று ஜெ நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் மனு தாக்கல் செய்தார். அந்த செய்திகளை சேகரிக்க படாதபாடுபட்டுப் போனேன். அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தேர்தல் பிரச்சாரத்திற்காக அவரது வீட்டிலிருந்து புறப்படுகிறார். என்னுடைய கேள்வி அவரிடம் ; ‘ஐயா பிரதான எதிர்க்கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது ஜனநாயகத்தை சீர்குலைக்காதா? அதற்கு கருணாநிதியின் பதில்:‘இதற்கு நானா பொறுப்பு? போய் அந்த அம்மையாரிடம் கேளுங்கள்’
தேர்தல்களை ஒட்டி பல நிகழ்வுகளும் முக்கியமானவை. அதன் பின்னால் இருக்கும் உண்மையான போக்குகளை இன்றைய செய்தியாளர்கள் கவனிக்க வேண்டும். அது முக்கியமானது.
பிப்ரவரி, 2016.